காணாது போகுமோ காதல்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 16, 2022
பார்வையிட்டோர்: 3,614 
 

பாகம் 9 | பாகம் 10

சட்டென்று இவள் மயங்கி விழுந்ததும் தீபக் எதுவும் புரியாமல் நின்றான்.

ஆதிராவின் அப்பா வீட்டுக்குள் நுழைந்ததும் அவள் அம்மா “உங்களுக்கு முன்னாடியே வந்துடுவா. இன்னமும் வரலை?”

அப்பா “யாரைச் சொல்றே?”

“சரியாப் போச்சு. ஆதிரா ஃபாக்ட்ரியிலிருந்து வரலை.”

“என்ன வரலையா?” அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேகமாக தன் ஃபோனை எடுத்து ஆதிராவுக்கு போன் பண்ணினார்.

“ஹலோ யாருங்க பேசறது? நான் ஆதிராவோட அப்பா பேசறேன்.”

“….”

“ஓ அப்படியா? சரிங்க ஸார்.” என்று ஃபோனை வைத்தார்.

“என்னங்க ஆச்சு?” அழுகுரலில் கேட்டாள்.

“பயப்படாதே. ஆதிரா ஃபாக்ட்ரியில்தான் இருக்காளாம். அர்ஜெண்டா சரக்கு அனுப்ப ஆர்டர் கிடைச்சிருக்காம். விடியறதுக்குள்ளே பாக்கிங் பண்ணணும்னு இவளை மாதிரி நிறைய பேர் வேலை பார்த்துட்டு இருக்காங்களாம். அதில் பெண்கள் நிறைய பேர் இருக்காங்களாம். காலையில் வந்துடுவான்னு காசிநாதன் ஸார் சொல்றார்”

ஆதிரா அம்மா “விஷயத்தை ஃபோனில் சொல்றதுக்கு என்ன?”

“வேலை வேகமாக நடக்கணும் இல்லே? அப்போ ஃபோன் வச்சுக்கக் கூடாதுங்கிறது ரூல். அவ ஃபோனை ஸ்டோரிலே வச்சுட்டு போயிருக்கா.”

ஆதிரா அம்மா “காசிநாதன் எத்தனை பொறுப்பா உட்கார்ந்து பதில் சொல்லிட்டுருக்கார். பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்”.

“இந்த பெருந்தன்மைக்குத் தான் நம்ம M.D க்கே மாமனார் ஆகப் போறாரு.”

பங்களாவில் வேதவல்லி அலைபாய்ந்து கொண்டிருந்தாள். ‘ என்ன இவன் இன்னும் வரக் காணோம். ஃபாக்ட்ரியில் ஏதும் பிரச்சனையா? காசி சரியில்லை என்று தீபக் சொன்னானே. அவனால் ஏதும் சிக்கலா?’ தீபக்கிற்கு போன் பண்ணினாள். காசிநாதன் எடுத்தார்.

” என்னக்கா?”

“…”

“தீபக் ஏதோ முக்கியமான மீட்டிங்கில் இருக்கான். டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் என்று ஃபோனை என்கிட்ட கொடுத்திருக்கான்.”

“…”

“தீபக் சாப்பிட்டுவிட்டான். நீ நிம்மதியா தூங்கு. நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்.” என்று ஃபோனை வைத்துவிட்டு சிரித்தார்.

துவண்டு போய் கிடக்கும் ஆதிராவின் முகத்தில் தண்ணீர் தெளித்தான். மெதுவாய் கண்ணைத் திறந்தாள். “நான் எங்கே இருக்கேன்?” கேட்டபடி எழுந்து உட்கார்ந்தாள்.

தீபக் “அதுசரி. ஆபீஸில் இருக்கீங்க.” ஆதிரா கோபமாக “அன்னிக்கு டீ பாக்கெட் திருடு போனது என்று செக்யூரிட்டி முன் என்னை எப்படி திட்டினீங்க. அந்த திருட்டு ஸ்டோரில் நடக்கலை.”

தீபக் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதிரா “பேக்கிங் செக்சனுக்கும் டெஸ்பாட்ச் செக்சனுக்கும் நடுவில் திருட்டு போகுது. ஒண்ணு ரெண்டு இல்லே பல்கா திருடு நடக்குது. அதுக்கு தலைமை உங்க மாமா காசிநாதன் பையன் ஷாம்.”

தீபக் ஆச்சர்யப்பட்டான்.

‘இந்த பொண்ணு எவ்வளவு பெரிய விஷயத்தை ஈசியா சொல்லிட்டாளே. தவறுக்கு காரணம் அரசல் புரசலாகத் தெரிந்ததே ஒழிய பட்டவர்த்தனமாக யாரும் சொல்ல.

“நீங்க பண்ணி விட்டு என்னை தண்டிக்கத் துடிச்சீங்க. இப்ப என்ன பண்ணுவீங்க?”

தீபக் பேச தொடங்கு முன் ஆதிரா கோபத்தோடு “நீங்க விஷயம் தெரியாம என்னைக் கண்டிச்சது தப்பு. அதுக்கு என்கிட்டே ஸாரி கேட்கணும்.”

தீபக் “யாருகிட்டே பேசுறோம் என்பது நினைவு இருக்கா?”

ஆதிரா கோபம் குறையாமல்

“யாராயிருந்தா எனக்கென்ன? தப்பு பண்ணினது நீங்க. ஸாரி கேட்கணும். நான் அனுபவிச்ச மன உளைச்சல் அத்தனை பெரிசு”

தீபக் “வேலை தருகிற பாஸ் நான். என்கிட்டே இப்படி பேச என்ன துணிச்சல்!?”

ஆதிரா “பாஸ்தான். அதுக்காக நாங்க அடிமை இல்லை. எங்களுக்கும் தன்மானம் உண்டு. ஒரு பெண் என்று கூட பார்க்கலை.”

தீபக் நக்கலாக சிரித்து “யாரு பெண்? புடவை கட்டினா பெண்ணா? M.D என்கிட்டே சண்டை போடுறே. தனியே இருக்கிறோம்னு தெரிஞ்சும் என்னை ஸாரி கேட்கச் சொல்றே! இப்ப நீ இருக்கிற சூழ்நிலையில் ஒரு சாதாரண பெண் என்ன செய்வாள்? அழுவாள். தப்பிக்க ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்பா. ஒண்ணுமில்லேன்னாலும் பேசாம தனியா போய் உட்கார்ந்து விடிகாலை எப்ப வரும்னு தவிச்சுட்டு இருப்பா. ஆனா நீ….நியாயம் கேட்கிறே?. ஸாரி கேட்கணும்னு கட்டாயப்படுத்தறே. நீ பெண்ணா?”

ஆதிரா கோபமாக “என்னை மூணு தடவை நீ நீன்னு சொல்றீங்க. ஒருமையில் கூப்பிடுற உரிமையை உங்களுக்கு யார் தந்தது?”

தீபக் ஆத்திரமாக “அப்படித்தான். இனிமே ஒருமையில்தான் சொல்வேன். ஆஃப்டர்ஆல் ஒரு ஒர்க்கர் உனக்கே இத்தனை திமிர் இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்? வாயை மூடிட்டு உட்காரு.” அதட்டினான்.

ஆதிரா ஆவேசமாக “திமிர் எனக்கு இல்லை. உங்களுக்குத்தான். படிச்ச திமிர் பணக்காரத் திமிர். ஆணவம். தன்னை ஒண்ணும் செய்ய முடியாதுங்கிற அகம்பாவம்.”

தீபக் ஆக்ரோஷமாக சேரை படாரென்று தள்ளி எழுந்து,

“யாருக்கடி ஆணவம்? அகம்பாவம்? உன் வீட்டில் அடங்கா பிடாரி மாதிரி உன்னை வளர்த்துவிட்டிருக்காங்க” என்றதும் ஆதிரா கோபம் தலைக்கேற அங்கிருந்த சேரைத் தூக்கிப் போட்டாள். போட்டோக்களை கழற்றி எறிந்தாள். தீபக் பல்லைக் கடித்தபடி பாய்ந்து அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். ஆதிரா மயங்கி விழுந்தாள்.

தீபக் கோபத்தோடு ஜன்னல் அருகே சென்று வலித்த தன் கையின் விரல்களை மடக்கி மடக்கி விரித்தான். கோபம் குறையாது நெற்றிப் பொட்டு புடைத்தது.’ரஸ்கல் என் ஆபீஸிலே என் முன்னாலே கோபத்தில் எல்லாவற்றையும் உடைக்கிறாள். இந்த அதிகாரத்தை இவளுக்கு யார் தந்தது?’ என்று தனக்குள்ளே பேசிக் கொண்டு திரும்பி பார்த்தான்.

ஆதிரா மயக்கத்திலிருந்து எழாமல் கிடந்தாள். தீபக் அவளருகே வந்தான்.மூக்கில் விரல் வைத்துப் பார்த்தான். மூச்சு வந்தது. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இருந்தாலும் மயக்கம் தெளியவில்லையே என யோசித்தான். மணி பன்னிரெண்டைத் தாண்டியது. இப்படியே மயக்கம் தெளியவைக்காமல் விட்டுடலாமா? சும்மா கத்தி டார்ச்சர் பண்ணுவாளே மயக்கத்திலிருந்தால் நாமாவது நிம்மதியாக இருக்கலாம்.என நினைத்த போது சேச்சே மயக்கத்திலே இருந்தாலும் அது சரியில்லை. அவளருகே முட்டி போட்டு அமர்ந்து அவளைக் கூப்பிட்டான். ஆதிரா கண்மூடிக் கிடந்தாள்.

அவள் கன்னத்தில் அவன் அறைந்த வரிகள் இருந்தன. கண் மூடிக் கிடந்தாலும் அவள் அழகாய் இருந்தாள். அவன் குனிந்து அவள் காதருகே “ஆதிரா ஆதிரா” எனக் கூப்பிட்டான். பதில் இல்லை. எப்படி எழுப்புவது?

மயக்கத்தில் இருப்பவர்களின் வாயில் ஊதினால் மயக்கம் தெளியலாம் என்று படித்தது நினைவு வர சிறிது தயக்கத்தோடு குனிந்து அவள் இதழில் வாய் வைத்த அந்த நிமிடம் கிறங்கிப் போய் கண் மூடினான். நைனிகா அவனை முத்தமிட்ட போதுகூட அவன் கிறங்கிப் போகவில்லை. ரேணு அவனைக் கட்டி அணைத்தபோது கூட நிதானம் இழக்கவில்லை. ஆனால் இதோ மயக்கத்தை தெளிவிக்க வாய் வைத்தவன் அந்த இதழின் மென்மையில் தன்னை இழந்து அவள் இதழை சுவைத்துக் கொண்டிருந்த வேளை ஆதிரா சட்டென்று மயக்கம் தெளிந்து கண்கள் அதிர்ச்சியில் விரிய அவனைப் பிடித்து தள்ளினாள். தீபக் அப்போது தான் சுய நினைவிற்கு வந்தான். ஆதிரா எழுந்து கண்ணீரோடு “மயங்கி கிடந்த பெண்ணிடம்….ச்சீ” என அழுதாள். தீபக் தவித்தான். அவளிடம் ” நா..நா…ன் மயக்கம்…தெளி..தெ..தெளிவிக்க வாயோடு ஊதத்தான்….”

“நீங்க அதைச் செய்யலை. எ..எ..ன்….என்னை….” அழுதாள். தீபக் சட்டென்று அவள் கையைப்பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டான். முதலில் திமிறி தன்னை விடுவிக்க முயன்ற போது அவள் காதில் தன் இதழ் பதித்து “ப்ளீஸ் ஆதிரா நான் உன்னை விரும்பறேன் எனக்கு நீ வேணும். ப்ளீஸ் மறுக்காதே.” என்றவனை முகத்திற்கு நேராகப் பார்த்து “இது ஏதோ இளமை வேட்கையில் பேசின பேச்சு போன நிமிடம் வரை சண்டை போட்டவர் எப்படி ஒரு நொடியில் காதல் சொல்வதை நம்பலாமா?”

தீபக் அவளை இழுத்து அணைத்து “இல்லை. நான் உன்னை ரசித்திருக்கிறேன். ஆனால் காதலிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. உன் இதழோடு இதழ் வைத்த நேரம் என்னை இழந்துவிட்டேன். அப்பதான் புரிந்தது. உன்கூட சண்டை போட்டாலும் என் ஆழ் மனது உன்னை விரும்பியிருக்கிறது. வெறும் உடல் உணர்ச்சியால் வந்த விருப்பமில்லை. ஏதோ ஒன்று….ப்ளீஸ்” என்றதும் ஆதிரா தன் கைகளால் அவனை அணைத்தாள். அவன் காதோரம் “பார்த்த முதல் நாளே உ…ங்…உங்களைப் பி..பி..பிடிச்சு..இருந்தது.”

தீபக் இறுக அணைத்தான்.

அங்கே இரு இதயங்கள் ஒன்றாகிக் கொண்டிருந்தது.

– முற்றும் –

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *