கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 11,691 
 
 

நான் சியாமளாவின் வீட்டைத்தேடிக் கண்டு பிடித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. என்றோ பார்த்திருந்த ஞாபகத்தில்தான் தேடி வந்தேன். எந்தத் தெரு, கதவு எண் என்ன என்று எதுவும் மனதில் இல்லைதான். ஆனால் வீதி ஆரம்பத்தில் இருக்கும் போஸ்ட் ஆபீசும் அதன் நீட்சியாக நீண்ட அந்தச் சாலையும் மட்டும் நினைவில் இருந்தன.

வீட்டு வாசல் முன்னால் வண்டியை நிறுத்தியபோது, வெளியே வெறுமே கொண்டிதான் போடப்பட்டிருந்தது. உள்ளே போகலாம் என்று எண்ணியவனாய் நுழைந்தேன். ஏதேனும் நாய் குரைக்குமோ என்ற தயக்கம் பிறந்தது. வாசலில் அவள் கணவன் பெயரைத் தாங்கி பலகை ஒன்று தொங்கியது. அந்தப் பெயரை ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அவர் முகம் உடனே ஞாபகத்துக்கு வந்தது. மென்மையான உதட்டோரச் சிரிப்பு மனதில் தோன்றியது.

கல்லூரிப் பேராசிரியர் அவர். வேலை கிடைக்கும் முன் ஊரில் இருந்தபோது சியாமளாவுக்கு அவர் ட்யூஷன் எடுத்தார். நானும் அதே ஊர்தான். அப்பொழுதெல்லாம் சியாமளாதான் அந்த ஊருக்கே அழகி. நண்பர்கள் நாங்கள் குடியிருந்த அந்த மூன்று தெருக்களுக்கும் ராணி. அழகி என்றால் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பார்களே, அது போல் இல்லை. உண்மையிலேயே அவள் அழகிதான். பார்ப்பவன் எவனும் அந்த அழகில் சொக்கித்தான் போவான்.

அவர் ட்யூஷன் சொல்லிக் கொடுக்கச் சம்மதித்தது கூட அந்தக் காரணமாக இருக்கலாம். இல்லை அவளே திட்டமிட்டு, நல்ல குடும்பம் என்று நினைத்து வலையை வீசி நிறைவேற்றிக் கொண்டாளோ என்னவோ? இவர் அவளுக்குப் பாடம் நடத்த, அவளும் இவருக்குப் பாடம் நடத்திவிட்டாள். காதல் பாடம். அப்படி தம்பதிகள் ஆனவர்கள்தான் அவர்கள் இருவரும்.

சியாமளாவுக்கு அவள் அழகைப்பற்றி அவளுக்கே அதீதப் பெருமை இருந்தது. தெருவில் போகும்போது யாரையும் சற்றும் திரும்பிப் பார்க்காமல், முகத்தில் எந்த உணர்ச்சியையோ, பாவத்தையோ காட்டாமல் (ஊஹூம்! அதை அப்படிச் சொல்லக் கூடாது. தான் அழகி என்ற பெருமிதம் அவள் முகத்தில் இருந்ததே!) நெளிந்து நெளிந்து அவள் நடக்கும் நடை இருக்கிறதே!! அந்த நேரத்தில் அவள் பின்பக்க அழகு, அதன் ட்டுக், ட்டுக் என்ற அசைவு!? அப்பப்பா! அதை எண்பது வயதுக் கிழவனும் பார்க்காமல் விடமாட்டான், சத்தியம்! அப்படியானதொரு ஈர்ப்புச் சக்தி அவளிடம் இருக்கத்தான் செய்தது.

நடந்து நடந்து அவள் இடை அப்படிச் சிறுத்து வளைவு கண்டு போனதா? அல்லது இயற்கையாகவே அவள் இடையழகு அப்படி அமைந்து போனதா?

நாங்கள் பள்ளித் தோழர்கள் நான்கைந்துபேர் இருந்தோம். எங்களுக்கு வேலையே அவளையும் அழகாய் இருப்பதைப்போல் தோன்றும் வேறு சிலரையும் பார்த்துக்கொண்டு அலைவதுதான். அந்த வயசுக்கு அது இயற்கைதான் என்று சொல்ல வேண்டும்.

என் வகுப்புத் தோழனின் தங்கை தாரா என்று ஒருத்தி இருந்தாள். அவளும் கொள்ளையழகு. இது தனிக்கதை. அதனால்தான் மேற்கண்ட அழகில் சேர்க்கவில்லை. இதுவும் சுவாரஸ்யமானது. சொல்லாமல் விட்டால் பின்னால் நீங்கள்தான் என்னைத் திட்டுவீர்கள்.

நண்பனின் தங்கை நமக்கும் தங்கைதான். அது மரபு, ஒழுக்கம். ஆனாலும் நண்பனிடம் இதுபற்றி எதுவும் காண்பித்துக் கொள்ளாமல் எங்களுக்கு அந்த தாராவிடம் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவனுக்குத் தெரியாமல் நாங்கள் அவளைக் கவனித்தோம். கண்காணித்தோம். ஏன் கண்காணித்தோம் என்று சொல்கிறேனென்றால் பெண்களின் இருப்புதான் அதற்குக் காரணம். சாதாரணமாக இருந்தால் ஒன்றும் தெரியாது. நமக்கும் எதுவும் தோன்றாது. ஆனால் ஒரு பெண்ணின் வருகையிலும், பேச்சிலும் அவள் அறிந்தே ஒரு செயற்கைத்தன்மை இழையோடுமானால், அங்கே ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் பொருள். அப்படித்தான் தாராவும் இருந்தாள். அவளின் இருப்பு அவளைக் காட்டிக்கொடுத்தது எங்களிடம்.

தட்டச்சுப்பள்ளியில் சுருக்கெழுத்துப் படித்தாள் தாரா. சொல்லிக்கொடுத்தவன் கந்தசாமி. அழகுக்கும் அவனுக்கும் அப்படியொரு தூரம். ஆள் கருப்பு. அம்மைத் தழும்புகளோடு கொண்ட முகம். அது சரி, வாத்தியாருக்குப் பாடம் நடத்தத் தெரிந்தால் போதாதா? அதை மட்டும் ஒழுங்காகச் செய்தான் கந்தசாமி.

ஒரு ஆசிரியருக்கு அதுதானே அழகு? எப்படி அவன் வலையில் தாரா விழுந்தாள் என்பதுதான் ஆச்சரியம். அவள் விழுந்தாளா? அல்லது அவன் விழுந்தானா? பருவ வயதில் எதில், எங்கே, எப்படி, ஈர்ப்பு ஏற்படும் என்று யார் கண்டது? மேஜைக்குக் கீழே கால்கள் விளையாடின. கண்டோம் ஒரு நாள். தட்டச்சுப் படிக்கும் எங்களுக்கு தள்ளியிருக்கும் அந்தக் கால்கள் நன்றாகவே தெரிந்தன. அது அந்த மடையனுக்குத் தெரியவில்லை என்பதுதான் பெரிய மடத்தனம். மோகம் அவன் கண்களையும், சிந்தனையையும் மறைத்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

அந்தப் பட்டுக் கால்கள், வெடிப்பு விழுந்த அவன் கால்களில் மிதிபடுகிறதே? வேதனை மிகுந்தது எங்களுக்கு. வகுப்பு முடிந்து தனிப் பொட்டல்வழி, கொட்டாரம் பகுதியில் ஒற்றையாய் அவள் வீடு வந்து கொண்டிருக்கையில் மிரட்டினான் பாண்டித்துரை.

“என் நண்பனோட தங்கச்சி நீ…அதனால சொல்றேன்…ஒழுங்கா இரு…” என்றான்.

நாங்கள் நால்வரும் சேர்ந்து நகரத்தில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அவனுக்கு ஒரு மொட்டைக் கடுதாசி போட்டோம். அலறியடித்துக்கொண்டு வந்து சேர்ந்தான் அவன். அந்தக் கடுதாசி நாங்கள்தான் போட்டது என்று அவன் நினைக்கவேயில்லை. துளியும் சந்தேகமில்லை அவனுக்கு. அதுபற்றி அவன் யோசித்தானா என்று கூடத் தெரியவில்லை. அவள் தங்கையின் நடவடிக்கைகள் பற்றியும் எங்களிடம் அவன் சொல்லவும் இல்லை. பகிர்ந்துகொள்ளக்கூடிய விஷயமில்லை என்று நினைத்தானோ என்னவோ?

நாங்கள் அந்தக் கந்தசாமியை வாக்கிங் கூட்டிக்கொண்டு போய் ஒரு மலையடிவாரத்தில் வைத்து எச்சரித்தோம். எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கமாட்டேன் என்று விட்டான்.

“நானா ஒண்ணும் போகலையே…அவளா வந்தாள்”- இது அவனின் (அ)லட்சிய பதிலாய் இருந்தது.

“வேணும்னா அவளை நிறுத்திக்கச் சொல்லுங்க…” என்றான் விட்டேற்றியாய்.

பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று முதல்வரிடம் சொல்லி சுருக்கெழுத்து ஆசிரியரை மாற்றினோம் நாங்கள்.

பாலு என்று ஒருவர் புதிதாக வந்து சேர்ந்தார். பாவம் அவர். ரொம்பவும் தன்னிரக்கம் உள்ள மனிதர் தன்னம்பிக்கையோடு அவர் ஆசிரியராய் இருந்து கழிப்பதே பெரிய விஷயமாய் இருந்தது. பையன்கள் அவரைக் கேலி செய்தார்கள். தன்னிடம் உள்ளதைத்தானே செய்து காண்பிக்கிறார்கள் என்று கண்டு கொள்ளாமல் இருந்தார் அவர். அந்த அளவுக்கு ஒரு அப்பாவி. படுபாவி!!

பாலு சுருக்கெழுத்து ஆசிரியராய் வந்தப்புறம் தாரா காணாமல் போனாள். அவளுக்குக் கல்வி முக்கியமில்லை, கலவிதான் முக்கியம் என்று உறுதிப்பட்டது எங்களுக்கு. அந்த ஆண்டு சுருக்கெழுத்துத் தேர்வு எழுத நாங்கள் நகருக்குப் போயிருந்தபோது தாராவும் வந்திருந்தாள். அப்பொழுதெல்லாம் நகரில் மட்டும்தான் தேர்வு மையங்கள் இருந்தன. இவள் எப்படி வந்தாள் என்று நாங்கள் யோசித்தபோது, பிரைவேட்டாக விண்ணப்பித்து வந்திருக்கிறாள் என்ற உண்மை புலப்பட்டது எங்களுக்கு. அதற்கு வழி வகுத்துக்கொடுத்தவன் அந்தக் கந்த(சாமி)வேள்தான்.

அவளோடு வந்து லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் அவன். எதற்கும் துணிந்தாயிற்று என்று தோன்றியது எங்களுக்கு. அதற்குப்பின் கொஞ்ச நாளில் தாராவுக்கு மத்திய அரசில் வேலை கிடைத்தது. படிப்பிலும் அவள் கெட்டிக்காரிதான் என்பதால் அது சாத்தியமாகியிருக்க வேண்டும். வேலைக்குப் போன இடத்தில் ஒரு மலையாளியை இழுத்துக்கொண்டு ஓடினாள் தாரா.

மனைவி, குழந்தைகளோடு வாழ்ந்துகொண்டிருந்த கந்தசாமி அனுபவித்தவரை லாபம் என்று அத்தோடு விட்டு விட்டான். தாராவின் மொத்தக் குடும்பமும் அவளை அத்தோடு தண்ணீர் தெளித்து விட்டது.

இவள் கதையைப் பார்க்கும்போது, நம்ம சியாமளாவின் கதை எவ்வளவோ தேவலையே என்று தோன்றியது எங்களுக்கு. அவளாவது குறிவைத்து ஒருத்தனை, அதுவும் விவரமாகத் தன் ஜாதியிலேயே வசதி வாய்ப்பாய்ப் பிடித்து உட்கார்ந்து கொண்டாள். தாரா மாதிரி அலையவில்லையே? நண்பர்களுக்கெல்லாம் படிப்படியாக வேலை கிடைத்துப் போக ஒவ்வொருவரும் ஊரைவிட்டுப் பிரிய ஆரம்பித்தோம். வெவ்வேறு இடங்களுக்கு என்று தூர தூரமாகப் பிரிந்து போக, பிறகு தொடர்பே இல்லாமல் போனது.

எனக்கு வேலை கிடைத்து, எங்கெங்கோ சுற்றியலைந்து ஒரு வழியாக இந்த ஊருக்குள் வந்த பொழுதில்தான் சியாமளாவைச் சந்தித்தேன். அதுவும் என் அலுவலகத்திலேயே. எனது அந்தத் தலைமை அலுவலகத்தில் அவளும் இருப்பாள் என்றே நான் நினைக்கவில்லை! அவளுக்கும் என் துறையிலேயே வேலை? எங்கு போனாலும் உயர்ந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் என்பது அவள் பிரதிக்ஞையோ என்னவோ? அந்தத் தலைமை அலுவலகத்தில் புதிதாக சர்வீசுக்கு வந்த இளைய பணியாளர்கள் நுழைவதே கஷ்டம். எல்லாரும் பல்வேறு ரூப செல்வாக்குள்ள கைகள்! அதில் ஒன்றைப் பற்றித்தான் நானே உள்ளே நுழைந்திருந்தேன். அதற்கே ஒம்பாடு எம்பாடு ஆகி விட்டது என் பிழைப்பு!

நகரின் வெளியே ஏதேனும் ஒரு அலுவலகம் கிடைத்தால் போதுமென்பது என் எண்ணமாக இருந்தது. என் அதிர்ஷ்டம் பாருங்கள், அந்த அலுவலகத்திலேயே ஒரு இடம். அப்படியானால் எப்படி ஆளைப் பிடித்திருப்பேன் என்ற நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். எனக்கும் கொஞ்சம் சாமர்த்தியம் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் இந்த இடத்தில் கண்டிப்பாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வெள்ளைக்காரன் காலத்தில் குதிரை லாயமாக இருந்தது என்றார்கள் அந்தக் கட்டிடத்தை. அங்குதான் எங்கள் அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது.

நீண்டு கிடக்கும் பட்டாசாலையின் நெடுக நடந்து கடைக் கோடிக் கூண்டு போன்ற அறையில் என் இருக்கை இருந்தது. தலைக்கு மேலே பெரிய மண்டையோடு எனக்கென்ன என்று விடாமல் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு காற்றாடி. நகரில் சில சினிமாத் தியேட்டர்களில் அப்படியிருப்பதைப் பார்த்திருக்கிறேன் நான். எந்நேரமும் தலையில் இறங்கிவிடுமோ என்பதுபோல் படம் பார்க்கவே விடாது அது.

உள்ளே நுழையும்போதே வராண்டாவை அடுத்த முதல் ஹாலில் சியாமளா அமர்ந்திருப்பாள். அந்த ஹாலில் மட்டும் அத்தனையும் புதிய காற்றாடிகள். எல்லாம் அவள் யோகம்!! முதல் நாள் நுழைகையிலேயே நான் அவளைக் கண்டு பிடித்து விட்டேன். ஆனால் அவளுக்கு என்னைத் தெரியவில்லை. உண்மைதான். நாங்கள்தானே அவளைப் பார்த்தவாறே நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைந்தோம். அவள் என்றாவது எங்களை நிமிர்ந்து பார்த்திருக்கிறாளா? அவள் அப்படியிருப்பதில்தான் அந்த அழகே பரிணமித்தது என்று சொல்ல வேண்டும். அவள் பலரிடமும் அப்படித்தான் இருக்கிறாள் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன் நான்.

குடும்பத்தோடு நகரின் தொலை தூரத்தில் எங்கோ இருக்கிறாள் என்றும் கேள்விப்பட்டேன். ஒரு பையன் என்றார்கள். தன் கட்டழகு குறைந்து விடும் என்று அத்தோடு நிறுத்திக் கொண்டாளோ என்னவோ? அவளை மாதிரி அழகியைக் கட்டிக்கொண்டவன் நிச்சயம் ஒரு குழந்தையோடு இருக்க முடியாது. ஆசை அவனை அப்படிப் பிடுங்கித் தின்னும் என்பது மட்டும் நிச்சயம். ஆனால் சியாமளா ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது நிச்சயம் அது அவளின்பாற்பட்ட விஷயம்தான் என்று தோன்றியது எனக்கு. தன் கணவனை அதற்கு மேல் நெருங்க விட்டிருக்க மாட்டாள் அவள் என்பதில் பெருத்த நிச்சயம் இருந்தது எனக்கு.

ஒரே ஒரு குறை. அவளது அழகுக்கும் இருப்புக்கும் அவள் இந்தக் க்ளார்க் உத்தியோகத்திற்கு வந்திருக்கக் கூடாது. படித்த படிப்பு அவளை அந்த அளவுக்குத்தான் கொண்டு நிறுத்தியிருக்கிறது. தன்னுடைய அழகிலும் வனப்பிலும் மட்டுமே கவனத்தோடு இருந்த ஒரு பெண்ணுக்கு வேறு முன்னேற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. இவைகளைப்பற்றிய கவனம் மட்டுமே முன்னெடுக்கப்படும்போது பிற முயற்சிகள் தானே சென்று மூலையில் முடங்கிக் கொள்ளத்தானே செய்யும்? அப்படித்தான் சியாமளா, கிடைத்த இந்த க்ளார்க் உத்தியோகத்தில் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

கோப்புகளைக் கட்டிக்கொண்டு மாரடித்தாள் அங்கே. தலை நிமிராமல் எழுதிக் கொண்டிருந்தாள். அது ரொம்பவும் கட்டுப்பாடான அலுவலகம். லைப்ரரி மாதிரி சத்தமின்றி அமைதியாக உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருப்பார்கள் எல்லோரும். பின்டிராப் சைலன்ஸ்!!

அந்த அலுவலகத்திற்குள் இருந்துகொண்டு இயங்கிக் கொண்டிருந்த இன்னொரு கிளை அலுவலகத்தில்தான் நான் இயங்கிக் கொண்டிருந்தேன். எனக்கான அலுவலர் வாரத்தில் நான்கு நாட்கள் முகாம் சென்றுவிடக் கூடியவர். வெள்ளிக் கிழமை மட்டும்தான் தலைமையகம் வருவார். திங்கட்கிழமை இருந்தாரென்றால் பிறகு அந்த வாரம் பூராவும் இருக்க மாட்டார். அவர் இருக்கும் அன்றுதான் வேலை எனக்கு. நோட்ஸ் எடுத்தல், தட்டச்சு செய்தல், என்பனவாகும். மற்ற நாட்களில் இதர அலுவலகப் பணிகள். ஆகவே நான் ரொம்பவும் ஃப்ரீயாக இருந்தேன். ஆகையால் என் கவனம் முழுமையும் சியாமளாவிடமே நிலைத்திருந்தது.

வெளியே போகையில், வருகையில், அவளை நோட்டம்விடாமல் வர இயலாது என்னால். அவள் அழகு அப்படி! உட்கார்ந்து எழுதுவதுகூட என்னவொரு அழகு? கூந்தல் (அவளுக்கு இருப்பதற்குப் பெயர் கூந்தல்தான். தலைமுடி அல்ல!) இடது தோளில் முன்புறம் தொங்கிக் கொண்டிருக்கும். அத்தோடு சேர்ந்து ஃபேன் காற்றுக்கு அசையும் மல்லிகைச் சரம். அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்கையில் கூலி தரும் அந்த இடத்திற்கு ஒரு மதிப்புக் கொடுக்க வேண்டாமா? பக்தி வேண்டாமா மனதில்? அப்படியா அதை முன் பக்கம் தூக்கிப் போட்டுக் கொள்வது? அதுவே அவளது அகங்காரத்தின் அடையாளமாகத் தோன்றியது எனக்கு. ஒரே மனசு ரசிக்கவும் செய்யுது, இப்படியும் சொல்லுதே?

அந்த ஹாலில் இருப்பவர்கள் எல்லோரும் ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் போல் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் சியாமளா இருந்தாள். படமாய் எந்நேரமும் ஓடிக் கொண்டிருந்தாள். நிச்சயம் அவளைத் தவிர்த்து விட்டு அவர்களால் வேலை செய்ய முடியாது. அவள் எழுந்து பாத்ரூம் போகப் பின் பக்கம் வரும்போதெல்லாம் எல்லோர் பார்வையும் அவள் மேல் தவறாமல் படியும். நான் அமர்ந்திருந்த கூண்டு அறையைத் தாண்டித்தான் அவள் போயாக வேண்டும். அப்பொழுதுகூட அவள் பார்வை-தெரிந்தவன்- ஒரே ஊர்க்காரன்- என்கிற அளவில் மருந்துக்குக்கூட லேசாக என் மேல் விழாது.

அதுதான் எனக்குள் வயிற்றெரிச்சல். ஆம். வயிற்றெரிச்சல்தான். அதனால்தான் அவள் பின்னழகையும், முன்னழகையும், இடையழகையும் நினைத்து நினைத்து ஏங்கி ஏங்கிப் பேசும் என் பக்கத்து இருக்கை நண்பர்களின் பேச்சை நானும் ரசிக்க ஆரம்பித்தேன். அவர்கள் யாரிடமும், ஏன் அந்த அலுவலகத்தின் எவரிடமும் நான் அவளைத் தெரிந்தவளாகக் காட்டிக்கொள்ளவேயில்லை. அவளின் இருப்பு மேலும் அந்த எண்ணத்தை என்னிடம் உறுதிப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். எல்லோரும் அவளை மறைமுகமாக சைட் அடித்தார்களேயொழிய ஒருவரும் அவளிடம் நெருங்கி அசடு வழியவில்லை. அந்த அளவுக்கான தைரியம் எவருக்கும் இல்லை என்று சொல்வதைவிட எவருக்கும் அதற்கெல்லாம் அங்கு நேரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அது ரொம்பக் கட்டுப்பாடான அலுவலகம். அங்கு பணிபுரிபவர்கள் எல்லோருமே ரொம்பவும் பொறுப்பானவர்கள்.

கடைக்கோடி கன்னியாகுமரி வரை அந்த அலுவலகத்தின் அதிகார எல்லை நீண்டிருந்தது. வெறுமே வந்தோம், அமர்ந்தோம் என்று கைக்கு அகப்பட்ட வேலையைச் செய்துவிட்டு எழுந்து போக முடியாது. பத்து மணி ஆபீஸ் என்றாலும், எல்லோரும் அநேகமாகக் காலை எட்டு எட்டரைக்கே வந்து அமர்ந்து வேலையை ஆரம்பித்து விடுவார்கள். இரவு அதேபோல் எட்டரை ஒன்பது என்றுதான் வீடு செல்வார்கள். ராத்திரித் தங்கலும்கூட உண்டு அங்கே! அப்படிப்பட்ட ஒரு இறுக்கமான அலுவலகத்தில்தான் அந்த இறுக்கத்தை நெகிழ்த்துவதுபோல் அசைந்து அசைந்து கொடிபோல் வந்து போய்க் கொண்டிருந்தாள் சியாமளா. அவளை அந்த அலுவலகத்தில் போட்டிருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். சொல்லப் போனால், அங்கு முக்கியப் பொறுப்பில் உள்ளோர் எவரின் விருப்பத்திலும் அவள் அங்கு வந்ததாகத் தெரியவில்லை. அவள் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்ததும் எவரின் விருப்பத்திற்கும் உகந்ததாக .இல்லை என்பதுதான் உண்மை.

இதை இந்த ரீதியில் யோசிக்க முனைந்தபோதுதான் மெல்ல மெல்லச் சில விஷயங்கள் புலப்பட ஆரம்பித்தன.

அவ கிடக்கா தேவிடியா… வேறே எதையாவது பேசுங்க… என்று கரகரத்த குரலில் தாடிக்கார ராமலிங்கம் என்னிடம் கூறியபோதுதான் சட்டென்று நான் விழித்துக்கொண்டேன். என் மனதில் அதுநாள் வரை ஓடிக்கொண்டிருந்த சில அடையாளங்கள் அப்பொழுதுதான் உறுதிப்பட ஆரம்பித்தன. இவளோடு சேர்ந்து வேலை பார்க்கும் மற்ற பெண்கள் எப்படியிருக்கிறார்கள்? இவள் எப்படியிருக்கிறாள்? ஏன் எல்லோரோடும் சேர்ந்து இவள் வருவதோ, செல்வதோ இல்லை? மற்றவர்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து சாப்பிடுகிறார்கள்…இவள் மட்டும் ஏன் தனியாய் அமர்ந்து சாப்பிடுகிறாள்? இப்படியெல்லாமான சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த என் மனதில் அந்தக் கொக்கி கிடைத்தபோது பலமாகப் பற்றிக் கொண்டேன் நான். எனக்கென்ன வேறு வேலை இல்லையா என்ன? இருந்தாலும் இதை அறிந்து கொள்வதில் ஒரு ஆர்வமும் சுவாரஸ்யமும் இருந்தது எனக்கு. மேலும் அவள் என் ஊர்க்காரியாயிற்றே?

படுபாவி! ஒரு அப்பாவியை மடக்கித் தன் கைக்குள் போட்டுக் கொண்டாளே? வசதி வாய்ப்புப் பார்த்து தன் திருமணத்தைக் கச்சிதமாய் முடித்துக் கொண்டாளே? போகட்டும். அத்தோடு அடங்கிக் கிடக்க வேண்டியதுதானே? காரியங்கள் சாதிக்க வேண்டுமென்றால், அதற்கு எவ்வகையிலேனும் துணிந்து விடுவதா? இப்படியெல்லாமும் இவளை நோக்கி வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறதே? அப்படியென்றால் அவள் பேரில் என்ன கோளாறு?

“தம்பி! உங்க்ளுக்குத் தெரியாது… தெரிஞ்சிக்கிட்டீங்கன்னா, நம்ப ஜாதியில இப்படியொருத்தியான்னு ஆச்சரியப்படுவீங்க…?”

“என்ன சொல்றீங்க?” – வியப்போடு வாய் பிளந்தேன் நான்.

“பொம்பளைல நாலு வகை. யானை, குதிரை, முயல், மான்னு சொல்வாங்க… அதுல “அடங்காத” குதிரை வகையைச் சேர்ந்தவ இவ. அடங்காதன்னு நான் சொல்ற வார்த்தைக்குப் பல அர்த்தம் உண்டு…” -சொல்லிவிட்டு மேற்கொண்டு இதைப்பற்றிப் பேசுவது வீண் வேலை என்று ஒதுங்கிக்கொண்டார் அவர்.

அவரின் பேச்சும், அந்த அலுவலகத்தில் உள்ள மற்ற எல்லோரின் ஒதுங்கலும், குறிப்பாகப் பிற பெண் பணியாளர்களின் ஒதுக்கலும், உண்மைதான் என்பதை அன்று ஒருநாள் தற்செயலாகக் கடைவீதியில் போய்க் கொண்டிருந்தபோது என் பார்வையில் பட்ட காட்சியை வைத்து உறுதி செய்துகொண்டேன் நான்.

“அட, கண்றாவியே? இவ்வளவு நெருக்கமும், அந்நியோன்யமுமா? இவனுடனா? எப்படி இது?”

“தெரியாதா ஒங்களுக்கு? சின்னப்புள்ள நீங்க … அட, போங்க…ரொம்ப பழைய விஷயமாச்சே இது…?”

“எனக்குப் புதுசாச்சே…சொல்லுங்களேன்…” என்றேன்.

“எந்நேரமும் கைல தீவட்டியோட, பொகை விட்டுக்கிட்டே, இருமிக்கிட்டு அலைவானே… அவன்தான் அவளோட புருஷன்… அதாவது வச்சிக்கிட்டவன்… அவன அவ வச்சிக்கிட்டாளா இல்ல அவள அவன் வச்சிக்கிட்டானா… இத அவுங்ககிட்டதான் கேட்கணும்… ஆளப் பார்த்திருக்கீங்கல்ல? என்ன பர்சனாலிட்டின்னு? இவளுக்கு அவங்கிட்ட நோங்கியிருக்கு? என்னத்தச் சொல்றது? ஆனா புடிச்சிப்புட்டான்ல? விழுந்துட்டால்ல அவளும்? அதான் தெறமை… இங்க நம்ம ஆபீஸ்ல எவனுக்காச்சும் முடிஞ்சிச்சா? எத்தனை பேர் அலையுறான் நாய் கணக்கா நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு? அவ குண்டியவே பார்த்துப் பார்த்து ஏங்குறானுங்களே…. எவனுக்காச்சும் படிஞ்சிச்சா? அதத்தான் நீங்க அங்க கவனிக்கணும்… காரியக்காரிங்க அவ… காரியக்காரி… நினைச்சா முடிச்சுப் புடுவா… இல்லன்னா எடுத்த எடுப்புல எந்த அப்ளிகேஷனும் கொடுக்காம அவ இந்த மாவட்டத்துல, அதுவும் இந்த ஆபீஸ்ல காலடி வைக்க முடியுமா? சரி, கெடந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டாகல்ல…?”

அசந்துதான் போனேன் நான். பஜார், சந்தை, ஜவுளிக்கடை, கோயில், குளம் (இது வேறு… அதைக் களங்கப்படுத்தறதுக்கு!!) என்று நீக்கமற நிறைந்திருந்தார்கள் இருவரும். கட்டின புருஷன்கூட அலைய மாட்டான் இப்படி? (அதுதான் தெரிகிறதே!)

என்ன தம்பி, நல்லாயிருக்கீங்களா? சரி, போயிட்டு வாங்க… இதுதான் அவன் அவளோடு சேர்ந்து எதிர்ப்பட நேர்ந்த சந்தர்ப்பங்களில் பேசும் பேச்சு..!!.

ஊருக்கும் வெட்கமில்லை, உலகுக்கும் வெட்கமில்லை……அத்தனையும் உதிர்த்தவர்களுக்கு என்ன இருக்கு? துணிஞ்ச கட்டைக்கு துக்கமேது? அட, எல்லாம் போகட்டுமய்யா…அந்தப் புருஷன்காரன்னு ஒருத்தன் எதுக்கு இருக்கான்? எதுக்குத்தான் அவன் புருஷனாயிருக்கான்? படிச்சவன், ஒரு நல்ல கௌரவமான உத்தியோகத்துல இருக்கிறவன், இப்படியாயிருக்கிறது? அந்த மாதிரி கௌரவமான பொசிஷன்ல இருக்கிறதுனாலதான் இப்படிக் கண்டுக்காம இருக்காரோ? இல்ல, கண்டு, சொல்லி ஒண்ணும் ஆகாதுன்னு தெரிஞ்சு சமரசமாயிட்டாரா?

அதற்குப் பிறகு எத்தனை வருடங்களாயிற்று? இதுவேவா தனது பிழைப்பு? இவளைக் கவனிக்கவென்றேவா இங்கு வந்தோம்?

“கிடக்குது கழுத…! எக்கேடும் கெட்டுப் போகட்டும்…யாருக்கென்ன…?” -விட்டாயிற்று. வருடங்கள் பல உருண்டாயிற்று. பருவங்கள் பல மாறியாயிற்று.

“விஷயம் தெரியுமா உங்களுக்கு? சியாமளா வி.ஆர்,எஸ்ல போயிட்டா?”

“அப்படியா?”

“என்னங்காணும்….ஒரே டிபார்ட்மென்ட்ல இருந்துக்கிட்டு இது கூடத் தெரியாம இருக்கீர்?”

“ஆமாமா…இதானா எனக்கு வேலை? எனக்குக் கெடக்கு ஆயிரம் பிரச்னை… அவளப் பார்த்தே பல வருஷமாச்சு…நானே மானேஜர் ப்ரமோஷன்ல வெளியூர் எல்லாம் சுத்தியடிச்சிட்டு இப்பத்தானே உள்ளுருக்குள்ளயே காலடி வச்சிருக்கேன்…”

“அதானே? உம்ம ஆபீஸ்லதாங்காணும் வி.ஆர்.எஸ்ல போனா? அப்படித்தான் எனக்கும் ஞாபகம். ரெக்கார்ட் எடுத்துப் பாரும்…”

அன்று அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தபோது பழைய நண்பர் ஞானப்பிரகாசம் சொன்னது நினைவுக்கு வர…..

“சார்…சியாமளா மேடத்துகிட்டேயிருந்து ஒரு லெட்டர் வந்திருக்கு பார்த்தீங்களா?- கணக்காளர் பர்வதவர்த்தினி கேட்டபோது, என்ன அந்த விண்ணப்பம் என்று எடுத்துப் பார்த்தேன். (மேடம் என்ன மேடம்? அவ்வளவு மரியாதைக்குரியவளா அவள்?)

அவளுக்கு வந்து சேர வேண்டிய சேமிப்புப் பணத்திற்கான அசலை, வட்டித் தொகையை விரைவில் அனுமதித்து வழங்கக்கோரி வேண்டியிருந்தாள். வேண்டியதெல்லாம் சரிதான். எப்படி வந்தது இது? தபாலிலா? நேரிலா?

“சார்… சப்டிவிஷனல் ஆபீஸர் முத்துச்சாமிதான் கொடுத்து அனுப்பியிருக்கார்…”- சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்துகொண்டது பர்வதம். மேற்கொண்டு ஏதும் என்னிடம் கேட்க வேண்டாம் என்பதுபோல.

“அடப் பார்றா? இப்பவும் ஒரு ஆளா? எத்தனை பேர்தான் கைவசம் வச்சிருக்கா இவ? இவளுக்குன்னு காரியம் பார்க்க எத்தனை பேர்தான் காத்துக்கிடக்காங்க? ஆள், அம்பு, படை, சேனை…என்ன ஒரு ஆளுமை?”

“அலையறதுக்குப் பேரு ஆளுமையா? என்னங்க உளர்றீங்க? ஆளுமையாவது, கீளுமையாவது? கிழவியாகிப்போனா அவ? மூஞ்சியப் பார்க்கச் சகிக்கல…? என்னவோ பேசுறீங்களே…”

நான் அதிர்ந்துபோய்க் கேட்டுக் கொண்டிருந்தேன். அவளைப் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் எனக்கு அதிர்ச்சிதானே…!

“பின்ன? ஒருத்தி எத்தனைபேரத்தான் வச்சிப்பா? சர்வீஸ்ல இருநத் வரைக்கும் காரியஞ் சாதிக்க எல்லாரையும் வளைச்சுப் போட்டா… அவளுக்கேத்த மாதிரி இவனுங்களும் போய் விழுந்தானுங்க… தேன் வடியறதா நினைச்சிக்கிட்டு… தேன் வடிஞ்சிதோ இல்ல என்ன வடிஞ்சிச்சோ? யார் கண்டது? இல்லன்னா ஒரே ஊர்ல முப்பது வருஷம் சர்வீஸ் ஓட்ட முடியமா ஒருத்தி? நாமெல்லாம் என்ன பாடுபட்டிருக்கோம்? பந்தடிச்ச மாதிரி எங்கெல்லாம் தூக்கியடிச்சாங்க? இவ ஒருத்திக்காக எவனெவனெல்லாம் பாதிக்கப்பட்டான்? அத்தனையும் சகிச்சிக்கிட்டுத்தானே சர்வீஸ் போட்டிருக்கோம்…”

கையில் அந்த விண்ணப்பத்தைப் பிடித்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருந்தேன் நான். அது சரி! இது அவள் கையொப்பம்தான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? உள்ளுரில்தான் இருக்கிறாள் என்றால் நேரில் வரமாட்டாளா? அதுதானே முறை? அதென்ன மெசெஞ்சர்? அப்படியானால் தொகை வாங்கவும் நேரில் வரமாட்டாளோ? அவளிடம் போய்ச் சேரும் என்பது என்ன நிச்சயம்? இதோ, அதற்காகத்தான் இன்று இங்கே வந்து நின்றிருக்கிறேன் நான். எனக்கென்று உள்ள கௌரவத்தையெல்லாம் விட்டு, எனக்கு என் பொறுப்பிலான காரியம்தான் முக்கியம் என்று கருதி, நாளைக்கு எவனும் நாக்கு மேல் பல்லுப்போட்டு எந்தக் கேள்வியும் கேட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கத்தில்…….

“யாரும் இல்லைபோல் தெரிகிறதே?”

சுற்றிலும் எந்தப் புழக்கமும், சத்தமும் தெரியாத அங்கு மேலும் நிற்கத் தயங்கியவனாக வெளியேற எத்தனிக்கிறேன்.

“யார், வேணும் உங்களுக்கு?” -குரல் கேட்டுத் திரும்புகிறேன். ஜன்னல் வழி அந்த உருவம்.

“வாங்க, யார் நீங்க? என்ன வேணும்?”

“அடிப் பாவி, என்னைப் பார்த்து யார் நீங்க என்று கேட்கிறாயே?”

போகட்டும். அதுபற்றிக் கவலையில்லை. வந்த காரியம்தான் எனக்கு இப்போது முக்கியம். பணம் பெற்றுக்கொண்டு நேரடிக் கையொப்பம் தேவை. அவ்வளவே! கையில் பதிவேட்டோடு உள்ளே நுழைகிறேன்.

“நான் டிவிஷனல் ஆபீஸ்லேர்ந்து வர்றேன். உங்களோட சேமிப்புத்தொகை அசலும், வட்டியும் கொண்டாந்திருக்கேன். இதில் ஒரு கையைழுத்துப் போட்டுட்டு வாங்கிக்குங்க…” கையைழுத்திடுகிறாள். விண்ணப்பத்திpலிருந்த அதே கையெழுத்து. மனம் சமாதானமடைகிறது.

“நன்றிங்க…” – மென்மையாக ஒற்றை வார்த்தையில் அவள் குரல்.

“சரி, நான் வர்றேன்…”

“இருங்க … ஒரு நிமிஷம்..ஏதாவது சாப்பிட்டிட்டுப் போங்க…”

“நோ…தாங்க்ஸ்.. உடனே போகணும்…”

“சரி, கொஞ்சம் தண்ணியாவது குடிங்க …”- சொல்லிவிட்டு உள்ளே போகிறாள்.

இவள் வீட்டில் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மனசு இறுமாப்பு கொள்கிறது. கிளம்புகிறேன் நான். தற்செயலாய் என் பார்வை அங்கே செல்கிறது. ஹாலில், ஓரத்தில், டி.வி.க்குப் பக்கத்து மேஜையில் அந்தப் படம்!! மாலையோடு, சந்தனம், குங்குமமிட்டு…! அதிர்கிறேன் நான். அதே மென்மையான உதட்டோரச் சிரிப்பு!! ஒரு பேராசிரியருக்குரிய கண்ணியமான, அடக்கமான அதே புன்னகை!!!

அவள் திரும்பும் முன் வெளியேற வேண்டும். எழுந்து சத்தமின்றி மெதுவே நடக்கிறேன். வாசல் கதவைத் தாண்டும்போது அந்த இருமல் சத்தம். ஏற்கனவே கேட்டுப் பழகிய சத்தம். உள்ளே புகை அடைத்து, அடைத்து – நெஞ்சு திணறத் திணற – திமிறி வெளியேறும் அதே பிளிறும் இறுமல். அப்பொழுதுதான் கவனிக்கிறேன். அங்கே இன்னொரு அறை இருக்கிறதென்று……. பாதி திறந்த கதவு. அதிக வெளிச்சமில்லா ஒரு அறை. உள்ளே யாரோ…? யாரோ என்ன யாரோ? அவன்தான் அது!!

அதே இருமல்…! அதே குரலில்!! அது அவனேதான்…சந்தேகமேயில்லை…? என் பார்வையைக் கண்டு தயங்கி, கையில் செம்பும், டம்ளருமாகத் தண்ணீரோடு அவள்…! மறுமுறையாக அவளும் கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. வெளியேறுகிறேன்.

வாசலில்……. இன்னும் எடுக்கப்படாத பெயர்ப் பலகை…! உள்ளே… மாலையிட்ட அந்தப் படம்…!! அறையினுள்…. அந்த இன்னொருவன்…!!!

அட, ஈஸ்வரா? என்ன வாழ்க்கை இது???

தன் குறிப்பு இயற்பெயர்: கி.வெங்கட்ரமணி தகப்பனார் பெயர்:ஆ.ப.கிருஷ்ணய்யர் பிறந்த தேதி: 10.12.1951 கல்வித் தகுதி: பி.யு.சி. பிறந்த ஊர்: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பணி: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு. புனை பெயருக்கான காரணம் திரு. நா. பார்த்தசாரதி, அவர்களின் தீபம் இலக்கிய இதழின் மீதான வாசிப்பு அனுபவத்தில்…மேலும் படிக்க...

1 thought on “குதிரை

  1. ஆசிரியரின் அதீத கற்பனை ரசிக்கத்தக்கதாக உள்ளது.தினம் தோறும் நாம் நிறைய ஷ்யாமளாக்களை பார்க்கிறோம்.ஷ்யாமளாங்களையும் பார்க்கிறோம்.ஷ்யாமளாகளை படிக்கும் போது மட்டும் சுவாரஸ்யம் அதிகமாகிறதோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *