(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம்-1-2 | அத்தியாயம்-3-4
முன்னுரை
குமுதம் இதழில் நான் எழுதிய முதல் தொடர்கதை ‘நைலான் கயிறு’. ‘அனிதா – இளம் மனைவி’ இரண்டாவது. 1971-ல் எழுதியது என்று ஞாபகம். நான் இதற்கு வைத்த தலைப்பு ‘அனிதா’ மட்டுமே. குமுதம் எடிட்டோரியல் அதை ‘அனிதா – இளம் மனைவி’ என்று மாற்றினார்கள். இதனால் கதையின்மேல் ஆர்வம் கூடுகிறது என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.
இதனிடையே தினமணி இதழில் ‘காயத்ரி’ என்னும் குறுநாவல் வெளிவந்தது. அதை திரு. பஞ்சு அருணாசலம் திரைப்படமாக எடுக்க அனுமதி கேட்டிருந்தார். அப்போது ‘அனிதா – இளம் மனைவி’யும் தொடர்கதையாக வந்தது. பஞ்சு அருணாசலம் அதைப் படித்துவிட்டு உடனே இதையும் சினிமா எடுக்கலாம் என்றார். ‘காயத்ரி’ வெளிவந்தது. அதனுடன் பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’யும் வெளிவந்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கியது. அதில் ரஜினிகாந்த் அடிக்கடி ‘இது எப்படி இருக்கு?’ என்று கேட்பார். அந்தச் சொற்றொடர் பிரபலமானது.
இப்பகு பஞ்சு அருணாசலம் நிறைய சென்டிமெண்ட் பார்ப்பவர். ‘அனிதா’வை திரைப்படம் ஆக்குகையில் அதன் பெயரை ‘இது எப்படி இருக்கு?’ என்று மாற்றினார். ஜெய்சங்கர், மேஜர் சுந்தரராஜன் போன்றவர்கள் நடித்தார்கள். படம் ஓடவில்லை. அது எடுக்கப்பட்ட விதத்தில், எந்தப் பெயரிலும் ஓடியிருக்காது. பஞ்சு அருணாசலம் சளைக்கவில்லை. அடுத்து ‘ப்ரியா’ எடுத்தார். அதன் திரைவடிவிலும் எனக்கு திருப்தி இல்லை. இருந்தும் சிங்கப்பூர், டால்பின் ஷோ, இளையராஜாவின் ‘இன்றும் இனிக்கும்’ பாடல்களுக்காக அது வெற்றி பெற்றது. பின்னர் பஞ்சு அருணாசலம் என் நாவல்களை விட்டுவிட்டார்.
– சுஜாதா
ஆரம்பிக்குமுன்
அந்தப் பெண்ணுக்கு வயது பதினெட்டு இருக்கலாம். அந்த வயதுக்கு ஏற்பட்ட தனி வளர்ச்சி. அவள் கண்களில் பயம் இருந்தது. சற்று ஆர்வமும் இருந்தது. பயமும் ஆர்வமும் எதனால்? அந்த இளைஞன் அவளை அழைத்துச் செல்கிறான். தனியான பாதை. தூரத்தில் மிலிட்டரி ரேடியோ நிலையத்தின் உயரமான ஏரியல் கம்பங்கள். நீல வானம். பாறைப் பிரதேசம். சரிவுகள், காட்டு மலர்கள், மஞ்சள் பூரிப்பு. அவன் அவளை அழைத்துச் செல்வதன் காரணம் அவளுக்குத் தெரியும். இருவரும் அந்தத் தனி இடத்தை நாடுகிறார்கள். இருவரும் இளம் வயதினர். சிறிது நெருக்கமாகப் பழகினார்கள். பழக்கத்தின் நெருக்கமும் அவர்கள் அந்தரங்கமாக ஒருவரை ஒருவர் இதுவரை அறிந்துகொண்டதன் பற்றாக்குறையும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் எல்லைக்கோடுகளைத் தள்ளித் தள்ளி அமைத்துக்கொண்டு இன்று தனியாக வந்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாடுகளை விடுவித்துக்கொண்டு இன்று எவ்வளவு தூரம் போகிறது என்று பார்ப்பதற்கு முன் –
அவன் பெயர் ஆனந்த். அவள் பெயர் ராதிகா. இடம் டில்லி. மாதம் நவம்பர், நேரம் மாலை 3.30.
அவர்கள் நடந்துகொண்டே சென்றார்கள். இடது பக்கம் பாதைச் சரிவு. அதில் திட்டுத் திட்டாகப் புல் தரைகள், பூ மரங்கள். ஜாகராண்டா, குல் மோஹர். வர்ண வர்ணப் பூப்புதர்கள். ஓர் அழகான பூஞ்சோலை ஆவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கும் இடம். அவன் கண்கள் தேடின. கூட்டமில்லை. அதனால்தான் அங்கு வந்திருக்கிறான். அவர்கள் பேசுவதைக் கேட்கலாம்.
‘பார், என்ன அழகான பூ!’ – அவள்.
‘ஓ எஸ். இட்ஸ் ப்ரெட்டி’ – அவன்.
‘ராதிகா…’
‘ம்.’
‘என்னோடு வா.’
‘எதற்கு?’ (எல்லாம் அர்த்தமில்லாத கேள்விகள், அர்த்தமில்லாத பதில்கள், அவனோடுதான் வந்து கொண்டிருக்கிறாள். எதற்கு என்பதும் தெரியும்.)
‘எதற்காக? நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்’.
‘என்ன ரகசியம்?’
‘வாயேன்.’
‘எங்கே?’
‘என்னுடன் வாயேன். இங்கே ஆட்கள் தென்படுகிறார்கள்’.
‘ரகசியம் தனியாகத்தான் சொல்லவேண்டுமா? இங்கேயே சொல்லிவிடேன்.’
‘சொல்கிற ரகசியமில்லை இது.’
‘பின்?’
‘இந்த நெக்லெஸ் புதிதா?’
‘அதற்காகத் தொடவேண்டாம்’.
‘புதிதா என்று பார்த்தேன். ஆ! ஏன் கிள்ளுகிறாய்?’
‘சும்மா இருக்கமாட்டேன் என்கிறாயே?’
‘நீ என் தேன். என் சர்க்கரை. என் டார்லிங்.’
‘எப்போதும் உனக்கு… எங்கே போகிறாய்?’
‘வரப்போகிறாயா, இல்லையா?’
‘எங்கே போகிறாய் என்று சொன்னால்தான்.’
‘ஒரு பூ, ஒரு மலர் இருக்கிறது. மிக அழகான மலர். அது மிகக் கஷ்டமான அணுகமுடியாத இடத்தில் இருக்கிறது. அதை மெதுவாக அணுகி, மெதுவாக, மிக மெதுவாக, அதை வலிக்காமல் பறிக்கப்போகிறேன்’.
அவள் ரத்தத்தில் சூடேறியது. ‘நான் இங்கேயே இருக்கிறேன்’.
‘நீ இல்லாமல் பறிக்க முடியாது. உன் உதவி தேவை, வா!’
சிமெண்ட் கான்க்ரீட்டினால் கட்டப்பட்ட ஓர் ஓவர்சைஸ் சுவர். அதன் பின் தேங்கிய தண்ணீர். ஒரு செயற்கை நீரோடை. அதில் தாவித் தாவிக் கடப்பதற்காகக் கான்கிரீட் வட்டங்கள். வட்டங்கள். அதைத் தாண்டியதும் பொதுவாக பூமி ஏறி இறங்கி, புதர்கள், புல்வெளிகள், மரங்கள், மரங்களுக்குப்பின் இன்னும் மரங்கள், அடர்ந்து சற்று இருட்டான மிகத் தனியான, மிகத் தனியான பச்சை இருட்டு.
‘அந்த இடம் நல்ல இடம்’ என்றான்.
அதை அவர்கள் அடைந்தார்கள். சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு சில பட்சிகள் டிர்ரித்துக்கொண்டிருந்தன.
‘ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என்றான்.
தூரத்தில் சலசலப்பு கேட்டது. வெள்ளை பாண்ட் அணிந்த ஒருவன் நடந்து செல்வது இலைகளுக்கிடையில் தெரிந்தது.
‘இங்கே வேண்டாம்’ என்றாள்.
‘இன்னும் நடக்கலாம்’ என்றான். நடந்தார்கள்.
சரேல் என்று பூமி சரிந்து மிக ஆழமான அந்தரங்கமான இடம் ஒன்று தென்பட்டது. அவன் அனாயாசமாகக் குதித்து அவளுக்காகக் காத்திருந்தான். அவள் தயங்கிக் குதித்தாள். அவளைத் தாங்கித் தூக்கி, கீழே மெதுவாக.
அவள் உற்சாகத்தில் கிறீச்சிட்டாள். மார்பை அழுத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.
‘ஒருவரும் நம்மைப் பார்க்க முடியாது.’
கீழே மெத்தென்று பச்சைப்புல். அவற்றில் ஒன்றைக் கிள்ளிக் கடித்தான். ‘எப்படி இந்த இடம்?’ என்று கேட்டான்.
அவள் மெதுவாக சர்வே செய்தாள்.
எங்கிருந்தோ ஒரு மண் பாதை அவர்கள் இருந்த இடத்துக்கு அருகேவரை வருவது தெரிந்தது. ‘ஒரு வழி தெரிகிறது’ என்றாள்.
‘ஒருவரும் வரமாட்டார்கள்’ என்றான் அவன்.
‘ஷ்யூர்?’
‘நீ இதற்குமுன் இங்கு வந்திருக்கிறாயா?’
‘ஓ நோ!’
அவன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். ‘இந்த நெக்லஸ் புதிதா?’
‘நிஜமாகச் சொல். உனக்கு நெக்லஸ் மேல்தான் கவனமா? கழற்றித் தருகிறேன்.’
‘வேண்டாம்.’
‘நோ… நோ… நோ!’
‘எஸ்… எஸ்… எஸ்…’
‘வெயிட் ப்ளீஸ். ப்ளீஸ். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.’
அவன் அவளை அணைத்தான். அவனது வலது கை அவள் முதுகில் பரவியது.
அவள் உதடுகளில் மெலிதாகத் தீட்டியிருந்த லிப்ஸ்டிக்கின் பரவலைப்பற்றி ஒரு முழு வியாசம் எழுதக்கூடிய அளவுக்கு அருகில் இருந்தான். அவன் சாய்ந்தான்.
அவள் திடீரென்று வீறிட்டாள். அதிவேகமான பயப்பாய்ச்சலில் ஏற்பட்ட அலறல். ‘அங்கே பார்! அங்கே பார்! அங்கே பார்!’ என்று கிறீச்சிட்டாள்.
அவள் காட்டிய இடத்தில் ஓர் உடல்.
பச்சைப் புதர்களின் நடுவே மல்லாந்து நீலவானத்தைக் குத்திட்டு நோக்கிய செத்த பார்வையுடன் ஆவென்ற வாய்த் திறப்புடன் ஒரு கால் மடங்கி ஒரு கால் நீண்டு ஒரு கை துவண்டு விரல்கள் கடைசியில் உயிர் வாழ்ந்த கணத்தில் இருந்த நிலையில் உறைந்து விட்ட உடல், செத்த உடல்…
அத்தியாயம்-1
‘க்ளிக்’
கேமரா ஒரு தடவை கண் சிமிட்டியது. உடனே படம் எடுத்தவன் நடந்து வேறு கோணத்துக்குச் சென்றான். வ்யூஃபைண்டரில் பிம்பத்தைத் தேடி உன்னதமாகத் தீட்டிக்கொண்டான். ‘க்ளிக்’
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஒரு சிகரெட் பற்ற வைத்தார். மிக ஆசையுடன் புகையை இழுத்துக்கொண்டார். தயங்கினார். புகையை விடுவித்தார். கீழே பார்த்தார். கீழே கிடந்த வருக்கு வயது ஐம்பது இருக்கலாம். அணிந் திருந்த டெரிலின் சட்டை சற்றுப் பெரிதாக இருந்தது. காலில் புதிய ஷு. காயங்கள், நெற்றியில், கழுத்தில் கான்ஸ்டபிள்கள் புதர் களில் தேடிக் கொண்டிருந்தனர். ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஆனந்த் இன்ஸ்பெக்ட ரிடம் தீப்பெட்டி கடன்வாங்கி, தன் பையில் இருந்து ஒரு பாக்கெட்டை எடுத்து ஒரு சிக ரெட்டை உதிர்த்துப் பற்ற வைத்துக் கொள் வதற்குமுன் கேட்டான். ‘இன்ஸ்பெக்டர் சார், ஒரு விண்ணப்பம்.’
ஏதோ யோசனையில் இருந்தவர், ‘ம்? என்றார்.
‘நான் போகலாமா?’ என்றான்.
‘கூடாது’ என்றார் சுருக்கமாக.
‘அதுதான் எல்லாக் கேள்விகளையும் கேட்டு விட்டீர்களே?’
‘இன்னும் பாக்கி இருக்கிறது. இந்த இடத்துக்கு, ஒருவரும் அண்ட முடியாத இடத்துக்கு, நீங்கள் ஏன் வந்தீர்கள்?’
‘சும்மா.’
‘ம்ஹும்’ என்றார். ‘மற்றொரு பொய் சொல்லிப் பாருங்கள்.’
‘பொய்யில்லை’.
‘எங்கே அந்த பெண்?’
‘பெண்ணா!’
‘போலீஸ் வருவதற்கு முன் சட்டையில் படிந்திருக்கும் லிப்ஸ்டிக் கறையை அகற்றி இருக்கவேண்டும்’.
அவன் தன் சட்டையைப் பார்த்துக்கொண்டான். இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். அவரும் இளைஞர்தான். சிரித்தான். ‘ஆம்’ என்றான்.
‘எங்கே அந்தப் பெண்?’
‘அந்தப் பெண் எதற்கு? பார்த்தது நான். ரிப்போர்ட் செய்தது நான்! என் விலாசம் கொடுத்திருக்கிறேன். அவளை இதில் சம்பந்தப்படுத்த வேண்டிய தேவையே இல்லை’
‘போலீஸிடம் எதையும் மறைக்கக்கூடாது. தெரியுமா?”
‘இன்ஸ்பெக்டர் ஸாப். நான் இந்த இடத்துக்கு வந்ததையும் பார்த்த உடலையும் உடனே உங்களுக்கு ரிப்போர்ட் செய்திருக்கிறேன். நான் பேசாமல் போயிருக்கலாம். நாட்கணக்கில் இந்த இடத்துக்கு ஒருவரும் வந்திருக்கமாட்டார்கள். நான் என் கடமையைச் செய்தேன். தவறவில்லை.’
‘உண்மை. நன்றி.’
‘நான் போகலாமா?’
‘இரு. ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொள்ள வேண்டும். என்னப்பா?’ ‘என்னப்பா?’ என்றது ஒரு கான்ஸ்டபிளைப் பார்த்து.
‘சார், ஒரு கார் நிற்கிறது.’
‘எங்கே?’
‘திஸ் இஸ் கோயிங் டு பி ஈஸி’ என்று நினைத்துக்கொண்டார். அவன் அழைத்துச் சென்ற பாதை, அந்த மண்பாதை, வளைந்து நெளிந்து திரும்பி சுமார் ஒரு ஃபர்லாங் சென்றது. அந்தப் பாதை தார் ரோட்டில் சேரும் சந்திப்பின் இறக்கத்தில் ஓர் ஓரத்தில் சற்றுச் சாய்ந்து ஒரு சிறிய கார் நின்றுகொண்டிந்தது. தார் ரோட்டிலிருந்து ஒருவரும் கவனிக்க முடியாத ஒதுக்கத்தில் அது இருந்தது. அதன் கதவு திறந்திருந்தது.
‘தொடாதே’ என்றார்.
கார் புதிதாக, சேதமில்லாமல் இருந்தது. புழுதி படிந்திருந்தது. அதன் சாவி தென்படவில்லை. ‘நீ இங்கேயே இரு’ என்று கான்ஸ்டபிளிடம் சொல்லிவிட்டு மறுபடி அந்த மண் பாதையில் அந்த உடலை நோக்கிச் சென்றார். அங்கிருந்த கான்ஸ்டபிள் அவர் வரவுக்குக் காத்திருந்தான். போட்டோ பிடிப்பவர் புல் தரையில் உட்கார்ந்திருந்தார். ‘சார், இது கீழே கிடந்தது’ என்று பர்ஸ் போலிருந்த பொருளை அவரிடம் கான்ஸ்டபிள் கொடுத்தான். ராஜேஷ் அதைத் திறந்தார். அதில் காரின் இக்னிஷன் சாவியும், பெட்ரோல் மூடியின் சாவியும், மற்றொரு சாவியும் இருந்தன.
இன்ஸ்பெக்டர் முதல் தடவையாக அந்த உடலைத் தொட்டார். தொடுகையில் சற்று அருவருப்பு இருந்தது. பைகளைத் தேடினார். பர்ஸ் இருந்தது. பர்ஸைத் திறந்தார். காலியாக இருந்தது. ஆனால் பர்ஸின் ஓர் அறையில் ஓர் அச்சிட்ட கார்டு இருந்தது. அதில் மிக அழகாக தங்க எழுத்துக்களில் ‘ஆர்.கே.ஷர்மா, நிலிமா, 47, வஸந்த் விஹார், 616645′ என்று அச்சிட்டிருந்தது. அப்போதுதான் இன்ஸ்பெக்டர் அந்தக் காயங்களைப் பார்த்தார். இந்த மரணம் நிச்சயம் இயற்கையானதல்ல… எப்போது இறந்திருப்பார்? பர்ஸ், கார் சாவி இருக்கிறது. நல்ல வேளை பெயர் விலாசம் இருக்கிறது. கார் சாவி இருக்கிறது. டபிள் செக்… எப்படி இறந்திருப்பார்? ஹி இஸ் ஸொ கோல்ட்! மார்ச்சுவரி யிலிருந்து எடுத்துக்கொண்டு போய்க் கிழித்துப் பரிசோதித்துச் சொல்வார்கள். கழுத்தில் பதிந்திருக்கும் காயங்களைக் கணக்கிடுவார்கள். இத்தனை செண்டிமீட்டர் நீளம், இவ்வளவு அகலம். உடலின் காயங்களை வரிசைப்படுத்துவார்கள். வயிற்றைக் கிளறி சிறிய மிகச் சிறிய துண்டெடுத்து டெஸ்ட் ட்யூப்களில் போட்டு ரசாயனக் குலுக்கலில் அலசுவார்கள். பற்களைக் கவனிப்பார்கள். அந்த மண்டையில் தெரிந்த மெல்லிய ரத்தக்கீறல்.
ஷர்மா! ஆர்.கே.ஷர்மா. வஸந்த் விஹார். பெரிய புள்ளி.
‘இன்ஸ்பெக்டர், நான் போகலாமா?’
‘இந்த இளைஞன் வேறு! ஆனால் பையன் பரவாயில்லை. ரிப்போர்ட் செய்வதற்கு மகத்தான தைரியம் வேண்டும். மற்றவர்கள் ஓடி இருப்பார்கள்.
‘ஸ்டேஷனுக்கு என்னுடன் வந்துவிட்டு உடனே நீங்கள் போகலாம்… மிஸ்டர் நாராயன்.
போட்டோ எடுத்தவன் எழுந்தான்.
‘நீங்கள் சற்று நேரம் இருங்கள். 3850-ம் 718-ம் இருக்கிறார்கள். நான் ஒரு டெலிபோன் கால் செய்துவிட்டு உடலை விலிங்டனுக்கு எடுத்துச் செல்ல பந்தோபஸ்து செய்துவிட்டு வருகிறேன்.
‘திரும்பி வருகிறபோது பான் வாங்கிக் கொண்டு வாருங்கள்’ என்றான் போட்டோ.
‘லாலல்லா!”
அனிதா அந்த அறையில் பாடிக்கொண்டிருந்தாள். சந்தன மணமும் ஷவரிலிருந்து பெருகும் இதமான வென்னீரும் மிக மையான பதிந்த கற்களும், மிக மெதுவாக அவள் தன் உடலைத் திரும்பித் திருப்பிச் சுடுநீரின் தொடுகையில் ஒர் அரை மயக்கத்தில் பாடிக்கொண்டிருந்தாள்.
தண்ணீர்த் துளிகள் அவள் உடம்பின் வளைவுகளில் சரிந்தன நேர்ப்பட்டன தழைத்தன சொட்டின.
அறைக்கு வெளியே சற்றுநேரமாக அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் அப்போதுதான் அவளுக்கு உறைத்தது. ஷவரை நிறுத்தினாள். கேட்டாள். ஆம் டெலிபோன் அடித்துக்கொண்டு தான் இருந்தது. அவள் அவசரப்படவில்லை. மிக வெண்மை யான டவலை எடுத்து உடம்பெல்லாம் ஒத்திக் கொண்டாள். எதிரே இருந்த கண்ணாடியில் அவள் மார்புவரை தெரிந்தது. உடனே துண்டைச் சுற்றி மறைத்துக்கொண்டாள். ரப்பர் செருப்பு அணிந்தாள். கதவைத் திறந்தாள். இன்னும் பல இடங்களில் ஈரமாக நடந்தாள். அடுத்த அறையில் டெலிபோன் எக்ஸ்டென்ஷன் இருந்தது. டெலிபோன் பிடிவாதமாக அடித்துக்கொண்டு தான் இருந்தது. அந்த டவல்போல வெண்மையாக இருந்த பெகினீஸ் நாய் ஒன்று பாத்ரூம் வாசலில் காத்திருந்து அவளைக் கண்டதும் வால் சாமரம் வீசி, கண்களில் சந்தோஷத்துடன் அவளைத் தொடர்ந்தது.
‘நீயும் இன்று குளிக்கப் போகிறாய்’ என்று நாயிடம் சொல்லிக் கொண்டே டெலிபோனை எடுத்து, ‘ஹலோ!’ என்றாள்.
‘இஸ் இட் ஸிக்ஸ் ஒன் டபிள் ஸிக்ஸ் ஃபோர் த்ரீ?’
‘ஆம்’.
‘உங்கள் வீட்டு கார் நம்பர் என்ன?’
‘யார் பேசுவது?’
‘போலீஸ்.’…
‘என்ன விஷயம்?’
‘உங்க வீட்டு கார் நம்பர் என்ன?’
‘எந்தக் கார்? இரண்டு கார் இருக்கிறது’.
கீழே தண்ணீர்த் துளிகள் அவள் பாதங்கள்மூலம் வழிந்து மெதுவாக ஒன்று திரண்டுகொண்டிருந்தன.
‘ஃபியட்.’
‘டி.எல்.கே.2520. ஏன், ஏதாவது விபத்தா?’
‘நீங்கள் பேசுவது?’
‘ஸ்ரீமதி ஷர்மா.’
‘மிஸஸ் ஷர்மா. நீங்கள் உடனே விலிங்டன் ஆஸ்பத்திரிக்கு வாருங்கள். மிக முக்கியமான விஷயம்.’
‘என்ன! என்ன, சொல்லுங்களேன்!’
‘உங்கள் கணவர் அந்த காரில் வெளியே சென்றாரா?’
‘ஆம். ஹரியானா பக்கம் போயிருக்கிறார். நேற்று கிளம்பினார். நாளை மறுநாள் வருகிறேன் என்…’
‘மிஸஸ் ஷர்மா, ஐம் ஸாரி. நான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தக் கார் அப்பர் ரிட்ஜ் ரோடு அருகில் பிரியும் ஒரு மண்பாதையில் ஒதுக்குப்புறமாக நின்றிருந்தது. அந்த இடத்திலிருந்து சுமார் ஒரு ஃபர்லாங் தூரத்தில் ஒரு அடர்த்தியான தனியான புதரில் நாங்கள் ஒரு உடலைப் பார்த்தோம். அது உங்கள் கணவராக இருக்கக் கூடும்’.
‘உடல் என்றால்! உடல் என்றால்!’
‘இறந்த உடல்.’
‘ஒ காட்! காட்!’
‘மிஸஸ் ஷர்மா. நாங்கள் உங்களுக்கு இந்தத் துக்கமான தகவல யும் தெரிவித்து உங்களுக்குச் சிரமம் கொடுக்க நேரிடுவதற்கு மிகவும் வருந்துகிறோம். நீங்கள் விலிங்டன் ஆஸ்பத்திரிக்கு வந்து உடலை அடையாளம் காட்டவேண்டும். அல்லது தெரிந்தவர்கள் யாரையாவது அனுப்ப…’
‘நானே வருகிறேன். அது அவராக இருக்காது. இருக்கக்கூடாது!’
‘நாங்கள் இன்னும் சில நிமிஷங்களில் உங்கள் வீட்டுக்கு ஜீப் அனுப்பு…’
மிஷின் பொம்மைபோல் டெலிபோனை அவள் வைத்தாள்.
அத்தியாயம்-2
டைமண்ட் ராஜாவை வைத்தான் பாஸ்கர் – ஷர்மாவின் அந்தரங்க காரியதரிசி – விழ வில்லை.
ராணியை வைத்தான். விழவில்லை.
ஜாக்கியை…ம்ஹும்.
10-ஐ வைத்ததும் ஏஸைப் போட்டுப் பிடித்துக் கொண்டான் பாஸ்கர். என்ன அபாரமாக ஆடுகிறான் இந்த பாஸ்கர்! சகாவிடம் இருக்கும் சீட்டு அனைத்தும் கண்ணாடி போல அவனுக்குத் தெரிகிறது. பார்ட்னரிடம் இனி டைமண்ட் இருக்காது!
பாஸ்கர் நேராகத் தன் ஸ்பேட் சீட்டுகளை யும் தடவை ராணியை ஆடினான். மூன்றாம் தடவை ராணியை வைத்ததும் ஜாக்கியும் பத்தும் இரண்டும் விந்தன. சரிய விழுந்தன. சரியாக எண்ணிவைத்தாற்போல் ஒன்பது பிடி – மூன்று நோ ட்ரம்ப் – பிடித்துக் கொண்டு பாக்கி சீட்டுக்களைக் கவிழ்த்துப் போட்டான்.
பாஸ்கர் எப்போதுமே இப்படித்தான். எடுத்துக்கொண்ட காரியத்தை அளவாக முடிப்பான். கச்சிதமாக முடிப்பான். அதிகம் பேசமாட்டான்.
பாஸ்கர் அடுத்த ஆட்டத்துக்குச் சீட்டுக்களை வழங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்கு வெளியே காரின் ன் சப்தம் கேட்டது.
அது கூப்பிட்ட சிறிய ஹாங்க் சப்தத்தில் ஓர் அது அவசரம் தென்பட்டது. அந்த ஹார்ன் சற்று வித்தியாசமான ஹார்ன். முதலாளியின் பெரிய மெர்ஸிடிஸ் காரின் ஹார்ன்.
பாஸ்கர் தன் நண்பர்களிடம், ‘எக்ஸ்க்யூஸ் மி’ என்று சொல்லி விட்டு அறைக்கு வெளியே வந்து பால்கனியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தான்.
டிரைவர் நின்றுகொண்டிருந்தான். இவனைப் பார்த்தும் ‘உடனே வாங்க’ என்றான்.
டிரைவரின் முகத்தில் கலவரம் இருந்தது.
பாஸ்கர் சட்டை மாற்றிக்கொண்டான். செருப்பில் கால்களைச் செருகிக்கொண்டு படிகளில் சரிந்து கீழே வந்தபோதுகூட சட்டை பட்டன்களைப் போட்டு முடிக்கவில்லை அவன்.
‘என்ன?’
‘முதலாளி இறந்துபோய்விட்டார்!’
‘என்னது? எப்படி? எங்கே?’
‘காரில் ஏறுங்கள். சொல்கிறேன். அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்’.
பாஸ்கர் காரில் பாய்ந்தான். அந்த மெர்ஸிடிஸ், டிரைவரின் விரல் திருப்பத்தில் ஒடிந்து உயிர் பெற்று சீறிச் சுழன்று, எய்த அம்பு போல் புறப்பட்டது.
ஆஸ்பத்திரி.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ், உடல்மீதிருந்த வெள்ளைத் துணியை விலக்கினார்.
அனிதா பார்த்தாள். ‘ப்ளீஸ், ப்ளீஸ் மூடிவிடுங்கள் ப்ளீஸ்’ என்று குனிந்துகொண்டாள். ‘எவ்வளவு காயம்! எவ்வளவு காயம்!’
‘மிஸஸ் ஷர்மா, இந்த உடல்… ‘
‘என் கணவர்தான்’ என்று விலகி ஒரு மூலைக்குச் சென்று புடைவைத் தலைப்பில் முகம் புதைத்து அழுதாள்.
அந்த வெண்துணி மறுபடி ஷர்மாவின் உடலை மூடியது.
பாஸ்கர் வந்தான். முதலாளிதான் என்று அடையாளம் சொன்னான்.
அனிதா திரும்பிச் சென்று காரில் ஏறிக்கொண்டாள். அவள் கன்னங்கள் சிவந்திருந்தன. வீங்கி இருந்தன. ஸாரி, தலையை யும் முகத்தின் பெரும்பகுதியையும் மூடி இருந்தது. நெற்றிப் புருவத்தின் மத்தியின் விரலை அழுத்திக் குனிந்து கொண்டு காத்திருந்தாள் புறப்படுவதற்கு.
காருக்கு வெளியே பாஸ்கரும் இன்ஸ்பெக்டர் ராஜேஷும் நின்று கொண்டிருந்தார்கள். கார் நியூட்ரலில் சீராக உறுமிக் கொண் டிருக்க பாஸ்கர், ‘நேராக வீட்டுக்குப் போ’ என்றான் டிரைவ ரிடம். ‘மீனாட்சியை வரச்சொல்லியிருக்கிறேன். டாக்டர் ஸாபை யும் வரச்சொல்லியிருக்கிறேன். நீங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன். அவர்கள் வீட்டில் இருப்பார்கள்’ என்றான் அனிதாவிடம்.
அனிதா ஒன்றும் பேசவில்லை. குனிந்த தலை நிமிரவில்லை. கார் சென்றது. அதன் சிவப்பு விளக்குகள் ஒரு தடவை பிரகாசமாக விழித்துவிட்டுக் கோபம் தணிந்தன.
இன்ஸ்பெக்டரிடம், ‘ஷி இஸ் வெரி மச் அப்ஸெட்’ என்றான் பாஸ்கர்.
‘ஷி இஸ் யங்’ என்றார் ராஜேஷ்.
‘இன்ஸ்பெக்டர் சார், முதலாளி நேற்று முதல்நாள் காரில் கிளம்பியபோது அவரிடம் நிறைய பணம் இருந்தது. எவ்வளவு பணம் என்பது திருமதி ஷர்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்.
‘எங்கே சென்றுகொண்டிருந்தார்?’
‘ஹிஸ்ஸாருக்கு. அங்கே அவருடைய ஃபாக்டரி இருக்கிறது’.
‘தனியாகச் சென்றாரா?’
‘இல்லை. அவருடன் கோவிந்தும் காரில் சென்றிருக்கிறான்.’
‘கோவிந்த்! யார் அது?’
‘அவருடைய வேலைக்காரன்?’
‘கோவிந்த் எங்கே?’
‘எங்கே?’
47, வஸந்த் விஹார்.
பாலம் விமான நிலையத்துக்குச் செல்லும் பாதையில் புதிய பணக்காரர்களின் காலனி வஸந்த் விஹார். இளம் ஆர்க்கிடெக்ட் கள் தத்தம் இஷ்டப்படி அமைத்துக் கட்டிய விதவிதமான வீடுகள். இங்கே நிற்பவர்கள் இந்தியா ஓர் ஏழை நாடு என்று சொன்னால் நம்பமாட்டார்கள்.
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வஸந்த் விஹாரில் ஷர்மாவின் வீடான 47-ம் எண்ணை அடைந்தபோது அப்படித்தான் நினைத்தார். இரண்டு மூன்று பேர் வசிக்க இவ்வளவு பெரிய வீடா!
மாடி வீடு. மாடி என்றால் நவீன மாடி. கான்க்ரீட் சதுரங்கள், பச்சைக் கொடிகள், நேராக ஓர் அவுட்ஹவுஸ். வேலைக்காரர் களுக்குத் தனியான சிறிய வீடுகள். இரண்டு கார் ஷெட். தாற்காலிகமாக கார் நிற்பதற்கு கான்க்ரீட் நீட்டல். முழுவதும் கண்ணாடிக் கதவுகள். இரட்டைக் கண்ணாடி. செங்கல் சிவப்பில் திரைகள். வந்திருப்பவர் வாசலில் காத்திருக்க அழகான, நவீனமான நாற்காலிகள். நடுவே மேஜை. மேஜைமேல் பத்திரிகைகள்.
தன வரவை வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு அந்தப் பத்திரிகைகளில் ஒன்றைப் புரட்டினார் ராஜேஷ்.
ஒரு பக்கத்தில், அனிதா அனிதா அனிதா என்று கையெழுத்து போட்டுப் பழகியிருப்பது தெரிந்தது. அனிதா, அனிதா ஷர்மா. என்ன வயது? 28 இருக்கலாம் அவளுக்கு, அவளை ஆஸ்பத்திரியில் மிக வினோதமான சூழ்நிலையில் முதலில் சந்தித்தார். அவள் கணவன் இறந்த சூழ்நிலையில் திகட்டும் சோக சந்தர்ப்பத்திலும் அவள் அழகு, உடலழகு, ஆஸ்பத்திரி சிப்பந்திகளைத் தடுமாற வைத்திருக்கிறது. கண்கள், பார்வைகள் அவள் மேல் தயங்கின. டாக்டர்கள் மூக்குக் கண்ணாடியைத் துடைத்து அணிந்துகொண்டார்கள். அனிதா…
‘குட்மார்னிங் இன்ஸ்பெக்டர்!’ கலைத்தது பாஸ்கர்.
நேரம்: மார்ச்சுவரி சந்திப்புக்கு மறுதினத்துக்கு மறுதினம்.
‘குட்மார்னிங் மிஸ்டர் பாஸ்கர். திருமதி ஷர்மா எப்படி இருக்கிறார்?”
‘பெட்டர். அந்த கோவிந்தைப்பற்றி ஏதாவது தெரிந்ததா?’
‘இல்லை, நீங்கள் கொடுத்த வர்ணனையை வயர்லஸில் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பியிருக்கிறோம். எங்கள் ஏ.எஸ்.பி. இந்த கேஸைக் கவனிக்கிறார். மத்தியானம் இங்கு வருவார். என்னைச் சில கேள்விகள் கேட்டு வரச் சொன்னார்.’
‘கேளுங்கள்’.
‘திருமதி ஷர்மாவைக் கேட்கவேண்டும்.’
‘நானே இன்னும் அவரைப் பார்க்கவில்லை. மாடியிலேயே அடைந்துகிடக்கிறார்கள். சரியாகச் சாப்பிடவே இல்லை. இந்தச் சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. எதற்கும் மேலே போய்ப் சொல்கிறேன். ராம்!’
ராம் வந்தான். மீனாட்சியைக் கூப்பிடச் சொன்னான். மீனாட்சி வந்தாள். பாஸ்கர் தன் பையிலிருந்த சிறிய நோட் புத்தகத்தை கிறுக்கி, ‘இதை அம்மாவிடம் கொடு,’ என்றான்.
அவள் சென்றாள்.
‘யார் இந்தப் பெண்?’ என்றார் ராஜேஷ்.
‘திருமதி ஷர்மாவுக்கு உதவியாக இருக்கிறாள். ஏழைப் பெண். பெரியவருக்கு தூரத்து உறவு.’
‘மிஸ்டர் பாஸ்கர், இந்த கோவிந்த் என்பவனைப் பற்றி இன்னும் சில தகவல்கள் வேண்டும். அவன் இங்கே என்ன வேலை செய்து கொண்டிருந்தான்?’
‘பெரியவருக்கு உதவியாளராக இருந்தான். அவருடனேயே இருப்பான். உடம்பு பிடித்துவிடுவான். ஷூ பாலிஷ் போடுவான். சட்டை எல்லாம் எடுத்து வைப்பான்.’
‘எவ்வளவு நாட்களாக அவன் வேலையில் இருக்கிறான்?’
‘எஸ்’ என்றான் பாஸ்கர்.
‘மோனி?’ அவளுக்குத் தெரிவித்தாயா?’
‘நேற்றே கேபிள் அனுப்பி விட்டேன், மிஸஸ் ஷர்மா.
‘மோனி யார்?’ என்றார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்.
‘அவருடைய பெண். ஒரே பெண். அமெரிக்காவில் இருக்கிறாள். படிக்கிறாள்’ என்றாள் அனிதா.
‘அவருடைய பெண்ணா? உங்களுக்கு…’
‘நான் அவருக்கு இரண்டாம் மனைவி’ என்றாள் அனிதா.
இன்ஸ்பெக்டருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. சற்று நேரம் மௌனம் நிலவியது.
‘மிஸஸ் ஷர்மா, நான் முக்கியமாகக் கேட்கவேண்டியது இது ஒன்றுதான். உங்கள் கணவரின் தொழில் மூலமாகவோ அல்லது அவர் சொத்து மூலமாகவோ அவருக்கு எதிரி யாராவது உண்டா? எஅல்லது அவர் இறந்தால் பலனடையக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா?’
‘எனக்குத் தெரியாது.’
‘மிஸ்டர் பாஸ்கர், உங்களுக்கு?’
‘எனக்குக் கொஞ்சம் தெரியும். அவர் சொத்து முழுவதும் சொந்தமாகச் சம்பாதித்தது. அதில் ஏதும் விவகாரமோ சண்டையோ கிடையாது. அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார். அது எனக்குத் தெரியும். நான்தான் வக்கீலை அழைத்து வந்தேன்.ஆனால் உயிலின் விவரம் எனக்குத் தெரியாது’.
‘அதைத் தெரிந்துகொள்வதில் ஏதும் கஷ்டம் இருக்காது. அவருக்கு மகன் கிடையாதா?’
‘இல்லை.’
அனிதா கூறினாள். ‘அவர் என்னை மிகவும் அன்பாக நடத்தினார். என்மேல் உயிரை வைத்திருந்தார்… இன்ஸ்பெக்டர், அவர் ரொம்ப நல்லவர். ஒருவருக்குமே கெடுதல் நினைக்காதவர். அவருக்கு ஏன் இப்படிப்பட்ட மரணம் சம்பவிக்கவேண்டும்? எத்தனை காயங்கள்! எத்தனை காயங்கள்! அம்மா! அம்மா!’ அனிதாவின் கண்கள் மூடின. தலை பின்புறம் சாய்ந்து அப்படியே நின்றது. அவள் கண்களில் கண்ணீர்த் துளிகள் ஜொலித்தன. மேலே விசிறி மெல்லச் சுற்றிக்கொண்டிருக்க, அவள் ஸாரி லேசாக அசைந்தது. மீனாட்சி அருகில் வந்து அவளை அணைத்து சரிப்படுத்தினாள்.
‘பாஸ்கர், கொஞ்சம் என்னுடன் வாருங்கள்’ என்றார் இன்ஸ்பெக்டர்.
கீழே இறங்கி வந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சிகரெட் குடிக்க மிக விரும்பினார். பாஸ்கரிடம் அனுமதி கேட்டு, சிகரெட் பெட்டியை எடுத்துத் திறந்து பாஸ்கரிடம் நீட்டி, (‘நான் குடிப்பதில்லை’) தனக்கென்று எடுத்துக்கொண்டு, தட்டி, உதட்டில் பொருத்திப் பற்றவைத்து ஓர் இழுப்பு இழுத்து, சுவாசப் பைக்குள் புகை மேகம் பரவியதும்தான் அவரது படபடப்பு அடங்கியது.
வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தது அந்தச் சிறிய வீடு. ஒரு ஆள்தான் வசிக்கலாம்.
அதன் கதவு திறந்திருந்தது. உள்ளே அறை தெரிந்தது. இடது பக்கம் ஒரு சமையல் அறையும் அடுத்து சிறிய குளியலறையும் மற்ற தேவைக்கான அறையும் வரிசையாக இருந்தன. பின்புறம் சிறிய தோட்டம் இருந்தது.
‘இங்கேதான் கோவிந்த் வசித்து வந்தான்’ என்றான் பாஸ்கர்.
அந்த அறையில் ஓர் அலமாரி இருந்தது. சுவரில் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஒரு காலண்டர் தொங்கியது. அலமாரியில் விஷ்ணு படம். ஊதுவத்தி பாக்கெட். காய்ந்த பூக்கள். ரசம் போன கண்ணாடி அலமாரியின் கீழ்த்தட்டில் ஒரு தகர டிரங்க்.
இன்ஸ்பெக்டர் அந்த ட்ரங்க் பெட்டியைத் திறந்தார். ஒழுங்காக வெள்ளைக் கதர்ச் சட்டைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இரண்டு காக்கி பாண்ட். ஒரு நோட் புத்தகம். சில இந்தி நாவல்கள். ஒரு பேனா.
‘ம்ஹும்,’ என்றார்.
`என்ன தேடுகிறீர்கள்?’
‘அவன் போட்டோ வேண்டும், கிடைக்குமா?’
‘போட்டோ… போட்டோ…’ பாஸ்கர் யோசித்தான். ‘முயற்சி செய்கிறேன். குடும்ப ஆல்பத்தில் ஏதாவது ஒரு போட்டோவில் இருக்கலாம்’.
‘கோவிந்த் பிரம்மசாரி?”
‘ஆம்’.
‘எத்தனை வயதிருக்கும்?’
‘நாற்பது, நாற்பத்தைந்து’.
‘எந்த ஊர்க்காரன்?’
‘உத்தர பிரதேஷ் என நினைக்கிறேன். ஆனால் அவன் ரொம்ப நாளாக இந்தக் குடும்பத்துடன் இருக்கிறான். அவன் அப்பா இவர்களுடன் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது இந்தக் குடும்பம் படேல் நகரில் இருந்தது. இவ்வளவு செல்வாக்கும் இல்லை. ஷர்மா கடுமையாக உழைப்பவர். அதிர்ஷ்டக்காரர். தொட்டதெல்லாம் தங்கமாக மாற்றினார். இந்த வீடு புதிதாகக் கட்டி வந்து இரண்டு வருஷம்தான் ஆகிறது. இது அவருடைய கனவு வீடு. தாஜ்மகால்!”
‘முதல் மனைவிக்கா, இரண்டாம் மனைவிக்கா?’
‘ஓ எஸ், நீங்கள் திருமதி அனிதா ஷர்மாவைப் பற்றிக் கேட்க விரும்புகிறீர்கள்?’
‘ஆம்’.
‘அவர் அவளை எங்கே எப்படிச் சந்தித்தார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. கல்யாணம் நடந்து சரியாக இரண்டரை வருஷங்கள் ஆகின்றன. அவருக்கு அவளிடம் ஒரே மயக்கம். அன்பு என்றால், காதல் என்றால், பாசம் என்றால் போதாது அப்ஸெஷன்.’
‘ஷி இஸ் எ ப்யூட்டிஃபுல் உமன்.’
‘ஆம்.’ பாஸ்கர் தன் நகத்தைப் பார்த்துக்கொண்டான். இன்ஸ்பெக்டரின் பார்வையைத் தவிர்த்தான்.
‘மற்றொரு விஷயம். இந்தக் கோவிந்திடம் ஏதாவது ஆயுதம் இருந்ததா?’ என்றார் ராஜேஷ்.
‘புரியவில்லை’.
‘இந்தக் கேள்வி உங்களுக்கு வினோதமாகப்படும். கோவிந்திடம் எப்போதாவது ஒரு சவுக்கைப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா?’
‘சவுக்கா?’
‘சவுக்கு. சாட்டை, பாருங்கள், மிஸ்டர் பாஸ்கர். இறந்துபோன ஷர்மாவின் உடல் முழுவதும் சவுக்கடிக் காயங்கள், கீறல்கள் இருந்தன…’
‘ஓ,நோ!’
– தொடரும்…
– அனிதா – இளம் மனைவி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 1974, குமுதம்.