அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4
தங்கள் காதல் நிறைவேறத் தனது பெற்றோரைப் பலிகொடுக்க வேண்டுமா என்று லாரிஸா அவனைப் பார்த்துக் கேட்டபோது மைக்கேல் அதிர்ந்து போனான். அப்புறம் அவள் சொன்னது எதுவுமே அவன் செவிகளில் ஏறவில்லை! லாரிஸா அந்த இடத்தை விட்டுப் போய் விட்டாள் என்பது கூடத் தொரியாமல் அவன் நெடுநேரம் மழையில் நனைந்து கொண்டே நின்றான்.
சுய உணர்விழந்து விறைத்துப் போய் நின்ற அவனை யாரோ அவனது நண்பர்கள் தான் அவனது விடுதியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
பிரிவு என்பது எவ்வளவு வேதனையானது என்பது அவளைப் பிரிந்த அந்தக் கணத்தில் அவனுக்குப் புரியவில்லை. பின்புதான் தனிமையில் அந்தப் பிரிவுத் துயரை அனுபவித்த போது அவனுக்கு அந்த வேதனை எப்படிப் பட்டதென்று மெல்ல மெல்லப் புரிந்தது. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் புதுப்புது அர்த்தம் தெரிந்தது.
‘நான் பாசத்தோடு வளர்ந்திட்டேன். அதை உடைத்தெறியும் துணிவு என்னிடம் இல்லை மைக்கேல்!’
‘நம்ம காதலை மட்டும் உடைத்தெறிய உனக்கு எப்படி மனசு வந்தது லாரிஸா?’ அவன் தனிமையில் தனக்குள் விம்மினான்.
இதயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் ஊசியால் குத்திக் கிழறிப் பார்ப்பது போல இனம் புரியாத அந்த வேதனை அவனை வாட்டத் தொடங்கியது. அவளை மீண்டும் சந்திக்க அவன் எடுத்த முயற்சி எல்லாம் பலனற்றுப் போயிற்று.
இவன் கையாலாகாதவன் என்று அவளது பெற்றோர் நினைத்திருக்கலாம். உண்மை ஒருபக்கம் கனமாக அழுத்த தனிமை அவனை மேலும் வாட்டியது. இனியும் தாங்க முடியாது என்ற நிலையில் அந்தத் தோல்வியை மறப்பதற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு நிம்மதி தேடி ஊருக்குப் போனான்.
காதல் தந்த தோல்வியில் இருந்து ஒருவாறு மீண்டு அவன் மீண்டும் வேலைக்கு வந்த போது தான் லாரிஸா வேறு ஒருவனின் மனைவியாகி விட்டாள் என்பது அவனுக்குத் தெரியவந்தது. அதுமட்டுமல்ல அவளது கணவன் தான் தங்கள் கடற்படைப் பிரிவில் உள்ள மிகநவீன மயமாக்கப்பட்ட ஸப்மரீன் ஒன்றின் கேப்டனாக இருக்கிறான் என்ற செய்தியையும் அவனது நண்பர்கள் மூலம் அவன் அறிந்து கொண்டான்.
அந்த நீர்மூழ்கிக் கப்பல் தான் இப்போ விபத்தில் சிக்கி ஆழ்கடலில் மூழ்கி இருக்கிறது. அதை மீட்கும் பணிக்குத்தான் இவன் பொறுப்பேற்றுச் செல்கிறான்.
யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அந்த ஸப்மரீனில் இருந்த பாம் ஒன்று வெடித்த போது மாலுமிகள் எல்லோரும் இறந்திருப்பார்கள் என்று தான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் சில மாலுமிகள் இன்னமும் உயிரோடு இருப்பதாக அதிலிருந்து எஸ்.ஓ.எஸ் சமிக்ஞை செய்தி வந்த போது இவர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்.
அப்படி என்றால் உள்ளே இன்னமும் சிலர் உயிரோடு இருக்கிறார்களா? எல்லோரும் இறந்து விட்டார்கள் என்று நாங்கள்தான் தப்புக் கணக்குப் போட்டு விட்டோமா? எல்லோர் முகத்திலும் ஒரு உற்சாக உணர்வு ஏற்பட்டது.
உடனடியாக அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற மனிதாபிமான உணர்வு அந்தக் கணமே அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றிக் கொண்டது. அதற்கான ஏற்பாடுகளைத் தான் அவசரமாக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நேரம்: 05:10:07 சனிக்கிழமை
மைக்கேல் விளக்கு வெளிச்சத்தில் அந்த வரை படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். மூழ்கிக் கொண்டிருக்கும் நீர்மூழ்கிக் கப்பலின் வரைபடம் தான் அது. இந்த நீர்மூழ்கி தான் அந்தப் பிராந்தியத்தின் கட்டளைக் கப்பலாகவும் இருந்திருக்கிறது. இந்த நீர்மூழ்கியில் பல இராணுவ ரகசியங்கள் அடங்கியிருந்தன. அணு உலை மூலமே நீர்மூழ்கி இயங்குவதற்குச் சக்தி கொடுக்கப் பட்டது. அதைவிட சில சிறிய அணு ஆயுதங்களும் உள்ளே இருந்திருக்கலாம் என்று நம்பப் பட்டது. விபத்து நடந்தபோது தானியங்கி மூலம் அணு உலை நிறுத்தப் பட்டதால் பல அழிவுகள் உடனடியாகத் தடுக்கப் பட்டன. ஆனால் உள்ளே இருந்த அணு ஆயுதங்கள் ஏதாவது சேதமடைந்திருக்கலாமோ என்ற பயம் அவர்களிடையே இருந்தது. எனவே தான் இந்த விடயத்தில் அரசு மிகவும் நிதானமாக நடந்து கொண்டது.
ஆழ்கடலில் எடுக்கப் பட்ட விபத்திற்குள்ளான நீர்மூழ்கியின் புகைப் படங்களை ஒவ்வொன்றாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் மைக்கேல். ரொப்பிடோ கம்பாட்மென்ட் பகுதியில் சேதம் தெரிந்தது. அங்கேதான் முதலாவது பாம் வெடித்திருக்க வேண்டும். அதன் காரணமாக உள்ளே தீப்பிடித்திருக்கலாம். அது மற்றைய கேபினுக்கும் பரவியிருக்கலாம். உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அவனால் அனுமானிக்க முடியவில்லை. ஆனால் இரண்டாவதாக வெடித்த பாம் தான் அதிக சேதத்ததை நீர்மூழ்கிக்கு ஏற்படுத்தியிருந்தது தெளிவாகத் தெரிந்தது. நீர்மூழ்கியின் முன்பக்கத்தில் ஒரு பகுதி இதனால் தான் பாதிக்கப் பட்டிருந்தது. பெரிஸ்கோப் உள்ள பகுதியிலும் பாதிப்புத் தெரிந்தது. ஆபத்து நேரங்களில் தப்பி வெளியே போவதற்காக முன்பக்கத்தில் அமைந்திருந்த எஸ்கேப்காச் பாவிக்க முடியாதவாறு முற்றாகச் சேதமடைந்திருந்தது.
படத்தை நிதானமாக ஆராய்ந்து பார்த்த போது உள்ளே அகப்பட்டு இருப்பவர்களை முன்பக்க வாசலால் வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையை மைக்கேல் அப்போதே இழந்து விட்டான்.
அதன்மூலம் அவர்களை வெளியே கொண்டு வருவது இலகுவாக இருந்திருக்கும். அந்த வாசல் சேதமடைந்திருப்பதால் இப்போது அதற்குச் சந்தர்ப்பமே கிடையாது. அந்தக் கபினுக்குள் கடல் நீர் புகுந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் தெரிந்தன. பின் பக்கத்தில் உள்ள இன்னுமோர் கதவு அவன் கவனத்தைக் கவர்ந்தது. எந்த விதசேதமும் இல்லாமல் அக்கதவு இருந்தது. உள்ளே இருப்பவர்களின் உதவி இல்லாமல் அந்தக் கதவை வெளியே இருந்து திறக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும். இதற்கான பயிற்சியைப் பெற்றவர்களால் தான் இக் கதவைத் திறக்க முடியும். மைக்கேல் ஏற்கனவே அதற்கான சிறப்பு பயிற்சி பெற்றிருந்தான். பின் பக்கத்தில் உள்ள கபினில் இருந்த மாலுமிகள் உயிர் தப்பியிருக்க நிறைய சாத்தியம் இருந்தது. அவர்களிடம் இருந்து தான் அந்த எஸ்.ஓ.எஸ் செய்தி வந்திருக்கலாம். அந்தக் கதவைப் படத்தில் ஹைலைட்டரால் குறியிட்டான். அந்தக் கதவைத் திறப்பதற்கு உரிய குறிப்பீடுகளை ஆராய்ந்து கொண்டிருந்த போது மீண்டும் அவனுக்குத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பதாக உதவியாளன் அவனை அழைத்தான்.
‘இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்பா? யாராக இருக்கும்?’
– தொடரும்…
– நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! (குறுநாவல்), முதற் பதிப்பு: 2020, ஆனந்தவிகடன் பவழவிழா குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை.