நிழலின் தொடராய்…..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 15,783 
 

நெஞ்சிலிருந்து அவளைத் துரத்திவிடவும் முடியாது , மறந்து விடவும் முடியாது அவள் நினைவுகள். செத்துப்போவென்றெண்ணிய கணங்களில் அவளது வார்த்தைகள் நினைவுகளில் வந்து அதையும் நிறுத்தி வாழவேண்டும் எனச்சொல்லி 15 வருடங்களின் பின் இப்போ அவள் என் நினைவுகளைக் தோண்டி விட்டிருக்கிறாள்.

அவள் எனக்குள் எப்படி வந்தாள் ? கேள்விகள் எழும்போதெல்லாம் நான் இரை மீட்டு இனிக்கும் காரணங்கள் இப்போதும் நினைவில் நர்த்தனமிடுகிறது.

அவள் பத்தாம் வகுப்பிலும் நான் ஏ.எல்.உயர்தர வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்த போதுதான் அவளுடனான பழக்கம் எனக்குக் கிடைத்தது. பிறிபெக்ட்டாக அவளது வகுப்பைக் கவனிக்கப்போன எனக்குள் அவள் வந்து குடியேறிவிட்டிருந்தாள். நண்பர்கள் பெண்களைச் சீண்டினால் அல்லது இரட்டை அர்த்தத்தொனியில் பேசினால் அவள் அவர்களை யார் நின்றாலும் பறவாயில்லை அந்த இடத்தில் வைத்து நல்ல கிளிகிளித்து விட்டுத்தான் போவாள். அதனால் எல்லோருக்கும் அவளில் பயம். எங்கடை பள்ளிக்கூடத்துக்கு எதிர்காலத்திலை ஒரு பெண்ணியவாதி வரப்போறா….! பல நண்பர்களின் நகைச்சுவையான செய்தியிது.

எதிலும் கண்ணியம் , நியாயம் , நேர்மை இருக்க வேண்டுமென என்னுடனே பலதடவைகள் வாதாடியிருக்கிறாள். ஆனால் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எனது அம்மாவைப் போல, எனது அம்மம்மாவைப் போலவே இருப்பதே பெண்மை என்பது அன்றைய என் கருத்து. என்னில் கறள்கட்டியிருந்த ஆணாதிக்கம் அடிசாய இவள் என்னோடு வாதாடி , வழிசொல்லி , என் வாயடைக்கச் சொல்லும் கருத்தும்தான் என்பது என்னால் என்றுமே மறக்க முடியாது. பலருக்கு அவளது ஆவேசம் மிக்க கருத்து , நேர்மை கேலிக்குரியதாயும் இருந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை அவளிடம் சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஆழுமை இருந்ததை அவளது துணிவு மெய்ப்பித்திருக்கிறது என்பது உண்மை.

கீழ் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே என்னை, என்வகுப்பு நண்பர்களை அண்ணா என்று அழைக்க அவள் மட்டும் எங்களைப் பெயர் சொல்லியே அழைப்பாள். அதுவே எனக்குப் பிடித்துமிருந்தது. நான் எழுதிய முதல்க் கவிதையை அவளுக்குத்தான் கொடுத்தேன். நன்றாயிருப்பதாகவும், பெண்ணைப் புதுமையாய் எழுதுங்கள் என்றும் அபிப்பிராயம் சொன்னாள்.

இந்தியப் படைகளை எம்மண்ணிலிருந்து ஓடு என அவள் எழுதிய கதையொன்றினை எனக்குத் தந்தாள். அக்கதைக்குள் அவளது மண்பற்று அவளை இனம்காட்டி நின்றது. ஆனால் என்னை எழுத வைத்தவள் அவள்தான். ஏனெனில் அவளே என் கவிதையாகியிருந்தாள். முதல்க்கவிதைக்கு அவளிடமிருந்து வந்த கருத்து என்னைத் தொடர்ந்து எழுத வைத்தது. அதன்பின் அதிகம் என்னுடன் கதைப்பாள் , அனேகருக்கு சுடுதண்ணியாயிருந்தவள்….. நாளடைவில் எனக்குள் மாற்றங்கள் தந்தவள்…..எனக்கே புரியாத உணர்வலைகள்…..அடிக்கடி ஜீவா சொல்வான் கவனமடா காய் சுடுதண்ணி……,

எல்லோருக்குமே சுடுதண்ணியாக இருந்தவள் எனக்கு இனிய தென்றல். என் இதய நந்தவனத்தில் முதல் பூத்த வாசமல்லி. எனக்குள் புத்துணர்வை , புதுவாழ்வைத் தந்த தேவதையவள். சனி , ஞாயிறு வந்தால் பொழுது கரையாது அப்படியே நிற்கும்.

அவள் வகுப்புக்கு நேரே என் வகுப்பும் ஆகையால் அவளைக்காணும் சந்தர்ப்பம் இருந்தது. அதுவொரு இனிமை கலந்த ஆயிரம் கோடி சுகம் தந்த பொழுதுகள். அன்று பாடசாலை நாட்களில் என்னையறியாமலே எனக்குள் குடிவந்த அவள் என் மனம் அறிந்த போது சொன்னாள். எனக்கு உங்களிலை காதல் வரேல்ல. நான் படிக்க வேணும். அதுதான் என்ரை இப்போதைய லட்சியம். என் கனவுப் பிரதேசம் அவள் வார்த்தைகள் பட்டுக் கருகிப் பாலைவனமாகியது. நான் தொலைந்து போனேன். என் நந்தவனத்தில் குடியிருந்த அந்தக் குயில் பறந்து போய்விட்டது.

ஏனடா என்னை அவளுக்குப் பிடிக்கேல்ல…..? நண்பன் ஜீவாவிடம் கேட்டபோது சொன்னான் ஜீவா. நீ வேறசாதி , அவள் வேறசாதி , அவளின்ரை ஆக்கள் சரியான சாதித்தடிப்புப் பிடிச்சவையள். உன்ரை காதலாலை அவளின்ரை ஆக்களின்ரை கவுரவம் போகிடுமெண்டு நினைக்கிறாள் போலை. அவளிட்டை என்னத்தைக் கண்டனீ….! பெரிய அழகியும் இல்லை….சொல்லி முடித்தான் ஜீவா. அவள் ஜீவாவின் கண்களில் பெரிய அழகியில்லை. எனக்கு அவள் தேவதை.

என் நெஞ்சில் ஏதோவொன்று துளைத்தது. ஓ…நான் சாதிவேறையா…? அவள்தானே சாதியை , மதத்தை வெறுப்பவள் , பலதடவை சாதி சொல்லிக் கதைப்பவர்கள் மீதே நெருப்பாய் எழுந்திருக்கிறாள். மனிதத்தை மட்டுமே தான் நேசிப்பதாகச் சொல்லுபவள். எப்படி அவளுக்குள் சாதீய வெறியிருக்கும்….? என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவளில்லாத உலகம் எனக்குச் சூனியமாகி விடப்போவதாகவும் , நான் செத்துவிடப்போவதாகவும் என் உயிர் வலித்த வலி அறியாள் அவள். அந்த நாளொன்றில்தான் அவள் என்னைத்தேடி என் வீட்டுக்கு வந்தாள். அம்மாவுக்கும் என் நினைப்புப் பற்றிச் சொல்லி என்னிடம் கதைக்க வந்தாள்.அம்மா அவளைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்தே போனார். பின் சொன்னா நல்ல துணிஞ்ச கட்டையடா….நாங்க முந்தி உப்பிடித் துணிஞ்சு போயிருக்கவே மாட்டம். பேசாம இருங்கோம்மா….அம்மாவை அமைதியாக்கி அவளை வரவேற்றேன்.

ஏன்….? என்ன நடந்தது….? உங்கடை இலட்சியமென்ன….? பள்ளிக்கூட சினேகிதம் படலை வரைக்குமெண்டு சொல்லுவினம். அப்பிடி நாங்களும் போகவேணுமெண்டு நினைக்கிறீங்களா….? அதென்னது ஒருதரைக் கண்டவுடனும் காதல் வந்திடுது….? ஏன் நல்ல சினேகிதரா இருக்கேலாதோ….? அதுக்கெல்லாம் உங்களுக்கு மனம் வராது போலை….! ம்….யாழ்ப்பாணத்துத் தியேட்டருகளை முதலில மூடவேணும். உந்த நாசமறுத்த சினிமாப் படங்கள் தான் உங்களையெல்லாம் சீரழிக்குது….இந்தியன்ரை சினிமாதான் உங்களையெல்லாம் கண்டவுடனும் காதலியெண்டு சொல்லுது..ம்…. அதென்னது உங்களைக் காதலிக்கேல்லையெண்டா உடனம் செத்துப் போவியளோ….? எங்கே இப்ப சாவுங்கோ பாப்பம்…..பெத்து வளத்து எங்கடை எதிர்காலத்தைக் கனவு கண்டு கொண்டிருக்கிற பெற்றோருக்குச் செய்யிற உபகாரம்தானே இது….! சே…..நீங்கள் இன்னும் கொஞ்சமும் முன்னேறேல்ல…..போடுற உடுப்புகளிலையும் , செய்யிற அழகுபடுத்தலும்தான் இளம் தலைமுறையெண்டு அடையாளப்படுத்துது. ஆனா உங்கடை சிந்தனையள் குழந்தைத்தனமாவே இருக்குது….

காதலெண்டா என்ன….? நல்ல புரிந்துணர்வு மிக்க நட்பெண்டுதான் நான் நினைக்கிறன். உண்மையான நட்புக்கு ஆண் பெண் பேதம் தெரியாது. அதுதான் நல்ல பலம்மிக்க நல்ல வாழ்க்கையைத் தரும். தொடர்ந்த அவளது கோபம் மிகுந்த வார்த்தைகள் என் சிந்தனைக் கதவுகளை அடித்து நொருக்கிக் கொண்டிருந்தது.

இல்லை….நான் வேறைசாதியெண்டுதான் என்னை வெறுக்கிறீங்கள்….! கோபத்தின் எல்லையைத் தொட்டிருந்த எனது எதிர்வார்த்தையில் ஒரு கணம் ஆடிப்போனாள் அவள். என்னைப் புரிஞ்சு வைச்சிருக்கிற உங்கடை நம்பிக்கைக்கு என்ரை நன்றி. ச்சே….அவள் அழுதாள். முதல் முதலாக அவள் அழுததை அப்போதுதான் காண்கிறேன்.

இனிமேல் உங்களுக்கு நான் என்ன சொல்லியும் வேலையில்லை. ஆனா ஒண்டை ஞாபகம் வைச்சிருங்கோ உங்களைத் தெரிஞ்ச நாளிலையிருந்து உங்களை நல்ல நண்பனாத்தான் பாத்திருக்கிறன். மற்றும்படி வேறையெந்த எண்ணமும் இருக்கேல்ல. உந்த சாதி , மதம் இதெல்லாம் நான் ஆராயேல்ல.

உங்கடை மனதிலையிருக்கிற உந்த சாதீய நினைப்பை மறவுங்கோ. உங்களை நீங்களே தாழ்த்திப் பாக்கிறதாலைதான் மற்றவையள் உங்களைத் தாழ்த்திறாங்கள். யாராவது சாதி கதைச்சாலே எதிர்க்கிற நான் எப்பிடி உங்களை அப்பிடி நினைப்பன்….? யோசிக்கேல்லயா….? என் கன்னத்தில் அடித்தாற்போல் அவளது வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தது. ஆனால் எனக்கு அவள் வேண்டும். அதுவே என் நினைப்பாக இருந்தது.

அன்றோடு என்னோடு அவள் பேசுவதைத் தவிர்த்தாள். இடிவிழுந்தாற்போல் நான்….என்னிலிருந்த ஒரு அங்கம் இல்லாதது போல்…என் நினைவெல்லாம் அவளே….அப்போதான் இந்தியப்படைகள் என்னையும் சிறைப்பிடித்து காங்கேசன்துறையில் கைதியாக வைத்திருந்தது. சிறை என் படிப்புக்கு முழுக்குப்போடுவித்து ஒருவருடம் காங்கேசன்துறையில் நான் இந்தியர்களின் சிறையில் வதைபட்டுக் கிடக்க அம்மாவிடம் அடிக்கடி போய் என்னைப்பற்றிக் கேட்பாளாம். பள்ளிக்கூடத்தில் தங்கைச்சியிடமும் விசாரிப்பாளாம். ஆனால் அவள் என்னைக் காதலிக்கவில்லை. என்னை நேசித்தாள்.

அம்மாவுடன் ஒரு நாள் என்னைப் பார்க்க முகாமுக்கு அவளும் வந்திருந்தாள் புத்தகங்களும் , தான் எழுதிய கட்டுரைகள் சிலவும் , ஒரு கதையும், கோவிலில் எனக்காக அர்ச்சனை செய்ததாக விபூதியும் தந்தாள். இந்தியர்களின் சப்பாத்துக்கால்கள் மிதித்து வலித்துக் கிடந்த எனக்கு அவள் தந்த விபூதி வலி மாற்றியாக…. அவளது கையெழுத்திலான கட்டுரைகளும் , கதையும் என்னைச் சில பொழுதுகள் தாலாட்டின.

அன்றெனக்கு விடுதலை. விடுதலையாகி வர அம்மா உடனடியாக வெளிநாடு அனுப்ப ஏற்பாடுகளைச் செய்து முடிக்க நான் தாயகம் விட்டுப் புலம் பெயரும் நாளது. அதுவொரு காலை இந்தியராணுவச் சோதனைகள் தாண்டி அவள் ஊருக்குப் போன என்னை அவள் காணவே வரவில்லை. ஜீவாவுக்குச் சொன்னாளாம்….வீணா என்னாலை குமரன் மனம் குழம்பக்கூடாது.

அவள் நினைவுகளை, நான் பிறந்த எனது ஊரை , உறவுகளை, எனது பாடசாலையை எல்லாரையும் பிரிந்து நான் தொலைவாகி….புலம் பெயர் நாடொன்றில்….அகதியாகி…..

பின்னர் அவள் யாரையோ காதலிப்பதாக நண்பர்கள் சொன்ன போது அவள் வாழ்வு நன்றேயமைய நான் வாழ்த்துவதைத் தவிர வேறு எண்ணம் இருக்கவில்லை. ஆனால் அவள் காதலிப்பதாகச் சொன்னவனை அவள் கணவனாக அடையாது இப்போ இன்னொருவனை மணந்திருப்பது எனக்குப் புதிராகவே இருக்கிறது. கேட்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அவளது நட்பை நான் தொடரவே விரும்பினேன். அவள் இப்போ என் காதலியல்ல என் சினேகிதி. என் அவசரம் சிலவேளை என்னிடமிருந்து அவளைத் தூரமாக்கலாம். காலம் வரும்போது அதையும் நான் கேட்கலாம். எங்கள் நட்பும் தொடரும்.

வெளிநாடு புறப்பட்ட போது கூட என் கண்ணில் எட்டாது தூரமாயிருந்தவள். இப்போ என் மனைவிக்கே சினேகிதியாய்…., இன்னொருவனின் இனியவளாய்…., தாயாய்……, என்னையும் நினைவு வைத்து அந்த நாளின் நினைவுகளை தன்னவனுக்கும் சொல்லிச் சிரிக்கின்றாள். அன்று நண்பர்கள் சொன்ன பெண்ணியவாதியாய் அவள். நல்லதொரு சமூக சிந்தனாவாதியாய், சிறந்ததொரு படைப்பாற்றல் மிக்கவளாய், இன்று மீண்டும் என்னை உலுப்பி விட்டிருக்கிறாள். என்னவளாகியிருந்தால் நிச்சயம் இந்தளவு திறமை மிக்கவளாக உயர்ந்திருப்பாளோ தெரியாது. சிலவேளை இந்த ஆற்றல், ஆழுமை என்னால் அவதானிக்க முடியாமலேயும் இருந்திருக்கும். எனக்குள் இன்னும் ஒட்டியிருக்கும் ஆணாதிக்கம் நிச்சயம் அவளது சிந்தனைகளுக்கு சாவுமணியும் அடித்திருக்கலாம்.

இன்று நானும் ஒரு எழுத்தாளனாய் இருக்கிறேன் என்றால் அது அவளால்தான் ஆனால் அவள் யாரால் எழுத்தாளராய் ஆனாள்….? ஓ…அவள் காதலித்தவனாயிருக்குமோ……! தெரியவில்லை. நிச்சயம் ஏதோ ஒரு உந்துதல் அவள் எழுத்துக்கும் காரணமாயிருக்கும். ஏதோ ஒரு உந்தல் இல்லாமல் யாராலும் எதையும் சாதிக்க முடியாது. இது என் அனுபவப்பாடம்……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *