கால் சென்டர் காதலி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,567 
 
 

‘இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம்… இதுதான் எங்கள் உலகம்’ என்ற கவிஞரின் சொற்களை மெய்ப்படுத்துவதாக அந்த கால் சென்டர் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது. மணி இரவு 11.45. பெங்களூரு நகருக்குச் சற்று வெளியே அந்தக் குட்டி வளாகத்தில் ஆண்களும் பெண்களுமாக 680 பேர் ஒரே சமயத்தில் அமெரிக்கர்களுடன் தொலைபேசிக்கொண்டு இருந்தனர்.

அமெரிக்கர்கள் விழித்திருக்கும்போது விழித்திருப்பது, இந்திய மொழிகளின் தாக்கம் இல்லாமல் அவர்களைப்போலவே ஆங்கிலம் பேசுவது, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து அப்பா-அம்மா சூட்டிய பெயர்களை விடுத்து அமெரிக்கப் பெயர்களை வைத்துக்கொள்வது, சனி, ஞாயிறு வந்துவிட்டால் அது வாரத்தின் முடிவா, இல்லை உலகத்தின் முடிவா என்று சந்தேகம் வரும்படியாக பீர், பெண்களுடன் சுகித்திருப்பது – அவர்கள் வழி தனி வழி!

அப்போதுதான் காட்டானான ஓர் அமெரிக்கனிடம் வசவு வாங்கி அந்த அழைப்பை முடித்திருந்த ஹர்ஷன் (அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு ஹாரிஸ்) அதே தளத்தில், அதே குழுவில் 20 அடிகள் தள்ளி உட்கார்ந்திருந்த பூஜாவுக்கு (அவர்களுக்கு பேட்ரீஷியா) எஸ்.எம்.எஸ். அனுப்பினான்…

‘நான் இப்போது ஒரு பிரேக் கேட்கப்போகிறேன். நீயும் கேள். சரியாக 11.55-க்கு வாட்டர்கூலர் அருகில் சந்திப்போம்.’

அவர்கள் இரவு 8.30 மணியில் இருந்து காலை 6 மணி வரை வேலை பார்க்க வேண்டும். நடுவே அதிகபட்சமாக அரை மணி நேர இடைவேளையும், ஆறு கால் மணி நேர ஓய்வுகளும் எடுத்துக்கொள்ள லாம். ஒவ்வொரு முறை பிரேக் எடுக் கும்போதும் அது அவர்களுடைய மேனே ஜரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதற்காக மேனேஜரைப் பார்த்துத் தலையைச் சொறிய வேண்டிய அவசியம் இல்லை. அங்கே எல்லாமே மென்பொருள் மூலமாகக் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. ‘நான் கால் மணி நேரம் ஓய்வு எடுக்கப்போகிறேன்’ என்று இ-மெயில் அனுப்ப வேண்டும். அழைப்புகளின் வரத்து எண்ணிக்கை, எத்தனை பேர் ஓய்வில் இருக்கிறார்கள் என்பதை மென்பொருள் கணித்துச் சொல்ல, மேனேஜர் தனது அங்கீகாரத்தை வழங்குவார். அந்த அங்கீகா ரத்தைப் பதிவுசெய்துகொள்ளும் மென்பொருள், ஓய்வு நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட நபருக்கு அழைப்புகள் போகாமல் பார்த்துக்கொள்ளும்.

“11:49-ல் இருந்து 12.04 வரை உனக்கு ஓய்வு.” – ஹர்ஷனுக்கு அங்கீகாரம் வந்தது. மணியையே பார்த்துக்கொண்டு இருந்தவன், குறித்த நேரத்தில் தலையில் மாட்டி இருந்த ஹெட்போனைக் கழற்றிவிட்டு வெளியே நடந்தான்.

ஏறக்குறைய அதே நேரத்தில் ஓய்வு நேரத்தைச் சம்பாதித்திருந்த பூஜா வாட்டர்கூலர் அருகில் காத்திருந்தாள்.

பூஜா பக்கத்தில் போன ஹர்ஷன் சட்டென்று அவளை ஆரத் தழுவி, அவள் கன்னத் தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான். தன் கை யில் இருந்த சிறிய பொட்டலத்தை அவள் கையில் திணித்தபடி, “ஹேப்பி பர்த்டே டார்லிங்!”

“ஓ! ரொம்ப தேங்க்ஸ்டா… இது என்னது?”

“பிரிச்சித்தான் பாரேன்.”

அழகான தங்க பிரேஸ்லட்.

“அடப்பாவி! எதுக்குடா இவ்வளவு காஸ்ட்லியா கிஃப்ட் கொடுக்கற?”

“தனிஷ்க்ல வாங்கினேன். சுத்தத் தங்கம். மோதி ரம் பார்த்தேன். நல்லா இருந்துச்சி. ஆனா அத நிச்சயதார்த்தத்துக்குக் கொடுக்கலாமேன்னு…”

“இன்னும் எவ்வளவு வருஷத்துக்குடா இப்படி பிரேக்ல லவ் பண்ணிக்கிட்டு இருக்கறது? எப்படா கல்யாணம் பண்ணிக்கப்போற?”

“இன்னும் ஒரு வருஷம் பூஜா. அதுக்குள்ள நம்ம ரெண்டு பேருக்குமே பிரமோஷன் வந்துரும். டீம் லீடர் ஆயிரலாம். ஆளுக்கு 60 ஆயிரம் ரூபா சம்பளம். அதுக்கப்புறம்தான் கல்யாணம். கல்யாணம் ஆன ஒரே வருஷத்துல மொதக் குழந்தை.”

“ச்சீய்… போடா!”

பூஜா சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, ஹர்ஷனை அணைத்து முத்தம் கொடுத்தாள். அணைப்பு நிலையிலேயே இருவரும் சிறிது நேரம் லயித்திருந்தனர்.

ஹர்ஷனுக்குப் பின்னால் தெரிந்த அந்தச் சிவந்த கண்களை எதேச்சையாகப் பார்த்த பூஜா, சட் டென்று விலகிக்கொண்டாள்.

அந்தக் கண்களின் சொந்தக் காரன் சந்தர். அவர்களைவிட மூன்று வயது பெரியவன். அவர் களின் மேனேஜர். இருவரும் அவசர அவசரமாக அவனுக்கு வணக்கம் வைத்துவிட்டுப் பிரிந்து சென்றார்கள்.

ஹர்ஷனும் பூஜாவும் அந்த கால் சென்டரில் ஒரே தளத்தில், ஒரே குழுவில், மூன்று வருடங்களாக வேலை பார்க்கிறார்கள். இரண்டே முக்கால் வரு டங்களாகக் காதலிக்கிறார்கள். பூஜா ஐந்தே முக் கால் அடி உயரத்தில், எலுமிச்சை நிறத்தில் பவனி வரும் ஓர் அழகுச் சிலை. ஹர்ஷனும் பார்க்க இளம் ஹிந்தி நடிகனைப்போல அழகாகத்தான் இருந் தான்.

அந்தத் தளத்தில் ஹர்ஷன்-பூஜா காதல் பிரசித்தம். ஆனால் பாவம், சந்தருக்கு மட்டும் அது தெரிந்திருக் கவில்லை. பூஜாவுக்கு நூல்விட சரியான வாய்ப்பை எதிர்நோக்கியிருந்த சந்தரை அன்று வாட்டர்கூலர் பக்கத்தில் அரங்கேறிய முத்தக் காட்சி நிலைகுலையச் செய்தது.

கால் சென்டரில் மேனேஜர் என்பவன் ஏறக் குறைய ஒரு சர்வாதிகாரி. தனது அதிகாரத்தைச் செலுத்தி அந்தக் காதலை முறி யடிக்க வேண்டும் என்று திட்ட மிட்டான் சந்தர்.

அதிகாலை நான்கு மணிவாக்கில் ஹர்ஷன் இடைவேளை கோரி, ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தான். பூஜாவும் அனுப்பி இருந்தாள்.

பூஜாவுக்கு இடைவேளை கொடுத்துவிட்டு, ஹர்ஷனின் இடைவேளையைத் தள்ளிப்போட் டான் சந்தர்.

பூஜா தனியாக வாட்டர்கூலர் பக்கம் இருக்கும் போது, சந்தர் தற்செயலாகப் போவதுபோல் போனான். உப்புச்சப்பில்லாத ஒரு விஷயத்தைப்பற்றி அவளிடம் அரட்டையடித்துவிட்டு வந்தான்.

பூஜாவின் ஓய்வு நேரம் முடிந்தபின் ஹர்ஷனுக்கு ஓய்வு கொடுத்தான் சந்தர்.

அந்த வாரம் முழுவதும் அப்படியே செய்தான். ஓய்வு நேர இடைவேளையில் சந்திக்க முடியாமல் காதலர்கள் தவித்தார்கள். பூஜா, ஹர்ஷனிடம் அழாக்குறையாகத் தனது தவிப்பைச் சொன்னாள்.

அந்தச் சனிக்கிழமை ஹர்ஷன், ரிஷியுடன் பீர் குடித்தான். ரிஷி, அந்த கால் சென்டரின் மனித வளத் துறை யில் இருந்த கணினி-மென்பொருள் வல்லுநன். ரிஷியும் ஹர்ஷனும் சென்னை லயோலாவில் படித்தவர்கள். சந்தரின் அராஜகத்தைப்பற்றிச் சொன்னான் ஹர்ஷன்.

“மேனேஜர் மேல ஹெச்.ஆர்-ல கம்ப்ளெயின்ட் கொடுக்கட்டுமா?”

“அவசரப்படாத! இன்னும் ரெண்டு வாரத்துக்கு பூஜா கேக்கும்போதே நீயும் பிரேக் கேளு. அந்தாளு இதே மாதிரி செய்வான். அப்புறமா கம்ப்ளெயின்ட் கொடு. தொடர்ந்து கேட்ட நேரத்துல பிரேக் தராதது பழிவாங்கறது மாதிரி. வசமா மாட்டிக்குவான்.”

மாட்டிக்கொண்டான் சந்தர். ஒரே நேரத்தில் ஓய்வுவேளை கேட்ட அனைவருக்கும் கொடுத்துவிட்டு, ஹர் ஷனுக்கு மட்டும் கொடுக்காதது பழி வாங்கும் செயல் என்று நிர்வாகம் சந்தரைக் கண்டித்தது.

அவனது சம்பள உயர்வைத் தள்ளிவைத்தது. காயம்பட்ட புலியானான் சந்தர். நேரத்தை எதிர்பார்த்துப்பதுங்கி யிருந்தது புலி. அந்த நேரமும் சீக்கிரமே வந்தது.

கால் சென்டரில் பதவி உயர்வுக்கான தேர்வுகளை அறிவித்தார்கள். பூஜாவும், ஹர்ஷனும் டீம் லீடர் பதவிக்கு விண் ணப்பித்திருந்தார்கள்.

ரிட்டன் டெஸ்ட், குரூப் டிஸ்கஷன் போன்ற தடைக்கற்களைத் தாண்டி இறுதிக்கட்ட நேர்காணலுக்காகக் காத் திருந்தார்கள் காதலர்கள்.

அந்தச் சனிக்கிழமையையும் ரிஷி யுடன் செலவிட்டான் ஹர்ஷன்.

“சந்தர்தான் என்னை ஃபைனல் இன்டர்வியூ பண்ணப்போறான். வேணும்னே போட்டுப்பாத்துட் டான்னா..?”

“செஞ்சாலும் செய்வான். இதைப் பார்த்தியா..?”

“இது என்னது… வெங்கடாசலபதி டாலர்.”

“இது டாலர் இல்ல பையா… இதுக்குள்ள ஒரு பவர்ஃபுல் ட்ரான்ஸ்மீட்டர் இருக்கு. சந்தர் கேக்கற கேள்வி, அதுக்கு நீ சொல்ற பதில் எல்லாமே இது மூலமா என் கம்ப்யூட்டர்ல ரெக்கார்ட் ஆயிரும். இந்த தரம் ஏதாவது விஷமம் பண்ணான்னா, அவன் வேலையே போயிரும். நீ தைரியமா இரு!”

ஒரு திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு அந்த இறுதிக்கட்ட நேர்காணல் நடந்தது. ஹர்ஷன் சட்டைக்கு வெளியே போட்டி ருந்த அந்த வெங்கடாசலபதி டாலரைப் பொருட்படுத்தாமல் கேள்விகள் கேட்டான் சந்தர்.

கேள்விகள் சாதாரணமாக இருந்தன. ஹர்ஷன் வெளுத்து வாங்கிவிட்டான். நேர்காணலின் முடிவில் எழுந்து நின்று கை கொடுத்தான் சந்தர்.

“கங்கிராஜுலேஷன்ஸ் ஹர்ஷன்! நீங்க டீம் லீடராயிட்டீங்க. இன்னும் நல்லா வேல பார்த்து நம்ம கம்பெனிக்கு நல்ல பேர் வாங்கித் தரணும். நாங்க முடிவுகளை அதிகாரபூர்வமா அறிவிக்கிற வரைக்கும் யார்கிட்டயும் சொல்லாதீங்க.”

நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினான் ஹர்ஷன். அவன் கதவுப் பக்கம் செல்லும்போது, “உங்க கல்யாணத்துக்கு எனக்கு இன்விடேஷன் கொடுப்பீங்கள்ல?”

சன்னமாக அதிர்ந்தான் ஹர்ஷன்.

“அதாங்க… உங்களுக்கும் பூஜாவுக்கும் நடக்கப் போற கல்யாணத்தைச் சொல்றேன்.”

“நிச்சயமாக் கொடுப்பேன் சார்!” அசடு வழிந்துவிட்டு வெளியே வந்தான் ஹர்ஷன். வெளியே பூஜா அவனுக்காகத் தவிப்புடன் காத்திருந்தாள்.

“என்னடா… என்னாச்சு? என்ன கேட்டான்? வேணும்னே மாட்டிவிட்டானா? கஷ்டமான கேள்வியாக் கேட்டானா?”

“அதெல்லாம் இல்ல. நான் டீம் லீடராயிட்டேன். கங்கிராஜுலேட் பண்ணான். அவனைப் புரிஞ்சுக்கவே முடியல.”

“எனக்கு என்னவோ பயமா இருக்குடா. இன்னிக்குத்தான்டா எனக்கும் இன்டர்வியூ. ‘இங்க வெயிட் பண்ண வேண்டாம். நீ போய் வேலையைப் பாரு. நானே கூப்பிடறேன்’னு சொல்லிட் டான்.”

“நீ எதுக்கும் பயப்படாத. இதைப் பார்த்தியா? வெங்கடாசலபதி டாலர். எங்கம்மா மந்திரிச்சுக் கொடுத்தது. இதை உன் கழுத்துல மாட்டிவிடறேன். எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா அட்டெண்ட் பண்ணு. நான் இன்னிக்கு லீவு. நாளைக்கு நைட் பாப்போம். ஆல் த பெஸ்ட்!”

அதிகாலை 4 மணிக்கு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டாள் பூஜா. வெங்கடாசலபதி டாலரைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். தைரியமாக இருந்தது.

“எனக்கு உன் மேல ஒரு கண்ணு இருந்தது உண்மைதான். ஆனா, இப்ப கிடையாது. என் கண் எல்லாம் இப்போ அந்த ஹர்ஷன் மேலதான்!”

அறைக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக சந்தர் இப்படிப் பேசியதும் அதிர்ச்சியில் உறைந்துபோனாள் பூஜா.

“உட்காரு பூஜா. நான் சொல்றதைப் பதற்றப்படாம கேளு…”

பூஜா பதற்றத்தின் உச்சியில் இருந் தாள்.

“ஹர்ஷனோட பிரமோஷனை என்னால தடுக்க முடியல. ஏற்கெனவே எங்களுக்குள்ள ஒரு பிரச்னை இருக்கு. அதுபோக அவன்தான் இந்த டீம்லயே பெஸ்ட் பெர்ஃபார்மர். அவனுக்கு பிரமோஷன் கொடுக்கலேன்னா வம்பாயிடும். ஆனா, நீ அப்படி இல்ல. அவனைவிட உன் திறமை குறைவுதான். ரிட்டன் டெஸ்ட்டுலயும் நீ குறைச்சலான மார்க்ஸ் வாங்கியிருக்க. அதனால உனக்கு ப்ரமோஷன் கொடுக்கறதும் கொடுக்காததும் என் கையிலதான் இருக்கு. நீ கொஞ்சம் ஒத்துழைச்சேன்னா…”

கோபத்துடன் பார்த்தாள் பூஜா.

“எனக்கு வேணுங்கறது உன் உடம்பு இல்ல. ஹர்ஷனோட தலை.”

“………………”

“நீயும் ஹர்ஷனும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஒரு ஆறு மாசம், அதிகபட்சம் ஒரு வருஷம் சந்தோஷமா இருப்பீங்க… அவ்வளவுதான்! அதுக்குள்ள குழந்தை வந்துரும். யார், எப்போ, எப்படி வேல பாக்கறது, யார் எவ்வளவு நேரம் குழந்தையப் பாத்துக்கறதுன்னு சண்டை வரும். அவனுக்கு பிரமோஷன் கெடச்சிருச்சின்னா, அவன வேற டீமுக்கு, இல்ல வேற ஷிஃப்ட்டுக்கு மாத்திருவாங்க. நீ இங்கேயேதான் இருக்கணும். வெவ்வேற ஷிஃப்ட்டுல வேல பார்த்துக்கிட்டு எப்படி நீங்க குடும்பம் நடத்த முடியும்?

நான் சொல்றதை அதிர்ச்சியடையாம கேளு பூஜா! ‘ஹர்ஷன் எனக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கறான்’னு ஒரு புகார் எழுதிக்கொடு. நான் உனக்கு டீம் லீடராப் ப்ரமோஷன் கொடுத்துடறேன். யூரோப் ஷிஃப்ட் வாங்கிக் கொடுக்கறேன். காலையில பத்தரை மணிக்கு வந்து நைட் எட்டு மணிக்குப் போயிரலாம். 60 ஆயிரத்துச் சொச்சம் சம்பளம். நோகாம வேலை பார்க்கலாம். உன் அழகுக்கு ஹர்ஷனை மாதிரி ஆயிரம் பேரு கெடைப்பாங்க. அடுத்த வருஷம் நல்ல ஆளாப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ.”

“சார்…”

“இப்ப ஒண்ணும் சொல்ல வேண்டாம். பகல் பூரா யோசிச்சு நாளைக்கு ராத்திரி ஷிஃப்ட்டுக்கு வரும்போது அவன்மேல கம்ப்ளெயின்ட் எழுதி எடுத்துக்கிட்டு வா! உன் ப்ரமோஷன் ஆர்டரை வாங்கிட்டுப் போ. ஓ.கே?”

விடுவிடுவென்று வெளியில் நடந்தாள் பூஜா. டாலருக்குள் இருந்த வெங்கடாசலபதி தெய்வப் புன்னகை புரிந்துகொண்டு இருந்தார்.

மறுநாள் இரவு… பதைபதைக்கும் நெஞ்சுடன் தனது பணி யிடத்துக்குச் சென்றாள் பூஜா. ஷிஃப்ட் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருந்தது.

‘ஹோ’வென்ற பெருஞ்சத்தம் கேட்டது. அவளுடன் வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டார்கள்.

“கங்கிராஜுலேஷன்ஸ் பூஜா! ஹனிமூன் வெனிஸ்லயாமே? ஹர்ஷன் சொன்னான்.”

ஹர்ஷன் ஓடி வந்தான். அவளை அப்படியே அலாக்காகத் தூக்கித் தட்டாமாலை சுற்றினான்.

“பூஜாக் கண்ணு! உன் கழுத்துல மாட்டிக்கிட்டு இருக்கியே, அது வெறும் வெங்கடாசலபதி டாலர் இல்ல. ட்ரான்ஸ்மீட்டர். சந்தர் மாப்பிள்ளை உங்கிட்ட பீட்டர்விட்டதெல்லாம் ஹெச்.ஆர். டிபார்ட்மென்ட்ல ரிக்கார்ட் ஆயிருச்சி. விஷயம் தெரிஞ்சு பகலோட பகலா என்கொயரி வெச்சு, சந்தரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. டெர்மினேட்டட்! எனக்கும் உனக்கும் ப்ரமோஷன் கன்ஃபர்ம்டு. தாமஸ் குக்ல இந்த ஹனிமூன் பேக்கேஜ் கொடுத்திருக்காங்க. பிடிச்சிருக்கான்னு பாரேன்…”

அதற்கு மேல் ஹர்ஷன் சொன்னது எதுவும் பூஜாவின் காதுகளில் விழவில்லை. ஹர்ஷன் தனக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்கிறார் என்று எழுதிக் கையெழுத்திட்ட கடிதம் அவளுடைய கைப்பையில் இருந்தது.

முதல் காரியமாக அந்த சனியனைக் கிழித்து எறிய வேண்டும் என்று தீர்மானித்தாள், அந்த கால் சென்டர் காதலி!

– ஜனவரி 2010

2 thoughts on “கால் சென்டர் காதலி

  1. நச் கதை. கதையின் கடைசி வரி சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *