கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 4, 2023
பார்வையிட்டோர்: 5,290 
 
 

(1997ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குருத்து 4-6 | குருத்து 7-9 | குருத்து 10-12

குருத்து ஏழு 

சுழல் நாற்காலியில் சாய்ந்த வண்ணம், மேஜை விளிம் பைக் கால்களால் உந்தி முன்னும் பின்னுமாக ஆடியபடியே தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சேதுபதி.கல்கத்தாவிலுள்ள ஒரு வர்த்தக ஸ்தாபனத்துடன் ‘டிரங்’ டெலி போன்மூலம் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கும் போது அந்தப் பொன்னான நேரத்தை வீணாக்காமல் தம்முடைய மோட்டார் தொழிற்சாலையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். 

யோசனையின் தீவிரத்தில் அவர் தம்முடைய அகன்ற நெற்றிக்கும் வலது உள்ளங்கைக்குமிடையே சிக்கியிருந்த பென்சிலை இப்படியும் அப்படியும் உருட்டிக் கொண்டிருந்த சமயம், “அப்பா! இன்றைக்கு எனக்குப் பிறந்த நாள்!” என்று குதூகலத்தோடு கூறிக்கொண்டு அவருடைய அருமை மகள் பாரதி அவர் எதிரில் வந்து நின்றாள். 

“அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இன்றைக்கு உனக்கு எத்தனையாவது பிறந்த நாள்?” சேதுபதி கேட்டார். 

“இருபதாவது…” 

“வெரிகுட்! உன் அத்தையிடம் சொல்லி முதல் தரமான விருந்து தயாரிக்கச் சொல்லு.. உனக்குப் பால் பாயசம் ரொம்பப் பிடிக்குமே! உன் சிநேகிதிகளை யெல்லாம் சாப்பிடக் கூப்பிடுவது தானே?” 

“கூப்பிடாமல் இருப்பேனா? அவர்கள் எல்லோரும் மாடியில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிஷத்தில் விருந்து தயாராகிவிடும். அப்பா! நீங்களும் இன்று என்னோடு சாப்பிட வேண்டும்..” 

“அப்படியா சங்கதி? எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறதா? இந்த வீட்டில் நடப்பது ஒன்றுமே எனக்குத் தெரிவதில்லை…” 

“உங்களுக்குத்தான் எதிலேயுமே அக்கறை கிடையாதே! எந்த நேரமும் வேலைதான். அதே ஞாபகம்தான்! உங்க வயசே உங்களுக்கு நினைவில் இருப்பதில்லையே!” 

“நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறவன் என்று தீர்மானித்துவிட்டாயா? சின்ன வயசிலே நடந்ததெல்லாம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பிறந்தபோது எனக்கு வைத்த பேரைக்கூட. இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா?…” 

“அடேயப்பா! ரொம்ப ஆச்சரியமாயிருக்கே! அது சரி; உங்களுக்கு இப்போது என்ன வயசாகிறது தெரியுமா?…” 

“அதுதான் மறந்து போச்சு. உள்ளே போய் அத்தையைக் கேட்டுப் பாரு. சரியாகச் சொல்லுவாள். அவளைவிட எனக்கு நாலு வயசு கூட. அவளுக்கு இப்போ…” 

“நாற்பத்தெட்டு ஆகிறது.” 

“அப்படின்னா எனக்கு இப்ப ஐம்பத்திரண்டு ஆகியிருக்கணுமே!..ஓ!.. அவ்வளவு வயசாகி விட்டதா எனக்கு?” 

“அப்பா, அம்மாவையும் உங்களையும் சேர்ந்தாப் போல நிற்க வைத்து நமஸ்காரம் செய்ய முடியலையே என்று எனக்கு ரொம்ப நாளாகக் குறை. கொஞ்சம் எழுந்து அம்மா படத்துக்குப் பக்கத்திலே நில்லுங்கப்பா… நமஸ்காரம் செய்யறேன்…” 

கண்களில் தளும்பிய கண்ணீரைத் துடைத்தபடியே சேதுபதி தமது மனைவியின் படத்தைப் பார்த்தார். அந்தக் களை பொருந்திய முகம் தெய்வத் தன்மை பெற்று விளங்கியது. 

திருமணத்தன்று சேதுபதி அவளுக்கு மாலை சூட்டிய போது அவள் வெட்கம் சூழத் தலை குனிந்த வண்ணம் தம் எதிரில் நின்ற காட்சி அவர் நினைவுக்கு வந்தது. 

அன்று கல்யாண கோலத்தில் நின்ற சரஸ்வதியின் அழகிய வடிவத்துக்கும் இப்போது எதிரில் நிற்கும் பாரதியின் தோற்றத்துக்கும் அதிக வித்தியாசம் இல்லை. சேதுபதி யின் நெஞ்சத்தில் உணர்ச்சி அலைகள் பொங்கின. 

சரஸ்வதியைப் பிரிந்து இன்று பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை காலமும் வைராக்கிய புருஷராக, சலனமற்ற தபசியாக, திடசித்தம் வாய்ந்தவராக வாழ்ந்து விட்ட சேதுபதியின் உள்ளத்தில் பார்வதி பெரும் புயலைக் கிளப்பியிருந்தாள். 

“பாரதி! நீ போய்ச் சாப்பிடு! எனக்காகக் காத்திருக்க வேண்டாம். காலேஜுக்கு நேரமாகிவிடும் உனக்கு. நான் கல்கத்தாவுக்கு டிரங்க் கால்’ புக் செய்திருக்கிறேன்.” 

“பிறந்த நாளன்றுகூட என்னோடு சாப்பிடக் கூடாதா அப்பா! எப்போது பார்த்தாலும் வேலைதானா?” சலிப்போடு கூறினாள் பாரதி. 

“இன்றைக்கு உனக்குப் பிறந்த தினம் என்று நீ என்னிடம் நேற்றே சொல்லியிருந்திருக்கக் கூடாதா?” 

“நேற்று நான் சொன்னபோது ‘பேஷ் பேஷ்’ என்றீர்களே! அதற்குள் மறந்து விட்டீர்களா?” 

“நீ என்ன சொன்னாய் என்பதே இப்போது என் ஞாபகத்தில் இல்லை. நான் ஏதோ கவனமாக ‘பேஷ்’ சொல்லியிருக்கிறேன்! பரவாயில்லை உன் சிநேகிதிகளெல் லாம் வந்திருக்கிறார்கள் இல்லையா! அவர்களை யெல்லாம் சாப்பிடச் சொல்லு” என்றார் சேதுபதி. 

“அப்பா, உங்களுக்கு வர வர ஞாபக மறதி அதிகமாகிக் கொண்டே போகிறது. நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் மறுபடியும் மறந்து போனாலும் போவீர்கள். ஆகையால் எனக்கு இப்போதே ‘பர்த்டே பிரசன்ட்’டைக் கொடுத்து விடுங்கள்” என்றாள் பாரதி. 

“பிரசன்ட்டா! என்ன பிரசன்ட் கொடுக்கிறது?” 

“ஜப்பானிலிருந்து நாய் பொம்மை ஒன்று வந்திருக்கிறதாம். யாராவது கூப்பிட்டால் அந்தப் பொம்மை நாய் தானாகவே வாலை ஆட்டிக் கொண்டு ஓடி வருகிறதாம்.” 

“தானாகவே எப்படி ஓடி வரும்? யாராவது கீ கொடுத்து வைத்திருப்பார்கள்”. 

“அதுதான் இல்லை; கூப்பிடறவர்களின் சத்தத்தைக் கேட்டுத் தானாகவே ஓடி வருகிறதாம்.” 

“விஞ்ஞானம் அவ்வளவுத் தூரம் வளர்ந்திருக்கிறது. அந்த நாய் என்ன விலையாம்?”

“அறுநூறு ரூபாயாம்!”

“ரொம்ப அதிகம்”. 

“கூப்பிட்டால் ஓடி வருகிறதே! அதுக்கு இது ஒரு விலையா?” 

“தெருவிலே போகிற நாய்க்கு ஒரு பக்கோடாவைக் காட்டிக் கூப்பிட்டால் போதுமே! உன் கூடவே ஓடி வருமே! இதுக்குப் போய் அறுநூறு ரூபாய் செலவழிப்பார்களா?” என்று சிரித்தார் சேதுபதி. 

பாரதியும் சிரித்து விட்டாள். 

“நான் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் அறுநூறு ரூபாய் ரெடியா இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே ஓடினாள் பாரதி. 

“பாரதி!” என்று அழைத்தார் சேதுபதி. 

வேகத்துடன் புறப்பட்ட பாரதி, சேதுபதியைத் திரும்பிப் பார்த்து “என்னப்பா?” என்று கேட்டாள். 

“ஆமாம், உங்க பிரின்ஸிபாலைக் கூப்பிடலையா?”

“அழைச்சிருக்கேன், அநேகமா, இப்ப வந்தாலும் வருவாங்க”. 

பிரின்ஸிபால் வரப் போகிறாள் என்னும் சேதி சேதுபதிக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. ஆயினும், அவர் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. 

நேற்றுக்கூடப் பார்வதியைச் சந்தித்தபோது பொதுவாகப் பல விஷயங்களைப்பற்றி அவர் வெகு நேரம் விவாதித்துக் கொண்டிருந்தார். எல்லா விஷயங்களிலும் அவளுக்குத் தெளிவான, நிச்சயமான அபிப்பிராயம் இருந்தது. ஆழ்ந்த படிப்பும், படிப்புக்கேற்ற பண்பும், எதையும் சூட்சுமமாகப் புரிந்து கொள்ளும் அறிவுக் கூர்மையும் வாய்ந்த பார்வதியுடன் பேசிக் கொண்டிருப்பதில் சேதுபதிக்கு ஒரு வெறியே இருந்தது.ஒரு நாளைக்கு ஒரு முறை சந்திப்பதாலும் பேசுவதாலும் தீர்ந்து போகிற வெறி அல்ல அது. தாகத்துக்கு உப்புத் தண்ணீர் குடிக்கிற மாதிரிதான்.குடிக்கக் குடிக்க, மேலும் மேலும் தாகம் எடுத்துக் கொண்டே இருக்குமல்லவா? தன்னுள் புகுந்து தன்னை ஆட்டி வைக்கும் அந்த மயக்கத்தைப்பற்றி அவரே ஆராய்ந்து பார்த்தார். அதன் இரகசியம், மர்மம், மாயம் எதுவுமே அவருக்கு விளங்கவில்லை. 

தம் வாழ்நாளில் அவர் எத்தனையோ அழகிகளைச் சந்தித்திருக்கிறார். அறிவாளிகளுடன் பழகியிருக்கிறார். அவர்களிட மெல்லாம் காணாத கவர்ச்சியும் மயக்கமும் பார்வதியினிடத்தில் மட்டும் எப்படி வந்தன? இந்த முதிர்ந்த பிராயத்தில் உடல் உறவு சம்பந்தமான இச்சைகளுக்கெல்லாம் முடிவு காண வேண்டிய பருவத்தில் இந்த மயக்கம் எதற்கு? 

ஆற்றலும் அனுபவமும் மிக்க சேதுபதி, திடசித்தம் வாய்ந்த இலட்சியவாதி தடுமாறி நின்றார். மனைவியின் படத்தைக் கண்டபோது அவருக்குப் பழைய நினைவுகளெல் லாம் ஞாபகத்துக்கு வந்தன. 

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தாய்ப்பாசம் ஒன்றையே ஆதரவாகக் கொண்டு வாழ்க்கையில் பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்டவர் அவர். உழைப்பால் உயர்ந்த உத்தமர். சரஸ்வதியை மணந்த பின்னரே, அவருடைய வாழ்க்கை விரிவாக மலரத் தொடங்கியது. ஆயினும், அந்த வாழ்வின் பூரண இன்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு. பாரதியைப் பெற்றெடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவள் காலமாகி விட்டாள். அதற்குப் பிறகு சேதுபதி இல்லற வாழ்க்கையில் விரக்தி அடைந்து மறுமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் வைராக்கிய புருஷராக இருந்து விட்டார். 

அடுத்த ஆண்டிலேயே அவருடைய தங்கை சாரதாம்பாள் கட்டிய கணவனை இழந்து கைம்பெண்ணாகிக் கண்ணீரும் கம்பலையுமாகச் சேதுபதியின் வீட்டோடு வந்து சேர்ந்தாள். ஆதரவற்றுக் கிடந்த சேதுபதியின் குடும்பப் பொறுப்பை அவளே ஏற்க வேண்டியதாயிற்று. சமயம் நேரும்போதெல்லாம் அவ்வப்போது சேதுபதியை மறுமணம் செய்து கொள்ளும்படி அவள் தூண்டிக் கொண்டிருந்தாள். சேதுபதி அதற்கு இணங்கவில்லை. 

“குழந்தை பாரதியிடம் அன்பும் ஆதரவும் காட்டி வளர்க்க நீ இருக்கும்போது நான் எதற்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும்?” என்று கூறிவிட்டார். 

அந்தப் பிடிவாதம், தீவிர விரதம், திடசித்தம், உறுதி மொழி எல்லாம் இப்போது பார்வதியின் முன்னால் ஆட்டம் கண்டுவிட்டன. 

நினைவுச் சுழலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து நின்றார் சேதுபதி. ‘பார்வதி வரும் நேரமாகிறது. இந்த நேரத்தில் நான் இங்கே இருப்பதைக் கண்டால் என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக, தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதாக அல்லவா எண்ணுவாள்? அம்மாதிரி அவள் தன்னைப்பற்றி எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது. அவள் வருவதற்குள் நான் வெளியே போய் விட வேண்டும். அப்போது என்னைப்பற்றி பாரதியிடம் விசாரிப்பாள். மாலையில் டியூஷனுக்கு வரும்போது ‘காலையில் சந்திக்க முடியவில்லையே’ என்று என்னிடம் கூறுவாள். தன் மீது அவள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அப்போது அவள் முகத்தில் வெளிப்படும்.’ 

கல்கத்தாவிற்குப் போட்டிருந்த டிரங்க் காலை ரத்து செய்துவிட்டு, ‘பாரதி!’ என்று அழைத்தார். 

“என்ன அப்பா?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பாரதி. 

“எனக்கு அவசரமாக வேலை இருக்கிறது. நான் வெளியே போய்விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வருகிறேன்…” 

“பிரின்ஸிபால் சாப்பிட வருவதாகச் சொல்லியிருக்கிறாரே! நீங்க இல்லைன்னா!” 

“பரவாயில்லை; முடிந்தால் சாய்ந்திரம் பார்க்கிறேன். எனக்காகக் காத்திருக்க வேண்டாம். அவரைச் சாப்பிடச் சொல்லு…” 

உண்மையில் சேதுபதிக்கு எந்த அவசர வேலையும் இல்லை. அவசரமாக அவருக்கிருந்த வேலை கல்கத்தாவுக்கு டெலிபோனில் பேச வேண்டியதுதான். அந்த அவசர வேலையையும் அவசரம் அவசரமாக ரத்து செய்துவிட்டு வெளியே புறப்பட்டுச் செல்வதற்கு ஒரே ஒரு காரணம் பார்வதியைச் சந்திக்கக்கூடாது என்பதுதான். அவளுடன் பேச வேண்டும் என்று எவ்வளவுக்கெவ்வளவு அவர் மனம் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ அவ்வளவுக்கு அவர் அந்த ஆசையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெளியே கிளம்பிப் போய்விட்டார். 

அவர் சென்ற சிறிதுநேரத்திற்கெல்லாம் டெலிபோன் மணி அடித்தது. பாரதி ரிஸீவரைக் கையிலெடுத்துப் பேசிய போது பிரின்ஸிபால் பார்வதியின் குரல் கேட்டது. 

“பாரதி! எனக்கு இப்போது அவசரமாகக் கொஞ்சம் வேலை இருக்கிறது. ஆகையால், நீ எனக்காகக் காத்திருக்க வேண்டாம். மாலையில் நான் வரும்போது உன்னைப் பார்க்கிறேன். விஷ்யூ ஹாப்பி பர்த்டே!” என்றாள். 

உண்மையில், பார்வதிக்கும் எந்த அவசர வேலையும் இல்லை. சேதுபதி தனக்காகக் காத்திருப்பார். அவர் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் அங்கே போகக் கூடாது நான் வரப் போவதில்லை என்று தெரிந்ததும் அவர் பாரதியிடம் விசாரிப்பார். மாலையில் தன்னைச் சந்திக்கும் போது ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்பார்.ஆன அப்படிக் கேட்கும்போது அவருக்குத் தன் மீதுள்ள அன்பும் அக்கறையும் வெளிப்படும்!- 

பார்வதியின் அவசரமான ஜோலிக்குக் காரணம் இதுதான்! 

தொழிற்சாலையில் சேதுபதிக்காகப் பல அலுவல்கள் காத்துக் கிடந்தன. ஆனால் அவை எதிலுமே சேதுபதியின் மனம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் பார்வதியின் நினைவு ஒன்றே அவர் உள்ளத்தை அலைத்துக் கொண்டிருந்தது. 

உள்ளத்தில் வெகு நாட்களாகப் புழுங்கிக் கொண்டிருந்த ஓர் எண்ணம் இமயமாக வளர்ந்து அழுத்துவது போல் தோன்றியது. 

‘இந்த மனப் போராட்டத்துடன் எத்தனை நாட்கள் வேதனைப் படுவது? மனதிற்குள்ளாகவே அடக்கி வைத்திருக் கும் அந்த எண்ணத்தை இன்று வெளியிட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்துகொண்டார். அடுத்தகணமே ‘சே! பார்வதி என்னைப்பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்? என்னிடம் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறாள். இப்படி நான் ஓர் அற்ப ஆசை வைத்திருக்கிறேன் என்று தெரிந்தால் என்னைத் தாழ்வாக எண்ணிக் கொள்வாளோ? எண்ணிக் கொள்ளட்டுமே! தெரியட்டுமே. தெரிந்துதான் போகட்டுமே. ஒரு நாளைக்கு இல்லா விட்டால் ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே? இதற்கு ஒரு முடிவு ஏற்படவேண்டியதுதானே. இன்று மாலையே பேச்சுக் கிடையில் ‘திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்கிறதா?’ என்று தெளிவாகத் தைரியமாகக் கேட்டு விடுகிறேன். கேட்டு நிச்சயமாக ஒரு பதிலை அறிந்து கொண்டு விடுகிறேன்.’ 

ஒரு தீர்மானத்துக்கு வந்தவராய் நாற்காலியை விட்டு எழுந்தார், சேதுபதி. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தம்முடைய பங்களா வாசலில் மரத்தடி ஊஞ்சலில் உட் கார்ந்து லேசாக ஆடியபடியே ஒவ்வொரு விநாடியும் பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் அவர். 

எங்கோ ஒலிக்கின்ற ஹாரன் சத்தங்களெல்லாம் பார்வதியின் காராயிருக்குமோ என்ற பிரமையை உண்டாக்கின. கடைசியில், காம்பவுண்டுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்றது. சேதுபதி ஆவலுடன் அந்தக் காரை நோக்கினார். ஆனால் அதில் பார்வதியைக் காணவில்லை. பாரதி மட்டுமே இறங்கி வருவதைக் கண்ட சேதுபதிக்குப் பெரும் ஏமாற்றமா யிருந்தது. 

“என்ன பாரதி! இன்றைக்கு டியூஷன் இல்லையா?” என்று கேட்டார் சேதுபதி. 

“உண்டு அப்பா. பிரின்ஸிபாலுக்கு ரொம்ப வேலை இருக்கிறதாம். ஆறு மணிக்கு மேல் வருவதாகச் சொல்லியிருக்கிறார்” என்றாள் பாரதி. 

“அப்படியா?” என்றவர் ‘வரட்டும். நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் புகுந்து உளைந்து கொண்டிருக்கும் பிரச் னைக்கு ஒரு முடிவு கட்டி விடுகிறேன்’ என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டவராய் ஊஞ்சலை வேகமாக ஆட்டினார். 

குருத்து எட்டு 

முதல் நாள் இரவு வெகு நேரம் வரை கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்த பார்வதி அன்று பொழுது புலரும் நேரத்தில் சற்று அதிகமாகவே தூங்கி விட்டாள், தூக்கம் கலைந்து அவள் படுக்கையை விட்டு எழுந்தபோது கடிகாரத்தில் மணி ஏழடித்துக் கொண்டிருந்தது. அறைக்குள் சில புத்தகங்கள் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. ‘துன்பத்துக்கும் இன்பத்துக்கும் இடையே’ என்பது அவற்றுள் ஒன்று. ‘வித் லவ் அண்ட் ஐரணி’ என்பது இன்னொன்று. அந்தப் புத்தகங்களைக் கண்டபோது அவள் இதழ்களில் இலேசான புன்முறுவல் தோன்றி நெளிந்தது. 

அந்தப் புன்னகைக்குள் ‘ஏதோ ஒன்று’ ஒளிந்து கொண்டிருப்பதை பார்வதியைத் தவிர வேறு எவருமே அறியமாட் டார்கள். 

‘இத்தனைக் காலமும் இல்லாமல் இப்போது என்னுள் புகுந்துள்ள அந்த உணர்வுக்கு என்ன காரணம்? நான் ஏன் அவரைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறேன்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? 

சேதுபதியின் மகள் பாரதியினிடத்தில் நிஜமாகவே எனக்கு அக்கறை இருக்கிறதா? அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு ஏன் இத்தனை ஆர்வம்? அவளுக்குப் பாடம் சொல்லித் தரும் நேரங்களில் என் மனம் ஏன் அமைதியின்றி அலைய வேண்டும்? அவரைக் காண வேண்டு மென்ற ஆவலில் என் கண்கள் ஏன் அங்குமிங்கும் சுழல வேண்டும்? இதற்கெல்லாம் என்ன பொருள்?’ 

சேதுபதியின் கண்ணியமான, கம்பீரமான தோற்றம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. ‘இந்தத்தோற்றத்தில் அப்படி என்ன கவர்ச்சி இருக்கிறது? என்னைக் கவர்ந்திழுக்கும் மாய சக்தி இதற்கு எங்கிருந்து வந்தது?’

ஆம்; சேதுபதியைக் காட்டிலும் கவர்ச்சி மிக்க, அழகு வாய்ந்த ஆடவர்களைப் பார்வதி சந்தித்திருக்கிறாள். வெளி நாடுகளில், எத்தனையோ அறிவாளிகளை, ஆராய்ச்சியாளர்களை, கல்வித் துறையில் புகழுடன் விளங்குபவர்களை, பட்டம் பெற்றவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறாள். கருத்து அரங்குகளில் அவர்களுடன் வாதாடி இருக்கிறாள். ஆயினும் அவர்களிடமெல்லாம் காண முடியாத கவர்ச்சி, காந்த சக்தி சேதுபதியிடம் இருந்தது. அந்தக் கவர்ச்சி, ஆண்-பெண் உறவு சம்பந்தமான உடற் கவர்ச்சி அல்ல. அதற்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவு பூர்வமான ஒரு சக்தி அது! அதை அவளால் விளக்க முடிய வில்லை. விளங்கிக் கொள்ளவும் முடிய வில்லை. 

இரண்டாகப் பிரிந்து குப்புறக் கீழே வீழ்ந்து கிடந்த புத்தகத்தை எடுத்தபோது அதில் இரவு படித்த சில வரிகள் அவள் கவனத்துக்கு வந்தன. 

‘உலக வாழ்க்கை ஒரு பாதாளக் கிணறு போன்றது. குழந்தை அதன் பக்கத்தில் நின்று கொண்டு எட்டி எட்டிப் பார்த்தால் என்ன சொல்லுவோம்? ‘அங்கே நிற்காதே! எட்டிப் பார்க்காதே! தூர நில்’ என்போம். அவ்வாறே யாகும் வாழ்க்கையின் அபாயங்கள். கிணற்றில் வீழ்ந்து விட்டால் மீள்வது துர்லபம்.’ 

நான் அத்தப் பாதாளக் கிணற்றின் அருகில் நிற்கும் ஒரு குழந்தையா? ஒருநாளுமில்லை. 

இத்தனை ஆண்டுகளும் நான் கலியாணம் செய்து கொள் ளாமலே, கணவனோடு வாழாமலே இல்லறத்தின் இன்ப துன்பங்களை அனுபவிக்காமலே வாழ்ந்து விட்டேன். என் கன்னிப் பருவம் முழுமையும் தாய்மைக் கோலம் பூண்டு, குழந்தை ராஜாவை வளர்ப்பதிலேயே கழித்து விட்டேன்.

பார்வதிக்கு இந்த உலக வாழ்க்கை தெரிந்திருந்தது. பெண்மையும் பெண்மைக்குரிய ஆசாபாசங்களும் தெரிந்திருந்தன, ஆனால் அந்தப் பெண்மை தனக்கும் உண்டு என்பதை அவள் உணர்ந்ததில்லை. அவள் வாழ்க்கை தெரிந்தவள். ஆனால் அந்த வாழ்க்கை தனக்கும் உண்டு என்பதை அறியாதவள். 

கீழே ராஜாவின் சீட்டிக் குரல் ஒலித்தது. காலைப் பத்திரிகையைப் படித்தபடியே யோசித்துக் கொண்டிருந்த பார்வதி, மணி ஒன்பதாகி விட்டது என்பதை அப்போது தான் உணர்ந்தாள். 

‘வெகு நேரம் தூங்கி விட்டிருக்கிறேன். என்றுமே இப்படித் தூங்கியதில்லை. கல்லூரிக்கு நேரமாகி விட்டது’ என்று எண்ணிக்கொண்டே அவசரமாக எழுந்து போய் தேதிக் காலண்டரின் முதல் நாள் தாளைக் கிழித்தெறிந்தாள். அப்போதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. ‘ஓ! இன்று பாரதிக்குப் பிறந்த நாளல்லவா? என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறாளே! போகலாமா, வேண்டாமா?’ என்று யோசிக்கலானாள். 

‘இப்போது ஒருவேளை சேதுபதி வீட்டில் இருந்தாலும் இருக்கலாம். பாரதி என்னை அழைத்திருக்கும் செய்தி அவருக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது அங்குச் சென்றால் அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்’ என்று முதலில் எண்ணினாள். 

அடுத்தாற்போல், 

‘கூடாது; இப்போது போகக் கூடாது. போகாமலிருந்தால், ஒரு வேளை அவர் தன்னைப் பற்றிப் பாரதியிடம் ‘ஏன் வரவில்லை?’ என்று விசாரித்தாலும் விசாரிக்கலாம். மாலையில் என்னைச் சந்திக்கும்போது காலையில் ‘ஏன் வரவில்லை?’ என்று கேட்டாலும் கேட்கக் கூடும். ‘அவர் என்னைப் பற்றி விசாரிக்கும் பெருமையை இப்போது போவதால் இழந்துவிடக் கூடாது’ என்று தீர்மானித்தவளாய் டெலிபோனை எடுத்து, ‘பாரதி! எனக்கு இப்போது கொஞ்சம் அவசர வேலையிருக்கிறது. மாலையில் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கீழே இறங்கிச் சென்றாள். 

அவசர அவசரமாகச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு பகவான் பரமஹம்சரையும் தேவியையும் வணங்கி விட்டுக் காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள். கார், வாசல் கேட்டைத் தாண்டும்போது செவிட்டுப் பெருமாள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினான். கல்லூரிக் காம்பவுண்டை நெருங்கியபோது, சொல்லி வைத்தாற்போல் பிரெஞ்சு ஆசிரியை மிஸஸ் அகாதா காலை விந்தி விந்தி நடந்து வந்து கொண்டிருந்தாள்! அகாதாவைக் கண்டதும் பார்வதி கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தடிக்க ஐந்து நிமிஷம்! 

காரைத் தன் அறைக்கு வெளியே கொண்டு போய் நிறுத்தியபோது அட்டெண்டர் ரங்கசாமி வழக்கம்போல் காரின் கதவைத் திறக்க ஓடி வந்தான். 

குறித்த நேரத்தில் கல்லூரிக்கு வந்துவிட்டதில்  பார்வதிக்குப் பரம திருப்தி! அதில் அவள் எப்போதுமே உஷார்! 

உள்ளே போய், நாற்காலியில் அமர்ந்ததுதான் தாம தம், இயந்திரகதியில் இயங்கத் தொடங்கி விட்டாள். 

எல்லா வேலைகளையும் முடித்தானதும் அன்று வந்த தபால்களை ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். அந்தக் கடிதங்களில் கல்கத்தா ராமகிருஷ்ண மடத்திலிருந்து வந்திருந்த அழைப்புக் கடிதமும் ஒன்று. உலகத்து அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு விவாதிக்கப் போகும் வேதாந்த விசாரணையில் பார்வதியும் பங்கு பெறவேண்டு மென்பது அழைப்பாளர்களின் விருப்பம். 

வேறொரு சமயமாயிருந்தால், பார்வதி அந்த அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பாள். தனக்குக் கிடைத்த ஒரு பெருமையாகவும் எண்ணியிருப் பாள். ஆனால் இன்று இப்போது அவள் உள்ளப் போக்கு அடியோடு மாறியுள்ள இந்த நேரத்தில் அவளால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 

மாலை வேளைகளில் சேதுபதியைச் சந்தித்துப் பேசுவதில் அவள் பேருவகையடைந்தாள். அதைக் காட்டிலும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம் இந்த உலகத்தில் வேறு ஒன்று இருப்பதாகவே அவளுக்குத் தோன்றவில்லை. எனவே, ‘மன்னிக்கவும்’ என்று பதில் கடிதம் எழுதிப் போட்டு விட்டாள். 

மணி மூன்றடிப்பதற்குள் தன்னுடைய வேலைகளை யெல்லாம், கடமைகளை யெல்லாம் முடித்துக் கொண்டு விட்ட பார்வதி, ‘மணி எப்போது ஐந்தடிக்கப் போகிறது’ என்று எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தாள். 

மணி ஐந்து அடித்தது. 

சேதுபதியைச் சந்திக்கும் ஆவலில் அவள் உள்ளம் துடித்துக் கொண்டிருந்த போதிலும், பாரதி வந்து அழைத்த போது, “எனக்கு இப்போது ரொம்ப வேலை இருக்கிறது.நீ போகலாம். நான் ஆறு மணிக்கு வருகிறேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டாள். 

கல்லூரி முடிந்தவுடன் பாரதியையும் காரில் அழைத்துக் கொண்டு டியூஷனுக்குப் புறப்படவேண்டும் என்பதுதான் பார்வதியின் திட்டம். ஆனால் பாரதி வந்து அழைத்த போது ஏனோ அவள் மனம் மாறிவிட்டது. 

பாரதி அப்பால் சென்றதும், ‘ஆறு மணிக்கு வருவதாக ஏன் சொல்லியனுப்பினேன்? இதென்ன பயித்தியக்காரத்தனம்?’ என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள் பார்வதி. 

அடுத்த ஒரு மணி நேரமும் அவள் தன்னுடைய அறையிலேயேதான் உட்கார்ந்திருந்தாள். ஒரு மணி நேரம்தான் என்றாலும், அந்த நேரத்தில் அது ஒரு யுகமாகத் தோன்றியது! அறை அவளுடைய சொந்த அறைதான் என்றாலும், அந்த நேரத்தில் அது சிறைக் கூடமாகத் தோன்றியது. பார்வதி ஏதேதோ யோசித்தாள். கடந்துபோன தன் பழைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை யெல்லாம் எண்ணிப் பார்த்து அசை போடலானாள். 

சிறுவயதில் தாய் தந்தையரைப் பிரிந்து அனுபவித்த துன்பங்கள், தன் சகோதரனுடன் கிராமத்தை விட்டு வந்த சம்பவம், அவனுக்குத் திருமணம் செய்து வைக்கத் தான் பட்டபாடு, தான் காலேஜில் சேர்ந்து படிப்பதற்கும், அண்ணன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கும் வேண்டிய பொருளாதார வசதி இல்லாமல் மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது, அண்ணன் மனைவியின் மறைவு, அந்தத் துயரம் தாங்காமல் அண்ணன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றது, குழந்தை ராஜாவுடன் கிழவர் சாம்பசிவத்தின் ஆதரவில் வாழ்ந்தது, சேதுபதி தன்னைப் பெண் பார்க்க வந்தது, காரணம் கூறாமலே தன்னை நிராகரித்தது, தந்தைபோல் அன்பு பாராட்டிய சாம்பசிவம் தன்னை அநாதையாக்கி விட்டுப் பிரிந்து சென்றது, பல இன்னல்களுக்கிடையே படித்துப் பட்டம் பெற்றது, பின்னர் இதே கல்லூரியில் படிப்படியாக முன்னுக்கு வந்து, கடைசியில் பிரின்ஸிபால் ஆனது வரை எல்லா நிகழ்ச்சிகளையும் எண்ணிப்பார்த்து வியந்துகொண்டாள். 

மணி ஆறு அடித்துக் கொண்டிருக்கும்போதே பார்வதியின் கார் திருவாளர் சேதுபதியின் பங்களாவுக்குள் போய் நின்றது. வெகு நேரமாக மரத்தடி ஊஞ்சலில் உட்கார்ந்து பார்வதியின் வரவை ஆவலுடன் எதிர் நோக்கியிருந்த சேதுபதி, அவள் வருவதற்குச் சற்று முன்புதான் உள்ளே எழுந்து போனார். 

அறைக்குள் அமர்ந்திருந்த சேதுபதிக்கு வாசலில் கார் வரும் ஓசை கேட்டபோது ஒருகணம் ‘எழுந்துபோய் பார்வதியை வரவேற்கலாமா?’ என்று தோன்றியது. அடுத்த கணமே, ‘சே! கூடாது; தனக்கு அவளிடம் உள்ள அந்தரங்க ஆவலை வெளியே காட்டிக் கொள்ளக்கூடாது. பாரதிக்கு டியூஷன் சொல்லிக்கொடுத்த பிறகு பார்வதியாகவே தன்னைத் தேடி தன்னுடைய அறைக்கு வருவாள். அதுதான் வழக்கம். வழக்கப்படி இன்றும் அவளாகவே வரட்டும். அதற்குள் நான் ஏன் அவசரப்படவேண்டும்?’ என்று எண்ணியவராய் அறைக்குள்ளேயே இருந்துவிட்டார். 

அன்று டியூஷன் முடிவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் கால் மணி நேரம் அதிகமாயிற்று. பாடம் நடந்துகொண்டிருந்தபோது பார்வதியின் உள்ளத்தில் அமைதி இல்லை. சேதுபதியையே எண்ணி எண்ணிக் குழம்பிக் கொண் டிருந்தது. 

இன்று அவருடைய அறைக்குச் சென்று அவருடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். பேச்சுக்கிடையில் தன் உள்ளத்தில் சஞ்சலமிட்டுக் கொண்டிருக்கும் எண்ணத்தை, வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். அவர் என் அந்தரங்கத்தை அறிய நேரிட்டால் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்…? அவர் என்னிடம் கொண்டுள்ள மதிப்பை மாற்றிக்கொண்டு விடுவாரோ?’ 

அடுத்த கணமே, ‘மாற்றிக் கொள்ளட்டும்; எதை வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். மனத்திற்குள்ளாகவே, எண்ணி எண்ணிப் புழுங்கிப் புழுங்கி வேதனைப் படுவது என்னால் இனி முடியாத காரியம். அவருடைய உறவை, அறிவு பூர்வமான நட்பை என் உள்ளம் நாடுகிறது. அதை நான் அவரிடம் கூறியாக வேண்டும். என் எண்ணத்தை, என்னுள் புகுந்துள்ள அபூர்வ உணர்வை, என்னுள்ளேயே எத்தனைக் காலத்துக்கு மறைத்து வைத்துக்கொண்டிருப்பேன்…? 

புயலில் சிக்கி அலையும் துரும்பைப்போல் எந்த முடிவுக் கும் வரமுடியாமல் அலைந்து கொண்டிருந்தது பார்வதியின் உள்ளம். 

அதே நேரத்தில் பார்வதி அனுபவித்துக் கொண்டிருந்த வேதனைகளை யெல்லாம் அறைக்குள் உட்கார்ந்திருந்த சேதுபதியும் அனுபவித்துக் கொண்டிருந்தார். பார்வதி தன் அறைக்குள் வந்து பேசிக் கொண்டிருக்கும்போது, ‘எப்படித் தன் விருப்பத்தை வெளியிடுவது, விஷயத்தை எப்படித் தொடங்குவது, எவ்வாறு கூறி முடிப்பது?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். தம்முடைய அந்தரங்கத்தை அறிய நேரிட்டால், அவள் தன்னைப்பற்றி என்ன நினைப்பாளோ? நினைக்கட்டும். அதற்காக எத்தனைக் காலம் சொல்லாமலேயே இருக்கமுடியும்?’

இரண்டு உள்ளங்களும், உணர்ச்சி அலைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. டியூஷன் முடிந்தது. பார்வதி தயங்கியபடியே சேதுபதியின் அறையை நோக்கி மெதுவாக நடந்தாள். அவள் இதயத்தில் பெரும் புயல் வீசிக்கொண்டிருந்தது. கால்கள் தடுமாறின. குழம்பிய உள்ளத்துடன் கனத்த இதயத்துடன் சேதுபதியின் அறைக் கதவுகளைத் தள்ளிக் கொண்டு ‘வணக்கம்’ என்று கைகூப்பியபடியே உள்ளே பிரவேசித்தாள். அதே சமயத்தில், ‘வாருங்கள்’ என்று அழைத்த சேதுபதியின் குரலில் வழக்கமாகக் காணும் கம்பீரம் இல்லை; தடுமாற்றம் தொனித்தது. 

குருத்து ஒன்பது 

‘வணக்கம்’ என்று சொல்லிக்கொண்டே சேதுபதியின் அறைக்குள் பிரவேசித்த பார்வதி, கலக்கமும் பரவசமும் கலந்த உணர்ச்சி வசப்பட்டவளாய், தெய்வ சந்நிதியில் மெய்ம்மறந்து நிற்கும் ஒரு பக்தனைப்போல் தன்னை மறந்த நிலையில் அசைவற்று நின்று கொண்டிருந்தாள். அதே நிலை தான் சேதுபதிக்கும். பார்வதியைக் கண்டதும் வழக்கமாகக் கையைக் காட்டி அமரச் சொல்லும் அவர், அன்று உண்மையிலேயே ஒரு தெய்வச் சிலைபோல் உட்கார்ந்திருந்தார். 

இந்த மௌன நிலை இரண்டு நிமிடங்கள் நீடித்தது. பார்வதி தானாகவே உட்கார்ந்திருக்கலாம்; அல்லது சேதுபதியாவது அவளை உட்காரச் சொல்லியிருக்கலாம். ஆனால் இருவருமே ஒருவரில் ஒருவர் லயித்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, ஒருவருடைய இதய ஆழத்தின் அடிவாரத்தில் புதைந்து கிடக்கும் இரகசியத்தை மற்றவர் ஊடுருவி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் வாயடைத்துப் போன ஊமைகளாகி, மௌன மொழியில் சம்பாஷித்த படியே, தத்தம் உணர்ச்சிகளை, ஆசைகளை உள்ளத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்களை வெளியிட முயலும் நடிப்புக்கலையில் இரண்டு நிமிடங்களைக் கழித்து விட்டனர். கடைசியில், சுய உணர்வு பெற்று, “உட்காருங்கள்” என்று கூறிய சேதுபதி பார்வதியைப் பார்த்தபோது, அவள் நாற்காலியில் அமர்ந்துவிட்டிருப்பதைக் கண்டார். 

“மன்னிக்க வேண்டும்; தாங்கள் எது பற்றியோ தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில்” 

சேதுபதி சிரித்தார். அது பொருளற்ற ஒரு வறட்டுச் சிரிப்பு! 

அவர் உள்ளம் எதையோ எண்ணிக் கொண்டிருந்த நிலையில் உதடு சிரிப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. 

‘தாங்கள் காலையில் வரப்போவதாகப் பாரதி சொல்லிக் கொண்டிருந்தாளே, ஏன் வரவில்லை?’ என்று சேதுபதி ஆவலுடன் கேட்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பார்வதிக்கு அவர் ஒன்றுமே கேட்காதது மிக ஏமாற்றத்தை அளித்தது. 

அடுத்த கணமே, ‘தன்னிடம் அவருக்கு அவ்வளவு அக்கறை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன அசட்டுத்தனம்?’ என்று எண்ணிக் கொண்டாள். 

உதட்டில் தவழ்ந்த புன்சிரிப்புக்கும் உள்ளத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த உணர்ச்சிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இன்றிச் சிந்தனையில் மூழ்கியிருந்த சேதுபதி, பார்வதியை மறந்துவிட்டவரைப் போல் காணப்பட்டாலும், அவருடைய எண்ணமெல்லாம் அவளைப் பற்றியதாகவே இருந்தது. அவர் அவளைக் கவனிக்காததுபோல் பார்த்துக் கொண்டிருந்தார். அவளை மறந்துவிட்டவர்போல் அவளையே எண்ணிக் கொண்டிருந்தார். 

சாந்தமே வடிவமாக, ஆனால் சலனமே இதயமாக அவர் எதிரில் உட்கார்ந்திருந்த பார்வதிக்குப் பேசத் தோன்றவில்லை; என்ன பேசுவது என்றும் புரியவில்லை. 

இருவரும் ஒரே மாதிரி எண்ணிக்கொண்டு, பார்த்துக் கொண்டு, சிந்தித்துக் கொண்டு, என்ன பேசுவது என்று தோன்றாமல் திகைத்துக்கொண்டு அப்படியே, அதே நிலையில், எப்போதும், என்றென்றும், இருந்துவிடவே விரும்பினார்கள். அந்த மௌன நிலையில் அவர்கள் இருவருக்குமே அத்தனை இன்பமும் சுகமும் இருந்தன. அப்படி ஒரு சுகம் இருப்பதை இருவருமே தனித்தனியாக உணர்ந்து அனுபவித்தார்கள். ஆனால் வாய்விட்டுச் சொல்லிக் கொள்ளவில்லை. 

இருவர் உள்ளங்களும் நெருங்கிய நிலையில் உறவாடிக் கொண்டிருந்த போதிலும், இருவருக்கும் தங்கள் ஆர்வத்தை வெளியிடமுடியாத நிலை! அது ஓர் அபூர்வநிலை! 

வயது ஐம்பத்திரண்டு கடந்து விட்ட பிறகு, இன்னொருத்தியின் துணையை, உறவை நாடுகிறது அவருடைய உள்ளம். இதைக் காதல் என்று கூறமுடியாது; காதலுக்கும் உடலுறவுக்கும் அப்பாற்பட்ட ஓர் ஆசை இது 

பார்வதிக்கு வயது நாற்பத்தாறு ஆகிவிட்டது. இத்தனைக் காலமும் கன்னியாகவே வாழ்ந்துவிட்ட அவள், திருமண வாழ்க்கையை என்றுமே விரும்பியதில்லை. தன் கன்னிப் பருவத்தை, இளமையின் பைசாச உணர்ச்சிகளுக்குப் பலியாக்கி விடாமல் புனிதமாகப் பாதுகாத்துக்கொண்டு வாழ்ந்துவிட்ட பின்னர், இத்தனைப் பிராயம் கடந்து இப்படி ஒரு விசித்திரமான ஆசை! 

சேதுபதியின் உறவை அவள் விரும்புகிறாள். ஆயினும் அந்த எண்ணம் தற்கால இலக்கியங்களில் சர்வ சாதாரணமாக வர்ணிக்கப்படும் ‘காதல்’ அல்ல. அவரிடம் அவளுக்கு ஏற்பட்டுள்ள அன்புக்கு, ஆசைக்கு, பரிவுக்குக் காரணம் அறிவு பூர்வமான தொடர்பேயாகும். 

சேதுபதியின் அறைச் சுவரைப் பெரிய உலகப்படம் ஒன்று அலங்கரித்தது. உலகத்திலுள்ள தேசங்கள், தீவுகள், கடல்கள், மலைகளெல்லாம் அதில் வரையப்பட்டிருந்தன. இன்னொரு புறம் உலக மகா மேதைகள் எழுதிய அறிவு நூல்கள் கண்ணாடி அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மூலையில் வெண்கலத்திலான புத்தர் சிலை, மேஜைமீது உருண்டை வடிவமான சுழலும் உலகத்தின் கோளம் ஒன்று. 

சுற்றியுள்ள படங்களும், அறிவு நூல்களும் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல; சேதுபதியின் அறிவு விசாலத்துக்குச் சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும் உன்னதப் பொக்கிஷங்கள் அவை. 

‘தான் ஓர் அறிவாளி; கல்வி கேள்விகளில் வல்லமை வாய்ந்த ஓர் இலக்கிய மேதை’ என்ற பெருமை பார்வதிக்கு உண்டு. ஆயினும் அந்தப் பெருமையை அவள் அகம்பாவமாக்கி விடவில்லை. அடக்கமும் பண்புமே கற்றதன் பயன் என்பதை நன்கு உணர்ந்திருந்த அவள் நீறுபூத்த நெருப்பாக அடக்கமே உருவாக இருந்தாள். 

சேதுபதியின் அறிவாற்றல், ஆழ்ந்த படிப்பு, உலக அனுபவம், எந்த விஷயத்திலும் அவருக்குள்ள ஒப்பற்ற ஞானம்-இவைகளைக் காணும்போது அவள் தன்னை மின் விளக்கின் அருகில் பறக்கும் கேவலம் ஒரு மின்மினிப் பூச்சியாகவே கருதிக்கொண்டாள். 

அந்தச் சுழலும் உலகத்தைத் தன் விரல்களால் அசைத்து உருட்டியவாறே அவள் மௌனத்தில் மூழ்கியிருந்தான். அந்த மெளனம் அவளுக்கே வேதனையைத் தந்தது. 

சேதுபதியிடம் ஏதேனும் பொதுவாகப் பேசவேண்டும் போல் இருந்தது. பேசினாள்; “யுத்தம், அணுகுண்டு, துப்பாக்கி இவையெல்லாம் இல்லாமலே இந்த உலகம் இயங்க முடியாதா?”- பார்வதியின் குரல் அசாதாரணமாகவே ஒலித்தது. 

“இதோ இயங்கிக் கொண்டிருக்கிறதே!” என்று சொல்லிவிட்டுப் பார்வதியையும் சுழன்று கொண்டிருந்த அந்தக் கோளத்தையும் மாறி மாறிப் பார்த்தார் சேதுபதி, உதட்டில் புன்னகை தவழ… 

“உலக மக்கள் யுத்த அபாயம் இன்றி வாழவே வழியில்லையா?” பார்வதி மீண்டும் கேட்டாள். 

சேதுபதி சிரித்துக் கொண்டே சொன்னார்!

“தங்கள் கேள்விக்கு ஒரே வார்த்தையில் பதில் கூறிவிட முடியாது. ஆனாலும் சுருக்கமாகச் சொல்கிறேன். எறும்புப் புற்றைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அதில் கோடிக் கணக்கான எறும்புகள் எவ்வளவு ஒழுங்காகச் சண்டை சச்சரவில்லாமல் தங்கள் காரியங்களைச் செவ்வனே நடத்துகின்றன! அவற்றுக்கு மகாத்மாக்களோ, ஞானிகளோ யாரேனும் உபதேசம் செய்கிறார்களா? இந்த உலகம் பெரிய எறும்புப் புற்றுதான். இதில் நாம் அனைவரும் எறும்புகள்போல் வாழ்க்கையைச் சண்டை சச்சரவின்றி ஒழுங்காக நடத்தினால், அணுக்குண்டு, யூத்தம் எதுவுமே இருக்காது. நமக்குள் தத்துவங்களும் தலைவர்களும் உள்ளவரை சண்டையும் சச்சரவும் இருந்து கொண்டுதான் இருக்கும். பகுத்தறியும் சக்தியோ, தலைமையோ தத்துவங்களோ இல்லாத எறும்புகளையும் பட்சி ஜாலங்களையும் பாருங்கள். எவ்வளவு ஒற்றுமையாகச் சண்டை சச்சரவின்றி வாழ்கின்றன…” 

சேதுபதியின் பதில் பார்வதியை வியப்பில் ஆழ்த்திவிட்டது. 

‘அடாடா! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு தெளிவாக விளக்கி விட்டார்!’- அவளுடைய வியப்புத் தீரு முன்னரே, சேதுபதி இன்னொரு முறையில் அவள் கேள்விக்குப் பதில் அளித்தார். 

“மனிதன் உள்ளத்தில் ஓர் ஆசை உண்டாகிறது. அதைத் தீர்த்துக் கொண்டால் பிறகு சுகமாக இருக்கலாம் என்று எண்ணுகிறான். அதற்காகப் படாத பாடெல்லாம் படுகிறான். ஆனால் ஆசையின் படிகளுக்கோ ஒரு முடிவே இல்லை” 

எல்லாமே விளங்கிவிட்டது போல் தன்னுடைய சந்தேகங்கள் அனைத்துக்குமே விடை கிடைத்துவிட்டது போல் நிறைவு ஏற்பட்டது அவளுக்கு. 

எப்படியும் தன் எண்ணத்தை – நீண்ட நாளைய விருப்பத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்த பார்வதி, அவருடைய பேச்சில் மயங்கி தன்னை மறந்தவளாய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றவளாய் உட்கார்ந்திருந்தாள். 

டெலிபோன் மணி ஒலித்தது. சேதுபதி ரிஸீவரை எடுத்துப் பேசினார். அந்தக் குழலில் வந்த செய்தியைக் கேட்டதும் அவர் முகம் மாற்றமடைந்ததைப் பார்வதி கவனிக்தாள். 

“என்ன, பஞ்சுத் தொழிற்சாலையில் தீயா? இரண்டு லட்சமா? உயிர்ச்சேதம் ஒன்றுமில்லையே?” என்று கேட்ட சேதுபதி ரிஸிவரைக் கீழே வைத்துவிட்டு, “நல்ல வேளை! உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லையாம்! இரண்டு லட்சம் ரூபாய் சேதமாம்! பரவாயில்லை; இன்ஷூர் செய்யப்பட்டிருக்கிறது…” என்று சர்வ சாதாரணமாகக் கூறினார். 

தீ என்ற சொல் கேட்டுத் துணுக்குற்ற பார்வதி, “தீயா? யாருடைய பஞ்சாலையில்?” என்று விசாரித்தாள். 

“என்னுடைய பஞ்சாலையில்தான்” என்றார் சேதுபதி மிக அமைதியாக. 

இரண்டு லட்சம் என்ற வார்த்தை அவரை அசைக்கவில்லை. ‘உயிர்ச் சேதம் உண்டா?’ என்றுதான் விசாரித் தார். 

உயிரின் மதிப்புக்கும் பொருளின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பொருள் நஷ்டத்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை. 

பார்வதி சிரித்தாள். 

அதைக் கண்ட சேதுபதி அவள் சிரிப்பதன் காரணத்தைப் புரிந்துகொண்டு புரியாதவர் போல், “ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார். 

“எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பஞ்சாலையே தீப்பற்றி எரிந்து போய்விட்டது என்று அறிந்தும் தாங்கள் கொஞ்சம்கூடப் பரபரப்படையவில்லை. இரண்டு லட்சம் நஷ்டம் என்று தெரிந்தும் சர்வ அலட்சியமாக ‘இன்ஷூர் செய்யப்பட்டிருக்கிறது…’ என்று கூறிப் பேசாமலிருந்து விட்டீர்களே! அந்த நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தது என்பதால்தானே, இல்லையா?” என்று கேட்டாள். 

“இல்லை; நஷ்டஈடு கொடுக்க வேண்டிய அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனியும் என்னுடையதுதான்” என்றார் சேதுபதி. 

பார்வதி திகைத்தாள். 

“ஒரு பஞ்சாலை தீப்பிடித்து எரிந்து போய்விட்டதென்றால், அந்த நஷ்டத்தைத் தேசிய நஷ்டம் என்றுதான் கூற வேண்டும். இந்தத் தேசத்தின் உற்பத்தியில் ஒரு சிறிதளவு நஷ்டமாகிவிட்டது என்பதுதான் அதன் பொருள். பஞ்சாலைக்கோ இன்ஷூரன்ஸ் கம்பனிக்கோ நஷ்டமாகாது” என்றார் சேதுபதி. 

பார்வதி திகைப்புடன் அவரைப் பார்த்தாள். 

“உங்கள் திகைப்பு எனக்குப் புரிகிறது. அதாவது, இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம் தானே? அந்த இன்ஷூரன்ஸ் கம்பெனி எனக்குச் சொந்தமாயிருந்தும் அந்த நஷ்டத்தை நான் பெரிதாகக் கருதவில்லையே என்றுதானே யோசிக்கிறீர்கள்?” என்றார் சேதுபதி. 

பார்வதி தலையசைத்தாள். 

“அதைத்தான் நான் இல்லை என்கிறேன். பஞ்சாலைக்கு நஷ்டமில்லை என்பதைத் தாங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் இல்லை என்று நான் கூறுகிறேன். அது எப்படி என்பதையும் சொல்கிறேன். எல்லா வியாபாரங்களையும் போல் இன்ஷூரன்ஸ் கம்பெனியும் ஒரு வியாபாரம். ஒரு வியாபாரம் என்றால், அதற்கு வரவு – செலவு இரண்டும் உண்டு. நான் ஒரு தொழிற்சாலை நடத்துகிறேன். அந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வது எனக்குச் செலவு. அவற்றை விற்பனை செய்வது வரவு இல்லையா..” 

தலையசைத்தாள் பார்வதி. 

“அதைப் போலவே இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கும் வரவு செலவுக் கணக்கு உண்டு. இன்ஷூர் செய்துகொள்ளுகிறவர்கள் கட்டும் பாலிஸிப் பணமெல்லாம் வரவு என்றால், இம்மாதிரிக் கொடுக்கப்படும் நஷ்ட ஈடுகள் எல்லாம் அவர்களுடைய செலவாகும். நஷ்டஈடு கொடுத்ததுபோக, மிச்சமிருப்பது லாபம். இப்போது புரிகிறதா? இது இன்ஷூரன்ஸ் கம்பெனியின் செலவுக் கணக்கில் தான் வரும். நஷ்டக் கணக்கில் வராது. அதனால்தான் இந்த நஷ்டத்தை தேசிய நஷ்டம் என்று மட்டும் கூறுகிறேன்.” 

இருட்டறைக்குள் மின் விளக்கைப் போட்டதும், பளிச் சென்று ஒளி தோன்றி, இருள் முழுவதும் விலகி விடுமே அப்படி இருந்தது பார்வதிக்கு. 

வியப்போடு சேதுபதியையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். அவள் பேசாததை யெல்லாம் அவள் கண்கள் பேசின. அந்தப் பார்வையில் ஏதேதோ பொருள்கள் பொதிந்து கிடந்தன. 

பார்வையின் முன்னால் ஞான விளக்காக ஓங்கி உயர்ந்து வானை முட்டுவது போன்ற விசுவரூபம் எடுத்துக் காட்சி அளித்தார் சேதுபதி. அவரைப்பற்றி அவள் எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாள். இன்று அந்த உயர்வுக்கெல்லாம் உயர்வாக இமயமாக வளர்ந்து காட்சி அளித்தார் அவர். அந்த இமயமலைக்கு முன்னால் அவள் ஒரு சிறு குன்று! சின்னஞ்சிறு குன்று! அப்படித்தான் எண்ணினாள் அவள். 

“அப்பா!” என்று அழைத்துக்கொண்டே அறைக்குள் நுழைந்த பாரதியின் குரல், பிரன்ஸிபாலை விழிப்புறச் செய்தது. 

இரண்டு கோப்பைகளில் காப்பியைக் கொண்டுவந்து வைத்த பாரதி, பிரின்ஸிபாலைப் பார்த்து, “”ப்ளீஸ்…” என்றாள். 

“உனக்கு இன்று பர்த் டே அல்லவா? மிக்க மகிழ்ச்சி; இப்போது உன் வயது என்ன?” என்று கேட்டாள் பார்வதி. 

“இருபது” என்றாள் பாரதி. 

“ஓ, டீன் ஏஜ் முடிந்துவிட்டதென்று சொல்?” சிரித்துக் கொண்டே கூறினாள் பார்வதி. 

பதில் கூறாமல் வெட்கத்துடன் நின்ற பாரதி, “அப்பா, நான் கொஞ்சம் வெளியே போய் என் பிரண்டைப் பார்த்து விட்டு வரப்போகிறேன்” என்று தன் தந்தையிடம் ஆங்கிலத்திலேயே பேசி உத்தரவு கேட்டாள். 

‘அந்த பிரண்ட் கர்ல் பிரண்டா, பாய் பிரண்டா” என்று சேதுபதி கேட்கவில்லை. அப்போது இருந்த மன நிலையில் அவருக்கு அதெல்லாம் கேட்கத் தோன்றவில்லை. 

பார்வதிக்குத் தன்னுடைய ‘டீன் ஏஜ்’ பருவம் பற்றிய நினைவு தோன்றிவிடவே, அந்தச் சிந்தனையில் மூழ்கிப் போனாள். 

“ம்… இளமைப் பருவத்துக்குள்ள மகிழ்ச்சியும் உற்சாகமுமே தனி!” என்று பெருமூச்சுடன் கூறினாள் பார்வதி. 

“ஆமாம்; குழந்தைப் பிராயம், வாலிபப் பருவம் என்பதெல்லாம் ஒன் வே டிராபிக், போன்றது. ஒரு வழிப் பாலத்தில் ஒரு முறை போகத்தான் முடியுமே தவிர, திரும்பி வர முடியாது. திரும்பி அந்த வழியில் செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டாலும் முடியாது. திரும்பி வருவதற்கு மனம் இருக்கலாம். ஆனால் செயல்படுத்த முடியாது!” என்றார் சேதுபதி. 

இப்படிச் சொன்னவர் சட்டென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போல் பேச்சை நிறுத்திக் கொண்டு, ‘இந்த உதாரணத்தை ஏன் சொன்னோம்’ என்று எண்ணி மனத்திற்குள்ளாகவே வருத்தப்பட்டார். 

அவர் கூறிய வார்த்தைகள் பார்வதிக்குச் ‘சுருக்’ கென்றன. 

‘உனக்கு வயதாகிவிட்டது. இளமைப் பருவத்தைக் கடந்துவிட்டாய். மீண்டும் அதை அடைய முடியாது. ஒரு வழிப் பாலத்தில் மீண்டும் செல்ல ஆசைப்படாதே!’ என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார் என்றே தோன்றியது அவளுக்கு. 

அதே சமயத்தில் அவர், ‘நானே அந்த ஒரு வழிப் பாலத்தில் திரும்பிச் செல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு மட்டும் வயதாகவில்லையா? என் உள்ளத்தில் புகுந்திருக்கும் ஆசைக்கும் அந்தரங்கமாக ஊசலாடும் உணர்வுக்கும் என்ன பொருள்? ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல விரும்புகிறேன் என்பதுதானே பொருள்?’ என்று எண்ணிக் கொண்டார். 

பார்வதியின் அறிவு குழம்பியது. உள்ளத்தில் ஆசைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தீயைச் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நெருப்பணைக்கும் இயந்திரம் ஒன்று வந்து அணைத்து விட்டதைப்போல் இருந்தது சேதுபதியின் பதில். நான் ஒரு வழிப் பாதையில் திரும்பிச் செல்ல ஆசைப் படுகிறேன் என்பதைச் சேதுபதி அறிந்து கொண்டுதான் இம்மாதிரி கூறி எச்சரிக்கிறாரோ? சொல்ல வேண்டும், சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த தன் எண்ணத்தை, ஆசையை அடக்கிக் கொண்டவளாய் கலங்கிய உள்ளத்துடன் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முயன்றாள் பார்வதி. 

ஹால் கடிகாரத்தில் மணி ‘டங்’ என்று ஒரே முறை அடித்து மணி ஏழரை என்பதை அறிவித்தது. 

கை கூப்பி வணங்கியபடியே, “தங்களிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். நேரம் போனதே தெரியவில்லை…மன்னிக்கவும்” என்று விடை பெற்றுக்கொண்ட பார்வதி, குமுறி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டவளாய் பாறையாகக் கனக்கும் இதயத்துடன் போய்க் காரில் ஏறிக் கொண்டாள். 

காரின் வேகத்தில் உள்ளே புகுந்து வந்த காற்று, பார்வதியின் மனப் புழுக்கத்துக்குச் சற்று இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்றவள், நேராக மாடி அறைக்குப் போய்ப் பால்கனியின் வழியாகச் சற்று நேரம் தெளிந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது நிர்மலமாக இருந்தது. அவளுக்கு எதிலுமே மனம் ஓடவில்லை. மனச்சுமை அவளை ஆழ்த்தியது. சோர்வும் விரக்தியும் அமைதியின்மையும் அவள் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமிழக்கச் செய்திருந்தன. நாற்காலியில் அமர்ந்தவள். கண்களை மூடியவாறே மேஜை மீதே கவிழ்ந்து கொண்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் அப்படியே அயர்ந்து விட்டாள்.

– தொடரும்…

– விசிறி வாழை, 12வது பதிப்பு: 1997, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *