தீதும் நன்றும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 7,820 
 

3….

2….

1….

0….

“On air…” என்று விக்ரம் சைகையில் சொன்னான்.

குரல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டாள் மாலினி. மாலினி ஐயர்.

விக்ரம் உற்சாகமில்லாமல் இருப்பது போல் தோன்றியது. அவளும் அப்படி தானே இருக்கிறாள். உற்சாகம் தொலைந்து பல நாட்களாகி விட்டது. இது இன்னுமொரு நாள். அவ்வளவே.

“வணக்கம். இது மாலினி ஐயர். தற்போதைய முக்கிய செய்திகள்…..”

இன்னும் எத்தனை நாள் இந்த தொலைக்காட்சியில் இருக்கப்போகிறோமென நினைத்துக்கொண்டாள். வேலைக்கு வர வெறுப்பாய் இருந்தது.

“தமிழக அமைச்சரவை பரப்பரப்பான சூழ்நிலையில் இன்று….”

இன்று காலை கூட ப்ரவீண் ஆறுதல் சொன்னான். இதில் என் தவறு எதுவும் இல்லை என்பது அவனது வாதம். நல்ல குரல் வளம், நாட்டு நடப்பில் ஆர்வம், பொது அறிவு, அரசியல் ஆட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் அவளிடம் இருக்கிறது. பார்ப்பவர்கள் கவனம் சிதறாமல் செய்திகளை கேட்கும் அளவுக்கு அவள் அமைதியான அழகு தான். இருந்தும்…

“தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் தமிழகத்தில் தலை தூக்கியிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்….”

இருந்தும் அவள் இங்கு வெற்றிப்பெறவில்லை. ஏன் இப்படி…

மாத்யூ அறைக்குள் வருவது தெரிந்தது. செய்தி வாசிப்பில் கவனம் செலுத்தினாள் மாலினி. மாத்யூ ஏற்கனவே அவள் மேல் குறை சொல்லிக்கொண்டிருந்தான். இவள் செய்தி வாசிக்கும் அன்று அமைச்சரவை கூடி ஒழுங்காக நடக்கிறது. இந்தியா போட்டியில் தோற்றுப்போகிறது. உலகம் எப்போதும் போலிருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் கூட ஏதும் அறிக்கைவிடுவதுவில்லை. அது இவளின் தவறா? பரப்பரப்பான செய்திகளை இவளே உருவாக்க முடியுமா என்ன??

“கோலிவுட்டின் முக்கிய நிகழ்வுகளுடன் அஞ்சனா தயாராக இருக்கிறார்… ஓவர் டூ…”

ச்சே! மாலினி வெறுப்புடன் வெளியே வந்தாள். அஞ்சனாவிற்கு கூட சிவாஜி படம் வெளிவந்த போது ஒரு வாய்ப்பு கிடைத்தது. சரியாக பயன்படுத்திக்கொண்டாள்.

“மைல்ட் காஃபி ஒண்ணு…” யாரும் இல்லை கேஃபிடேரியாவில்.

பிரவீணுடன் திருமணமாகி ஓராண்டு கழிந்துவிட்டது. இந்த வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. ஏதாவது சவாலாக செய்ய வேண்டும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டாள். பிரவீண் கூட அடிக்கடி…

என்ன அது???

சில ஆங்கிலப்படங்களின் துவக்க காட்சிகளில் அவள் குழம்பிவிடுவாள். காட்சிகள் விரைந்து கண்முன் ஓடுமே தவிர ஒன்றும் புரியாது. அது போல இருந்தது கண்ணாடி வழியே நியூஸ் எடிட்டிங் அறையைப் பார்க்க.

கண்டபடி ஓடிக்கொண்டிருந்தார்கள். விக்ரம் வேறு தொலைபேசியில் பேசியபடி எதையோ எழுதிக்கொண்டிருந்தான்.

காஃபி கோப்பையை வைக்க திரும்பிய போது, மாத்யூ அவசரமாக வந்தான்.

“மாலினி. அர்ஜ்ண்ட். கோ ஆன் ஏர். சீக்கிரம். சீக்கிரம் ஐ சே”

********************************

“மேடம்.. எனக்கு பகல் நிலவு படத்துலேர்ந்து ‘பூமாலையே தோள் சேரவா’ பாட்டு போடுங்களேன்…”

கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்த தேவி தொலைக்காட்சியை திரும்பிப் பார்த்தாள்.

“இன்னும் கிளம்பலையா நீ…” – அம்மா.

அந்தப் பாடலை கேட்க கேட்க எரிச்சலாக வந்தது. இந்தப் பாடலை ரிகார்ட் செய்ய கடைக்குச் சென்ற போது தான் ரவியைப் பார்த்தாள்.

“இந்தப் பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா?” – இது தான் அவன் அவளிடம் பேசிய முதல் வார்த்தை.

“தேவீ…. கோவிலுக்குப் போறியா இல்லையா?” – அம்மா அடுத்த அறையிலிருந்து கத்தினாள்.

இப்போது அவனை தான் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாள் என்ன செய்வாளோ.

“போறேம்மா…”

ஒரேடியாக போய்விடலாம் என்று தோன்றியது. ஏற்கனவே இரண்டு பெண்களை ஏமாற்றியிருக்கிறான். இவள் தன்னை இழப்பதற்கு முன் சுதாரித்துக்கொண்டாள். அவன் எண்ணம் நிறைவேறாது என்று தெரிந்ததும் விலகிடுவான் என்று நினைத்தாள். ஆனால்….

அவன் சொன்னது எல்லாம் பொய். செய்துகொண்டிருப்பதாய் சொன்ன வேலை பொய். காதலிப்பதாய் சொன்னது பொய். இப்படியே போனால் திருமணம் அவனுக்கு நடக்காது என்பதால் எப்படியாவது அவளை மணக்க முயல்கிறான். அதற்கு அவன் கிளப்பப் போகும் புரளி, அவன் குழந்தையை அவள் சுமக்கிறாள் என்பது தான்.

ஏற்கனவே அவன் ஒரு பெண்ணை அவன் ஏமாற்றியது ஊருக்கே அரசல் புரசலாக தெரிந்தபோது தான் இவளுக்கும் தெரிந்தது. அப்போது தான் அவனிடமிருந்து விலகினாள். இப்போது இவளையும் ஏமாற்றினான் என்று அவன் பொய் சொன்னால் கூட ஊரார் நம்பக்கூடும்.

கோவிலில் காத்துக்கொண்டிருப்பான்.

போன வாரமே ஊருக்கு வெளியே வரவழைத்தான். போகவில்லை. இன்றும் அவனைப் பார்க்கவில்லை என்றால், அவன் பிரச்சினை செய்யத் தொடங்குவான்.

இரவெல்லம் யோசித்தும் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. அவனிடம் தன்னை இழக்கவில்லை என்று சொன்னால் எத்தனை பேர் நம்புவார்கள்?

கடிகாரம் கவலையேதுமின்றி ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கான கெடுவை குறைத்துகொண்டேயிருந்தது.

யாருடைய உதவியைக் கேட்பது. அப்பாவுக்கு ஏற்கனவே அவள் மேல் நம்பிக்கை கிடையாது. அம்மாவுக்கு பயப்படுவதை தவிர எதுவும் தெரியாது.

சொல்லிப்பார்க்கலாம் என்று தோன்றியது. அம்மாவையும் அழைத்துச் சென்று அவனை கண்டிக்கலாமா…. எதுவும் பிடிபடவில்லை.

“அம்மா..”

“இன்னும் போகலயா நீ… நேரம் ஆகுதுடி.”

“உன்கிட்டே… “

அதற்குள் பக்கத்து வீட்டு சிறுவன் ராமுவின் அழுகை சத்தம் கேட்டது. சாதாரண அழுகை இல்லை. மிதமான அலறல்.

தேவி அவசர அவசரமாக வெளியே வந்து பார்த்தாள். ராமுவின் சட்டையெங்கும் ரத்தக்கறை. தேம்புவதும் உளறுவதும் மூச்சு வாங்குவதுமாய் இருந்தான்.

“அங்க… அங்க…” அதற்கு மேல் வார்த்தை வரவில்லை.

குப்பையா தாத்தா கோவிலை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தார். “புனர் தரிசன ப்ராப்பிரஸ்த்து” என்று சொல்லிக்கொண்டார். போன வருடம் இறந்து போன சாரதி பூஜாரி தான் இதை ரொம்ப வருடங்களுக்கு முன் சொல்லிக் கொடுத்தார். இதன் அர்த்தம் “மீண்டும் இந்தக் கோயிலை காணும் வரத்தை கொடு” என்பதாம்.

குப்பையாவிற்கு அதை விட பெரிய வரம் தேவையில்லை.

அவரின் அம்மா பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த போது மழைக்கு இந்தக் கோயிலில் ஒதுங்கிவிட்டு மருத்துவச்சிக்கு சொல்லியனுப்பினார்களாம். அவள் வருவதற்குள் கோயில் மண்டபத்திலேயே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பிறந்தார் குப்பையா. அவரின் பாட்டி கடவுளே பிரசவம் பார்த்ததாக சொல்லுவாள்.

சிறு வயது முழுக்க கோவிலில் விளையாடுவதிலேயே கழிந்தது. முதன் முதலில் தேங்காய் கடை வைத்தது கோயில் வாசலில் தான். அவருக்கு வாழ்க்கையை சம்பாதித்து கொடுத்தது அக்கோயில். திருமணம், பையனின் காதுகுத்து துவங்கி திருமணம் வரை எல்லாம் அங்கேயே தான்.

இப்போது யாருமில்லை அவருடன். கோயிலைத் தவிர.

கோயிலைப் பற்றி பல செய்திகள் சேகரித்து வைத்திருந்தார். அதை வைத்து அவர் சொல்லும் கதைகள் ஊரில் பிரபலம். நானூறு வருடப் பழமையான கோயில். இன்று பராமரிப்பின்றி கிடக்கிறது.

எதிர்க்கட்சி தலைவரின் சொந்த ஊர் இது. அவர் முதலமைச்சராக இருந்த பொழுது கூட குப்பையா நேரில் சென்று கோயிலைப் புதுப்பிக்க மனு கொடுத்தார். பிரயோஜனமில்லை.

மீண்டும் கோயிலைத் திரும்பி பார்த்தார். சில சமயங்களில் கோயிலும் தானும் ஒன்று தான் என்று தோன்றும் அவருக்கு. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டு, இப்போது யாரும் கேட்பாரற்ற நிலையில் கிடக்கிறது, இரண்டும்.

உயிர் போவதற்குள் இதை யாராவது புதுப்பித்தால் அவருக்கு ஆனந்தமாயிருக்கும். அது வரை அவர் உயிர் போகவும் போகாது.

அடுத்த தெரு தாண்டியவுடன் இடி விழுந்தது போல ஓசை கேட்டது. குப்பையா சற்று நிலைகுலைந்து விட்டார். கோயில் தெருவிலிருந்து ஒரு சிறுவன் ஓடி வந்தான். சட்டையெங்கும் ரத்தக்கறை. அவனை நிறுத்தினார். கோயிலில் குண்டுவெடித்ததாக பெரும் முயற்சிக்குப்பிறகு சொன்னான். உறைந்து போனார் குப்பையா.

“எதிர்கட்சி தலைவர் கோபால பாண்டியனின் சொந்த ஊரான குளித்தலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்திருப்பது தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குண்டுவெடிப்பில் பலியான வாலிபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. விளம்பரத்துக்குப்பின் மீண்டும் இணைவோம்..”

மாலினி வேகமாக குறிப்பெடுத்தாள். சில வருடங்களுக்கு முன்னால் அந்தக் கோவிலுக்கு அவள் சென்றிருந்தாள். இதழியல் படித்துக்கொண்டிருந்த போது பழமைவாய்ந்த கோயில்களைப் பற்றி அவள் குறும்படம் எடுத்த போது அந்தக் கோயிலுக்கு போனாள். அப்போதிலிருந்து வருடம் தோறும் செல்கிறாள்.

“மாத்யூ! அந்த ஊருல குப்பையானு ஒரு தாத்தா இருக்காரு. அவரக் கேட்டா இன்னும் நிறைய விஷயம் கிடைக்கும். எனக்கு தெரிஞ்சத டேட்டா செண்டருக்கு அனுப்பிட்டேன். நம்ம டீம உடனே அங்க போக சொல்லுங்க. க்விக்.” – மாலினி முழு நம்பிக்கையுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.

“ஓ குட் மாலினி! கண்டிப்பா…” பரப்பரப்பாக நகர்ந்தான்.

சற்று நடந்த பின் திரும்பி அவளைப் பார்த்து… “வெரி ஸ்மார்ட் ஐடியா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

“டீ.வியைத் தொடர்ந்து பார்க்கவும்.” ப்ரவீணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு செய்தி வாசிக்க தயாரானாள் மாலினி.

“குப்பையா நிறைய விஷயங்கள் சொன்னீங்க. ரொம்ப நன்றி. அரசு உடனே கோயில புதுப்பிக்க உத்தரவு போட்டிருக்காங்க. நீங்க அதுக்காக எவ்வளவு போராடியிருக்கீங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்…” தேர்ந்த வாசிப்பாளினி போல ஒருத்தி பேசிக்கொண்டிருந்தாள்.

அம்மா அழுகையை இன்னும் நிறுத்தவில்லை. “பாவிங்க! உருப்படுவானுங்களா… கோயில கூட விட மாட்டேங்கிறானுங்க…யாரு அந்தப் பையனோ கோயிலுக்கு வந்து உயிர் போயிடுச்சே…” இதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாள்.

“உன்ன கோயிலுக்கு போ போன்னு விரடிட்டே இருந்தேனே…” மீண்டும் மீண்டும் சொல்லி சொல்லி தேம்பினாள்

தேவியை திரும்பிப் பார்த்து சொன்னாள்… “அழாத தேவி, கடவுள் எப்பவும் நம்ம கூடவே இருப்பார். நல்லதே நடக்கும்”

தேவி தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கண்களில் கண்ணீர் தேங்கியிருந்ததால் தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை தேவிக்கு.

– நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *