கங்கையின் புனிதம்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 14,595 
 

கங்கை…. கங்கோத்ரியில் பிறந்தவள்…. பளிங்கு போல் தூய்மை…

கங்கையில் ஒரு முறை நீராடினாலே பாவங்கள் அனைத்தும் நீங்கும்….

கங்கையில் உயிர் பிரியவேண்டுமேன்றே தவம் கிடக்கும் பாவாத்மாக்கள்…..

அவள் தூய்மை அனைத்தையும் தொலைத்துவிட்டு …இதோ…மனித கழிவுகளையும்…. அழுகிய உடல்களையும்…..குப்பை கூளங்களையும்…. தன் மேல் வாரி இறைத்த அத்தனை அழுக்கையும் சுமந்து கொண்டு … வாய் மூடி மௌனமாய்… ஒன்றும் செய்ய இயலாமல்…!!!!

கங்கை மீண்டும் புனிதமடைய என்ன வழி …???

புனித நதியை சாக்கடையாய் மாற்றிவிட்டு… இன்னும் அவள் பெருமையைப் பேசிக் கொண்டு….

மனிதர்களே !கங்கையை அவள் போக்கில் விட்டிருக்கலாம்…..

அவளைக் கொண்டாடி குப்பையில் அல்லவா எறிந்து விட்டோம்….

***

‘பதினெட்டு வயது கல்லுரி மாணவி இரண்டாம் மாடியிலிருந்து தவறி விழுந்து பரிதாபமாய் உயிரிழந்தார்…பெற்றோர் கதறல்….’

‘Eighteen year old college girl saccumbed to her injuries after falling from her second floor flat…in Anna Nagar….’

‘இளம் பெண் பரிதாப விபத்து………..பால்கனியிலிருந்து விழுந்து மரணம்..’…!!!!!

திங்கள் கிழமை காலை எல்லா தினசரிகளின் சென்னை எடிஷனில் முக்கிய செய்தியாகிவிட்டாள் கங்கா.

பதினெட்டு வயது பொறியியல் கல்லூரி மாணவி…..

மாலை தினசரிகளில் செய்திகள் வந்த போதே கொஞ்சம் கையும் காலும் முளைத்தது விட்டது…..

‘கங்கா எனும் பதினெட்டு வயது ““மலர் பொறியியல் கல்லுரி “மாணவி இரண்டாம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாய் தெரிகிறது..

தற்செயலா அல்லது தற்கொலையா என்று சந்தேகம் எழுந்துள்ளது…. இது பற்றி போலீஸ் தீவிர விசாரணை…’

“கல்லூரி மாணவி கங்கா மரணத்தில் மர்மம் இருக்கலாமென்று சந்தேகம்…..!!!!”

மறுநாள் யூட்யூப் சேனல்கள் அவரவர் கற்பனை குதிரையைத் தட்டிவிட்டார்கள்.

‘கங்கா கீழே விழும்போது போதையில் இருந்தாரா ??? கூடவே அவளுடைய ஐந்து நண்பர்களும் குடித்துவிட்டு கும்மாளம் …..??’

‘கங்கா தவறி விழவில்லை.. பிடித்துத் தள்ளப்பட்டார் …??’

‘இரவில் நண்பர்களுடன் கொட்டம் அடித்து குடி போதையில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது…

காதல் தோல்வியால் தற்கொலையா என்று தெரியவில்லை….’

இந்த சேனல் உங்களுக்குபிடித்திருந்தால உடனே சப்ஸ்க்ரைப் பண்ணுங்க… கீழே இருக்கும் பெல் ஐக்கானை உடனே அழுத்துங்க..!!!

***

Over to Ganga’s house….

ஒரே இரவில் தலைப்புச் செய்தியாகி விட்ட கங்காவின் வீடு அண்ணா நகர் சாந்தி காலனியில் மத்தியதரப்பினர் குடியிருக்கும் பாரதிதாசன் வீதியில் இரண்டாம் மாடியில் …

லிஃப்ட் வசதியுடன் 900 சதுர அடியில் 2BHK அடுக்கு மாடி குடியிருப்பு…..

கட்டி ஐந்து வருஷம் தான் இருக்கும்… இன்னும் வீட்டுக் கடன் அடைத்து முடிக்கவில்லை.

ரமணியும் அர்ச்சனாவும் வங்கி ஊழியர்கள். அர்ச்சனா மாற்றல் வருமென்பதால் ஆபீசர் பரீட்சை எழுதவில்லை.இல்லையென்றால் இந்நேரம் வங்கி மேலாளர் ஆகியிருப்பாள்.

ரமணிக்கு எந்த நேரத்திலும் மேனேஜர் பதவி தயாராயிருக்கிறது.

வரும் மாற்றலை ஏற்றுக் கொண்டு பல்லாவரம் கிளையில் உட்கார்ந்து கொண்டு….

வாரக்கடைசிகளில் மட்டுமே குடும்பத்துடன்…..’

வீட்டில் இன்னும் இரண்டு நபர்கள்…

… கங்காவின் தம்பி கோபியைத் தவிர…சாம்புவும்…லட்சுமியும்… ரமணியின் பெற்றோர்…..

இத்தனை பேரையும் ஏமாற்றி விட்டுத்தான் கங்கா போய் விட்டாள்..

அர்ச்சனா மயக்கம் போட்டு விழுந்தவள் தான்…

டாக்டர் ஊசி போட்டுவிட்டு போயிருக்கிறார்.தாத்தாவும் பாட்டியும் பிரமை பிடித்தது போல் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

கோபியும் ரமணியும்தான் ஓரளவுக்கு சுயநினைவுடன் இருப்பவர்கள்.

நல்லவேளை.ரமணியின் உயிர் நண்பன்… கூட வேலை செய்பவன்… சஞ்சய் ..அவரை விட்டு நகரவேயில்லை..

போலீஸ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் அவர் இருந்ததால் தான் பதில் சொல்ல முடிந்தது..

அர்ச்சனாவின் இரண்டு தங்கைகளும் கூடவே தான் இருக்கிறார்கள்…. கோபி தான் மாய்ந்து மாய்ந்து போகிறான்..

“அங்கிள்…….!!! இவங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒண்ணு இல்லியா.. நம்ப கங்காவப்பத்தி இப்பிடியா… ??? நிக்க வச்சு சுட வேண்டாம்…??? We have to stop this nonsense at once ….”

“கோபி… இந்த மாதிரி சமயத்தில் நியூஸ்…. மொபைல்… ஒண்ணும் பாக்காத…உயிரோட நம்மள சித்திரவத பண்ணிடுவாங்க….”

“நா எங்க பாத்தேன்… ஃபோன் பண்ணி ஒவ்வொருத்தரா கேக்கறாங்களே….!!!!!”

“கவலப் படாத கோபி…… இன்ஸ்பெக்டர் கிட்ட கம்ப்ளெயின்ட் பண்ணிட்டேன்…இன்னிக்கு ராத்திரிக்குள்ள இதெல்லாம் ப்ளாக் பண்ணிடுவா.. “

“சஞ்சய்….எம்பொண்ணு உடம்ப இனிமே கீறி கீறி என்னடா ஆகப்போகுது…?? எப்பிடிடா அவாளுக்கு மனசு வருது…??”

“இந்த மாதிரி கேசுல இதெல்லாம் வழக்கமான ப்ரொசீஜர் தான். நாம் கையக் கட்டி நின்று வேடிக்க பாக்க வேண்டியதுதான்…நாம சொல்றத யாரும் கேட்கத் தயாரில்லை.நிறைய பணத்தை குடுத்து அப்படியே மூடி விட எத்தனை பேரால் முடியும் …???”

“அப்போ எம் பொண்ணு கங்கா …அவள சீக்கிரமே வீட்டுக்கு கொண்டு வர முடியாதா ….???”

“ரமணி…இப்போதானே ஆரம்பம்…நீ மனச தேத்திக்கணும்டா…இனிமே நிறைய இருக்கு…நம்ப ராமலிங்கத்தோட மாமாவுக்கு உதவி கமிஷனர் லெவல்ல யாரையோ தெரியுமாம். அதனால போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சீக்கிரம் முடிஞ்சு நாளைக்கு பாடிய குடுக்க ஏற்பாடு பண்ணியிருக்கு…”

“சஞ்சய்.. தயவு பண்ணி பாடின்னு சொல்லாதடா…”

“மன்னிச்சுக்கோடா…”

சஞ்சய் ரமணியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

நடந்தது என்ன….!!!!

கங்கா, மேக்னா , பத்மா , காவேரி , சிந்து….. ஐந்து நதிகளல்ல.. ஐந்து பேரும் பிரிக்கமுடியாத நண்பர்கள்.

L.K.G யிலிருந்து + 2 வரை….!!!!

பள்ளியில் எல்லோருமே கலாட்டா பண்ணுவார்கள்…..

“நதிகளை இணைக்க முடியுங்கிறதுக்கு நீங்களே சாட்சி…. பேரைப் பார்த்து நண்பர்கள் ஆனீங்களா..?? ….”

இதில் மேக்னா தவிர எல்லாருமே மிடில் கிளாஸ்….

சிந்து கன்னடம்… மேக்னா இந்தி… மற்ற மூணு பேரும் தமிழ்..

அனேகமாய் வாரக் கடைசியில் யாரோ ஒருவர் வீட்டில்தான் அஞ்சு பேரும் ஸ்லீப் ஓவர்……

கங்கா வீடு சின்னதாயிருந்தாலும் அங்கு தான் அவர்களுக்கு பிடிக்கும்…

கங்காவின் பாட்டி பண்ணும் சாம்பாரும், பூரி கிழங்கும் , வடையும்….!!!!!!

பாட்டியும் சலிக்காமல் சமைத்துப் போடுவாள்.

மேக்னா பஞ்சாபி பெண்ணாயிருந்தாலும் இட்லி… தோசை…வடையென்றால் உயிர்..

அவளுடைய பெற்றோர் டில்லியிலிருப்பதால் சென்னையில் அண்ணா நகரில் இருக்கும் பாட்டி வீட்டில் இருந்து படிக்கிறாள்.பாதிப் பொழுது கங்கா வீட்டில் தான்…

+ 2 முடித்து விட்டு எல்லோருமே கல்லூரியில் சேர்ந்து விட்டார்கள்.

கங்காவும் மேக்னாவும் பொறியியல்… பத்மாவும் சிந்துவும் பி.காம்….காவேரி ஃபேஷன் டிசைனிங்….

அன்றைக்கு மேக்னாவின் பிறந்த நாள்..கங்கா வீட்டில் சாப்பிட்டு விட்டு சினிமா போக ஏற்பாடு..

இரண்டாவது மாடி.. பெரிய பால்கனி…!!!!

பாட்டி மொறுமொறுவென்று வடையும் கொத்துமல்லி சட்னியும் பண்ணி மேலே அனுப்பி இருந்தாள்.

கீழே விருந்து தயார் !!!

பால் பாயசம்…. பிஸிபேளாேஹூளி….. மசால் தோசை….. தயிர் சாதம்…. !!!!

நாலு சேர்கள் மட்டுமே இருந்ததால் பால்கனியிலிருந்த திண்டில் உட்கார்ந்திருந்தாள் கங்கா…

அதில் உட்காரக் கூடாது என்று கண்டிப்பாக கூறியிருந்தார்கள் ரமணியும் அர்ச்சனாவும்….

கோபியின் நண்பர்கள் வந்தாலும் சரி..கங்காவின் தோழிகள் வந்தாலும் சரி.. அதில் எப்படியும் இரண்டு பேராவது உட்கார்ந்து கொள்வார்கள்…!!!!!

சனிக்கிழமை ராத்திரி ஏழு மணி இருக்கும்…

இரண்டு ப்ளேட் வடை உள்ளே போயாச்சு…

ஃபேஷன் டிசைனிங் பற்றி காவேரி சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டிருந்தாள்.

காவேரி எப்போதுமே ஒரு ஜாலி பேர்வழி.. அவள் இருக்குமிடத்தில் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது…

திடீரேன்று ஒரு வெடிச்சத்தம்… பக்கத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஃப்யூஸாகி லேசான தீ…

கங்கா சட்டென்று திரும்பி பார்ப்பதற்கும்…உடனே கரண்ட் கட்டாவதற்கும்…கங்கா நிலை தடுமாறி “ஆ “என்ற அலறலுடன் கீழே விழுவதற்கும்….!!!!!!

எல்லாமே கண்ணிமைக்கும் வினாடியில்…..

அவளுக்கு நேர் எதிரே உட்கார்ந்திருந்த சிந்து அவளுடைய உடையைப் பிடித்து இழுத்ததில் பாதி கிழிந்து அவள் கையோடு வந்ததுதான் மிச்சம்..

எல்லோர் ஒரு வினாடி அப்படியே உறைந்து போய் நின்று விட்டார்கள்..

சிந்துவுக்கு மயக்கமே வந்துவிட்டது…!!!!

இருட்டில் ரமணியும் கோபியும் அலறி அடித்துக் கொண்டு வெளியில் வந்து பார்க்கும்போது…

மேற்கொண்டு இதை விவரிக்கப்போவதில்லை…..

உடனே அடுத்தடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் நடந்தன..

இன்ஸ்பெக்டர் சதானந்தம் அவருடைய கடமையை கூடிய மட்டும் யார் மனசும் நோகாமல் செய்து முடித்தார்.

போஸ்ட்மார்ட்டம் செய்ய உடலை அனுப்பிவிட்டு … உறவினர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு ..கூட இருந்த நாலுபேரின் ஃபோன் நம்பர் , விலாசம் வாங்கிக் கொண்டு , எந்த நேரமும் விசாரணைக்குத் தயாராயிருக்குமாறு சொல்லிட்டு நகர்ந்தார்….

“சஞ்சய்.. இன்னிக்கு ஆட்டாப்சி ரிசல்ட் கிடைக்குமான்னு கேட்கலாமா…??”

“இரு… நான் ஃபோன் பண்றேன்…’

“ரமணி.. எல்லாம் ரெடியான நேரத்தில் DSP கிட்டேயிருந்து ஏதோ என்கொயரி வந்திருக்காம்.. கொஞ்சம் டிலே ஆகுமாம்…”

“கங்கா..கங்கா…”

அடக்கி வைத்த துக்கமெல்லாம் பெருங்குரலாய் வெடித்துச் சிதறியது.

“உன்ன பாக்காம போயிடுவேனா….??”

சிந்துவின் வீட்டு வாசல் கதவைத் தட்டினார் இன்ஸ்பெக்டர் சதா…

சென்னையில் பதினைந்து வருடங்களுக்கு மேல் இருந்தாலும் சிந்துவின் அப்பா… அம்மாவுக்கு தமிழ் புரியுமே தவிர சரளமாகப் பேச வராது..

சிந்து கொஞ்சம் பரவாயில்லை..சின்ன வீடுதான். அடையார் காந்தி நகரில்..

சிந்துவும் அம்மாவும் மட்டும் வீட்டில்….. இன்ஸ்பெக்டர் வந்ததால் பதட்டப்படவோ பயப்படவோ இல்லை.

இயல்பாகவே இருந்தார்கள்..

சிந்துவை முதலில் விசாரிப்பதற்கு காரணம் இருந்தது.

கங்கா விழும்போது அவள்தான் பிடிக்கப் பார்த்திருக்கிறாள்.

கங்காவின்கிழிந்த பாதி உடையை போலீஸ் அன்றைக்கே சிந்துவிடமிருந்து வாங்கிக் கொண்டும் விட்டது..

அரைமணி நேரம் ……

L.K.G.யிலிருந்து + 2 வரை படித்த தோழியைப்பற்றி கேட்ட கேள்வி அத்தனைக்கும் கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் பதில் வந்தது…

அவளுடைய ஒரே நோக்கம் கங்கா மேல் ஒரு களங்கமும் இல்லாமல் சீக்கிரமே உடலைப் பெற்றோர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்பது தான்..

சிந்துவின் கையில் சிக்கிய கங்காவின் உடையே அவளை யாரும் தள்ளிவிடவில்லை என்பதற்கு போதுமான ஆதாரம்….

சதானந்தனுக்கு இந்த கேசைப் பொறுத்தவரை இம்மி அளவும் சந்தேகம் வரவில்லை….

பத்மாவும் காவேரியும் அட்சரம் பிசகாமல் சிந்து சொன்னதையே சொன்னதால் கேஸ் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் நினைத்தார்..

***

ஆனால் DSP …. ஏன் கேசை இழுக்கப் பார்க்கிறார்…..???

***

“ஹலோ.. நான் சுந்தரபாண்டி…!!தெரியுதில்ல….???

சல்யூட் அடிக்காத குறையாக எழுந்து நின்று …..

‘ஹலோ..!!!!! நான் செல்வகுமார் …DSP..!” என்றார்.

“என்ன DSP ஸார்.. கங்கா பொண்ணு கீழே விழுந்த கேஸ் எந்த இடத்தில இருக்குது…..?”

“ஸார்..என்னப்போயி..சார்னு எல்லாம்…???”

“ஆமா.. நீங்கள்ளெல்லாம் பெரிய ஆளாயிட்டீங்களே… கேசு க்ளோஸ் ஆயிடிச்சா…??

“ஆன மாதிரி தான் ஸார்.. சந்தேகம் வராத பக்கா கேசு சார்…. க்ளீன் ஃபால்.!!!!

அநேகமாநாளைக்கு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் போயிரும் ஸார்…சதாவும் ரிப்போர்ட்டுக்காக வெயிட்டிங்..”

“நாளைக்கு போகக்கூடாது…இன்னும் ஒரு என்கொயரி பாக்கி இருக்குன்னாரு சதா.நமக்கும் கொஞ்சம் காரியம் ஆகவேண்டி இருக்கு..தேர்தல் வருது தெரியுமில்ல..நம்ப தொகுதி மண்ணக் கவ்வும் போல இருக்குய்யா… ஏதாவது செஞ்சாகணும்…”

“சொல்லுங்க ஸார்..செஞ்சுப்புடலாம்…”

“அவசரப்படாதய்யா..காதில போட்டு வச்சேன்.கண்ணில விளகெண்ணய விட்டுக்கிட்டு நோண்டிப் பாருங்க..”

“சரி ஸார்…வச்சிடுறேன்…”

***

MLA சுந்தரபாண்டி அப்படி ஒண்ணும் மோசமானவர் இல்லை.. அடிதடி விஷயம் அறவோடு பிடிக்காது.!!!!

# Me too!!! …வில் இது வரை யாரும் # you too ..??? என்று கேட்கும் நிலைமைக்கு ஆளானதில்லை…

ஆனால் நாற்காலியை யாருக்காகவும் விட்டுவிட தயாரில்லை…அதற்காக எந்த லெவலுக்கும் இறங்கத் தயார்….

தர்மம் நியாயம் பேசி நேரத்தை வீணாக்கும் அளவுக்கு முட்டாளில்லை.

அழகான அன்பான மனைவி பானுமதி… இரண்டு செல்வங்கள் செல்வி…… உதயன்…!!!!

வருஷத்தில் எப்படியும் ஒரு மாசம் லண்டன்..பாரீஸ்..சுவிட்சர்லாந்து….

சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட்….. நாலைந்து பங்களாக்கள்…

போதும் என்று தோன்றவில்லை..

கட்சியில் இன்னும் கொஞ்ச நாள்.!!

மேக்னா வீடு அண்ணா நகரில் நல்ல வசதி படைத்தவர்கள் இருக்கும் ஏரியா…

வீட்டில் மேக்னா, தாத்தா … பாட்டி…

இரண்டு பேருக்குமே தமிழ் பேசவோ புரிந்து கொள்ளவோ முடியாது…

ஒரு பீஹாரி வந்து சமையல் செய்து விட்டு மூணு மணிவரைக்கும் இருந்து விட்டு போவான்..

மேக்னா நன்றாகவே தமிழ் பேசுவாள்.ஐந்து பேரில் வைத்து தைரியசாலி.கோபக்காரி. தப்பை உடனே தட்டிக் கேட்காவிட்டால் தலை வெடித்து விடும்…

“உங்க பேரு….”

“மேக்னா ….”

“நீங்க கங்கா படிக்கிற காலேஜுல தான் படிக்கிறீங்களா ….???”“

ஆமாம்.. ஒரே பிராஞ்ச்…..”

மேக்னாவால் மற்ற நண்பர்கள் மாதிரி கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல தெரியாது…

கூட இரண்டு வார்த்தைகள் சொல்லியாக வேண்டும்…

அது பின்னால் எத்தனை பிரச்சனைகளை கொண்டு விடப் போகிறது என்று அப்போது அவள் எண்ணவேயில்லை…

“அதே பிராஞ்ச் என்றால் … எப்பவுமே கூடவே இருப்பீங்க….அப்படித்தானே…????”

“ஆமா… பெரும்பாலான சமயம்….

மற்றவர்களிடம் கேட்க அவசியமில்லாத கேள்விகள் இவளிடம் கேட்க வேண்டி இருந்தது…..

***

நேற்று இரவு சதானந்தனுக்கு துரைப்பாண்டியிடமிருந்து ஒரு ஃபோன்…

“சதா…. எப்படி இருக்கீங்க…??’ “

“எல்லாம் ஓக்கே சார்…..’”

சதானந்தம் கூழைக்கும்பிடு போடும் ஆசாமி இல்லை.

நேர்மை தவறாத ஆபீசர் என்று பெயர் வாங்கியிருந்தார்…..

அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று துரைப்பாண்டிக்கு நன்றாகவே தெரியும்….

“கங்கா கேசு எப்படி போயிட்டிருக்கு சதா..?”

“என்கொயரி எல்லாம் அனேகமாக முடிஞ்சிருச்சு… கூடப் படிக்கிற ஒரு பொண்ணுதான் பாக்கி…

நாளைக்கி முடிஞ்சிடும் ஸார்..

Clean case of accidental fall.. !!!!

ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டா இரண்டு நாள்ல பாடிய குடுத்திடலாம் ஸார்..

அவங்க அப்பா அம்மாவைப் பாத்தா பாவமாயிருக்கு…”

“என்ன சதா.. ??? நீங்க இன்ஸ்பெக்டர்……!!!!!!

உங்க பாவத்தையெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு வேலைய மட்டும் பாருங்க…”

“………..”

“காலேஜில லவ் ..கிவ்… இருந்து வைக்கப் போகுது….ஒண்ணையும் ‌ மிஸ் பண்ணக் கூடாது..

அந்த மங்கையர்க்கரசி கேஸ் மாதிரி .. திரும்ப தோண்ட வச்சி.. ஒரே டார்ச்சர்…. கட்சி பேர நாறடிச்சிட்டானுங்க… ஞாபகம் இருக்கா….??”

“ஸார்… இந்த கேசுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை… இங்க அந்த மாதிரி சந்தேகம் வர வாய்ப்பு ‌ எதுவுமேயில்லை…”

“சதா… நீங்க எல்லாமே முடிவு பண்ணிட்டீங்க போல….

மரியாதையா அந்த பொண்ண என்கொயரி பண்ணிட்டு ரிபோர்ட்ட அனுப்பி வச்சீங்கன்னா உங்களுக்கு நல்லது..”

“யெஸ் சார்…..!!!”

சதாவுக்கு எரிச்சலான எரிச்சல்… இந்த கேசுல ஏன் இப்படி மூக்க நுழைக்கிறார் இந்த மனுஷன்…..

முன்னே பின்னே தெரியாத கங்காவை நினைத்து கண் லேசாய் கலங்கியது..

“நீங்க பாதி நேரம் கங்கா வீட்லதான் இருப்பீங்கன்னு உங்க தோழிங்க சொல்றாங்களே….

நிஜம்தானா …??”

“100 % நிஜம்…கங்காவோட அப்பா…அம்மா… எனக்கும் அப்பா..அம்மா..அவங்கள மாதிரி அன்பான குடும்பத்தைப் பார்த்ததேயில்லை…”

மேக்னா பெரிதாக அழ ஆரம்பித்து விட்டாள்…

“சாரி மேடம்….நீங்க வேணா கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கங்க… நான் வெளியில் வெயிட் பண்றேன்.. எனக்கு புரியுது…”

“பரவாயில்லை இன்ஸ்பெக்டர்…. ஐயம் ஆல்ரைட்… நீங்க மேல கேக்கலாம்…..”

“இந்த கேள்வியைக் கேட்பதற்கு தப்பாக நினைக்க வேண்டாம்.

உங்கள்இருவருக்கும் பாய்ஃபிரண்ட் .. அந்த மாதிரி ஏதாவது…’

“நாங்கள் அஞ்சு பேருமே படித்து முடித்து வாழ்க்கையில ஏதாவது சாதித்தப்புறம்தான் காதல்… கல்யாணம்….எல்லாம் என்று ஒரு உறுதியோடு இருக்கோம்…ஆனால் கல்லூரில எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி தான் பழகுவோம்…அதுவும் கங்கா நன்றாகப் படிக்கிற பெண்…. எத்தனையோ பசங்க அவகிட்ட பாடம் கத்துக்க வருவாங்க..பார்த்திபன்னு ஒரு பையன்.. ஆங்கிலத்தில் ரொம்ப வீக்….. ஃபெயில் மார்க் வாங்கிட்டிருந்தான்..அவங்க அப்பா அம்மா படிக்காதவங்க..கட்டட வேலை செய்யறவுங்க.. எப்படி அவன இங்லீஷ் பேச வச்சிட்டா தெரியுமா…??”

“அந்தப் பையனுக்கும் கங்காவுக்கும் காதல்.. ஏதாவது..??”

மேக்னாவுக்கு இப்போதுதான் தான் அதிகம் பேசி விட்டதை உணர்ந்தாள்..டூ.. லேட்….இதை வைத்து கிளறுவானோ..??

“ஸார்… நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே… அந்த மாதிரி எதுவுமேயில்லை..”

“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றிம்மா….

அநேகமாய் இரண்டு நாள்ல பாடிய அனுப்பிடுவாங்க… !!!!

Very sorry for your friend’s tragic death..”

மேக்னா உடனே காவேரிக்கு ஃபோன் செய்தாள்..

“ஏய்.கவி….இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்டி…’

“ஒண்ணும் நீ உளறலயே….”

“உளறித் தொலச்சிட்டேண்டி…”

“என்னடி சொல்ற….!”

“கங்காவ எல்லோருக்கும் பிடிக்கும்… பார்த்திபன்கிற பையன எப்படி ஸ்மார்ட் ஆக்கிட்டா தெரியுமான்னு பேச்சு வாக்கில சொன்னேன்…உடன்னே லவ்வா …?ன்னு கேட்டாரு… அப்பத்தான் எனக்கே உறைச்சுது…”

“கெடுத்தியேடி…இத வச்சு நோண்டுவானுங்களே…!!! உன் வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியே…சரி விடு..இனிமேலாவது ஜாக்கிரதையா இரு….”

ஏற்கெனவே மேக்னாவுக்கு குற்ற உணர்ச்சி..!!?

தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாப் போய் அது அவளுடைய இறந்த நாளாகிவிட்டதே….!!!!!

மேக்னாவின் அப்பா .. அம்மா.. விடமிருந்து போன் மேல் போன்…

“மேக்னா பேட்டி…! கங்காக்கு இப்படி ஆய்டிச்சே…. போலீஸ் உன்ன தொந்தரவு செஞ்சா சொல்லு.. அப்பாவுக்கு தெரிஞ்சவர்தான்…சொல்லி வைக்கலாம்…”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… எனக்கு ஒண்ணும் இல்லை….வேண்டியிருந்தா சொல்றேன்…..”

இன்ஸ்பெக்டர் சதானந்தம் ஒரு perfectionist… ஒரு காரியத்தை எடுத்தால் ஒரு தடங்கலும் இல்லாமல் சரியாகச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்.

ஒரே ஒரு என்கொயரி பாக்கி இருப்பதாய் தோன்றியது..

மலர் பொறியியல் கல்லுரிக்கு ஒரு விசிட் தேவை என்று அப்பாயின்டமென்ட் வாங்க முடிவு செய்தார்…

பிரின்சிபால் லைனில் வந்தார்.

“ஹலோ.. என் பெயர் குமுதினி…… மலர் பொறியியல் கல்லூரியி முதல்வர்…!!

எந்த விதத்தில் என் உதவியை எதிர்பார்க்கிறீர்கள் மிஸ்டர் சதானந்தம்…???”

“குட்மார்னிங் மேடம்..உங்க கல்லூரியில் படிக்கிற……சாரி…..படிச்ச கங்கான்னு …அவங்க விஷயமா ஒரு வழக்கமான என்கொயரி..எப்போ உங்கள மீட் பண்ணலாம்..? நான் உங்க பொன்னான நேரத்த வீணாக்க விரும்பல…போலீஸ் சம்பரதாயம்னு வேணா வச்சுக்குங்க….”

“என்னாலான ஒத்துழைப்பை நிச்சயம் தருவேன்… ஆனா நீங்க கல்லுரிக்கு வரத நான் விரும்பவில்லை…ஏற்கனவே மாணவர்கள் மனதளவுல ரொம்பவே நொறுங்கிப் போயிருக்காங்க…இந்த வாரம் மாதாந்திர பரீட்சை கூட போஸ்ட்போன் ஆயிருச்சு…போலீஸ் விஸிட்டுன்னா மிரண்டு போயிடுவாங்க… அவங்க மனநலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம். நீங்க தொலைபேசியிலேயே எவ்வளவு கேள்வி வேணாலும் கேளுங்க…. பதில் சொல்ல கடமைப் பட்டிருக்கேன்…”

இன்ஸ்பெக்டருக்கும் அது சரியென்றே தோன்றியது..

பெரிதாக கேட்பதற்கு ஒன்றுமில்லை. விரைவில் வழக்கு முடிவுக்கு வரவேண்டும் என்பது தான் அவருடைய ஆசையும்….!!!!

ரிக்கார்டரை ஆன் பண்ணிக் கொண்டார்…..!!!

“மேடம்…… நான் வேண்டிய தகவல் எல்லாமே சேகரிச்சிட்டேன்… அவுங்க ஃபேமிலி , நண்பர்கள் , அக்கம் பக்கம் இருப்பவுங்க… எல்லோருமே நல்லாவே ஒத்துழைப்பு தந்தாங்க…கங்கா தவறிதான் விழுந்திருக்காங்க… யாரும் பிடிச்சு தள்ளிவிடல…….!!! தற்கொலை முயற்சியாயிருந்தா தனியா போயிருக்கலாம்…ஒரே ஒரு சந்தேகம்…கல்லூரியில அவங்க மனசு நோகடிக்கிறாமாதிரி எதாவது சம்பவம் நடந்திருந்தால் அதை மறைக்காமல் சொல்ல வேண்டியது உங்கள் கடமை…அதனால் ஒரு வேளை திடீரென்று தற்கொலை எண்ணம் தோன்றி இருக்கலாம்..!!!! அதையும் தெளிவு பண்ணிட்டா உடனே மெடிக்கல் ரிப்போர்ட் தயாராகிவிடும்…”

“புரியுது….. கங்காவுக்கு அது மாதிரியான எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை.. எங்களுடைய மாணவர்களின் படிப்பைவிட அவர்களுடைய மனநலம் எங்களுக்கு ரொம்ப முக்கியம்…மூன்று மனநல ஆலோசகர் இருக்காங்க….I can give a clean chit to her mental health….”

“Thank you madam….”

***

சதாவுக்கு கண்ணெல்லாம் ஒரே எரிச்சல்…. சரியாகத் தூங்கி ஒரு வாரமாச்சு… ரிப்போர்ட் முடிந்த சந்தோஷத்தில் லேசாய் கண்ணை மூடினார்..

“ஹலோ சதானந்த்….DSP செல்வகுமார் பேசறேன் …Quiry எல்லாம் முடிச்சிட்டீங்க போல…”

“Yes sir… இன்னிக்கு eveningக்குள்ள postmortem report ready பண்ணிடுவாங்க…!!!! Very clear cut case of accidental fall…”

சாதாரணமாய் இந்த மாதிரி சிக்கல் இல்லாத கேஸை சதாவே டீல் பண்ணி விடுவார்… ஆனால் .??

“நீங்க ரிப்போர்ட்அனுப்ப வேண்டாம்.. நானும் ஒரு தடவை பார்க்க வேண்டும்…உடனே எல்லா filesம் என் மேசைக்கு வரணும். Okay…??”

சதாவுக்கு எல்லா files ஐயும் அவர் முகத்தில் விட்டெறிந்து விட்டு ஓடி விட மாட்டோமா என்று ஆத்திரம் வந்தது..

“Yes sir…”

***

பார்த்திபன் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தான்..முன்னை பின்னே பார்த்திராத இரண்டு பேர்..

“யாரு வேணுங்க …??”

“பார்த்திபன் யாரு …???”

“நாந்தான்….!”

பார்த்திபன் பார்ப்பதற்கு கொஞ்சம் ஒல்லியாக ,நல்ல களையான முகத்துடன் , அடர்த்தியான கேசத்துடன் கொஞ்சம் விசால் சாயலில் இருந்தான்..

“பார்த்திபன்.. நீங்க உடனடியா எங்களோட ஸ்டேஷன் வரைக்கும் வரணும்…!!”

அதற்குள் உள்ளேயிருந்து ஒரு குரல்…

“யாரு கண்ணு வாசல்ல…???”

நாகரத்னம் வெளியே வந்தாள்…

“யாருங்க நீங்க…. என்ன வேணும்…??”

கொஞ்சம் விவரமான ஆள் என்று போலீஸூக்கு புரிந்துவிட்டது….

“ID Card ஐ எடுத்து நீட்டினார்கள்…

“போலீஸ் டிபார்ட்மெண்டிலிருந்து வரோம்மா… ஒரு enquiry க்காக தம்பி ஸ்டேஷன் வரைக்கும் வரணும்…!!!”

“சம்மன் இல்லாம எதுக்குங்க வரணும்…. என்ன தப்பு செஞ்சான் எம்பையன்…???”

“வெறும் enquiry தான்…. பயப்படாதீங்க… பையன் மேல ஒரு கீறல் கூட விழாது..அவங்க கல்லூரியில கூடப் படிச்ச கங்காங்கிற பொண்ணு இறந்த விஷயமா … routine enquiry தான்….”

“அம்மா… பேசாம இரு..நா போயிட்டு வந்திடுவேன்…அப்பா வந்தா ஸ்டேஷனுக்கு அனுப்பு…”

போலீஸ் ஸ்டேஷன் போனவுடன் ராஜ மரியாதை தான்… ஆனால் போகப் போக திசை மாறிப் போனது…

கேள்விகள் அவனுக்கும் கங்காவுக்கும் இல்லாத உறவைப் பற்றி…கொச்சை கொச்சையாய்…

இந்த காலத்து இளைஞர்கள் ரொம்ப புத்திசாலிகள். தங்களைச் சுற்றி என்ன அநியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்க அஞ்சாதவர்கள்…

அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது..நடக்கப்போவது என்ன என்பது சினிமா படம் போல் ஓடியது….

***

“கங்காவுக்கும் , தலித் இளைஞன் பார்த்திபனுக்கும் காதல்…?? கங்காவின் பெற்றோர் எதிர்த்ததால் மன உளைச்சலில் தற்கொலை….”

“கல்லுரி மாணவர் ஆர்பாட்டம்….பார்த்திபனுக்கு ஆதரவாய் இளைஞர் அணி…!!!”

“பார்த்திபனுக்கு கொலை மிரட்டல்….

“ஆளும் கட்சி ‌MLA முழு ஆதரவு..”

***

பார்த்திபன் தீர்மானம் பண்ணி விட்டான்.. கங்காவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த விடப்போவதில்லை..

Come what may…. !!!!

உயிரே போனாலும் சரி….!!!!

***

“பார்த்திபன்…நல்லா யோசியுங்க… உங்க வாழ்க்கையே மாறப்போகுது…இப்பவே உங்களுக்கு மாசம் பத்து லட்சம் ரூபாயில வேல . நிச்சயம்…ECR ல மூணு கிரவுண்டில பங்களா..பாங்கில fixed deposit…
பொன்னான வாய்ப்பு……நழுவ விடாதிங்க…கட்சில கூட சேத்துக்குவாரு…”

‘தூ…’ என்று மூஞ்சியில் துப்பியிருப்பான்..

‘பொறு..பொறு..’ என்றது அவன் புத்தி..

“வீட்டுக்கு போய் அம்மா அப்பாகிட்ட பேசிட்டு சொல்லட்டா…??”

“ஆனா சாயங்காலமே பதில் தெரியணும் . கேச நீட்டிக்கிட்டே போனா ஜனங்களுக்கு சந்தேகம் வரும்….”

போன படியே பையன் திரும்பி வந்ததில் நாகரத்தினத்துக்கு சந்தோஷம்… ஆனால் பார்த்திபன் சொல்ல சொல்ல ரத்தம் கொதித்தது..

“அடேய்…அது அறியா பச்ச பிள்ளை.. வெளுத்ததெல்லாம் பாலு அதுக்கு..கொலகாரப் பாவிகளா..அதுமேல பழியப்போட்டு நம்மள குபேரனா ஆக்கப் பாக்கிறாங்களே…உனக்கு பாடம் சொல்லிக் குடுத்த குலசாமிடா..கும்பிட வேண்டிய தெய்வத்த குப்பையில எறிஞ்சு மிதிக்கிறாங்களே…உருப்படுவானுங்களா….???”

“அம்மா.. பொறுமையா இரு…. ஒரு கை பாக்கலாம்….”

ஆனால் அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை…..

சுந்தரபாண்டிக்கு பொறுமை போய் விட்டது.. கட்சியில் செல்வாக்கு உடையவர்.. அவருக்கு தேவை பணம்… பதவி…

அடிதடி.. பெண் விஷயத்தில் கிட்ட கூட போகமாட்டார்… இரண்டு குழந்தைகளுக்கும் இன்னும் கொஞ்சம் சேர்த்து விட்டால் ஆயுசுக்கும் நிம்மதி என்ற பேராசை…

நாற்காலி வேறு லேசாக ஆடத் தொடங்கியிருந்தது…

அவருடைய துருப்பு சீட்டே வேறே…ஜாதிக் கலவரம் பண்ணியே கட்சியை தேர்தல் சமயத்தில் காப்பாத்தி விடுவார்.

தேர்தல் வந்தாலே அவருடைய ரேட்டு கோடியைத் தாண்டிவிடும்…

இப்போது அதே மாதிரியான ஒரு எமர்ஜென்சி.லட்டு மாதிரி கையில் வந்து விழுந்த கங்கா வழக்கை விடுவாரா…??

குறிஞ்சி குப்பம் அவர் தொகுதிதான்.. அடிக்கடி போவதுண்டு.குப்பத்தில் செல்வாக்கும் உண்டு.

புதிதாய் முளைத்த குப்பமானதால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். ஆறு மணிக்கு மேல் ஆள் அரவம் கம்மி.

பார்த்திபன் அப்பா அம்மாவுடன் வீட்டில்தான் இருப்பான்.இன்று இரண்டில் ஒன்று தெரியாமல் விடப்போவதில்லை…

“என்னங்க.. எங்க கிளம்பிட்டீங்க..? இன்னிக்கி ஊர்ல இருந்து எங்க அப்பா அம்மா , அத்தையெல்லாம் வருவாங்களே மறந்திட்டீங்களா…”

இவ வேற கிளம்புற சமயம் அபசகுனம் பிடிச்ச மாதிரி….

“பானு… அவங்க வர லேட்டாகும்… அதுக்குள்ள வந்திருவேன்….”

தன்னுடைய நம்பிக்கையான டிரைவர் தனபாலைக் கூட்டிக் கொண்டார்.

“சின்ன வண்டிய எடுப்பா.. குறிஞ்சி குப்பம் விடு…தள்ளியே நிப்பாட்டு… பத்து நிமிஷ வேலைதான்…”

வீட்டு கதவைத் தட்டினார்..நாகரத்னம்தான் கதவைத் திறந்தாள்..

“வணக்கம்மா…நானு .. உங்க தொகுதி MLA.. பார்த்திபன் இருக்கானா…?? உங்க கிட்ட பேசினானா…??”

“வணக்கமய்யா…நீங்க போயி…. !!இங்க….!!!அவன் அப்பா கூட வெளியே போயிருக்கான்.. இப்ப வந்திருவாங்க…உக்காருங்க…கலரு வாங்கியாறவா….??”

“ஒண்ணும் வேண்டாம்மா……. குடிக்க கொஞ்சம் தண்ணி மட்டும் குடுங்க..தண்ணியெல்லாம் நல்லா வருதா…??”

“உங்க புண்ணியத்தில ஒரு குறையும் இல்ல.”

ஒரு டம்ளர் தண்ணியை கையில் வாங்கிக் கூட இருக்க மாட்டார்..

“ஐய்யோ…ஓடி வாங்களேன்..இந்த அநியாயத்த பாருங்க… பெரிய மனுசன் செய்யற வேலையா இது…தனியா இருக்கற பொம்பள கிட்ட..ஏய்யா..காச விட்டெரிஞ்சா நூறு பேர் கிடைப்பாங்களே… எம் பையனுக்கு தெரிஞ்சா அரிவாள எடுத்திடுவானே..”

சுந்தரபாண்டிக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.. தலையில் துண்டை போர்த்திக்கொண்டு ஒட ஆரம்பித்தார் .

அவசர அவசரமாய் காரில் ஏறிக் கொண்டார்.அதற்குள் கூடிய கூட்டத்திலிருந்து இரண்டு மூன்று கிளிக் கிளிக் ..

கார் நம்பர் உட்பட…

***

அன்றைக்கு மாலை தினசரிகளில் அவருடைய பெயர் நாறிப்போனது..

‘ஆளும் கட்சி MLA யின் லீலா வினோதங்கள்..’

‘MLA caught red-handed with the slum woman in Kurinji Kuppam..’

‘சுந்தரபாண்டி கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா..??’ எதிர் கட்சி கேள்விக் கணைகள்…

தன் கையை மீறி விஷயம் போய்விட்டதை உணர்ந்து கொதித்தார். BP… சுகர் …எகிறியது..

ஆஸ்பத்திரியில் போய் அட்மிட் ஆகிவிட்டார்..

ஆனால் காலையில் அவருக்கு மற்றொரு பேரதிர்ச்சி காத்திருந்தது…

ஆளும் கட்சி சுந்தரபாண்டியின் மனைவி பானுமதி அவமானம் தாங்காமல் குழந்தைகளுடன் விஷமருந்தி தற்கொலை…..

***

“அம்மா… நான்தான் கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னேனில்ல… உம் பேரைக் கெடுத்து கிட்டு ஏம்மா…??”

அம்மாவைக் கட்டிப்பிடித்து பார்த்திபன் அழுதான்..

“தம்பி…உம்மேல எனக்கு நம்பிக்கை இருக்குப்பா…நீங்களெல்லாம் அறியாப் பிள்ளைங்க… உங்க பாஷை அவனுங்களுக்கு புரியாது…அவனுங்க பாஷையிலதான் பதில் சொல்லணும்..என்ன மன்னிச்சிடு கண்ணு….”

நாகரத்தினம், பார்த்திபன் , சதானந்தம் , குமுதினி போன்றவர்கள் இருக்கும் வரை கங்கை களங்கம் நீங்கி புனிதமடைவாள் என்றே நம்புவோம்…

மறந்து விட்டது..!!!!!!!

சதானந்தம் எந்த இடையூறுமில்லாமல் ரிப்போர்ட்டை அனுப்பி விட்டார்….!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *