சுயநலமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 10,041 
 
 

அந்தக் கவிதையை அவன் பத்தாவது தடவையாகப் படித்து விட்டான். இன்னும் அவனுக்குச் சலிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை –

நீ என்று
சுட்டு விரல் முன்
நீட்டும் போதுன்
கட்டை விரல்
காட்டுவது
முட்டாளே
உன்புறமே தான்!

சொற்கட்டும் கவிச் சிறப்பும் கருத்தாழமும் படிக்கப் படிக்க அவனை மெய் சிலிர்க்கச் செய்கின்றன. கவிதை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்.

பிரபல சஞ்சிகையில் பிரபலமாகப் போகும், கவிஞர் ‘வாத்துக் குஞ்சு’ வரதராஜனின் கவிதை. எத்தனை பேர் கண்களில் படப் போகிறது! எத்தனை பாராட்டுக் கடிதங்கள் வந்து குவியப் போகின்றன!! யாரிந்த வா.வ. என்று எத்தனை வண்ணத்துப் பூச்சிகள் [அதாவது கல்லூரிக் கன்னியர்] விழியுயர்த்தப் போகின்றன!!!

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்படியாவது இந்தக் கவிதையை அந்த எதிர்வீட்டு அகிலாவின் கண்ணிற் படச் செய்துவிட வேண்டும். அதன் பின் அவளது ஏளனப் பார்வை குளிர்ந்த தென்றலாக மாறி….

வாசற் கதவு தட்டப் படும் ஒலியில் அவனது கற்பனை தடைப்பட எரிச்சலுடன் கதவைத் திறந்தவன் விழிகளில் 100 Watts பல்ப். அவன் எதிர்பார்க்கவே யில்லை. எதிர் வீட்டு ஏந்திழையின் ஒரே தம்பி அவன் வீட்டுப் படியேறி உள்ளே வந்தான்.

“இந்த வாரக் ‘கர்ப்பூரம்’ மகஸினை அக்கா வாங்கிட்டு வரச் சொல்லிச்சு”

இன்பத்தேன் ஒரு லிட்டர் அவன் காதில் வந்து பாய்ந்தது.

ஆஹா! என் கவிதை இதில் வெளியான சேதி எப்படியோ அவள் காதுக்கும் எட்டி விட்டது. தூது விட்டிருக்கிறாள் தம்பியை. இனியென்ன? கவிஞனல்லவா – அவன் கற்பனை சிறகடித்துப் பறக்கலாயிற்று.

“கடையில அக்கா கேட்டுச்சாம். எல்லாப் பொஸ்தகமும் தீர்ந்திடுச்சாம்”

மேலதிகத் தகவல் தந்தான் தங்கத்தம்பி. ஆகா! எத்தனை இனிப்பான சேதி! அவன் கவிதை வெளியான இதழ்யாவுமே விற்றுப் போய் விட்டனவாம்.

தனது இதயத்தையே எடுத்துக் கொடுப்பது போல அந்த இதழைப் பக்குவமாக எடுத்து அவளது தம்பியின் கையில் திணித்தான்.

“கவனம்!”

போகிற போக்கில் அவள் தம்பி சொன்ன வார்த்தைகள் தேனைத் தேளின் விஷமாக மாற்றும் மாயத்தைச் செய்துவிட்டன.

“அக்கா எழுதின கதை ஒண்ணு இந்த இஸ்யூல வந்திருக்காம்”

அவன் புரட்டிப் பார்க்காத பக்கங்களுள் ‘அகல்யா’ எழுதிய ‘கிணற்றுத் தவளை’யும் ஒளிந்திருந்ததை பாவம், வாத்துக் குஞ்சு வரதராஜன் அறிந்திருக்கவில்லை!

[‘இருக்கிறம்’ – 15 . 03. 2010 இல்பிரசுரமானது]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *