விடிந்து கனநேரமாகிறது என்பதை மதிவதனனின் படுக்கையறையின் ஓடுகளுக்கு இடுவல்களில் தெரிந்த பிரகாசமான ஒளி காட்டியது.
அதற்காக அடித்துப்பிடித்து எழுந்து விட மனமில்லாமல் படுத்திருந்தான் அவன். விழித்த தன் கண்களை ‘மறுபடியும் தூங்கு’ என்று கெஞ்சிக்கொண்டே கூரைக்கு முதுகைக்காட்டி கிடந்தான்.
ஆனால் கண் வழித்த போதே காதுகளும் விழித்துக் கொண்டது.வீட்டிலுள்ளவர்களின் கூச்சலுடன், பின் வீட்டில் சண்டை போடும் சத்தமும் சேர்த்து மூளைக்குள் இரைந்தது. ‘தூங்க மாட்டேன் விட்டு விடு’ என எச்சரிக்கத் தொடங்கின. ‘கொஞ்ச நேரத்துக்குள் எல்லாம் அடங்கிப் போகுமா…..’ என்று காத்திருப்பதெல்லாம் ‘சுத்தமான மடமைத்தனம்’ என்பது அவனுக்குத் தெரியும். விடிந்ததும் ஆரம்பித்துவிடும் பறவைகளின் உற்சாகம் போல, மரங்களின் சிலிர்ப்பு போல இந்தப் பின் வீட்டிலுள்ளவர்களின் சண்டையும், தன் வீட்டார்களின் கூச்சலும் வாடிக்கையான ஒன்று……
படுக்கையில் கிடந்தவாறே தலையணையின் ஓரமாய்க் கிடக்கும் தொலைபேசியை எடுத்து விபரம் (தேட) ‘கேட்கத்’ தொடங்கினான். பெரும் பதவியிலுள்ளவர்கள் அன்றன்றைய தங்கள் ‘அப்போய்மென்ட்’ என்னவென்று தங்களது பீ.ஏ(Pயு)இன்றைக்கு அனேகமானவர்களின் பீ.ஏ வாக ‘தொலைபேசி’ தான் சேவை புரிகிறது.
எந்த வேலையுமற்று வீட்டிலிருக்கும் 23 வயது இளைஞனுக்கு என்ன ‘அப்போய்மென்ட்’ இருக்கமுடியும்…….. ‘அது’ தான் -அந்தக் காதல் தான். ‘ஷாலினி’ – ஒரு வருடம் அலைந்து திரிந்து பத்திரப் படுத்திய காதல், இன்றைக்கு எட்டு வருடங்களாகிறது என்கிறது வரலாறு…….. என்ன ஆச்சரியம்…….. “எட்டு வருடங்களாக ஒருவன் ஒருத்தியையும், அந்த ஒருத்தி ஒருவனையுமா காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்…..?” என்று கேட்டால், ‘இது அதையும் தாண்டி புனிதமானது’ என்று சொல்வதனால் என்ன குறைந்து விடப்போகிறது……………………..?!
‘காலை வந்தனம்’ சொல்லும் ஐந்தாறு ஆளுகளில் அவளுடையது எதுவுமில்லை……எரிச்சலுடன் கட்டிலை விட்டெழுந்து வெளியே வந்தான். எதையும் ரசிக்கும் மனநிலை இல்லாமல் இருந்தது.
காலைக்கடன், தேநீர்,இரண்டு மூன்று தடவைகள் கொட்டாவி – முற்றத்தில் கிடக்கும் கதிரையில் அவனும் தொலைபேசியும்….. ஷாலினிக்கு அழைப்பு…. இரண்டு தடவைகள் முழுவதுமாக மணிஅடித்தும் பதிலில்லை…… எரிச்சல் எரிச்சலாக வந்தது. மூன்றாவது தடவை……….கடைசி செக்கனில் ‘அட்டென்ட்’. இவன் எதுவும் பேசவில்லை.
“கொஞ்சம்…… வேலையா இருக்கன் மதி…….
லேட்டா பேசுறனே………. வக்கிறன்”
இவன் பேசுவதை எதிர்பார்க்கவில்லை……. ‘கட்’டான ஒலி காதில் ஒலித்துக் கொண்டிருக்க காதை விட்டு தொலைபேசியை அகற்றாமல் அமர்ந்திருந்தான். தொடர்ந்து ஒரு குறுஞ்செய்தி…..
“சாரி மதி……”
“யாருக்கு வேண்டும் இந்த சாரி……..”
எரிச்சல்………………………. எரிச்சல்…………………………….கோபம்………………………….
சட்டென்று எழுந்து கிணற்றடிப்பக்கம் சென்றான். அம்மா வாரக்கட்டுடன் நின்று கொண்டிருந்தா,தங்கை வீடு கூட்டிக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு அம்மாவின் கையில் இருப்பதை வாங்கி தான் பெருக்கலாமா என யோசித்தான். ஆனால் அம்மா தரப்போவதில்லை.ஷாலினி வந்த பின் ‘அம்மாவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்’ ஏன் இப்படி தோன்றியது எனத் தெரியவில்லை.இதற்கு முன் இவன் இப்படி நினைத்ததில்லை. ஷாலினி இந்த வேலைகளில் ஈடுபடுத்தாமல் தானே எல்லாம் செய்து விட வேண்டும் என்பதே மதியின் எண்ணமாக இருந்தது. ஆனால் இப்போது இவ்வாறு நினைத்தான்…….அவள் மீதிருந்த கோபமா……. இல்லையென்றால் காதல்…………………? அவளும் தான் அப்படி என்று தோன்றியது…… கிணற்றை வெறித்தபடி நின்றிருந்து விட்டு உள்ளே வந்தான்…… என்ன செய்து தொலைப்பதென்றும் தெரியவில்லை…….. கண்ணாடியில் முன் போய் நின்றான்….. ‘ஷாலினியின் உருவம் தெரியவில்லை…….!’ குளித்தால் தான் அவன் முகத்தையே பார்க்கலாம் போல் இருந்தது…… தன் பெயரில் இருந்த நிலவு முகத்தில் இல்லாதது சிரிப்பைத்தந்தது……கையில் இருந்த தொலைபேசியைப் பார்த்தான்….. ‘அவளுக்கு போன் செய்வோமா……’ விருப்பமில்லை….. ‘செய்தால் என்ன?’
எரிச்சல்…………………..எரிச்சல்………………………எரிச்சல்……………..
“ஷாலினியை சந்தித்த ஆரம்ப நாட்கள்…… எவ்வளவு இனிமையான காலங்கள் அவை…….. அவள் முகத்திலேதான் எவ்வளவு சாந்தம்,அழகு – அவளைப் பார்க்கத் தவறிய ஒவ்வொரு நொடியும் தந்த வேதனை…… அவள் பெயரின் முதல் எழுத்தை கையில் வெட்டிக் கொண்ட இன்பம்….. கவிதை எழுதத்தூண்டிய அவளது கண்கள்……”
தொலைபேசியை பார்த்துக் கொண்டான். அதற்கு மேல் அதைக் கையில் வைத்திருக்க விருப்பமில்லை……மேசையில் போட்டு விட்டு முன் அறைக்கு சென்றான்ஈ நாளிதழ் வாசிக்கும் பழக்கமில்லை….. கால்களையும் சேர்த்து கதிரைக்குள் அடக்கி சொல்ல முடியாத கோலமொன்றில் அமர்ந்திருந்தான்.
“அப்பாவின் தொலைபேசியை ஒழித்தொழித்து எடுத்து ஷாலினியின் குரலை தரிசித்த விடுமுறை நாட்கள், எத்தனை ஆசை வார்த்தைகள்…..இன்பத்தேன் பாய்வது போல……. அவள் வீட்டுக்குச்சென்ற அந்த முதல் நாள், அவளுடன் கழியும் பின்னேரப் பொழுதுகள்……அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட அந்த முதல் அனுபவம்……”
நினைக்கும் போது மனம் இலேசாகியது.எரிச்சல் குறைந்து மீண்டும் முற்றத்துக்கு வந்தான்…..
“சொந்தமாக தொலைபேசி கிடைத்த போது ஒரு நொடி தவறியதுண்டா? ஒரு நேரம் தான் மறந்ததுண்டா……. ஒரு ளுஆளு போகவில்லை என்றால் அவள் போடும் சண்டைகள் எத்தனை – அதை சமாளிப்பதில் அவன் பட்ட பாடுகள் எத்தனை……
இன்பம்……………….இன்பம்……………………….இன்பம்……………….
ஆனால் அப்போது அவளுக்கு வேலைகள் இல்லையா……இருந்தது தானே……. இப்போது மட்டும் வேலை புதிதாக முளைத்தது போலல்லவா புதினம் காட்டுகிறாள்………. மனதை ஏதோ உந்தித் தள்ளியது.
தொலைபேசியை ஆராய வேண்டும் போல் இருந்தது….ஆனால் எழுந்து போக விருப்பமில்லை…..உற்சாகமளிக்கும் சூரிய ஒளி – ஆனால் அவனிடம் உற்சாகமில்லை.
மதிக்கு இப்போது சில பெண் நண்பர்கள் உண்டு. அப்போது பெண்களுடன் பேச அனுமதிப்பதில்லை அவள்…… எந்தப் பெண்கள் பற்றியும் அவளுடன் இருக்கும் போது பேசி விடக்கூடாது, தவறிப் பேசி விட்டால் அவ்வளவு தான்…… ஆனால் இப்போது அப்படி எதுவும் எதுவுமில்லை. யாரைப் பற்றி பேசினாலும் அவள் கோபப்படுவதில்லை. அவளை சீண்ட வேண்டும் எனத் தோன்றும் போதெல்லாம் அவன் முயற்சி செய்வான்.அவளோ ‘பொறுமையின் மறு உருவம்’ போல் அமர்ந்திருப்பாள். ஏன்………………? காதல்…………………? அதற்கு மேல் அவனால் நினைக்க முடியவில்லை…….
சிகரட் பிடிக்க வேண்டும் போல் இருந்தது. புதிதாக இணைந்த நண்பன் குமாரின் சினேகத்துக்குப் பிறகு தான் இந்தப் பழக்கம். இல்லையென்றால,; அவன் எவ்வளவு நல்லவன்…….
இந்த சிகரட் பழக்கம் அவனைப் பற்றி வீட்டுக்குத் தெரியாத இரண்டாவது விடயம். முதல் விடயம் அவன் காதல் – இரண்டும் அவன் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கிறது என்று இலகுவாக விளம்பரப் படுத்தலாம். ஆனால் ஷாலினிக்கு இவன் சிகரட் பிடிப்பது பற்றிஎதுவும் தெரியாது……. இப்போது அவளிடம் எல்லா விடயங்களையும் சொல்ல வேண்டியதில்லை……….. அவள் எதையும் கேட்பதுமில்லை – பேசினால் தானே கேட்க முடியும்…….
அவசரமாக எழுந்து அலுமாரியை வேகமாகத் திறந்தான்.குளிக்காமல் இருப்பதால்பழைய ‘சேர்ட்’ ஒன்றை தெரிந்தெடுத்து அவசரமாகவும் கோபத்துடனும் மாட்டினான்.
“சளீர்…………………………………….”
அக்குல் பகுதியில் நீண்ட கிழிசல். தொலைக்காட்சியில் செய்திக் கண்ணோட்டம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா நிமிர்ந்து பார்த்தார். ஓன்றும் பேசவில்லை,திரும்பிக் கொண்டார். ஆவன் மெதுவாக சேர்ட்டை கழற்றி எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். பழைய சேர்ட் இத்துப் போயிருந்தது, கிழிந்தது ஒன்றும் அதியப்படுவதற்கில்லை. ஷாலினியுடனான உறவும் தான் தினம் தினம் கிழிகிறது, அப்படியென்றால் அதுவும் இத்துப்போய் விட்டதா……….!
வாசல் பெருக்கி முடித்து உள்ளே வந்து கொண்எருந்த அம்மா அவனை வினோதமாகப் பார்த்துக் கொண்டே கேட்டார்,
“என்ன கிழிஞ்சுட்டா………..?”
“ம்………….பழசு இத்துப்போயிட்டு…….”
“சரி………. நீ குளிக்கலயா……?
வரட்சியான புன்னகையொன்றை உதிர்த்தான். “என்னைப் பார்க்க சகிக்க வில்லை போலும்…” என நினைத்தவாறே ‘ப்ரஷ_’டன் எழுந்தான். சிகரட் பிடிக்கும் எண்ணம் ஞாபகத்தை விட்டு அகன்றிருந்தது. கிணற்றடிக்கு வந்து தண்ணீரை திறந்து விட்டான்…… சரியாக நேர் எதிர்ச்சுவரில் எறும்பின் அணிவகுப்பு, வானம் நோக்கிய பயணம். சூரிய வெளிச்சத்தின் பளபளப்பில் எறும்புகள் கொழுத்தன போல் தெரிந்தது. பழக்க தோசத்தில் அதன் மேல் தெளிப்பதற்காக தண்ணீரை அள்ளினான், அதன் அழகை தகர்க்க விரும்பாமல் கை விட்டுவிட்டு, பற்களில் ஒழிந்திருக்கும் பக்டீரியாக்களுடன் சண்டை போடத் தொடங்கினான்.
“ஷாலினி – அவளிடம் இருந்து நான் எதனை எதிர்பார்க்கிறேன்……? இருவரும் ஒருவரில் ஒருவர் கலந்து ஒன்றிப்போன பின்பு என் மீது அதீத நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டிருக்கலாம்.இதனால் என்னை என் போக்கில் விட அவள் தீர்மானித்திருக்கலாம்.
என் மேல் இருக்கும் அதீத உரிமையில் என்னிடம் அவள் வெளிப்படையாகப் பேசுகிறாள், ஒழிவு மறைவின்றி பேசுகிறாள்….. சில பேச்சுக்களின் போது அவள் வெட்கப்படுவதில்லை தான் – அது ஒரு வித நெருக்கம் தான் அல்லவா……ஆனால் நான் எதிர்பார்ப்பது என்ன……?! பழைய நாட்களின் சுவடுகளையே என் மனம் தேடித் தேடிச் செல்வது ஏன்………
என்னைத் தவிர அவள் வேறெதையும் முக்கியம் எனக் கருதக்கூடாது என நினைப்பது சரிதானா….. நான் பேசும் போது அவள் நினைவில் வேறெதுவும் இருக்கக்கூடாது எனத் தோன்றுவது சரிதானா……?
எனக்காக அவள் கண்விழிக்க வேண்டும் என்று நான் நினைப்பதற்கு காரணம் தான் என்ன……? இவள் எனக்கு காதலி மட்டுமல்லவே என்று ஏன் எனக்குத் தோன்றுவதில்லை…..? அவள் ‘பெண்’ என்பதாலா……அல்லது நான் ‘ஆண்’ என்பதற்காகவா? – இரண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. காதல் என்றால் ஊடல் மட்டுமல்லவே, கொஞ்சல்,வெட்கம்,சிரிப்பு,மௌனம் – இது போன்ற எத்தனையோ அகிம்சைகள் மட்டுமா காதல்………….? அதையும் தாண்டி இந்த சகிப்புத் தன்மைக்குரிய விடயங்களும் இருக்கத் தான் செய்கிறது…..”
குளித்து முடித்து உள்ளே வந்த போது வீடு சுத்தமாக கூட்டியிருந்தது…….மனதுக்கும் உடலுக்கும் ஒருவித குளிர்ச்சி……. ஆனால் சந்தோசமில்லை……தன் அறைக்குச் சென்று கதவைச் சாத்தி விட்டு கண்ணாடிக்கு முன்னால் நின்றான்…… முகத்தில் சிரிப்பில்லை. சாரத்தை கட்டிக் கொண்டு சீப்பை எடுத்தான்.
தொலைபேசி வெளியே மேசையில். இவ்வளவு சீக்கிரத்தில் வெளிச்செல்ல விருப்பமில்லை.
“காலத்துக்கேற்றாற்போல் மாற்றம் வேண்டும்”
ஆனால் இன்னும் ஐந்து வருடங்களுக்கு திருமணம் பற்றி யோசிக்க இயலாது….. அது வரையாவது காதலில் ஒரு விருப்பம்,மகிழ்ச்சி,எதிர்பார்ப்பு வேண்டுமல்லவா……….
பக்கமாகக் கிடந்த கட்டிலைப் பார்த்தான். மீண்டும் விழுந்து தூங்க வேண்டும் போலிருந்தது…….
“அவள் அழைக்கும் வரை தொலைபேசியின் பக்கமே செல்லக்கூடாது”
கட்டிலில் விழுகிறான்…..
“அவசரப்பட்டு காதலித்தது தவறு” அவசரம் – காதலில் தான் அந்த அவசரம், ஷாலினியை தவிர்த்து அவனால் சிந்திக்க முடியவில்லை. ஆனால் இருவரும் இணைவதற்கு முன்பே வாழ்க்கை கசந்து விடுமோ என்று பயமாக இருந்தது…….
மேன்மை, இனிமை இதில் எதையும் இப்போது கட்டிலிடமிருந்து அவனால் பெற முடியவில்லை………..
உயிரற்றுக் கிடக்கும் அந்த ஜடத்துடன் அவனும் கலந்து கொள்ள விரும்பினான்…….