கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 23, 2023
பார்வையிட்டோர்: 3,504 
 
 

(1990ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம்-9

வேப்ப மரத்துக் காக்கை கரைய “யார் வரப் போறாளோ, தெரியலே” என்று கமலா சொல்லி வாய் மூடுமுன் வாசலில் ஜட்கா வண்டியிலிருந்து சிதம்பரம் கௌரி அத்தை கழுத்தில் காசுமாலை பளபளக்க இறங்கிக் கொண்டிருந்தாள்.

“திடீர்னு அத்தை வந்திருக்காளே, என்ன விஷயமோ!” என்று எண்ணிக் கொண்ட கமலா “பாகீ! வாசல்ல யார் வந்திருக்கா பாரு” என்றாள்.

அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை அடக்கிவிட்டு ஓடிவந்த பாகீரதி அத்தையைக் கண்டதும் அகமும் முகமும் மலர “வாங்க அத்தை! நேத்தெல்லாம் உங்க நினைப்புத்தான் எனக்கு” என்றாள்.

அத்தையை ஆர்வத்தோடு அணைத்துக் கட்டிக்கொண்டவள் மகிழ்ச்சி பொங்க “நீங்க வருவீங்கன்னு மனசிலே தோணிண்டே இருந்தது, அத்தை!” என்றாள்.

“இட்சிணி ஏதாவது சொல்லித்தா?”

அத்தையின் கையிலிருந்த பரண்டையையும் தாழம்பூவையும் வாங்கிக்கொண்ட கமலா “காக்கா கத்திண்டே இருந்தது!” என்றாள்.

“நீ எப்ப வந்தடி இங்க? அம்புலு எங்கே?” என்று கேட்டாள் அத்தை.

“தூங்கறது.நாலு நாளாச்சு வந்து, ஊருக்குப் போகணும்னு சொல்லிண்டேதான் இருக்கேன். இதுக்குள்ள என்னென்னவோ குழப்பம்!”

“என்ன குழப்பம்?”

“என்னவோ! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே!”

அதைத் தெரிந்துகொள்வதில் அத்தை அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அப்புறம் நிதானமாக விசாரித்துக் கொள்ளலாம் என எண்ணி “அண்ணா எங்கே?” என்று கேட்டுக்கொண்டே பின்கட்டுப் பக்கம் நடந்தாள்.

அங்கே கனபாடிகள் சிவப்பழமாய் உட்கார்ந்து கண்களை மூடி ஜபம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் திரும்பி வந்தாள்.

“என்ன அத்தை அத்தி பூத்தாப்பல?” என்றாள் கமலா. “பரண்டை கொண்டு வந்திருக்கனே, பார்க்கலையா? இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டிக்கு திவசம் வரப் போறதுடி! ஒரு திவசத்துக்காவது வராம இருந்திருக்கனோ?”

“உங்க அம்மாவுக்குன்னு சொல்லு. இது மாசி மாசம்கறது மறந்தே போச்சு. பாட்டியோட திதி இப்பத்தான் வர வழக்கம். அப்பாவுக்கு ஞாபகம் இல்லையோ, என்னவோ!”

“பாவம், அவனுக்கு எத்தனையோ கவலை! மறந்திருப்பான்”

கனபாடிகள் ஜபத்தை முடித்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு வந்தபோது “கௌரி அத்தை வந்திருக்கா! பார்த்தேளா, அப்பா” என்றாள் கமலா.

“கணீர்னு குரல் கேட்டுது! வெண்கலக் குரலாச்சே! எங்கே அவள்?” என்று கேட்டார் கனபாடிகள்.

“புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கப் போயிருக்கா!” என்றாள் கமலா.

கனபாடிகள் தொழுவத்துக்குப் போய் “வா, கௌரி! அவர் சௌக்கியமா? நல்ல வேளை! நீ வந்தே; இல்லேன்னா அம்மாவை மறந்தே போயிருப்பேன். என்னைக்கு சிராத்தம்? புதன்கிழமையா! இப்பவே கிட்டாவை அனுப்பி வாத்தியாரிடம் சொல்லிட்டு வரச் சொல்றேன்” என்றார்.

“ஏன், ஒரு மாதிரி இருக்கீங்க எல்லாரும், கலகலப்பே இல்லாம?” என்று கேட்டாள் அத்தை.

“கமலா சொல்லியிருப்பளே” என்றார் கனபாடிகள்.

“ஏதோ குழப்பம்னு மாத்திரம் மொட்டையாச் சொல்லி நிறுத்திட்டா. அப்புறம் எதுவும் சொல்லலை. நானும் கேட்கலை. நீயே சொல்லு” என்றாள் கௌரி.

“பக்கத்து அக்கிரகாரத்துலேந்து நேத்து ஏழெட்டு பேர் என்னைத் தேடிண்டு வந்தா! யாரோ ஒருத்தன் தாலி கட்டின பெண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு சமுத்திரம் தாண்டிப் போயிட்டானாம். வெளி தேசம் போய் வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிண்டு இருபது வருஷம் அவளோடு வாழ்ந்தப்புறம், அவள் காலமானதும். இப்ப ஊர் திரும்பி வந்து இந்தப் பெண்டாட்டியோட வாழப்போறேங்கறானாம். ‘சாஸ்திரம் இதுக்கு ஒத்துக்குமா? நீங்க என்ன சொல்றேள்’னு ஊரார் என்னைக் கேட்க வந்தா. சாஸ்திரம் கண்டிப்பா ஒத்துக்காது. ஜாதிப் பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான்னு நான் தீர்ப்பு சொன்னேன்.

‘உங்க பெண் பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே! அதுக்கு என்ன சொல்றீங்க? அதை மட்டும் உங்க சாஸ்திரம் ஒப்புக்கறதாக்கும்!’ என்று என்னையே மடக்கி அவமானப் படுத்திட்டு போயிட்டா!

இதையெல்லாம் கேட்டுண்டிருந்த உன் செல்லம் பாகீரதி ராத்திரி என் கிட்டே அழுதுண்டே வந்து என்ன சொல்லித்து தெரியுமா? அதை என் வாயாலே திருப்பிச் சொல்றதுக்கே நாக்கூசறது!”

பாகீரதி என்ன சொன்னாள் என்று அத்தை கேட்க வில்லை. அவளே அதை ஒரு மாதிரி ஊகித்துக் கொண்டாள்.

“சரி, அண்ணா! இதுக்கெல்லாம் மனசைப் போட்டு குழப்பிக்காதே! நம்ம குழந்தையோட சந்தோஷம்தான் நமக்கு முக்கியம்!” என்றாள்.

அச்சமயம் பாடசாலைப் பையன்களில் ஒருவன் கனபாடிகள் எதிரில் வந்து நின்றான்.

“என்னடா?”

“நேத்து நீங்க சொல்லிக் கொடுத்த வேத பாடத்தை ஸ்லேட்டில் எழுதிக்கொண்டு வந்திருக்கேன், என்றான்.

“வேதத்தை எழுத்தால் எழுதக் கூடாதுடா! ‘எழுதா மொழி’ ன்னு சொல்லுவா அதை. சப்த ரூபமான வேதத்தைக் காது வழியாக் கேட்டுதான் மனப்பாடம் செய்யணும். அப்படித் தான் அது வழிவழியா வந்திருக்கு. ஒரு அட்சரத்தின் சப்தம் கூடப் பிசகக்கூடாது. பிசகினால் அர்த்தம் அனர்த்தமாயிடும். வேதத்துக்கு ஸ்வரம் உண்டு. அதில் அபஸ்வரம் பேசக்கூடாது. உச்சரிப்பு, ஸ்வரம், ஆரோகணம் அவரோகணம் இதெல்லாம் எழுத்தாலே சாத்தியப்படுமா? நீ சின்னப் பையன். இதெல்லாம் உனக்கு விளங்காது. போய் வேதத்தை ஓது! எழுதாதே! தினமும் ஒரு ஆவிருத்தியாவது வேதத்தை வாய்விட்டுச் சொல்லு. வேதம் ஓதற்போது பாதில விட்டுட்டு அங்கே இங்கே எழுந்து ஓடக் கூடாது. போ, போ” என்றார் கனபாடிகள்.

“மூர்த்தி பாதில விட்டுட்டு ஓடிப் போயிட்டானே!” என்றான் அந்த அசட்டுப் பையன்.

அந்தப் பையனின் வெகுளித்தனமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

“நீ போடா!” என்றார்.


“பாகீ! ஏன் தலையை வாராமல் சிக்காக்கி வச்சிண்டிருக்கே? இப்படி வந்து உட்காரு. தாழம்பூ என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமே! உனக்காகவே நல்ல வாசனைத் தாழம்பூவா வாங்கிண்டு வந்திருக்கேன். அழகாப் பின்னி விட்டுடறேன். வறயா?” என்றாள்.

“ஐயோ, வேணாம் அத்தை! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்காத பாவியாயிட்டேன். இந்த உலகத்துல சிறுமைப்படவே இந்தப் பெண் ஜன்மம் எடுத்திருக்கேன். நேத்தே முடிவு பண்ணிட்டேன். இனி அப்பாவுக்கு என்னால எந்த அவமானமும் வரக்கூடாது. அதுக்கு நான் காரணமாயிருக்க மாட்டேன்…”

“சீ, அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே! நீ சின்னக் குழந்தை! அறியாப்பருவத்தில் உனக்குத் தெரியாமலே எல்லாம் நடந்து போச்சு. அதுக்கு நீ என்ன செய்வே? உன் அம்மா கடைசியா என்கிட்ட என்ன சொல்லிட்டுப் போயிருக்கா தெரியுமா? ‘அக்கா! நீங்கதான் பாகீரதியைப் பார்த்துக்கணும், அவள் கண் கலங்காம சந்தோஷமா இருக்கணும். தலைவிதி அவளை இந்த கதிக்கு ஆளாக்கிடுத்து. மத்த பெண்களைப் போல அவளுக்கும் ஆசைகள் இருக்காதா? சந்தோஷம் வேணாமா? உங்க அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சதா வேதம், சாஸ்திரம்னு சொல்லிண்டு வைதிகத்துல மூழ்கிக் கிடப்பார். நீங்கதான் அவளை கவனிச்சுக்கணும். அவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போறேன். நீங்க அவள் பேரில் வெச்சிருக்கும் அன்பும் பாசமும் எனக்குத் தெரியும், அவளுக்கும் உங்க மேல அளவு கடந்த பிரியம்! வாழ்ந்தால் அத்தையாட்டம் பணக்காரியா, தோரணையா, வாழணும்னு அடிக்கடி சொல்லிண்டிருப்பான்னு உங்கம்மா சொல்லிட்டுப் போயிருக்கா” என்றாள் அத்தை.

அழகாகப் பின்னிவிட்ட தாழம்பூக் கூந்தலில் பாகீரதி புது மணப்பெண்போல் ஜொலித்தாள்.

அவளைப் பார்க்கப் பார்க்க அத்தைக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. அவளை மேலும் அழகு படுத்திப் பார்க்க விரும்பினாள். பாகீரதியின் நெற்றியில் குங்குமம் இட்டு, தான் அணிந்திருந்த காசு மாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டு கண் குளிர அழகு பார்த்தபடி “எத்தனை அழகுடி நீ,மகாலட்சுமியாட்டமா!” என்று தன் புறங்கைகளால் அவள் கன்னத்தில் அழுத்தி திருஷ்டி சொடுக்கிப் போட்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமலா “எனக்கு பயமா இருக்கு அத்தை! அப்பா பார்த்துட்டா அப்புறம் நரசிம்மாவதாரம்தான்!” என்றாள்.

“பார்க்கட்டுமே, என்ன நடந்து போச்சு இப்ப! என் ஆசைக்கு அலங்காரம் பண்ணிப் பார்த்தேன். இது பெரிய தப்பா? அவன் வரட்டும். நான் பேசிக்கிறேன்…” என்றாள் அத்தை.

அவர்கள் எதிர்பார்த்தபடியே கனபாடிகள் அங்கு வந்து விட்டார். பாகீரதியின் தகாத அலங்காரத்தைக் கண்டு, சூள் கொட்டி, திகைத்து நின்றார். பிறகு “கௌரி! என்ன இதெல்லாம்!” என்று கோபித்தார்.

“நான்தான் தாழம்பூ வெச்சு தலை பின்னி விட்டேன். எப்படி இருக்கா பாரு! அவள் சின்னக் குழந்தைடா! அவளுக்கு ஆசை இருக்காதா அலங்காரம் பண்ணிக்க!”

“சாஸ்திர விரோதம்னு தெரியாதா உனக்கு! தப்பு கௌரி, ரொம்பத் தப்பு!”

“அவள் கூந்தலை எடுக்காமல் வைத்திருப்பது உனக்குத் தப்பாத் தெரியலே! தலைபின்னிப் பூ வைக்கறது மட்டும் தப்பாக்கும். நீ செய்தது நியாயம்னா நான் இப்ப செஞ்சதிலேயும் தப்பில்லே… அப்படி என்ன செய்துட்டேன். நீ செஞ்சதுக்கு மேல் ஒரு படி போயிருக்கேன். அவ்வளவுதானே!”

பதில் சொல்ல முடியாமல் திணறிப்போன கனபாடிகள் “ராம், ராமா!” என்று முணுமுணுத்தபடி அப்பால் போய் விட்டார்.


திவச விஷயமாக வாத்தியாரைத் தேடிப் போன கிட்டா திரும்பி வந்தான். “புதன்கிழமை அவருக்கு வேலை இருக்காம். வரமுடியாதாம்” என்றான்.

“பதிலுக்கு வேறு வாத்தியாரை ஏற்பாடு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே, நீ கேட்டயா?”

“கேட்டேன். அங்கே பக்கத்தூர்க்காராளெல்லாம் கும்பலா இருந்தா. ஏதோ ‘கசமுசா’ன்னு பேசிக்கறா” என்றான் கிட்டா.

“என்னடா பேசிக்கிறா?”

“உங்களை ‘பாய்காட்’ பண்ணப் போறாளாம்.”

“ஓகோ!” என்றார் கனபாடிகள்.

அத்தியாயம்-10

நூல் நூற்றுக் கொண்டிருந்த கனபாடிகளின் மனம் தக்ளியில் லயிக்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்ததால் நூலிழை ‘பட் பட்’டென்று அறுபட்டுக் கொண்டிருந்தது.

“‘பாய்காட்’னா என்ன பண்ணப் போறாளாம்?” என்று கேட்டாள் கௌரி அம்மாள்.

“எல்லாருமாச் சேர்ந்து நம் வீட்டு விசேஷங்களுக்கு வராமல் நம்மை ஒதுக்கி வச்சுடுவா. அதுக்குப் பேர்தான் பாய்காட் ஊராருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்ச வார்த்தை அது ஒண்ணுதான்போல இருக்கு! ஹ்ம்…” வருத்தத்தோடு சிரித்தார் கனபாடிகள்.

“அப்படி என்ன மகாபாவம் பண்ணிட்டயாம் நீ?”

“பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே, அதுக்குத் தான்…”

“அவாவா வீட்ல இப்படி ஒண்ணு அப்பத்தான் தெரியும் அந்தக் கஷ்டம். அது சரி; இத்தனை நடந்திருந்தா நாளும் பேசாம இருந்துட்டு இப்ப என்ன திடீர்னு பாய்காட்?” என்று கேட்டாள் கௌரி.

“கோபத்துக்குக் காரணம் வேற. நான் சொன்ன தீர்ப்பு, சிலபேருக்குப் பிடிக்கலை. இதுக்கு என் பேரில் குரோதம் பாராட்டிப் பழி வாங்க நினைக்கிறது சரியா…!”

“அந்தக் கடுக்கன் ஆசாமிதான் ரொம்பத் துள்றான்…” என்றான் கிட்டு.

“யாருடா அந்த கடுக்கன்? அவனுக்கென்ன அவ்வளவு ஆத்ரம்?”

“நேத்து உங்களையே எதிர்த்து கேள்வி கேட்டானே ஒருத்தன், அந்த அயோக்கியன் தான். அவன் நாசமாப் போயிடுவான்.”

“கிட்டா! யாரையும் சபிக்காதே! நீ வேதம் ஓதுகிறவன். சாபம் கொடுத்தா நிஜமாவே பலிச்சிடும்.”

“நன்னாப் பலிக்கட்டும்; உங்களை எதிர்த்துப்பேசலாமா அவன்!”

“கௌரி! எதுக்கும் நாம் முன்னேற்பாடா இருந்துடறது நல்லது. கடைசி நேரத்துலே நம்மாத்து திவசத்துக்கு யாரும் வராம இருந்தாலும் இருந்துடுவா. அப்புறம் காரியம் கெட்டுப் போயிடும். பித்ருகர்மாக்களை விட்டுட முடியுமா? அதுவும் தாயார் சிராத்தமாச்சே!”

“கவலைப்படாதே, அண்ணா நாளைக்கே ரெண்டு பேரும் சிதம்பரம் போயிட்டாப் போச்சு!” என்றாள் கௌரி.

“திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் கதை தெரியுமோ, உனக்கு?” என்று கேட்டார் கனபாடிகள்.

“அதென்ன கதை? சொல்லு!”

“அந்தக் காலத்துல ஸ்ரீதர ஐயர்வாள்னு ஒருத்தர். அவர் கதையும் இப்படித்தான். அந்த ஊ ர் சேர்ந்துண்டு அவரை ‘பாய்காட்’ பண்ண ஆரம்பிச்சா. ‘நீங்க பிராமணாளெல்லாம் திவசம் பண்றதை ஒரு கை பார்த்துடறோம்’னு ஆவேசமா தடியும் கையுமா அவர் வீட்டைச் சுத்தி நின்னுண்டு திவசத்தன்னைக்கு ஒருத்தரையும் உள்ளே போக விடாமல் தடுத்துட்டா.”

“அப்படி என்ன குத்தம் பண்ணிட்டார் அவர்?”

“யாரோ ஒரு ஹரிஜன், ஐயர்வாள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து போறதுக்கு ஒத்தாசை பண்ணியிருக்கான். அதுக்கு நன்றிக்கடனா அவர் அவனுக்குத் தன் வீட்டுத் தோட்டத்துல வைத்து சாப்பாடு போட்டிருக்கார். அது பெரிய பாவமாம்! அதுக்காக திவசத்தை நடத்த முடியாமத் தடுத்துட்டா. மணி பத்தாச்சு,பன்னிரண்டாச்சு,ஒண்ணாச்சு – சொல்லி வெச்சிருந்த பிராமணாள் யாருமே வரலை. ஐயர்வாள் கலங்கிக் கண்ணீர் வடிச்சு,மனம் உருகி தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணிண்டார். அதனால் ஆண்டவனே பிராமணர்கள் ரூபமா அவர் வீட்டுக்குள் பிரத்யட்சமாகி திவசத்தை நடத்தி வச்சுட்டுப் போயிட்டார். வீட்டைச் சுத்தி காவல் காத்துண்டிருந்தவாளுக்கு ஒரே ஆச்சரியம்! அவர்கள் மட்டும் எப்படி உள்ளே போனான்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழிச்சுண்டு நின்னா! பகவானை யாரால் தடுக்க முடியும்? இவர்கள் கண்ணுக்கு அவன் தெரிவானா?

உண்மையா நடந்தது இது.

இன்னைக்கும் ஒவ்வொரு கார்த்தி மாசமும் திருவிசை நல்லூர்ல கார்த்திசை அமாவாசை தொடங்கி பத்து நாள் தடபுடலா உற்சவம் நடக்கிறது. பாம்பு பஞ்சாங்கத்தை வேணுமானா எடுத்துப் பார். அதில் கார்த்திகை அமாவாசை திருவிசைநல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் உற்சவம்னு போட்டிருக்கும்” என்றார்.

“இந்தக் கலியுகத்துலகூட இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? நம்ப முடியலையே!” என்றாள் கௌரி.

“நடந்திருக்கே! சமீபத்துலதான். இருநூறு வருஷம்கூட ஆகல்லே…”

“அந்த மாதிரியெல்லாம் இப்ப நடக்காது. கலி முத்திப் போச்சு. பேசாம நாளைக்கே இரண்டு பேரும் சிதம்பரத்துக்குக் கிளம்பிப் போய் காதும் காதும் வெச்சாப்பல திவசத்தை முடிச்சுடலாம், வா” என்றாள் கௌரி.

“ஒருவேளை இவா சிதம்பரத்துக்கும் வந்து கலகம் பண்ணுவாளோ, என்னவோ…?”

“இவா ஜம்பமெல்லாம் அங்கே சாயாது. எங்க பேச்சை யாரும் தட்டமாட்டா” என்றாள் கௌரி.

“எப்படிச் சொல்றே?…”

“ஆயிரம் ஐந்நூறுன்னு ஒவ்வொருத்தருக்கும் கடன் கொடுத்து வைச்சிருக்காரே, இவர். இந்தக் காலத்துல யார் கடன் கொடுப்பா? எல்லாருமே எங்களுக்கு தாட்சண்யப்பட்டவா தான். எங்க பேச்சை யாரும் மீற மாட்டா.”

“இவாளும் அந்த அளவுக்குப் போவான்னு தோணல்லே. ஏதோ இப்ப ஒரு வேகம்”

கமலா குறுக்கிட்டு “எனக்கு ஒண்ணு தோண்றது அத்தை! எல்லாரும் காஞ்சிபுரத்துக்கே போயிட்டா என்ன?” என்றாள்.

“அதெல்லாம் சரியா வராது கமலா. உனக்கு அந்த வீட்ல உரிமை இருக்கலாம். எனக்கு அது ஈம்பந்தி வீடுதானே? அவர்கள் வீட்டிலே போய் திவசம் பண்றேன்னு சொல்றது நியாயமில்லே. சுப காரியமாயிருந்தால் பரவாயில்லை. அப்படி இல்லையே!” என்றார் கனபாடிகள்.

“அது சரி அண்ணா! இத்தனை நாளா நானும் கேட்ட தில்லை. நீயும் சொன்னதில்லை. எவ்வளவோ சாஸ்திரம் படிச்சிருக்கே. யாகம் பண்ணிருக்கே. சிரோமணிப் பட்டம் வாங்கிருக்கே. வேதவித்தாயிருக்கே. இவ்வளவும் நீயே பாகீரதியை தலைமயிரோட இருக்க எப்படி சம்மதிச்சேங் இருந்தும் கறதுதான் ஆச்சரியமாயிருக்கு” என்றாள் கௌரி.

“தசரதர் கைகேசிக்கு வரம் கொடுத்த மாதிரி நானும் பாகீரதியின் அம்மாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டேன். அந்த சத்தியம்தான் என்னை இப்படி சிரமப்படுத்தறது.

“பாகீரதியைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாச்சே அவள்”.

‘நான் கண் மூடறதுக்கு முன்னால பாகீரதிக்கு ஒரு நல்ல இடமாப் பார்த்து கலியாணத்தைப் பண்ணி முடிச்சுடுங்க. அப்பத்தான் நிம்மதியாப் போவேன்’னு என்னிடம் சொல்லிக் கண்ணீர் விட்டாள்.

“இப்ப திடீர்னு அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?’னு அவளிடம் கேட்டேன்.

‘என் சீதன சொத்தையெல்லாம் வித்துடுங்க. பாகீரதி கலியாணம்தான் முக்கியம்’ என்றாள். அவசரம் அவசரமா ஒரு பையனைத் தேடிப் பிடிச்சு பாகீரதி கல்யாணத்தை முடிச்சேன். பாவம், பாகீரதி கொடுத்து வைக்கலே.

ஒரு வாரத்துக்கெல்லாம் அவள் மாங்கல்யத்தை இழந்துட்டா. அடுத்த வருஷமே பாகீரதியின் அம்மா மாடு முட்டிக் கீழே விழுந்தவள் தான். அப்புறம் அவளும் எழுந்திருக்கலே. அந்த சமயத்துலதான் ஒரு நாள் ‘பாகீரதி சின்ன வயசுப் பெண். அவளை அலங்கோலப் படுத்திடாதீங்க!’ என்று என்னைப் பார்த்து கெஞ்சி, சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாள். செய்து கொடுத்துட்டேன்.”

இந்தச் சமயம் அங்கே வந்த கமலா “அத்தை! உங்களை பாகீரதி உள்ளே வரச் சொல்றா?” என்றாள்.

“எதுக்கு?…”

“உங்களுக்குப் பிடிக்கும்னு ரொம்ப ஆசையா தவலை அடை பண்ணியிருக்கா, உங்க ஆசை மருமாள்!” என்றாள் கமலா.

“நெய் வாசனை மூக்கைத் துளைக்கிறதே!” என்று சொல்லிக்கொண்டே அத்தை சமையலறையை நோக்கிப் போனாள்.

அத்தை அந்தப் பக்கம் போனதும் “அப்பா மூர்த்தி கடுதாசி எழுதியிருக்கான்னு சொன்னயே, அதைக் கொஞ்சம் கொடுங்க பார்க்கலாம்” என்றாள் கமலா.

“நீ இன்னும் பார்க்கலையா அதை? இங்கதான் ராமாயண புஸ்தகத்துல வச்சிருந்தேன, கொஞ்சம் இரு” என்று கூறி அந்தப் புத்தகத்தை எடுத்துத் தேடினார். கடிதத்தைக் காணவில்லை, இதில்தானே வச்சிருந்தேன்!” என்றார்.

“இந்தா, இதோ இருக்கு” என்று தன் கையிலிருந்த கடிதத்தைக் கனபாடிகளிடம் நீட்டினாள் கமலா.

“இது எப்படி உன் கைக்கு வந்தது!” என்று ஆக்சரியப்பட்டார் கனபாடிகள்.

“கூடத்துல படத்துக்குப் பின்னால் இருந்தது?”

“நான் அங்கே வைக்கலையே?”

“சரி; நீங்களும் வைக்கலே. நானும் வைக்கலே…அப்புறம்…?”

“பாகீரதி வைத்திருப்பாங்கறயா?”

“ஒரு வேளை மூர்த்தி கடுதாசிதானே, படிச்சுப் பார்க்கலாம்னு எடுத்திருக்கலாம்” என்றாள் கமலா.

‘மூர்த்தி கடுதாசில இவளுக்கு என்ன அத்தனை அக்கறை! என்னைக் கேட்காமே, எனக்குத் தெரியாம எதுக்கு எடுக்கணும்? அப்புறம் படத்தின் பின்னால் எதுக்குக் கொண்டுபோய் மறைக்கணும்?’ என்று எண்ணி மனதுக்குள்ளேயே குழம்பினார் கனபாடிகள்.

“எதுக்கு மூர்த்தி உங்ககிட்ட சொல்லிக்காமப் போறான்? போனவன் யாரும் என்னைத் தேடிண்டு வர வேணாம்னு லெட்டர் எழுதறான்?” என்றாள் கமலா.

“என்னைக் குழப்பாதே கமலா! நேத்துலேந்து எல்லாமாச் சேர்ந்து நானே ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன். எனக்கு மண்டையே வெடிச்சுடும்போல இருக்கு. பூர்வ ஜன்மத்துலே என்ன பாவம் பண்ணினேனோ, இப்படியெல்லாம் அனுபவிக் கிறேன். முதல்ல நான் நாளைக்கே கௌரியோடு சிதம்பரத்துக்குப் போய் திவசத்தை முடிச்சுண்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீதான் பாகீரதியைப் பார்த்துக்கணும்” என்றார் கனபாடிகள்.

***

திடீரென்று வாசலில் பிராமணர்கள் ஏழெட்டு பேர் கூட்டமாக வந்து நிற்பது தெரிந்தது.

“கிட்டா! வாசல்ல யாரோ வந்திருக்கா, போய்ப் பாரு” என்றார் கனபாடிகள்.

“அவாதான்! அந்த ‘பாய்காட்’ கூட்டம்தான் வந்திருக்கு” என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு விரைந்தான் அவன். பின்னோடு கனபாடிகளும் போனார்.

அந்தக் கடுக்கன் ஆசாமியை இரண்டு பேர் திண்ணையில் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவனுக்கு மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்தது.

“கனபாடிகளே, இவனைப் பாம்பு கடிச்சுட்டுது. நீங்கதான் மந்திரம் போட்டுக் காப்பாத்தணும்” என்று கூக்குரலிட்டது அந்தக் கும்பல்.

“பார்த்தாயா! சாபம் கொடுத்தயே, பலிச்சுட்டுது பார்” என்பதுபோல் கிட்டாவைப் பார்த்தார்.

“கடிச்சது என்ன பாம்புன்னு தெரியுமா?” என்று அவர்களிடம் கேட்டார்.

“நல்ல பாம்புதான். அதை அப்பவே அடிச்சுப் போட்டாச்சு!” என்றார் கூட்டத்தில் ஒருவர்.

“த்சு,த்சு! பாம்பைக் கொல்லவே கூடாது. மகாபாவம்!” என்று சொல்லிக்கொண்டே தம் அங்கவஸ்திரத்தைச் சட்டென்று எடுத்து அதில் ஒரு பகுதியை நீளமாய்க் கிழித்து மந்திரம் ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டார், என்ன ஆச்சரியம்! அடுத்தகணமே கடுக்கன் கண் விழித்துப் பார்த்தார்!

“விஷம் இறங்கிடுத்து; இனிமே பயமில்லை; இவரை அழைச்சுண்டு போகலாம்” என்றார் கனபாடிகள்.

கண்களில் கண்ணீர் பெருக அந்தக் கடுக்கன் ஆசாமி கனபாடிகளைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே “என்னை மன்னிச்சுடுங்க” என்றார்.

– தொடரும்…

– வேத வித்து, முதற் பதிப்பு: மே 1990, சாவி பப்பிளிகேஷன், சென்னை.

Print Friendly, PDF & Email

1 thought on “வேத வித்து

  1. பத்திரிகை உலகப் பிதாமகர் சாவி அவர்களின் வேத வித்து நாவலை வெளியிடும் இந்த டாட் காம் ஓவிய உலகப் பிதாமகர் திருமிகு கோபுலு அவர்களின் ஓவியங்களையும் அதன் தன்மை மாறாமல் பளிச்சென்று வெளியிட்டு, வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.
    சிறுகதைகள் டாட் காம் சேவை இனிதே தொடரட்டும்.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *