கொடைக்கானலுக்குச் செல்லும் அந்த அரசுப் பேருந்து எதிர்பாராதவிதமாக வெள்ளியருவிக்குப் பக்கத்தில் நின்றது. ‘இங்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நிற்கும். எல்லாரும் இறங்கிப் பார்த்துவிட்டு விரைவில் வாருங்கள்’ என்று ஓட்டுநர் பணித்தார். அப்படி அவர் நிறுத்தியதற்குக் காரணம், அவருக்கு இணை இருக்கையில் அமர்ந்திருந்த வெள்ளை நிறப் பெண்தான். வெண்ணெய் நிறம். உருட்டித் திரட்டி எடுத்து ஒருவாரம் வைத்திருந்த வெண்ணெயின் நிறம். ஹிட்லர் அல்லது முசோலினியை ஈன்ற ஏதோ ஒரு நாட்டுக்காரியாக இருக்கக்கூடும். இயற்கையை ஆராதிக்க வந்திருந்தாள். அவளது உச்சரிப்புக்கோ நச்சரிப்புக்கோ இணங்கித்தான் அவர் வண்டியை நிறுத்திவிட்டார்.
கடைசிக்கு மூன்று வரிசைகள் முன்னதாக இரட்டை இருக்கையில் அமர்ந்திருந்த செல்வராஜும் சந்திரிகாவும் இறங்கினார்கள். முறையே 25, 19 வயதினர்கள். செல்வராஜுக்குக் கண்கள் பிரகாசமாக இருந்தன. சந்திரிகா கழுத்தில் தாலி இல்லை. அவள் கொடைக்கானல் வருவது இதுவே வாழ்வில் முதல்முறை. அவளது ஊரான ஊஞ்சவேலாம்பட்டியில் இருந்து பார்த்தால், கழுத்து வலிக்காத தொலை உயரத்தில் தினந்தோறும் இரவு கொடைக்கானல் சின்ன தேவலோகம் போல மஞ்சள் வெள்ளை விளக்கொளியுடன் தெரியும். அந்த ஈர்ப்பே செல்வராஜின் மீதாகிப் படிந்துவிட்டது போல அவனோடு கிளம்பி வந்திருக்கிறாள். கண்காணாமல் ஓடிப் பிழைக்க திருப்பூர் மாதிரி ஊர்கள் உள. இது ஒருநாள் பயணம். இரவுக்குள் வீடு திரும்ப வேண்டும்.
வெள்ளியருவி, படகோட்ட இயலாத செங்குத்தாக கண் தழுவி வீழ்கிறது. பார்க்கும் கண்ணெல்லாம் பனியைப் பூசுகிறது. விசை கொள்ளும் திவலைத் தெறிப்புகளில் காற்றைப் பின்திரையாகக்கொண்டு சின்னச் சின்ன வானவில்களைப் பரவவிடுகிறது. சூரிய வெளிச்சம் வானவில்லை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே என்பது மாதிரி காயாமல் காய்கிறது. சந்திரிகா இனிமைக் குரலில், ”சூப்பரா இருக்குது… இல்லீங்களா?” என்று கேட்டு, அவனது முழங்கையை ஒட்டி நின்றாள். மேனி பட்டதாலா, அருவி கண்டதாலா எனத் தெரியாமல் செல்வராஜுக்கு உடலெங்கும் குளிர்ப் புள்ளிகள் எழுந்து நின்று, எலுமிச்சம்பழம் போல ஆனான். மெய் பொய் எல்லாம் மறந்து, கால வெளியில் நீந்தும் தவளைகளைப் போல இருந்தவர்களை, பேருந்தின் புறப்பாட்டு ஒலி இடறியது. ஓடி வந்து இருவரும் தத்தமது இடத்தில் அமர்ந்தனர். பேருந்து மீண்டும் மேல்நோக்கிக் கிளம்பும்போது, சாலையோரம் குரங்குக் கூட்டம் தென்பட்டது.
செல்வராஜின் மனதுக்குள் சில மலைக் காலங்களும், மழைக் காலங்களும் வந்துபோயின. ஓட்டுநர் இந்த வண்டியை மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கொண்டுசேர்ப்பதற்குள், இந்த ஜோடியின் சுருக்க வரலாற்றைக் காணுதல் உத்தமம்.
செல்வராஜ், தென்மேற்குப் பருவக்காற்று வீசும் தேனிப் பக்கமுள்ள உப்புக்கோட்டைக்காரன். ஒரு கூறிலும் சேராத பள்ளிஇறுதியை முடித்தவன். முந்தையர் செய்த தவப்பயனாக தேனி, எடமால் தெருவில் புழுதி பறக்கும் சந்தடியில் எஸ்.டீ.டி. பூத் வைத்துள்ளான். சுருக்கியும் பெருக்கியும் படியெடுக்கும் வசதி உள்ள ஜெராக்ஸ் மெஷினையும் அதே புலத்தில் வைத்துள்ளான். இரண்டு நிறுவனங்களின் ரீசார்ஜ் கூப்பன்களும் விற்கிறான்.
இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவனது மூன்று மலைப் பயணங்கள் குறிப்பிடத் தகுந்தவை. முதலாவது ஆழியாறு ‘மன வளக் கலை’ மன்றத்துக்குப் போனபோது நடந்தது. மன வளத்துக்கான பூர்வாங்கத் தேர்ச்சிக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பிறகு, இவன் சென்றிருந்த குழுவும், சத்தியமங்கலத்தில் இருந்து வந்திருந்த ஒரு குழுவும் இணைந்து, ஏதாவது ஒரு பக்கம் போவோமே என முடிவெடுத்து, பொள்ளாச்சி ஆனைமலை தாண்டி டாப் ஸ்லிப் போவதெனத் தீர்மானித்தார்கள்.
சத்தியமங்கலக் குழுவில் சேதுலட்சுமி என்றொரு பெண் இருந்தாள். சந்தன மணம் அவளில் இருப்பதாக செல்வராஜ் உணர்ந்தான். கிடைத்த இடைவெளிகளில் புகுந்து பேசி, தன்னை நிலை நாட்ட முயன்றான். ‘என்ன பாட்டு பிடிக்கும்… கஜலா, பாப் ஸாங்கா? என்ன பூட்டு பிடிக்கும்… நவ்தாலா, காத்ரெஜ்ஜா?’ என்று பலவிதமாகப் பேசினான். அவளும் நன்றாகத்தான் பேசினாள். ”என்ன பிசினஸ் பண்றீங்க செல்வராஜ்?” என்றெல்லாம்கூடக் கேட்டாள். விலாசம் கேட்டதும், கொடுத்தாள். அவன் எழுதி நீட்டிய விலாசத்தையும், அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டாள். அன்றைக்கு மலையிலிருந்து இறங்கும்போது, மழை பெய்தது. மனதுக்குள் உட்கார்ந்து மணி அடித்துக்கொண்டே இருந்தாள். இவன் மாவிலையைக் குவித்து நெய் அள்ளி ஊற்றி ஊற்றி, நேசத் தீ வளர்த்தான். இரண்டு கடிதங்களில் அவற்றை மொழிபெயர்த்து அனுப்பினான். மூன்றாவது கடிதத்துக்கான முஸ்தீபில் இருந்தபோது, அவளிடம் இருந்து பதில் வந்தது, அவளின் கல்யாணப் பத்திரிகையோடு! டாப் ஸ்லிப் ஆகி, அச்சு முறிந்து போனான் செல்வராஜ்.
அடுத்துக் கொஞ்ச காலம் சும்மா இருந்த பிற்பாடு, மதுவந்தியின் தொடர்பு கிடைத்தது, வலை தொலைத் தொடர்பின் மூலமாக! நண்பன் விசாகன் வைத்திருந்த கம்ப்யூட்டர் நிறுவனத்துக்குப் போய் அமர்வதில், அது தொடங்கியது. ப்ளஸ் டூ முடிந்த காலத்தில், தினம் மத்தியானம் டவுன் பஸ் ஏறி வந்து டைப்ரைட்டிங் கற்றவன் செல்வராஜ். அப்பாவின் வற்புறுத்தல் அது. அவருக்கு இன்னும் கிராமப் பஞ்சாயத்துக் கிளார்க்தான் சகல நிர்வாக அதிகாரி. ஆக, செல்வாவுக்கு டைப்பும் தெரியும், டி.வியும் பார்த்திருக்கிறான் என்பதால், இரண்டும் கலந்த கம்ப்யூட்டர் சிரமமாக இருக்கவில்லை. புரொகிராம்கள் எழுதுமளவுக்கு விற்பன்னன் ஆகாவிட்டாலும் எழுத்தரட்டை, வாயரட்டை, மின்னஞ்சல் ஆகியவற்றில் அபார தேர்ச்சி பெற்றுவிட்டான். ஒரு நாள், மாலை நேரத்து சாட்டிங்கில் மதுவந்தி சிக்கினாள். கோயமுத்தூர்ப் பக்கமுள்ள துடியலூர்க்காரி. துடிப்பு, உரையாடலிலேயே தெரிந்தது. தன் மின்னஞ்சல் முகவரியும் தந்தாள். அதுவரை மின்னஞ்சலாக இருந்தது, பிறகு செல்வாவுக்கு மின்னூஞ்சலாக மாறியது. ஒரே வாரத்தில் அவனை நேரில் பார்க்க வேண்டும் எனும் ஆசையை அவள் தெரிவித்தபோது, அன்பு செல்போன் வரை நீண்டிருந்தது. பஞ்சு நகரமான கோவையில் சந்திப்பதைவிட மஞ்சு (மேக) நகரமான உதகையில் சந்திப்பது என உடன்பாடும், அது தாவரவியல் பூங்காவில் காலை பதினோரு மணிக்கு என இடந்தலைப்படுதலும் நடந்தன.
சந்திப்பு சுமுகமாக நடந்தது. அவளது கீற்று நெற்றியும், பனிக்காற்றின் வெற்றியும் செல்வாவைப் பரவசத்தில் தள்ளியிருந்தன. கடவுள்கள் காத்திருக்கலாம்; சாத்தான்களுமா? அவனது நாவில் மேற்படியான் வந்து அமர்ந்தான். சொன்னான்… ”ஐ லவ் யூ மது!” அவள் கண்ணுக்குக் கண் பார்த்துக் கேட்டாள்… ”நீங்க யாரு?”
என்ன ஒரு கேள்வி! குளுமையான மலை வாசஸ்தலத்திலும் இப்படியெல்லாம் வினவப்படுவதாக சிலருக்கு நேர்ந்துவிடுகிறது. மதுவந்தியே தொடர்ந்தாள்… ”உங்களை நல்ல ஃப்ரெண்டுன்னு நெனச்சேன்!” ‘நல்ல ஃப்ரெண்டுன்னா காலத்துக்கும் புழுங்கியே சாக வேண்டியதுதானா?’ என மனதுக்குள் நினைத்தான் செல்வராஜ். ”மிஸ்டர் செல்வராஜ்! இங்கே நான் எத்தனை முறை, எத்தனை ஃப்ரெண்ட்ஸோட வந்திருப்பேன் தெரியுமா! யாருமே உங்களை மாதிரி சொன்னதில்ல. அப்படிச் சொல்லியிருந்தா… காட்! இமாஜின் பண்ணவே முடியல. பொட்டானிக்கல் கார்டன்ல இருக்கிற ஒவ்வொரு மரத்தடியிலயும் எனக்கு ஒரு கல்யாணம் நடந்திருக்கும். சே… மனசைப் புண்படுத்திட்டீங்க. குட் பை மிஸ்டர்!” என்று சொன்னவள், காட்சி நிகழ்வாக அவனது கண் முன்னேயே அவனது அலைபேசி எண்ணை அழித்துக் காட்டிவிட்டுப் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். தாவரத் தோட்டத்து மரங்களின் இலைகள் அளவுக்கு அவளுக்கு நண்பர்கள் பெருகக்கடவது எனப் பல்கடித்து வாழ்த்திவிட்டு, தேனிக்குப் பேருந்து பிடித்தான் செல்வராஜ்.
‘தூரம், தொலைவெல்லாம் நமக்குக் கூடி வராது’ என்று ஆறு மாதத்துக்கு முன், பழைய பெயராக இருந்தாலும் பரவாயில்லை என மாக்கயன் கோட்டையில் நாகம்மாளைக் காதலித்தான். நாகம்மாளும் தோழியும் பழமுதிர்ச்சோலை போவதாகப் பயண ஏற்பாடு, பயணி ஏற்பாடு எல்லாம் செய்து, அவள் ஏறுகிற பேருந்திலேயே ஏறி, மதுரை சென்று, கடைசியில் பெரியார் பேருந்து நிலையத்தில்தான் அவள் அருகில் அமர முடிந்தது. தோழியின் 20 மீட்டர் இடைவெளிக் கண்காணிப்பில் அவர்களது சந்திப்பு நடந்தவண்ணம் இருந்தது. காதல் உரையின் ஊடாக மாலழகர், வேலழகன் மற்றும் அவர்தம் பிராட்டியார்களையும் சேவித்தார்கள்.
மாக்கயன் கோட்டைக்கு வந்த மறுகாலில் தோழி நாகுவின் வீட்டில் வத்திவைத்தாள். அந்த இரவே நாகுவின் மச்சான்மார்கள், பங்காளிகள் வகைப் பட்டாளம் செல்வராஜின் வீட்டில் கூடி நின்றது. கைகளில் வெவ்வேறு நீள, அகலங்களில் நவீன மற்றும் கற்கால ஆயுதங்கள். செல்வாவின் அப்பாவிடம், ‘நியாயத்தைச் சொல்லுங்க’ என்பதை, ‘ரத்தத்தைக் கொடு’ என்கிற தொனியில் கேட்டார்கள். யாரோ ஒரு மரியாதைக்காரப் பெருசு நடுவில் புகுந்து, ”ஏப்பா! ஊசி இடங் குடுக்காம நூலு நுழையுமா?” என ஆரம்பித்து, ரத்தப் பலியை நிறுத்துகிற பாவனையில் கூட்டத்தைக் கொண்டுசென்றார். மறு வாரமே, அரிவாள் மச்சான் ஒருவனுக்கு நாகம்மாள் வாக்கப் பட்டாள்.
செல்வராஜின் தகப்பனார், ”நீ தேனியிலயே ஏதாச்சும் லாட்ஜுல தங்கிக்கப்பா! உம் மூஞ்சியப் பாக்கக் கஷ்டமா இருக்குது” என்று சொல்லிவிட்டார். நண்பர்கள் இப்போது, ”டேய்… அது பழமுதிர்ச் சோலை இல்லடா, பழம் உதிர் சோலை” என்று வார்த்தை விளையாட்டு நடத்துகிறார்கள். பெரியகுளம் போகிற சாலையில், ரயில்வே லைன் தாண்டி ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு, சாதிப் பெயர்கள் தாங்கிய உணவகங்களில் சாப்பிட்டு, ஜீவித்து வருகிறான் செல்வா.
இறுதியாக சந்திரிகா… தேனியிலிருந்து பெரியகுளம் போகும் சாலையில் அல்லிநகரத்தை அடுத்துக் கொஞ்ச தூரத்தில், வலப்புறம் திரும்பினதும் கிடைத்துவிடும் ஊரைச் சேர்ந்தவள். பத்தாம் வகுப்பு வரை படிப்பு. அவளது தாத்தா, கல்விக்குப் புகழ்பெற்ற பாளையங்கோட்டையில், ஆங்கில அரசுக்கு எதிராகச் சிறை இருந்தவர். அதற்கும், சந்திரிகா பத்தாவதில் ஆங்கிலத்தில் தோற்றதற்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. இரண்டு ஆண்டுகள் வீட்டில் சும்மா இருந்தவள், செல்வராஜின் பூத்துக்குப் பக்கமுள்ள சிறு ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனைப் பெண்ணாக, எண்ணூறு ரூபாய் சம்பளத்தில் பணிபுரிகிறாள். சமீபத்தில் சுடிதார் அணியப் பழகியுள்ளாள். இடுப்பு வரை தொங்கும் கைப்பை ஒன்று வைத்திருக்கிறாள். உடும்புத் தோல் நிறமுடையது அது. சேதுராமன், சிட்டுக்குருவி ஆகிய பேருந்துகளில் செல்லும் அவள், கூட்டம் அதிகமான சமயங்களில் அந்தப் பையை முதுகுப்புறம் தள்ளிக் கேடயமாக மாற்றிக்கொள்வாள். செவ்வரியோடாத முட்டை வெள்ளைக் கண்கள். அழுந்தலும் பிதுங்கலும் இல்லாத நடுவாந்தரக் கண்கள். கண் மை இட்டாற்போன்ற ஒரு தோற்றத்தை கருவளையங்களே தருகின்றன. இமைப்பு வேகத்தைப் பாதியாக்கினால், ஒருவித சொக்கவைக்கும் அல்லது சொக்குகிற தோற்றம் கிடைக்கும். செல்வராஜுக்கு அவளைப் பிடித்துவிட்டதன் காரணம், கண்களுக்கு உட்பட்டதாகவோ அப்பாற்பட்டதாகவோ இருக் கலாம்.
எப்படியோ… இருவரும் கொடைக்கானல் வந்தடைந்தார்கள். பேருந்தில் இருந்து இறங்கியபோது, முன் இருக்கை வெள்ளைக்காரப் பெண் இவர்களைப் பார்த்துச் சிநேகமாக ஆசீர்வாதம் போலப் புன்னகைத்தாள். கண்வ ரிஷியிடம் இருந்து விடுபடும் சாகுந்தலா போல சகலவற்றின் மீதும் பிரியமாகித் ததும்பிக்கொண்டு இருந்தவள் அகன்ற பின், மொய்க்கும் வண்டியரிடையே ஒரு டாக்சி பிடித்தார்கள். ”முதல்ல சூசைட் பாயின்ட் பாத்துடுங்க!” என்று பதிலுக்குக் காத்திருக்காமல், கியர்களில் தாவினார் டிரைவர். பிழைத்துக்கிடந்தால் மற்றதைப் பார்க்கலாம் என்பது அவரது எண்ணம்போலும்! நல்லவேளையாக, அதைப் பச்சைப் பள்ளத்தாக்கு எனப் பெயர் மாற்றி வைத்திருக்கிறார்கள். உள்ளத்தைக் கொள்ளும் பள்ளத்தாக்கு. அடுத்து, தூண் பாறைகளுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்து, ”பக்கத்துலயே ‘குணா’ குகை இருக்கு. பாக்கறதுன்னா பாத்துட்டு வாங்க. நடந்தே போய்ட்டு வந்திரலாம். நான் வெயிட் பண்றேன்” என்றார் கரிசனமாக.
குங்கிலயத் தோப்பின் தேரிமணற் சரிவினூடே நடந்தார்கள். தனிமையாய் இனிமையாய் உணர்ந்தார்கள். காற்றில் ஈரப்பதம் அதிகரித்துக்கொண்டு இருந்தது. குகையின் அனுமதிக்கப்பட்ட எல்லையில் நின்று, எட்டிப் பார்த்தார்கள். மெல்லிய குரலில் செல்வா, ”அபிராமி… அபிராமி” என்று கத்தினான். ”யாரது அபிராமி?” என்று சந்திரிகா செல்லஞ் சிணுங்கினாள். ”நீதான் என் அபிராமி! ராமி, நான் உன் ராமன்” எனக் கவிதையாக மிழற்றினான் செல்வா.
அடுத்து, கோக்கர்ஸ் வாக்கில், பால் பிடித்துப் பாதி நாட்களே ஆன மக்காச்சோளத்தை, உடன் பொருட்களான எலுமிச்சஞ்சாறு, உப்பு, மிளகாய்த் தூளுடன் உறிஞ்சிக் கடித்தபடி நடந்தார்கள். வேன் ஆலன் மருத்துவமனை வழியாக நடந்து மேலேறி, உயரக் கோபுரம் கண்டு, வானொலி நிலையம் பார்த்தார்கள். லூர்து மாதா திரு ஆலயத்தை வியந்தார்கள். பிரையண்ட் பூங்காவில் பூக்களும் போதிமரமும் பார்த்தவர்கள், வெளியே வந்து ஏரியைச் சுற்றி நடந்தார்கள்.
நேரம் கடுகி விரைய, படகுப் பயணத்தைக் கைவிட்டார்கள்.
”சூதாடும் பாறை போலாமா? வட்டக்கானல் தாண்டிப் போகணும்!” என்று செல்வா கேட்டதற்கு, சந்திரிகா தலையசைத்து மறுத்தாள். ”அதுக்கெல்லாம் டயமில்ல! குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு மட்டும் போயிட்டு, சட்டுனு ஊருக்குக்கிளம் பிடுவோம்!” என்றாள்.
குறிஞ்சி ஆண்டவரைக் கும்பிட்டுவிட்டு, உள்ளே இரண்டே நிமிடங்கள் மட்டும் உட்கார்ந்துவிட்டு வெளியே வந்தபோது, அவளது கைப்பை அவளிடத்தில் இல்லாததை செல்வா பார்த்தான்.
”பை எங்கே?”
”கோயிலுக்குள்ளே கழட்டிக் கீழே வெச்சிட்டுத்தான பேசிட்டிருந்தம்? நீங்க எடுத்தாந்திருப்பீங்கன்னு நெனச்சேன். சரி, வாங்க!”
இருவரும் மீண்டும் கோயிலுக்குள் சென்றபோது, மதிலின் மீதொரு குரங்கு அந்தப் பையைத் திறக்கும் முறையை ஆராய்ந்துகொண்டு இருந்தது. செல்வா சட்டென புத்திசாலிக் குல்லா வியாபாரியாகி, தனது பர்ஸை அதன் பார்வையில் படுமாறு கீழே எறிந்து காட்டினான். குரங்கு அந்தக் கதையை அறிந்திருக்கும் போல… மசியவில்லை.
”ஏங்க, அது உங்க பர்ஸையும் தூக்கிட்டுப் போயிறப் போகுது! அப்புறம் நாமளும் இங்கியே மரம் மரமாத் தாவிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!”
சந்திரிகா அப்படிச் சொன்ன பின், பொருளெறியும் முயற்சிகளைக் கைவிட்டு, பழம் வாங்கிப் போட்டான். ‘நான் பார்க்காத பழமாடா..!’ என்பது போல அவனைப் பழித்துவிட்டுச் சடாரென மதில் நீங்கி, எங்கேயோ தாவி மாயமாயிற்று. தென்னிலங்கைக்கேகூடச் சென்றிருக்கலாம்.
இருவரும் நிலையம் வந்து, பேருந்து பிடித்தார்கள். டிக்கெட் எடுத்துவிட்டு, ”பைக்குள்ள என்ன இருந்துச்சு? பணங் காசு நிறைய வெச்சிருந்தியா?” எனக் கவலையாக வினவினான் செல்வராஜ்.
”ஒண்ணுமில்ல. பை போனாப் போகட்டும். விடுங்க!”
”என்கிட்ட சொல்றதுக்கென்ன, சந்திரி?”
”அதான் டோன்ட் ஒர்ரின்னு சொல்லிட்டன்ல… அப்புறமென்ன? விடுங்க!”
பேருந்து கீழ்நோக்கி இறங்க ஆரம்பித்தது. சூரியனின் சுவடு மெள்ளத் தேய்ந்து வந்தது.
”அட, என்னன்னுதான் சொல்லேன்?”
”பொட்டு, கொஞ்சம் பவுடரு, ஒரு கண்ணாடி, சீப்பு, கர்ச்சீப்… அவ்வளவுதான்!”
செண்பகனூரை வண்டி தாண்டும்போது, ”அவ்வளவுதானா?” என அனத்தினான்.
சந்திரிகா, செல்வாவைஏறிட்டுப் பார்த்தாள். ”உங்க போட்டோ கூட வெச்சிருந்தேன்!” அவள் சிரிக்க, அவனுக்கு அங்கமெல்லாம் குளிர்ந்து, கொஞ்சம் நடுக்கம்கூட எடுக்க ஆரம்பித்தது.
சட்டென அவள் ஜன்னலோரம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள்… ”அது போனாப் போகுது!”
ஒரு கணம், அவனது சப்த நாடிகளும் நின்று, நிசப்த நாடிகள் ஆயின. சாணை வட்டத்தில் கத்தியைக் கொடுத்தது போலப் பொறிகள் கிளம்பின.
‘போனாப் போகுதா? இதுக்கு என்ன அர்த்தம்? என்னென்னவோ யோசித்தோமே! சந்திரிகா பொண்ணு அடுத்த வாரம் கல்யாணப் பத்திரிகை நீட்டிருவாளோ!’ எனப் பலவிதமாக எண்ணி, இறுக்கமடைந்தான். ‘கொடைக்கானல்’ எனத் தனக்குள்ளாகச் சொல்லிப் பார்த்து, ‘சந்திரி எனது கொடை’ என நினைத்தான். முகத்தில் விகசிப்பு பூத்தது. சட்டென விகுதிப் பகுதி வந்து, மனதில் கொக்கி போட்டது. கானல்! ‘ஐயகோ’ என ஆகியது அவனுக்கு.
மூளை சூடேறியது. கொதிப்பைத் தவிர்க்க, ”என்ன சந்து, பேசாம வர்றே?” என்றான்.
முகத்தில் மென்சிரிப்புடன், ”எங்க ஊரு தெரியுதான்னு பார்க்கிறேன்” என ஜன்னலுக்கு வெளியே பார்வையைப் போட்டு, சுடிதாரின் சல்லாவால் தன்னைப் போர்த்திக்கொண்டாள். கிர்ரென்று ஓர் இரைச்சல்! பேருந்து வெள்ளியருவியைக் கடந்துகொண்டு இருந்தது. மறுபடியும் செல்வா குழம்ப ஆரம்பித்தான். மொத்தத்தில், அது நிலவொளியில் வானவில்களைத் தோன்றச் செய்வது பற்றியதாக இருந்தது.
– மார்ச் 2008