என்னைப் பொறுத்தவரையில் வாழ்வில் என்றுமே மீண்டும் கிடைக்காத ஒரு வாழ்க்கை அனுபவம்தான் பாடசாலைப் பருவமும், பல்கலைக்கழக வாழ்க்கையும்.
பாடசாலை வாழ்வு அநேகமாக எல்லாருக்கும் இருக்கும். ஆனால் பல்கலைக்கழக வாழ்வு மிகச் சிலருக்குத்தான் கிட்டும். அத்தகைய பாக்கியசாலிகளில் இருவர்தான் வசந்தியும் ஆனந்தனும்.
இவர்கள் இருவரும் கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் தான் முதல் முதல் சந்தித்தார்கள். ஆனந்தன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன். வசந்தி விஞ்ஞானம் முதலாம் வருடம். இப்போதெல்லாம் இந்த “ராக்கிங்’ என்ற விடயம் மிகக் கடுமையாக இல்லாவிட்டாலும் அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய ராக்கிங்கின் போது வசந்தி சில 2 ஆம் வருட மாணவிகளிடம் சிக்கி விழித்துக் கொண்டிருந்தாள். இந்த சம்பவத்தைப் பார்த்தபோது என்னவோ ஏதோ தெரியவில்லை. வசந்தி மீது ஆனந்தனுக்கு அனுதாபம் ஏற்பட்டது. அவளைக் காப்பாற்ற நினைத்த ஆனந்தன் அவளுடன்தான் பேச வேண்டுமெனக் கூறி அவளை அப்பால் அழைத்துச் சென்றான்.
அவனுடன் கதைக்க வசந்திக்கு பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவன் அவளது பேர், ஊர் மற்றும் சில சாதாரண விடயங்களை பேசிவிட்டு கெம்பசுக்குள் இப்படி தனியாக அலைய வேண்டாமென எச்சரித்து விட்டு சென்றுவிட்டான். அவனுக்கு நன்றி கூறினாள் வசந்தி. அதன் பின்னரும் சில சமயம் சந்தித்துக் கொண்டவர்கள் ஏற்கனவே பழக்கத்தில் “”ஹலோ” சொல்லிக் கொண்டனர். இவர்களது “ஹலோ’ விரைவில் நட்பாக மாறி பின் காதலாக மலர்ந்தது.
ஐந்து வருட காலத்தில் அவர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தொழிலும் செய்யத் தொடங்கி விட்டார்கள். அதன் பின்னர்தான் தம் காதலையும், திருமணம் செய்யப் போவதாகவும் பெற்றோரிடம் கூறினர். ஆனந்தன் கொழும்பையும் வசந்தி மட்டக்களப்பையும் சேர்ந்தவர்கள். வசந்தியின் பெற்றோர் இதனை விரும்பாவிட்டாலும் மணமகன் டொக்டர் என்ற படியால் பின் சம்மதித்தனர். இரு வீட்டாரும் கூடிப் பேசி தினமும் குறித்தனர். விவாகம் நிலை பெறுவதற்கு சில தினங்களே இருந்தன. திருமணத்தை அவர்கள் வழக்கப்படி பெண் வீட்டினரே மட்டக்களப்பில் நடத்துவதென தீர்மானித்திருந்தனர்.
இந்த சில வாரங்களில் திருமண வீட்டார் இருவருமே திருமண ஏற்பாடுகள் செய்து உழைத்துக் களைத்துப் போயிருந்தார்கள். இன்னும் மூன்று தினங்களே மீதமிருந்தன. ஆனந்தனைப் பொறுத்த அளவில் அவனது நண்பர்கள் சிலர் மிக உதவியாக இருந்தனர்.
கடந்த மூன்று நாட்களாகவே அவர்கள் இரவில் கொஞ்சமும் தூக்கமின்றி உழைத்தனர். மறுநாள் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரையில் இருந்த சுபமுகூர்த்தத்தில் அவர்கள் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது.
வெள்ளனவே அவர்கள் மட்டக்களப்பை சென்று அடைந்துவிட வேண்டுமென்று முனைந்த போதும் பல்வேறு இறுதி நேர வேலைகள் அவர்கள் பிரயாணத்தைத் தாமதப்படுத்திய வண்ணமே இருந்தது.
இறுதியில் இரவு சுமார் 2 மணியளவிலேயே அவர்கள் இரண்டு மோட்டார் வண்டிகளில் புறப்பட்டனர். குடும்பத்தினர் ஒரு வாகனத்திலும் மணமகனான ஆனந்தனும் மற்றும் அவனது நண்பர்கள் சிலர் மற்றுமொரு வாகனத்திலும் புறப்பட்டனர். ஆனந்தன் அவனது மிக நெருங்கிய நண்பனான ரவிச்சந்திரன் என்ற ரவியின் வாகனத்தில் பிரயாணம் செய்தான். வாகனம் ரவியினுடையதால் அவனே வாகனத்தை ஓட்டிச் சென்றான். அவனும் கூட கடந்த சில தினங்களாகவே தூங்காமல்
கொள்ளாமல் உழைத்தவன் தான். அடுத்த நாள் மிக அதிகாலையில் அவர்கள் மட்டக்களப்பை அண்மித்துக் கொண்டிருந்தனர்
ஆனந்தன் பிரயாணம் செய்த காரில் இருந்தவர்களில் வாகனத்தை ஓட்டிய ரவியைத் தவிர எல்லோரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். ரவிக்கும் கூட தூங்கி விடுவோமோ என்ற சந்தேகம் இருந்தது. எனினும் இன்னும் கொஞ்ச தூரம் தானே என்று வாகனத்தின் வேகத்தை அதிகப்படுத்தினான். சில கணங்களில் தடால் என பெரிய சத்தம் கேட்டது. ரவி ஓட்டி வந்த கார்முன்னே காணப்பட்ட பெரிய வாகை மரம் ஒன்றில் மோதி பேரிருள் சூழ்ந்திருந்தது. ரவிக்கு அக்கணத்தில் நித்திரை ஏற்பட்டு தன்னையறியாமலேயே வாகனத்தை ஒட்டி விட்டான்.
ஆனந்தனையும் மற்றவர்களையும் மற்ற வாகனத்தில் வந்தவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்தனர். ரவியின் நிலை மிகக் கவலைக்கிடமாக இருந்தது. ஆனந்தனின் காலில் பலமாக அடிப்பட்டிருந்தது. அவ்விருவரையும் உடனே கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யநேரிட்டது. ஆனந்தயினதும் வசந்தியினதும் கனவுகள் நிமிடங்களில் கலைந்து போயின. இந்த ஐந்து வருடங்களில் வாழ்க்கை தொடர்பான எத்தனை திட்டங்களை தீட்டியிருந்தனர்.
குழந்தை பெறுவது அவர்களுககு என்னை பெயர் வைப்பது, தமக்கென அழகிய வீடொன்றை அமைப்பது…. எல்லாமே காற்றில் கறைந்து போய்விட்டன. ஒரு மிகச் சிறிய தவறு தான் இதற்குக் காரணம்.
சில தினங்களாகவே நித்திரை விழித்து வேலை செய்த ரவிக்குப் பதில் வேறொருவராவது வாகனத்தை ஓட்டியிருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம். இது ஒருவரது உயிருக்கு மட்டுமல்ல, வாகனத்தில் பயணம் செய்த அனைவருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது.
ஆனந்தன் வருவான் வருவான் எனக் காத்திருந்த வசந்திக்கு ஆனந்தனின் நிலை தெரிந்தபோது அவள் கண்ணீர்க் கடலில் மூழ்கிப் போனாள்.