ஆறாத மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 8,197 
 

செந்திலின் அலுவலகம் நாலு மணிக்கு முடிகிறதென்று பெயர்தான். ஆனால், என்னவோ சாமி ஊர்வலம்போல மிக மிக மெதுவாக கார்கள் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன.

நகரின் `முன்னேற்ற`த்திற்காக நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதில், மழை பொய்த்திருந்தது.
சுயநலக்காரர்களான மனிதர்களின் போக்கு தனக்குப் பிடிக்கவில்லை என்ற சினத்தை சூரியன் காட்டிக்கொண்டிருந்தான், அந்த அந்திவேளையிலும் தகித்து.

கடந்த நிமிடத்துக்குள் கடிகாரம் மாறியிருக்குமோ என்று நப்பாசைப்படுபவன்போல், தன் இருக்கைக்கு முன்னாலிருந்த பச்சை நிற முள்ளில் மணி பார்த்தான் செந்தில். ஆறரை.

கோலாலம்பூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது ராவாங். `முப்பதே நிமிடங்கள்தாம் இந்த தொலைவைக் கடக்க!` என்ற விளம்பரத்தைப் பார்த்து, விலையும் மலிவாக இருக்கிறதே என்று, தனது சக்திக்கு ஏற்றபடி, ஒரு சிறு வீட்டை வாங்கியிருந்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் வீடு போய்ச்சேர ஒன்றரை அல்லது இண்டு மணிநேரம் பிடித்தது. அவனைப்போலவே, மாதம் மூவாயிரம் ரிங்கிட்டுக்குள் சம்பாதிக்கும் சுமாரான உத்தியோகங்களில் இருந்த பலரும் அதே சமயத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்ததால், ஒரே நொ¢சல்.

“முட்டாள்கள்! எல்லாருக்கும் காரை வித்துடறான்! ரோட்டையாவது அகலப்படுத்தறானா, அதுவும் கிடையாது!” என்று முகமறியாத யாரையோ திட்டியபடி ஒருவாறாக வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு பசியும், களைப்பும் ஒருபுறம். இயற்கை உபாதையைக் கழிக்க வேண்டிய அவசரம் இன்னொரு புறம்.

சந்தர்ப்பம் அறியாது, “என்னங்க! இன்னிக்கு அண்ணி வீட்டுக்குப் போயிருந்தன்ல! அவங்க கேட்டாங்க, முரளிக்கு மூணு வயசாகிடுச்சே, எப்போ அவனுக்கு ஒரு தம்பிப் பாப்பாவைக் குடுக்கப்போறேன்னு!” என்று, பூரிப்புடன் சொன்ன ரமாவின்மேல் ஆத்திரம் பொங்கியது.

“நமக்கு முரளி மட்டுமே போதும்னு ஒனக்கு எத்தனைவாட்டி சொல்லியிருக்கேன்!” என்று இரைந்தபடி உள்ளே ஓடினான்.

நாள் பூராவும் இடுப்பொடிய கணினி முன்னால் அமர்ந்து வேலை செய்துவிட்டு, அலுத்துச் சலித்து வீடு திரும்பியிருக்கிறார்! அவருக்கு வயிற்றுக்கு ஒன்றும் கொடுக்காது, தான் சாவகாசமாகப் பேச ஆரம்பித்தது தவறு என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் ரமா.

அவளுக்குத் தொ¢யாது, கணவனின் கோபத்திற்கான உண்மைக் காரணம்.

குடும்பத்தின் மூத்த மகனாகப் பிறந்த பாவத்திற்காக அவன் அனுபவித்த துன்பங்கள்.

ரமா மௌனமாக நீட்டிய சூடான டீ கோப்பையை கையில் எடுத்துக்கொண்ட செந்தில், தனிமையை நாடி, மொட்டைமாடிக்குப் போனான். பர்சை எடுத்துப் பிரித்தான். அதில், அப்பா அவனை அருமையாகத் தூக்கியபடி நின்றார்.

அவனுக்கு நினைவு தெரிந்து, அப்பா அவனைத் தொட்டதே கிடையாது — அடித்த தருணங்களைக் கணக்கில் சேர்க்காவிட்டால்.

படத்தில் அவனுக்கு இரண்டு வயதிருக்க வேண்டும் என்று தோன்றியது. அதற்குப் பிறகுதான் அப்பாவின் அன்பை பரிபூரணமாக ஆக்கிரமிக்க தம்பி பிறந்து தொலைத்துவிட்டானே!

பெற்ற மனம் பித்தாம். ஆனால், அந்தப் பிள்ளை மனம் கல்லாக, அவன் அயல்நாட்டுக்கே குடிபோய்விட்டான். பெற்றோருடைய திருமண நாளையும், பிறந்த நாட்களையும் நினைவு வைத்துக்கொண்டு, வருடந்தவறாது வாழ்த்து அனுப்புவதுடன் தன் கடமை முடிந்துவிட்டதென்று நினைக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் அவனும் ஒருவன்.

செந்திலும், பெற்றோரிடமிருந்து விலகி, சொந்த வீடு வாங்கிக்கொண்டான்.

இப்போது, பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களாய், அம்மாவும், அப்பாவும்.

வேண்டும், அவர்களுக்கு இது நன்றாக வேண்டும்.

தானும் அப்பாவைப்போல் ஆகிவிடக் கூடாது. குழந்தை முரளியிடம் வைத்திருக்கும் பிரியம் எக்காரணத்தைக்கொண்டும் குறைந்துவிடக் கூடாது. நண்பனாய், அவன் தோளில் கைபோட்டுப் பேசிப் பழக வேண்டும்.

பத்து வயதானாலும்,செல்லப்பிள்ளையாய், உரிமையுடன் அவன் தன் மடியில் உட்கார வேண்டும். உட்கார்ந்து, இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சரியோ, தவறோ, என்ன செய்தாலும், அதைத் தந்தையிடம் வெளிப்படையாக சொல்லும் தைரியசாலியாக அவன் வளர வேண்டும்.

இதெல்லாம் புரியாது, இந்த ரமா ஒருத்தி, வீட்டுக்குள் நுழையும்போதே தேவையில்லாததைப் பேசி, `மூடை`க் கெடுத்துவிட்டாள்!

ஒரு நாள், நண்பர்களுடன் மைதானத்தில் விளையாடிவிட்டு, சைக்கிளில் வேகமாக வரும்போது கல் இடறி ரோட்டில் விழுந்தான். முட்டி பெயர்ந்துபோக, காலெல்லாம் ரத்தம் ஒழுக அழுதபடி வீடு வந்தவனை எதுவுமே கேட்காது, பெல்டால் விளாசி, உடலெல்லாம் ரத்தம் ஒழுகச் செய்தவர் அப்பா. எதற்கு அடிக்கிறோம் என்றே புரியாது வதைப்பவரெல்லாம் மனிதரோடு சேர்த்தியே இல்லை.

இந்த அம்மா மட்டுமென்ன! அப்பா என்ன செய்தாலும் சா¢ என்பதுபோல் வாய் திறவாது இருப்பாள்.

`பெரியவங்க அடிச்சுத் திருத்தறப்போ நாம்ப குறுக்கே போனா, பிள்ளைங்களுக்கு அவங்கமேல இருக்கிற மரியாதை போயிடும்,” என்று அவள் அத்தையிடம் கூறியதை அவன் கேட்டிருக்கிறான்.

`இப்போது என்ன மரியாதை வைத்து வாழ்கிறதாம்!`

வருடத்துக்கு ஓரிரு முறை, அதுவும் சில நிமிடங்கள், அவர்களைப் போய் பார்ப்பதோடு சரி.

“யாரு வந்திருக்காங்க, பாருங்க!” என்ற ரமாவின் குதூகலமான குரல் ஒலித்தது.

இந்த இரவு வேளையில் யார் வந்திருக்கப் போகிறார்கள்? கசப்புடன் போட்டோவை பர்சினுள் உள்ளே செருகினான்.

அசுவாரசியமாக கீழே இறங்கி வந்தவன், தன் கண்களையே நம்ப முடியாது வெறித்தான்.

“என்னமோ, ஒன்னையும், முரளியையும் பாக்கணும்போல தோணிச்சு. அதான் அப்பாவையும் இழுத்துக்கிட்டு வந்துட்டேன்!” வாயெல்லாம் சிரிப்பாக அம்மா. பேசும்போதே மூச்சிரைப்பு. அளவுக்கு அதிக பருமன். பத்துப் பதினைந்து நிமிடங்கள் நடந்து வந்திருக்கிறார்கள் பேருந்து நிற்கும் பிரதான சாலையிலிருந்து.
பின்னால் விறைப்பாக அப்பா.

“ரெண்டு மணி நேரம் பஸ்ஸிலேயா அத்தை வந்தீங்க!” கரிசனமாகக் கேட்டாள் ரமா. பதிலுக்குக் காத்திராது, “ராத்திரிக்கு அரிசி உப்புமாதான் பண்ணினேன். ரெண்டு கத்தரிக்காயைச் சுட்டு, கொத்சு பண்ணிடறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க,” என்றபடி சமையலறைக்கு விரைந்தாள்.

“வேலையெல்லாம் எப்படிப் போய்க்கிட்டு இருக்கு?” அப்பாவின் உபசார வார்த்தைகள்.

வேலையாம் வேலை, பெரிய்..ய வேலை! இவர் படுத்தின பாட்டில், படிப்பில் எங்கே கவனமோ, அக்கறையோ போயிற்று! நன்றாகப் படித்திருந்தால்தான், தம்பியைப்போல் அவனும் வெளிநாட்டுக்குக் கம்பிநீட்டி இருப்பானே!

தலையாட்டி வைத்தான், `இவரிடம் எனக்கென்ன பேச்சு!` என்பதுபோல்.

“முரளி! பாட்டி ஒன்னைப் பாக்க வந்திருக்காங்க, பாரு!” என்று உள்ளே நோக்கிக் குரல் கொடுத்தான்.
குழந்தை துள்ளியோடி வந்ததும், “அம்மா! புதுசா ரோஜாச்செடி வெச்சிருக்கேன். பாக்கறீங்களா?” என்று மாடிப்படியை நோக்கிப் போனான்.

கணவரை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தாள் அம்மா. அவரால் படிக்கட்டில் ஏறமுடியாது. முழங்கால் வலி.

சாப்பிட்டு முடிந்த கையோடு, “போகலாமா?” என்று கேட்டுவிட்டு, வீட்டு வாசலுக்கு நடந்த அப்பாவுடன் தானும் விரைந்து சேர்ந்துகொண்டாள் அம்மா.

“இப்படி அவசரமா வந்துட்டுப் போறீங்களே, மாமா. ரெண்டு நாள் தங்கறமாதிரி வரக்கூடாது?” உரிமையுடன் கோபித்த மருமகளைப் பார்த்து லேசாகச் சிரித்தார்.

“பலகாரம் நல்லா இருந்திச்சும்மா,” என்றார் பதிலாக.

“அத்தையையும், மாமாவையும் நீங்க பஸ் ஸ்டாப்பில கொண்டு விடப்போறதில்ல?” சிறிது அதிர்ச்சியுடன் ரமா கேட்க, “எனக்கு நாளைக்குக் காலையிலேயே வெளியூர் கிளம்பணும். இப்பவே தூங்கினாத்தான் முடியும்,” என்று உரக்கச் சொன்னபடி, உள்ளே நடந்தான் செந்தில்.

(மலேசிய நண்பன், 28-3-10)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *