(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வாசுதேவன் ஆபீஸிலிருந்து வந்ததும் முக்கியமாகக் கவனிப்பது ரோஜாச் செடியையும், அதில் எத்தனை அரும்புகள் இருக்கின்றன என்பதையுந்தான். தெருக் கோடியை அடையும்போதே செழித்து வளர்ந்திருக்கும் அந்தச் செடியைக் கண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டே வருவான். அவன் இவ்வளவு அரும்பாடு பட்டு வளர்த்த செடி தன் போக்காகப் பக்கத்து வீட்டு இரும்புக் கிராதிமீது படர்ந்து செழித்திருந்தது. அந்த வீட்டில் வெகுகாலமாக யாரும் குடி இல்லை. வழக்கும் வியாஜ்யமுமாய் அந்த வீடு கவனிப்பாரற்றுக் கிடந்தது. வாசுதேவனின் ரோஜாச் செடியும் தன் யதேச்சாதிகாரத்தைச் செலுத்துவதற்கு இது உதவியாக இருந்தது.
காலையில் செடியில் மலர்ந்திருந்த புஷ்பங்களைப் பறித்துக்கொண்டு, மறுதினம் மலரப் போகும் அரும்புகளை எண்ணி வைத்துவிட்டு ஆபீஸுக்குப் போயிருந்தான். மாலையில் திரும்பி வந்தபோது பக்கத்து வீடு திறந்து கிடந்தது. அதை அவ்வளவாகக் கவனியாமல் பாதி மலர்ந்து நகைபுரியும் ரோஜா மொட்டுக்களைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான் அவன். சிவந்த ரோஜா மொட்டுக்களின் நடுவே வெள்ளை வெளேரென்று இன்னொரு ஜாதிப் புஷ்பங்கள் தெரிவது என்ன அதிசயம்? கவனித்துப் பார்த்தபோது இளங் கொடிகளில் அப்பொழுதுதான் மலர்ந்த முல்லை மலர்கள் காணப்பட்டன. அந்தப் பொல்லாத முல்லைச் செடி இவ்வளவு சடுதியில் அவன் அருமைச் செடியைத் தழுவிக் கொள்ள ஆரம்பித்து விட்டது!
முல்லைச் செடி மதில் சுவருக்கு அப்பால் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பூந்தொட்டியிலிருந்து முளைத்திருந்தது. இரும்புக் கம்பி வழியாக வாசுதேவன் அந்தத் தொட்டியைக் கவனித்துச் சிந்தனையில் ஆழ்ந்தான். ரோஜாச் செடியைச் சுற்றிக் கொண்டு அதை வளர விடாமல் தடுக்க முல்லைச் செடித் தொட்டியை யாரோ வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தான். கையில் பாதி மலர்ந்த புஷ்பம் ஒன்றைப் பறித்து எடுத்துக்கொண்டு உள்ளே போய், அதைப் பூ ஜாடியில் வைத்துவிட்டு, ஈஸி சேரில் சாய்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்தான் அவன்.
பக்கத்து வீட்டு அறையிலிருந்து ஒரு பெண் உருவம் குதித்து ஓடி வந்தது. ஓகோ! அடுத்த வீட்டில் யாரோ குடி வந்திருக்கிறார்கள் போல் இருக்கிறது என்று நினைத்தான் வாசு. குறும்பு தவழச் சிரித்துக்கொண்டே முல்லைப் புஷ்பங்களைப் பறிக்க அந்தப் பெண் ஓடி வந்தாள். அவள் புஷ்பங்களைப் பறிக்கும்போது சிவப்பு ரோஜா அவள் திருஷ்டியைக் கவர்ந்தது. சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே அதை இலையோடு திருகி எடுத்துத் தலையில் செருகிக்கொண்டாள். கருங் கூந்தலுக்கு அந்தச் சிவப்பு நிறம் பொருத்தமாய் இருந்தது. வாசுதேவன் இதையெல்லாம் பார்த்துப் பல்லைக் கடித்துக் கொண்டான். முன் பின் தெரியாத இடத்திலிருந்து பூவைத் திருகி வைத்துக்கொண்டு போக எவ்வளவு துணிச்சல் இருக்கவேண்டும்? முல்லைப் புஷ்பங்களை மடியில் வைத்துக்கொண்டு உள்ளே ஓடிப் போய்விட்டாள் அவள். வாசுதேவன் வெளியே வந்து மெதுவாக முல்லைக் கொடிகளை ஜாக்கிரதையாக ரோஜாச் செடியை விட்டுப் பிரித்து எடுத்துத் தொட்டியில் விட்டுவிட்டான். அவள் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
வாசுதேவன் அவள் நிற்பதைக் கவனிக்கவில்லை. அன்றைத் தினத்திலிருந்து அவனைக் கவலை பிடித்துக் கொண்டது. தான் ரோஜாவை வளர்க்கப் பகீரதப் பிரயத்தனம் செய்ததும், அது புஷ்பிக்கப் போகிறதா என்று ஏங்கினதும் அவனுக்கல்லவா தெரியும்? மனத்துக்குப் பிடித்த வஸ்துவை, ‘இந்தா எடுத்துக்கொண்டு போ’ என்று யார் கொடுத்து விடுகிறார்கள்?
காலையில் எழுந்தவுடன் செடியண்டை போய்ப் பார்த்தான். என்ன ஆச்சரியம்? முல்லைக் கொடிகள் முன்னை விட அதிகமாக ரோஜாவின் மேல் படர்ந்திருந்தன. அவன் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தான். ‘சீ! ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா?’ திரும்பவும் கொடிகளைத் தொட்டியிலேயே எடுத்து விட்டான். அவள் ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்பொழுதும் அவன் அவளைக் கவனிக்கவில்லை. பிறகு அவசரமாக ஆபீஸுக்குப் போய்விட்டான்.
பத்துத் தினங்கள்வரையில் இவன் முல்லைக் கொடிகளைப் பிரித்து விடுவதும், அவள் அதை மறுபடியும் படர விடுவதுமாகப் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். கேவலம் இதை ஒரு பொருட்டாக எண்ணி அவளுடன் சண்டை போடுவதும் அழகல்ல என்று தோன்றியது அவனுக்கு. பெரியவர்களிடம் சொல்லுவதைவிட அவளுக்கே தனியாய் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று அவன் தீர்மானித்துக்கொண்டான். ஒரு ரோஜாச் செடியில் முள் நிறைந்த கிளைகளை முல்லைச் செடியோடு சேர்த்துக் கட்டிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பொல்லாத பெண் வழக்கம் போல் வாசுதேவனின் புஷ்பங்களைத் திருட வந்தாள். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு அவசர அவசரமாகப் பறிக்க ஆரம்பித்தாள். பாவம்! ஐந்தாறு முட்கள் சேர்ந்தாற்போல் விரல்களில் கீறி விட்டன. ரத்தம் குபுகுபு வென்று வந்தது. அவள் முகம் சிவந்தது. கையிலிருந்த புஷ்பங்களை வீசி எறிந்துவிட்டு விக்கி விக்கி அழுது கொண்டே உள்ளே போனாள். வாசுதேவன் மனத்திற் குள் சொல்லிக்கொண்டான்: “பக்கத்து வீட்டில் பாடு பட்டுச் செடி வளர்க்கிறது ஒருத்தன். இவள் ஆடிக் கொண்டே வந்து பறித்துக்கொண்டு போகிறது! வேண்டும் நன்றாய்” என்று. இப்படி இவன் நினைத்துக்கொண்டு இருந்தபோது அடுத்த வீட்டில் யாரோ இரையும் சப்தம் கேட் து. “ஆமாம், உனக்கு எத்தனை தடவை சொல்லுகிறதடி ருக்மிணி? யாரோ எவனோ? அங்கெல்லாம் வம்புக்குப் போகாதே என்று?” என்று அந்தப் பெண்ணின் தாயார் கத்தினாள். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து, “போடீ! அழுதுகொண்டு நிற்கிறாய்” என்று மேலும் கோபித்துக்கொண்டாள். வாசுதேவன் மனத்தை என்னவோ செய்தது. ‘பாவம்! ரொம்பக் காயம் பட்டு விட்டதோ என்னவோ? என்ன முட்டாள் காரியம் செய்தோம்?’ என்றெல்லாம் நினைத்துக்கொண்டான்.
வாசுதேவன் இயற்கை ரஸிகன். கண்ணுக்கு இனிமை தரும் பசுமையைப் போற்றி வளர்ப்பான். அவன் இருந்த வீடு சிறியதாய் இருந்தாலும் சுற்றிலும் செடிகள் வைத்திருந்தான். ஒழிந்த வேளைகளில் தோட்ட வேலை செய்துகொண்டே இருப்பான். செடியிலிருந்து அநாவசிமாக ஓர் இலையை யாராவது பறித்துவிட்டாலும் கோபம் வந்துவிடும்.
மேஜைமேல் வைத்திருந்த பூஜாடியில் புஷ்பங்கள் குலுங்கின. நாளையிலிருந்து இன்னும் வேண்டிய புஷ்பங்கள் ஜாடியில் குலுங்கும். ருக்மிணி கையில்தான் காயமாயிற்றே. அந்த நினைவில் இருந்தபோது, ருக்மிணி தயங்கியபடியே உள்ளே வந்தாள். அவன் ஆச்சரியத்தால் அவளை உ ற்றுப் பார்த்தான். அவள் தலையைக் குனிந்து கொண்டே, “இனிமேல் உங்கள் ரோஜாச் செடியின் ஜோலிக்கு நான் வரப்போகிறதில்லை. இத்தனை நாள் செய்த தப்புக்கு என்னை மன்னிக்க வேண்டும்” என்று இரண்டு கைகளையும் கூப்பினாள். கூப்பிய கரம் ஒன்றின் விரல்களில் துணி சுற்றப்பட்டிருந்தது. அதன்மேல் செவேலென்று ரத்தக் கறை படிந்திருந்தது. வாசுதேவன் திடுக்கிட்டான்.
“ஐயையோ! ரொம்பவும் கீறிவிட்டதா என்ன?” என்றான். ருக்மிணி சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள்.
“இல்லை, இல்லை, நான் செய்த தப்புக்குச் சரியான தண்டனைதான்” என்றாள்.
“நீ என்ன அப்படித் தப்புச் செய்துவிட்டாய்?’ என்று அவளை உருக்கத்தோடு கேட்டான்.
“நீங்கள் வேர்வை ஒழுகக் கொத்திப் பயிராக்கிய செடியிலிருந்த புஷ்பங்களை யெல்லாம் பறித்துக்கொண்டேனோ, இல்லையோ?”
“அதனால் என்ன?”
“அது தவறு என்று நேற்றுத்தான் தெரிந்தது.”
“ரொம்ப வலிக்கிறதா? ரத்தம் கசிந்துகொண்டே இருக்கிறதே.”
“வலித்தால் வலித்துவிட்டுப் போகட்டும்; உங்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.”
“ஐயோ! நான் அல்லவா உன்னை மன்னிப்புக் கேட்கவேண்டும்? நாளைத் தினமே ரோஜாச் செடியைப் பிடுங்கி எறிந்துவிடுகிறேன்.”
ருக்மிணி புன்னகையுடன் தலையை ஆட்டினாள்.
“வேண்டாம், வேண்டாம். அந்தச் சிவப்பு நிறம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.”
“நீதான் செடிப் பக்கமே வரப்போகிறதில்லை என்கிறாயே? செடி இருந்து என்ன பயன்?”
“தொலைவில் இருந்து கண்ணால் பார்த்துக் களித்தால் போகிறது. செடியைமட்டும் பிடுங்கி எறிந்துவிடாதீர்கள ” என்று கண்ணைச் சிமிட்டியவாறு ருக்மிணி சொல்லிக்கொண்டே ஓடிப் போய்விட்டாள்.
சில தினங்களுக்கு அப்புறம் ருக்மிணியின் தகப்பனாரை அந்த ஊரைவிட்டு மாற்றிவிட்டார்கள். வாசுதேவன் ஆபீஸிலிருந்து வருவதற்குள் அவர்கள் போய்விட்டார்கள். ருக்மிணியை அன்றைத் தினத்திற்கு அப்புறம் அவன் காணவே இல்லை. அவனுக்குத் தெரியாமல் மறைவில் இருந்தே ரோஜாவைப் பார்த்துக் களித்தாளா என்பதும் நமக்குத் தெரியாது. நாளுக்கு நாள் ரோஜா செழித்து அபரிமிதமாகப் புஷ்பிக்க ஆரம்பித்தது. வாசுதேவனுக்கு அலுத்துவிட்டது. என்னதான் ரஸிகனானாலும் பூவை என்ன பண்ண முடியும்? புஷ்பங்கள் செடியோடு வாடிப் போவதை அறிந்த அவன் மனம் துக்கப் பட்டது. ‘அந்தப் பெண் புஷ்பங்களைப் பறித்தபோது சண்டைக்குத் தயாராக நின்றோமே. இப்பொழுது அவைகள் வீணாகப் போகின்றனவே. மலர்கள் செடியிலேயே இருந்துவிட்டால் என்ன அழகு சொட்டிவிடுகிறது? ருக்மிணி தலையில் செண்டாய் வைத்துக்கொண்டால் எவ்வளவு அழகாக இருக்கும்? அவள்தான் சொல்லாமல் போய்விட்டாளே. திரும்பவும் அவளைப் பார்க்கப் போகிறோமா?’ என்று வருத்தப்பட்டான்.
தகப்பனாரிடமிருந்து வாசுதேவனுக்கு ஒரு கடிதம் வந்தது. “மதுராந்தகத்தில் நாராயணையர் அகத்தில் ஒரு பெண் இருக்கிறது. பெண் உன் மனத்துக்குப் பிடித்தால் நான் நேராக வந்து ஏற்பாடு செய்கிறேன்” என்று எழுதியிருந்தார். வாசுதேவன் மதுராந்தகம் போனான். பெண்ணின் தகப்பனார் அவனுக்குப் புதியவராகத்தான் இருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் பெண் வந்தாள் அவளைப் பார்த்துப் பிரமித்தான் வாசுதேவன். அவளும் அவனைப் பார்த்துத் திகைத்தாள். பெண்ணின் தகப்பனாரிடம், ‘சர்வ சம்மதம்’ என்று சொல்லிவிட்டு, திரும்பவும் தன் தகப்பனாருடன் வருவதாகச் சொல்லிவிட்டு வந்தான்.
தகப்பனாருடன் திரும்பிப் போனபோது, ரகசியமாய் ரோஜாவும் முல்லையும் கலந்த மாலை ஒன்றை மறக்காமல் எடுத்துக்கொண்டு போனான். தகப்பனார் பெண்ணைப் பார்த்தார். “அவர்கள் இருவரும் ஏதாவது பேசிக் கொள்வதானால் பேசிக்கொள்ளட்டும். நாம் இன்னோர் அறைக்குப் போவோம்” என்று அழைத்துக்கொண்டு போய்விட்டார். வாசுதேவன் ருக்மிணியைப் பார்த்தான்.
“இந்தா! ரோஜாமாலை. உனக்கு ரொம்பப் பிடிக்குமே” என்று அதை அவளிடம் நீட்டினான்.
“இதில்கூட முள் இருக்குமா?” என்று குறும்பாகக் கேட்டாள் ருக்மிணி.
“சே, சே, வாங்கிக் கொள்!” என்று கெஞ்சினான் அவன்.
“நீங்கள் அன்று செய்ததை மறந்து போய்விட்டேன் என்று. நினைத்துக்கொண்டீர்களா?”
“அதற்குப் பிரதிபலனாக என்னையே உனக்கு அர்ப்பணம் செய்யப் போகிறேனே! கைக்காயம் ஆற அதிக நாள் பிடித்ததா? எங்கே,விரலைக் காட்டு பார்ப்போம்?” என்று வாசுதேவன் அவள் கரத்தைப் பற்றி ரோஜா மாலையைக் கழுத்தில் போட்டான்.
எதற்கு எது பிரதிபலன் என்று யோசித்துக் கொண்டே ருக்மிணி முல்லை நகை பூத்தாள்.
– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.