சில்க் ஸ்மிதா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,682 
 
 

விஜயலட்சுமி என்னும் பெண் வண்டிச்சக்கரம் படத்தில் ஸ்மிதாவாக அறிமுகமாகிய 1979 ஆம் ஆண்டுதான் நந்தகோபால் பிறந்தான். ஈரோட்டுக்கு பக்கம் கவுந்தப்பாடியில் நந்து பிறந்த போது ஸ்மிதாவுக்கு பத்தொன்பது வயது. ஸ்மிதாவாக மாறுவதற்கு முன்பாகவே விஜயலட்சுமிக்கு திருமணம் ஆகியிருந்தது. ஆனால் கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள். விஜயலட்சுமி சினிமாவில் கொடி பறக்கவிடப்போவதை பற்றி கனவு கூட கண்டதில்லை. ஆனால் அவள் விரும்பியோ விரும்பாமலோ அடுத்த பதினேழு வருடங்களுக்கு தென்னிந்தியாவில் ஸ்மிதாவின் ராஜ்ஜியம்தான். அதை சிலுக்கு ராஜ்ஜியம் என்றும் சொன்னார்கள்.

நந்தகோபாலின் அப்பா பொதுப்பணித்துறையில் ப்யூனாக இருந்தார். நந்து பிறந்த ஆறாவது நாளில் சில்க் ஸ்மிதாவின் வண்டிச்சக்கரத்தை சாந்தி தியேட்டரில் பார்த்தவர் கொஞ்சம் சொக்கித்தான் போனார். மனைவியிடம் ஒரு முறை சில்க்கை பற்றி புகழ்ந்து ’கோக்குமாக்காக’ வாங்கிக் கட்டிக் கொண்டார். அதன் பிறகு சில்க்கை பற்றி வீட்டிற்குள் வாய் திறந்து பேசுவதில்லை.

ஆறு வயது வரைக்கும் மற்ற குழந்தைகளைப் போலத்தான் நந்துவும் வளர்ந்தான். அதற்கு பின்பாகவே அவனுக்கு சில்க் ஸ்மிதா அறிமுகமானாள். நந்துவுக்கு ஸ்மிதா அறிமுகமாவதற்கு முன்பாகவே கோடிக்கணக்கான ஆண்களுக்கு அறிமுகமாகியிருந்தாள். அதில் பெரும்பாலானோருக்கு சீக்ரெட் லவ்வராகவும் மாறியிருந்தாள். சீக்ரெட் லவ்வர் என்பதை விடவும் ‘சீக்ரெட் வைப்பாட்டி’என்பது இன்னமும் பொருந்தலாம். ஆனால் இதெல்லாம் கற்பனையில் மட்டுமே சாமானிய ஆண்களுக்கு சாத்தியமானதாக இருந்தது.

வீடுகளில் அதிகம் டிவி யில்லாத அந்தக் காலத்தில் பஞ்சாயத்து போர்டு டிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க நந்துவை அவனது அம்மா தூக்கிப் போவாள். கவர்ச்சிகரமான பாடல்களை மறந்தும் கூட ஒளிபரப்பபடாத ஒளியும் ஒலியும் பாடல்கள் பெரும்பாலும் சைவமானதாகவே இருக்கும். நந்து ஒளியும் ஒலியும் பார்க்க போயிருந்த அன்று ஒரு நாளும் இல்லாத திருநாளாக சில்க்கி பாடல் ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதுவும் மூன்றாம் பிறையிலிருந்து “உருகுதே பொன்மேனி” பாடல். பெண்கள் டிவி நிலையத்தார் மீதும் சில்க்கின் மீது வசை பொழிந்தார்கள். ஆண்கள் பல்லிளித்துக் கொண்டிருந்தார்கள். நந்து சில்க்கை வைத்து கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை காமம் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஸ்மிதா மீதான ஒருவித ஈர்ப்பு. பாடல் முடிந்த பிறகாக நந்து அழ ஆரம்பித்துவிட்டான். சுற்றியிருந்தவர்கள் என்ன செய்தும் அழுகை கட்டுக்குள் வரவில்லை. வயிற்று வலியாக இருக்கும், பசியாக இருக்கும், பூச்சி ஏதாச்சும் கடித்திருக்கும் என என்னனவோ பண்டிதம் பார்த்தும் பலனில்லை. இருட்டுக்குள் குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே போனதுதான் காரணம் என்று குத்தம் கண்டுபிடிக்க மாமியாருக்கு ஒரு சாக்கு கிடைத்தது. ஆனால் நந்து ஸ்மிதாவின் பாடலை திரும்பக் கேட்டுதான் அழுகிறான் என்று ஒருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நந்து எட்டாம் வகுப்பு போகும் போது சில்க் சினிமா உலகின் உச்சாணிக் கொம்பில் இருந்தாள். அப்பொழுதுதான் நந்துவின் வயதையொத்த மாணவர்கள் சைட் அடிக்கவும் பெண்களைப் பற்றியும் பேசத் துவங்கியிருந்தார்கள். காதலைப் பற்றி பேசும் போதெல்லாம் தங்களுக்கு விருப்பமான பெண்களை ராதா, ரேவதி போன்ற நடிகைகளுடன் ஒப்பிடுவார்கள். எந்தப் பெண்ணையெல்லாம் அவமானப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை சில்க்குடன் ஒப்பிடுவார்கள். நந்து அவர்கள் மீது எரிச்சல் மிகுந்தவனாக நகர்ந்து போவான். இந்தச் சமயத்தில்தான் சில்க் மீதான நந்துவின் விருப்பம் அவள் மீதான பிரியமாக மாறியிருந்தது. அவளோடு மானசீகமாக உரையாடத் துவங்கியிருந்தான். அவள் அரைகுறையான உடைகளில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும் வழக்கமாக்கிக் கொண்டான்.

ஆனால் நந்துவின் பிரார்த்தனைக்கு சாமியும் சரி, சில்க்கும் சரி செவி சாய்க்கவில்லை. இருந்தாலும் சில்க்கின் புகைப்படங்களை நந்து சேகரித்துக் கொண்டிருந்தான். தன் அக்காவைப் போல புடைவையில், பக்கத்து வீட்டு பெண்ணைப் போல பாவாடை தாவணியில் இருக்கும் சில்க்கின் படங்களைத் தேடி எதுவும் கிடைக்காமல் கிடைத்ததை வாங்கி வைத்துக் கொள்வான். சினிமா நடிகர்களின் படங்களை வீட்டில் வைத்திருந்தாலே கடும் கோபம் கொள்ளும் நந்துவின் அப்பா இவன் நூற்றுக்கணக்கான சில்க்கின் படங்களை வைத்திருப்பதை பார்த்துவிட்டார். அத்தனை படங்களையும் தீயிட்டு எரித்ததோடு நில்லாமல் இவனை விளாசித் தள்ளிவிட்டார். நந்துவின் அம்மா தடுக்க முற்பட்டு மேலுதட்டை கிழித்துக் கொண்டாள். சில்க்கை தகாத வார்த்தைகளால் நந்துவின் அம்மாவும் அப்பாவும் திட்டினார்கள். பெண்களின் அவமானச் சின்னமாக சில்க் மீது முத்திரை குத்தப்பட்டிருப்பதை நந்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அடுத்த நாள் வலியோடு அமர்ந்து சில்க் ஸ்மிதாவுக்கு நந்து ஒரு கடிதம் எழுதினான். கடிதம் முடிகிறபாடில்லை. பக்கங்கள் நீண்டு கொண்டிருந்தது. அது ஸ்மிதாவின் மீதான காதலை வெளிப்படுத்தும் காதல் கடிதமாகவும் அவள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்தும் கடிதமாகவும் தொடர்ந்தது. கடிதத்தை முடித்த போது சில்க்கின் முகவரி அவனிடம் இல்லை. ”நடிகை சில்க் ஸ்மிதா, சென்னை” என்று எழுதி தபால்பெட்டியில் போட்டுவிட்டு அது அவளை அடைந்துவிடும் என்று மனப்பூர்வமாக நம்பினான். அடுத்த மூன்று வருடங்களுக்கும் சில்க்கிடமிருந்து பதில் கொண்டு வருவார் என போஸ்ட்மேனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் விசிறிகள் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களின் அடையாளத்தை அறிவித்துக் கொண்டபோது நந்து மனதிற்குள் மட்டுமே சில்க்கை கொண்டாடிக் கொண்டிருந்தான். எல்லோருமே சில்க்கை கொண்டாடினார்கள் ஆனால் தங்களின் மனதிற்குள் மட்டும் வைத்துக் கொண்டார்கள். வெளிப்படையாக சில்க்கின் ரசிகர் என்று அறிவித்துக் கொள்ள கூச்சப்பட்டார்கள்.

நந்து +2 வந்திருந்த போது சில்க் சினிமாவில் நடிப்பது வெகுவாக குறைந்திருந்தது. ஸ்மிதாவின் மீதான நந்துவின் காதல் வெகுவாக பெருகியிருந்தது. காதல் கவிதைகளை நூற்றுக்கணக்கில் எழுதிக் குவித்தான். இன்னமும் சில்க் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது நந்துவுக்கு சந்தோஷமாக இருந்தது. இன்னும் சில வருடங்களில் அவளை சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொள்ள முடியும் என்று முழுமையாக நம்பினான்.

காலாண்டுத் தேர்வு முடிந்து வகுப்புகள் ஆரம்பித்திருந்தன. வீட்டில் டிவி, சிடி ப்ளேயர் இடம் பிடித்திருந்தன. ஞாயிற்றுக்கிழமையன்று சில்க் நடித்திருந்த அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்துவிட்டு சில்க்கை நினைத்துக்கொண்டே நந்து தூங்கியிருந்தான். அடுத்த நாள் நந்துவின் தலையில் இடி மின்னல் எல்லாம் சேர்ந்து இறங்கியது. சில்க் இறந்துவிட்டதான செய்தி வந்தது. அவள் தூக்கிட்டு இறந்து போனாள் என்று அறிவித்தார்கள். எல்லோரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்துவிட்டு தமது வேலைகளை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். அதுவரையும் ஸ்மிதாவை சதைப்பிண்டமாக பார்த்த ஊடகங்கள் அவளின் இறப்புக்கான காரணங்களை அறிந்து கொள்ள துடித்தன. சில்க்கை வைத்து புதுக்கதைகள் புனையப்பட்டன. இறந்தபின்னும் சில்க் ஸ்மிதா அவர்களின் வியாபாரப்பண்டமாக இருந்தாள்.

நந்து அத்தனை செய்திகளையும் வெறுத்தான். அடுத்த இரண்டு நாட்களுக்கு பள்ளிக்கூடத்தில் இருக்கும் அரசமரத்தின் கீழ் படுத்துக் கிடந்தான். சோறு தண்ணியில்லாமல் கிடப்பவனை சமாதானப்படுத்த அவனது நண்பர்கள் மிகுந்த சிரமப்பட்டார்கள். ஒரு வாரத்திற்கு பிறகாக பள்ளிக்குச் செல்லத் துவங்கினான். அப்பொழுதும் அவன் களையிழந்தவனாகவே இருந்தான்.

நந்துவுக்கு இப்பொழுது முப்பத்தி மூன்று வயதாகிறது. வேலைக்கு போகிறான். நிறைய கவிதைகள் எழுதுகிறான். திருமணம் செய்து கொள்ளவில்லை. வீட்டில் வற்புறுத்தி தோற்றுப்போனார்கள். சில்க்கின் மீது பைத்தியமாகச் சுற்றுகிறான் என்பதும் அவர்களுக்கும் தெரியும். சில்க்கை பற்றி நண்பர்களிடம் அரிதாக பேசுவான். “ஒவ்வொரு பெண்ணுக்கும் வயதாகிவிடும். என் சில்க் தேவதை. அவள் இறக்கும் போது எப்படியிருந்தாளோ அதே மாதிரியேதான் நான் இறக்கும் போதும் இருப்பாள்” என்பான். நந்து இதைச் சொல்லும் போதெல்லாம் அவனது வரவேற்பறையில் இருக்கும் சில்க் சிரித்துக் கொண்டிருப்பாள். அது அவனுக்கு மட்டுமே கேட்கிறது.

– ஆகஸ்ட் 9, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *