பகுத்தறிவு மனைவி தொகுத்தறியும் கணவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 8, 2022
பார்வையிட்டோர்: 4,976 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரே கோத்திரத்தில் உதித்தவளையும், தேகத்தில் கொடிய நோயுடையவளையும், பழிமொழியுடைய குடும்பத்தில் பிறந்தவளையும், விரும்பத்தக்க பெருமை யில்லாத பெண்ணையும், பாம்பின் பெயரையும், பறவைகளின் பெயரையும், மலையின் பெயரையும், நட்சத்திரங்களின் பெயரையும் உடைய பெண்ணைத் திருமணம் செய்யலாகாது என்று இந்நாட்டுச் சருகு சாத்திரங்கள் கூறுகின்றன.

அத்தகைய சருகு சாத்திரங்களையும், சடங்குச் சிந்தனைகளையும், ஏற்றுக் கொள்ளாத நரிக்குடி நாராயணசாமியோ, பாம்பின் பெயரைக் கொண்ட ‘நாகம்மை’ என்பவளை இராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டவன்.

பாம்பின் பெயரைக் கொண்ட அவன் மனைவி அவனை எத்தனையோ முறை தீண்டியிருக்கிறாள்.. அவள் அவனைத் தீண்டிய போதெல்லாம் மஞ்சத்திற்குத்தான் சென்றிருக்கிறானேயன்றி, அவன் மருத்துவமனைக்குச் சென்றதில்லை.

அவன் அவளைப் பலமுறை அடித்திருக்கிறான். அவள் அவனிடம் அடிவாங்கிய போதெல்லாம், அவள் சிரித்ததுண்டே யன்றி, “ஐயோ! வலிக்கிறதே” என்று அழுததில்லை.

அவள் தீண்டியும் அவனுக்கு விஷமேறியதில்லை.

அவன் அடித்தும் அவளுக்கு வலித்ததில்லை.

உலகக் குத்துச்சண்டை வீரனாகிய முகமது அலியைப் போல் நரிக்குடி நாராயணசாமியும், ஆறடி ஐந்தங்குல உயரமும், ஆஜானுபாகுவான தோற்றமும் உடையவன்.

முகமது அலியின் மனைவி வெரோனிகாவைப் போல், அவன் மனைவி நாகம்மையும் ஆறடி உயரமும், அழகான தோற்றமும் உடைவள்.

அவளது தமிழ்முகம் ஒரு தாமரைப்பூ! அவளுடைய கன்னங்கள் பழகிக் கனிவதற்கு முன்பே பருவத்தால் கனிந்த மதுர மாங்கனிகள். மூடும் மேடுகளோ, குறிஞ்சி நிலத்தில் வளரும் கோங்கின் அரும்புகள். வீங்கி, இறுக்கமுற்றுப் பக்கத்தில் பருத்து மேலாடைக்குள் உறங்கும் மெல்லிய சதைப் பந்துகள்.

அவளுடைய நீள்விழிகள், நிலவானத்தின் இறக்குமதி! சேல் கெண்டைகள் போட்டுவைத்த சிறு சேமிப்பு! அவளது கருங்கூந்தலோ, அவசரத்தில் அவிழ்ந்து தொங்கும் இருண்ட மேகம்! வெளிச்சத்தைக் கண்டு விலகிச் செல்லாத விநோத இருட்டு!

அவள் ஒரு பகுத்தறிவு மனைவி.

அவன் ஒரு தொகுத்தறியும் கணவன்.

அன்றிரவு, நிலா முற்றத்தில் அவன் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவன் ஒரு கட்டிலில் அமர்ந்து, கூடலூர் வீரபத்திர படையாச்சி இயற்றிய ‘லாகிரிச்சிந்து’ என்னும் நூலைப் படித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன், அவளைப் பார்த்து இந்த நூற்றாண்டில், மதுவிலக்கைப்பற்றி முதன் முதலில்’ பாடல் பாடியவர் யார் தெரியுமா? என்று கேட்டான்.

“சிறுமணவூர் முனுசாமி முதலியார்” என்றாள் அவள்.

“இல்லை அல்லை, அவர் பாடுவதற்கு முன்பே அதாவது, 1903-ஆம் ஆண்டிலேயே கூடலூர் வீர பத்திர படையாச்சி என்பவர்தான் முதன் முதலாக மதுவிலக்கைப் பற்றிப் பாடல் பாடியவர்” என்றான் அவன்.

“மதுவிலக்கைப்பற்றி முதலில் யார் பாடியிருந்தாலென்ன? இந்நாட்டில் குடிகாரர்களின் தொகை இன்னும் குறையவில்லையே” என்றாள்.

“ஆமாம், நீ கூறுவதுபோல், குடிகாரர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் நம் நாட்டில் கூடுதலாகிக் கொண்டு வருகிறதே தவிர குறையவில்லை” என்றான்..

“இந்த நாட்டில் பாமர மக்கள் மட்டுமா குடிக்கிறார்கள்? நன்கு படித்தவர்களும் அல்லவா குடிக்கிறார்கள். இந்தக் காலத்தில்தான் இப்படியென்றால், அந்தக் காலத்தில் வாழ்ந்த பெரிய மனிதர்கள் சிலரும் இப்படித் தான் குடித்துக் கெட்டுப் போயிருக்கிறார்கள்” என்றாள்.

“ஆமாம் விஸ்வாமித்திரர் ஒருநாள் தம் சேனையோடு, வசிஷ்டர் ஆச்சிரமத்திற்குச் சென்றபோது வசிஷ்டர் விஸ்வாமித்திரருக்கும். அவரது சேனைகளுக்கும் விருந்து வைத்தாராம், அவ்விருந்தில் மதுவும் வழங்கப்பட்டதாம். இந்த நேரத்தில் மற்றொரு நிகழ்ச்சியும் என் நினைவுக்கு வருகிறது. திருக்குற்றாலத்தில் வாழ்ந்த தருமி என்னும் பார்ப்பனன் ஒருவன் வேசியர் வலையில் சிக்குண்டு, செல்வத்தையெல்லாம் இழந்து, தன் காமக் கிழத்தியிடம் குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமெனக் கேட்டானாம், அவளோ, தண்ணீருக்குப் பதிலாக அவனிடத்தில் மதுவைக் கொடுத்தாளாம்” என்றான் அவன்.

“இப்படிப்பட்ட வசிஷ்டர்களும், விசுவாமித்திரர்களும் தருமிகளும் பெருகிக் கொண்டிருந்தால் குடிப்பவர்களின் தொகை எங்கே குறையப் போகிறது? மது விலக்குக் கொள்கை தான் எங்கே வெற்றி பெறப் போகிறது?” என்று கூறினாள்.

“இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, திருவள்ளுவர் அன்றைய குடிகாரர்களைப் பார்த்து ‘உண்ணற்க கள்ளை” என்று கூறினார். அந்தக் குடிகாரர்கள் அவர் பேச்சைக் கேட்டார்களா? கேட்கவில்லை. பேரறிஞர் ஏம் சந்திர சூரி என்பவர், பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே சுமார் பதினெட்டு நாடுகளில் மது விலக்கை அமுல் நடத்தும்படி செய்தார். அவ்வாறு செய்தும் குடிப்பவர்களின் தொகை குறையவில்லை. தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது, தமது தோட்டத்திலிருந்த ஐந்நூறு தென்னை மரங்களையும் வெட்டச் செய்தார். மரங்கள் தான் குறைந்தன, மதுகுடிப்போர் தொகை குறையவில்லை” என்றான்.

“அதிருக்கட்டும், உங்கள் நண்பர்களில் பலர் குடிப் பார்களாமே, அவர்களோடு செல்லும் நீங்கள், அவர்கள் குடிக்கும்போது நீங்கள் மட்டும் குடிக்காமலா இருந்திருப்பீர்கள்?” என்று கேட்டாள்.

“நானா, குடித்தேனா? என் நண்பர்களில் பலர் குடிப்பதுண்டு. அவர்கள் குடிக்கும் போது நான் அருகில் இருந்ததுமுண்டு. என்னைக் குடிக்கும்படி நண்பர்களும் வற்புறுத்திய துண்டு, தனக்குப் பிடிக்காத தமிழறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை, மயிலை மகாவித்வான் சண்முகம் பிள்ளை முதலிய பெரிய வித்துவான்கள் காலமானபோது, பலர் வற்புறுத்தியும் அவர்கள்மீது இரங்கற்பாக்கள் பாட சதா வதானம் நா.கதிரை வேற்பிள்ளை அவர்கள் எப்படி மறுத்தாரோ அதைப் போலவே எனக்குப் பிடிக்காத மதுவை நண்பர்கள் குடியென்று வற்புறுத்தியும் நான் குடித்ததில்லை. நான் மதத்தை மட்டுமல்ல; மதுவையும் தள்ளி வைத்திருக்கிறேன்” என்றான் அவன்.

“இவற்றை மட்டுமல்ல, என்னையும் சிலசமயம் தள்ளி வைக்கிறீர்கள்” என்றாள் அவள்.

“சீன தேசத்து ஞானி கன்பூஷியஸ் என்பவன், படிக்கவும், பொதுவான காரியங்களைக் கவனிக்கவும் தனக்குப் போதுமான நேரம் வேண்டுமெனக் கருதித் தன் மனைவியை அவன் நான்குமுறை தள்ளிவைத்தானாம். நான் உன்னை மாதம் ஒருமுறை தானே – தள்ளி வைக்கிறேன்” என்றான் அவன்.

மங்கை ஒருத்தியை இயற்கை எதற்காக மாதம் ஒருமுறை தள்ளிவைக்கிறது என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவள் சிரித்தாள்.

அவன் அவளைக் கண்களால் அழைத்தான்.
அவள் அவனைக் கண்களால் இழுத்தாள்.
அழைத்தவன், இழுத்தவளின் அருகில் சென்றான்
அன்றாடம் இனிப்பவளே!

– எச்சில் இரவு, முதற் பதிப்பு: ஜனவரி 1980, சுரதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *