பட்-பட்-பட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 197 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

“ஆனந்தத் தாண்டவம்” என்னும் தமிழ்ப் பத்திரிகையின் சுபானு வருஷத்திய ஆண்டு மலர் மிகவும் சிறந்து விளங்கிற்று. அதில் அநேக விதமான கட்டுரைகளும் கதைகளும் சிறந்த விமரிசனங்களும் நிறைந்திருந்தன. பிரபல எழுத்தாளர்களும் வித்துவான்களும் அந்த மலரை ஆதரித்திருந்தனர். அதில் அடங்கிய ரஸமான விஷயங்களில் மிகவும் விசேஷமாகச் சொல்லக்கூடியது ஒன்று இருந்தது. தம்பதிகளுக்குள் பரஸ்பரம் காதலை நிலைக்க வைப்ப தெப்படி?” என்று ஒரு கேள்வியைக் கிளப்பி அதற்குரிய பதிலைப் பல ரகமானவர்களிடமிருந்து வருவித்து வெளி யிட்டிருந்தனர். அம்மாதிரித் தங்களுடைய அபிப்பிராயங்களை தெரியப்படுத்தியவர்களில் சிலர்:-ஸ்ரீ மாஜி பூபாலாசாரி, மஹா கனம் ஸ்ரீ வேங்கடாசலபதி சாஸ்திரியார், ஸர் ஆறுமுகம் செட்டி யார், திருவாங்கொச்சி சமஸ்தான மந்திரி ஸ்ரீ நிச்சயோத்தம், ஸர். ஸீதாநாத ஐயர், ஸ்ரீமதி ஸத்யபாமா தேவி, திரு.நண்டுவளை நரியார், ஸ்ரீ டாக்கி ராஜ பாகவதர், குமாரி குவலய சுந்தரி, திவான் பகதூர் சரமாரி சாஸ்திரியார், ஸர் முஹம்மத் மலையப்ப மரக்காயர் முதலாயினோர். இதர உலக விஷயங்களில் மேற் சொன்னவர்கள் பல வேறு விதமான அபிப்பிராயங்களுடைய வர்களாயினும் இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் அவர்களும் மற்றவர்களும் ஒற்றுமையாய்த் தெரிவித்திருந்தார்கள். அதாவது: 

“புருஷனோ, மனைவியோ தன்னை மலிவாகச் செய்துகொள்ளக் கூடாது. பிறர் மதிப்பவற்றையே பின்பற்றிப் போவது பிறவிக் குணம். ஆகையால் புத்திசாலியான மனைவியோ, புருஷனோ அப்போதைக்கப்போது தன்னைக் குறித்துத் தன் புருஷனோ, தன் மனைவியோ பொறாமைப் படுமாறு செய்து கொள்வதால், அவர்களுக்குத் தங்கள் மேல் உள்ள காதல் குறையாமல் வைத்துக் கொள்ள முடியும்” என்ற தாத்பரியமுள்ள செய்தி பெரிய எழுத்துக்களில் அச்சிட்டுக் கண்களைக் கவருமாறு அந்தப் பத்திரிகை மலரில் அமைக்கப்பட்டிருந்தது. 

டம்பகோணத்தில் “யூனியன் கிளப்” என்று ஆண் பிள்ளைகள் கிளப் ஒன்று உண்டு. அதில் அநேகமாய் முக்கியமான மாத, வார, தினசரிப் பத்திரிகைகள் யாவற்றையும் வருவிப்பது வழக்கம். அவைகளில் ‘ஆனந்தத் தாண்டவம்’ ஒன்று. பிரதி மாதமும் ஏறக்குறைய எல்லா அங்கத்தினர்களும் ‘ஆனந்தத் தாண்டவம்’ படிக்காமல் இருப்பதில்லை. 


வாசு அல்லது பரவாசுதேவ ஐயங்கார், ஒரு பெரிய இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்குத் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு ஏஜெண்டு. ஏழைக் குடும்பத்தில் பிறந்து கூடியமட்டும் தங்கு தடையின்றி பரீக்ஷைகளில் தேறவே, கோணி வியாபாரம் செய்து கோடீசுவர ரான கோரோஜனமையங்கார் தம் பெண்ணை வலுவில் கொடுக்க முன்வந்தார். லௌகிக விஷயங்களில் அழுத்தமாகவே பேரத்தை முடித்துக் கொண்டு வாசு, கோரோஜனமையங்காரின் பெண் லக்ஷ்மியை விவாகம் செய்துகொண்டான். விவாகமான நான்காம் நாள் வாசு கப்பலேறிச் சீமைக்குப் போய்விட்டான். வாரம் தவறாமல் கோரோஜனமையங்கார் சீமைக்கு மணியார்டர் செய்து வந்தார்.ஐ.ஸி. எஸ். பரீக்ஷைக்கென்று போன பிள்ளையாண்டான், ஐந்து வருஷங்களாகியும் ஒரு பரீக்ஷையிலும் தேறவில்லை. இந்தியாவின் ஞாபகத்தை இழந்தான். மனைவியை மறந்தான். அக்கறைச் சீமையில் அந்த மிகுந்த அப்ஸர ஸ்திரீகளுடன் அல்லும் பகலும் ஆனந்த சுகத்தில் ஆழ்ந்தேவிட்டான். 

பேரை மாற்றி மிஸ்டர் பி.வி.வடவார் என்று வைத்துக் கொண்டான். ஆனால், திடீரென்று ஒரு நாள் கோரோஜன மையங்கார் இருந்ததை யெல்லாம் இழந்து இன்ஸால்வெண்டாய் இறந்தார். வடவார் அவர்களுக்கு வாரந்தோறும் வந்து கொண்டிருந்த வரவுத் தொகைகள் வற்றிப்போய்விடவே, வேறு வழியில்லாமல், சிறிய கப்பலொன்றில் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து ஊருக்கு வந்து சேர்ந்தான். தன் மனைவி லக்ஷ்மி நவ நாகரிக ரீதிகளில் நன்றாய்ப் பழகியிருந்ததைப் பார்த்து மிகவும் திருப்திகரமாய் அவளை ஏற்றுக்கொண்டான். 

ஊரூராய்ச் சென்று உத்தியோகம் தேடினான். உபயோகப் படவில்லை. கடைசியில் அவனுடைய மாமனார் இருந்த ஸ்திதியையும், அவனுடைய வசீகரத் தோற்றத்தையும் கவனித்துப் பூகோள இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியின் முதலாளி, அவனைத் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு ஏஜெண்டாக நியமித்தார். அந்தக் கம்பெனி மிகவும் பிரபலமானபடியால் இந்த வேலை கிடைத்தது மிஸ்டர் வடவாருக்கு அதிருஷ்டமென்றே சொல்ல வேண்டும். ஆனால் வேலையைக் கொடுப்பதற்குமுன் கம்பெனி முதலாளி ஒரு காரியம் செய்தார். “மிஸ்டர் வடவார்! உங்களுக்கு வைத்த பேர் என்ன?’ என்று கேட்டார். 

“வாசுதேவன்” என்று பதில் வந்தது. 

“ஆனால் அப்படியே பேரை மறுபடியும் மாற்றிக்கொண்டால் தான் வேலை கொடுக்க முடியும். இந்த வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு எல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை” என்றார் முதலாளி. 

வாசு முணு முணுத்துக்கொண்டே ஒப்புக்கொண்டான். புத்திசாலி ஆதலால் வெகு சீக்கிரத்தில் நல்லபடி வேலையைக் கவனித்து உயர்ந்த சம்பளம் வாங்கி, லக்ஷ்மியிடத்தில் நீங்காத காதலுடன் விளங்கினான். 

ராஜு, அதாவது ஜே.ஜீ.ராஜகோபாலன், பி.ஏ. டம்ப கோணத்தில் போலீஸ் டிபுடி பரிண்டெண்டு. ஆசாமி நல்ல கட்டுமஸ்து, 32-வயசு. டென்னிஸ் முதலிய ஆட்டங்களில் நிபுணன். அவன் மனைவியின் பெயர் ஸரஸ்வதி. அவள் லக்ஷ்மிக்குக் கிட்டின பந்து, நல்ல புத்திசாலி, அழகுடையவள், பி.ஏ. பட்டம் பெற்றவள். லக்ஷ்மியும், சரஸ்வதியும் ஏறக்குறைய சமமான வயசுடையவர்களா யிருப்பதுடன், மிகவும் அன்யோன்யமான சிநேகம் படைத்தவர்கள். ஒவ்வொரு நாளும் அவர்கள் டம்பகோணம் லேடீஸ் கிளப்பில் சந்தித்து ஒன்றாய்க் காலம் போக்கி உல்லாசமாயிருப்பது வழக்கம். அந்த லேடீஸ் கிளப்பி லேயும் ‘ஆனந்தத் தாண்டவம்’ பத்திரிகை வரவழைக்கப்பட்டு யாவராலும் வெகு ஆவலாய்ப் படிக்கப்படுவதுண்டு. 


வாசுவுக்கு ஒரு சந்தேகம் பிறந்தது. இரண்டு வருஷங்களுக்குமுன் தான் சீமையிலிருந்து திரும்பி வந்தபோது லக்ஷ்மிக்குத் தன்மேல் இருந்த காதல் இப்பொழுது மிகவும் குறைந்துவிட்டது போல் தோன்றிற்று. தன்னைக் கண்டவுடன் லக்ஷ்மி முன்போல் பரபரப்புடன் ஓடி வருவதில்லை. அடிக்கடி தலையைத் தொங்க விட்டுக்கொண்டு ஏதோ சிந்தையில் ஆழ்ந்திருப்பதுபோல் இருக்கிறாள். தன்னுடன் இருக்கும்போதுகூட முன்னிருந்த கலகலப்பும் நகைப்பும் இல்லாமல் முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறாள். “ஒரு வேளை என் மேலிருந்த காதலெல்லாம் போய் வேறேதாவது……?” என்றெல்லாம். சந்தேகப்பட்டுக்கொண்டே ‘ஆனந்தத் தாண்டவம்’ ஆண்டு மலரின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று மேற்சொன்ன கட்டுரை கண்ணில் தென்படவே மிகவும் ஊக்கமாய் அதைப் படிக்க ஆரம்பித்தான். 

ராஜுவுக்குச் சரஸ்வதியிடத்தில் காதல் மாத்திரம் இல்லை; அவளை ஒரு தேவதையாகவே பாவித்துப் பூஜித்து வந்தான். மணிக்கு ஒருமுறை அவளைப் பார்க்காவிடில் அவனுக்குத் திருப்தி இராது. அவள் குரலை எப்போதும் கேட்டவாறே இரு வேண்டும். அவளைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டு, “கண்ணே ” மணியே”, “மானே”, “தேனே”, என்று சொல்லிக் கொண்டிருந்தால்தான் சந்தோஷமாயிருப்பான். இம்மாதிரி தான் நடப்பதால் எவ்வளவுதான் தன் மனைவிக்குத் தன்மேல் காதல் இருப்பினும் நாளடைவில் வெறுப்புத் தட்டுமே என்று ராஜுவின் புத்தியில் சற்றேனும் நுழையவில்லை. ஆனால் ஒன்று மாத்திரம் கவனித்தான். சரஸ்வதி அடிக்கடி முகம் சுளிப்பதும், ஏக்கம் பிடித்த மாதிரி இருப்பதும், சில வேளைகளில் தான் கொஞ்சிப் பேசும் வார்த்தைகள் காதில்கூட விழாததுபோல் இருப்பதும் தென்படலாயின. அதனால் ராஜுவுக்கும் மனத்தில் குறையும், கவலையும் வந்து புகுந்துகொண்டன. ‘சீ! சீ! இனிமேல் வாழ்வில் என்ன இருக்கிறது? என்னைக் கண்டு சரஸ்வதி நகைத்து, சந்தோஷிப்பது நின்றபின் உயிர் வாழ்ந்து என்ன பயன்?’ என்று பலவாறாக யோசித்துக் கொண்டே கிளப்பில் நுழைந்தான். இதையெல்லாம் நன்றாய்க் கவனித்துக் கொண்டிருந்த குறும்பு குதர்க்க நாயர் ‘ஆனந்தத் தாண்டவம்’ பத்திகையைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்து, “இந்தா! தம்பதிகள் காதலைப்பற்றி இதில் பெரியவர்களெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்,படித்துப் பார். நன்மை செய்யும்” என்று சொல்லிக் ‘கலகல’ வென்று சிரித்துவிட்டுப் போய்விட்டார். ராஜு மிகவும் ஊக்கத்துடன் அதைப் படிக்க ஆரம்பித்தான். 

டம்பகோணம் லேடீஸ் கிளப்பில் ஒரு சுகமான மெத்தை நாற்காலியில் சரஸ்வதி தனிமையாய் உட்கார்ந்துகொண்டு, ‘ஆனந்தத் தாண்டவம்’ பத்திரிகையின் பக்கங்களை அசட்டையாய்ப் புரட்டிக் கொண்டிருந்தாள். அவள் மனம் மிகவும் ஏக்க முற்றிருந்தது. கண்களில் நீர் ததும்பத் தயாராயிருந்தது. “ஐயோ! ராமா! ஏனோ இந்தப் பிராமணருக்கு என் மனநிலைமை புரியவில்லை! அதைத் தெரிந்து கொள்ளாமல் நாளுக்குநாள் தம் முகத்தை அதிக நீளமாக வைத்துக் கொள்ளுகிறாரே – ஸ்திரீகளுடைய மனசை அறிந்துகொள்ள!” 

“அடாடா டாடாடா ….. ஏன் இப்படி தனியாய் வாடின் முகத்துடன் இருக்கவேண்டும்?” என்று கலகலவென்று வெண்கலமணி அடிப்பது போன்ற குரலில் சொல்லிக்கொண்டு லக்ஷ்மி உள்ளே நுழைந்தாள். 

சரஸ்வதி ஒன்றும் பதில் உரைக்காமல் மௌனமாய்த் தலை நிமிர்ந்து பார்த்தாள். 

“நாதனைக் காணாமல் வேதனைப்படும் நங்காய்!” என்று லக்ஷ்மி ஆரம்பித்தாள். 

சரஸ்வதி, “லக்ஷ்மி! வா இப்படி,விளையாடாதே!” என்றாள். லக்ஷ்மி உடனே தன் தோழியின் சங்கடத்தைப் பார்த்துப் பக்கத்தில் வந்து உட்கார்ந்து, “என்னம்மா சரஸீ! உன் மனசில் என்ன குறை? சொல்லமாட்டாயா என்னிடம்?” என்றாள். 

சரஸ்வதி: உன் மனசில் இருக்கும் குறைதான் என் மனசிலும், லக்ஷ்மி! உன்னால் என்னிடம் ஒளிக்க முடியுமா? உன் சிரிப்பும், விளையாட்டும் வைத்துக் கட்டின மாதிரி இருக்கின்றனவே! 

லக்ஷ்மி: உனக்கு எப்படித் தெரிந்தது ? 

அடுத்த அரைமணி நேரம் அந்த அறையில் குசு குசு வென்று தாழ்ந்து மெல்லிய பெண் குரல்கள் ஓயாமல் கேட்டுக் கொண்டிருந்தனவே யன்றிப் பேச்சுகளின் உருப்படி சற்றுத் தூரத்தில் கூடத் தெரியவில்லை. சற்று நேரம் கழித்துக் கஷ்டத்துடன் அடக்கப்படும் சிரிப்பும், கொக்கரிப்பும் கேட்டன. ஏதோ வேலையாய் உள்ளே நுழைந்த வேலைக்காரி மெதுவாய்ப் பின் பக்கமாக வந்து எட்டிப் பார்த்தாள். இரண்டு அழகிய தலைகள் குனிந்து மிகுந்த கவனமாக ‘ஆனந்தத் தாண்டவத்’தைப் படிப்பதைக் கண்டாள். சந்தடி செய்யாமல் கிளம்பிச் சென்றுவிட்டாள். அந்தச் சிறிது நேரத்திற்குள் அவள் காதில்,”ஆம்! அதுதான் நல்ல உபாயம் “, “அப்படிச் செய்துதான் பார்க்கலாமே” என்ற வார்த்தைகள் விழுந்தன. 

ஸ்ரீமதி முக்தாமணி முகர்ஜி என்பவள் ஒரு வங்காள தேச விதவை.டம்பகோணத்துக்குச் சற்று வெளியே ஓர் அழகிய பங்க ளாவில் அவள் தனியாக வசித்து வந்தாள். கன்னிப் பருவத்திலேயே தன் புருஷன் இறந்துபோய்விட்டதால் தன் ஆயுள் முழுவதையும் கன்யா – விதவையாகவே கழித்துவிடப் போவதாகச் சொல்லி வந்தாள். முக்தாமணி நல்ல அழகி. நடை, உடை பாவனைகளில் வெகு சிரத்தையைச் செலுத்தி நவநாகரிக ரீதிகளை நன்றாய் உபயோகித்துப் பார்ப்பவர் மனங்களை எல்லாம் பரவசப் படுத்தி வந்தாள். தேக் கச்சேரியோ, மணவிருந்தோ, டென்னிஸ் பார்ட்டியோ, மஹிள ஸமாஜக் கூட்டமோ எதுவாயிருந்தாலும் முக்தாமணி இல்லாவிடில் அது மூளியென்றே சொல்லுவார்கள். அவள் எங்கே சென்றாலும் அவளைச் சுற்றி ஐந்தாறு ஆண் பிள்ளைகளாவது சூழ்ந்துகொண்டு அவள் வாயைப் பார்த்தவாறே இருப்பார்கள். அவள் டம்பகோணத்து ‘ஸ்திரீ ரத்னங்களில்’ நடுநாயகம். லேடீஸ் கிளப்புக்குக் காரியதரிசி. அவளுடைய உண்மையான வயசை ஒருவரும் அறியார். எப்போது பார்த்தாலும் நலுங்காத உடையும், தளராத நடையும், கோணாத முகமு மாய்க் காட்சி அளிப்பாள்.ஆடவர்களை வசியப்படுத்துவதிலேயே ஆனந்தம் அதிகம். மற்ற மாதர்கள் அவளை மறைவில் மனம் போன வாறு தூஷித்தும், எதிரில் பல்லை இளித்துப் பரிவுடன் புகழ்ந்தும் வருவது சகஜம். டென்னிஸ், பிலியர்ட்ஸ், பிரிட்ஜ் முதலிய நாக ரிகமான ஆட்டங்களில் ஆண் பிள்ளைகளையும் வெல்லக்கூடிய திறமை வாய்ந்தவள் அவள். அடிக்கடி தன் வீட்டில் விருந்துகளையும், கூட்டங்களையும் அழகாய் நடத்துவாள். ஆண் பெண் அடங்கலும் அவைகளுக்கு அவள் அனுப்பும் அழைப்பை மறுக்கச் சக்தியற்றுத் தவறாமல் போய் வருவார்கள். 

லக்ஷ்மியின் மனத்தில் பொறாமையை உண்டாக்குவதற்காக, வாசு, முக்தாமணியைப் பின்பற்ற ஆரம்பித்தான். தனக்குத் தானே, “சீ ! சீ! எனக்கு இந்த வங்காள ஸ்திரீயின் மேல் காதலா என்ன? ஒரு நாளும் இல்லை… ஏன்? சரிவர அவள் முகத்தைக்கூட நான் பார்த்ததில்லையே!” என்று பேசிக்கொண்டான். முதல் முறை முக்திக்குச் (‘முக்தி’ என்று முக்தாமணியின் பங்களாவுக்கு பெயர்) சென்றபோது, பத்து நிமிஷங்கள்கூடத் தங்கவில்லை. வீட்டுக்கு வரும் வழியில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டு வந்தான். ‘முத்துக் கோத்த மாதிரி பல் வரிசை என்ன அழகு!’ என்று சில வார்த்தைகள் மாத்திரம் காதில் விழுந்தன. இரண்டாவது நாள் போனபொழுது ஒருமணி நேரம் தங்கினான். அதில் ஐம்பத்தொன்பது நிமிஷங்கள் அவள் கன்னங்களில் தோன்றித் தோன்றி மறையும் சிங்காரக் குழிகளைக் கண்கொட்டாமல் பார்த்தவாறு இருந்தான். ஆனால் வீட்டிற்குப் போகும்போது மாத்திரம், “என்ன இருந்தாலும் என் லக்ஷ்மி எங்கே? இவள் எங்கே? ஹி! ஹி! ஹி!” என்று கொஞ்சம் அசட்டுச் சிரிப்புடன் தனக்குத் தானே பேசிக்கொண்டான். மூன்றாம் நாள் முக்தி வாஸம் மூன்று மணி நேரம். “அவள் விழிகளின் கருமை அதிகமா, கூந்தலின் கருமை அதிகமா?” என்று முழு நேரமும் யோசித்து ஒரு தீர்மானத்திற்கும் வரமுடியவில்லை. ஆனால் அப்போதைக் கப்போது தனக்குள், “இதெல்லாம் பாசாங்குக் காதல்தானே? உண்மையாக அவள் மேல் ஆசைப்படுகிறேனா என்ன? என் லக்ஷ்மி மேல்தான் எனக்கு நிஜமான காதல்” என்று சொல்லிக் கொள்வான்.ஆனால் அம்மொழிகள் அவன் காதுகளுக்கே முற்றும் திடமமைந்தவைகளாய் ஒலிக்கவில்லை. 

வீணாய் வளர்த்துவதேன்? ஒரு வாரத்திற்குள் வாசு முக்தா மணியின் காதலில் மூழ்கியேவிட்டான். ஆபீஸ் வேலை யெல்லாம் ஆலாய்ப் பறந்துவிட்டது. வீட்டில் கழிப்பது வீண் போதென்று நினைத்து, இரண்டு நிமிஷங்கள்கூட லக்ஷ்மியுடன் இருப்பதில்லை. 

பார்த்தாள் லக்ஷ்மி; “ஆஹா! அப்படியா? சரி, இருக்கட்டும். வேறு வழியில்லை” என்று பற்களைக் கடித்துக்கொண்டு தீர்மானம் செய்தாள். 

ராஜு வெகுநேரம் யோசித்தான். அநேக மங்கைமார்களை ஒவ்வொருவராய் மனத்தில் சீர்தூக்கி, கடைசியில் பந்தயம் கட்டுகிறவன் குதிரையைப் பொறுக்கி எடுப்பதுபோல் முக்தா மணியைப் பொறுக்கி யெடுத்தான். ‘சரஸ்வதியின் மனசில் பொறாமையை மூட்டுவதென்றால் அவ்வளவு எளிதல்ல. சாமானியமான ஒருத்தி வலையில் நாம் விழுந்துவிட்டதாகப் பாசாங்கு செய்தால் நம்பமாட்டாள்.முக்தாமணி யென்றால், அவளுடைய ரூபம், குணம், யாவற்றையும் அனுசரித்துச் சரஸ்வதி சுலபமாய் நம்ப முடியும். ஆயினும் யாராயிருந்தாலென்ன?’ என்று ராஜு யோசித்தான். “பாசாங்குக் காதல் தானே? என் சரஸ்வதியின் கால் விரலுக்குச் சமானமான வேறொரு ஸ்திரீயும் இருக்க முடியுமா? அவளுடைய நன்மைக்காகவே நான் செய்யவேண்டிய கடமை இது ‘ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். அன்று சாயங்காலமே அந்தக் கடமையைச் செய்யத் தொடங்கினான். ஒவ்வொருநாளும் அந்தக் கடமையிலேயே அதிகமான காலத்தைக் கழிக்க ஆரம்பித்தான். களைத்துவிடும் வரையில் டென்னிஸ் ஆடியும், தேஜோமயமான தேவதையின் கரங்களிலிருந்து தேத் தண்ணீரைப் பெற்று அருந்தியும், மங்கின விளக்கு வெளிச்சத்தில் மங்கையின் காலிடையே அமர்ந்து அவள் மதுரமான குரலைக் கேட்டுக்கொண்டே மயங்கிக் கிடந்தும் ராஜு தன் கடமையைச் செய்து வந்தான். அதிகமாய்ச் சொல்லுவானேன்? மூன்று நாட்களுக்குள் ராஜு முக்தாமணி அம்பாளின் சந்நிதானத்தில் முடி வணங்கி பூஜிப்பவனாய் விட்டான். 

காலைப் பூஜையைக் கருத்தாய்ச் செய்துவந்தவன் வாசு. மாலைப் பூஜையை மகிழ்வுடன் நடத்திவந்தவன் ராஜு ஒருவன் செய்வது மற்றவனுக்குத் தெரியாது. இருவரும் முக்தாமணிக்குத் தான் தான் முதன்மையான பக்தனென்று திண்ணமாய் நம்பியிருந்தார்கள். இருவரும் வெகு சீக்கிரத்தில் தங்கள் அழகிய மனைவிகளை மறந்தனர். விளையாட்டுக் காதல் வினைக்காதலாய் முடிந்தது. 

*** 

காலைப் போஜனத்தைக் கால் வயிற்றுக்குக்கூடச் சாப்பி டாமல் வாசு அவசர அவசரமாய் உடையணிந்துகொண்டு வெளிக் கிளம்பினான். தபால்காரன் வந்து மூன்று கடிதங்களைக் கொடுத்தான். 

“முல்லாராம் கடையிலிருந்து எனக்கு ஒரு பார்சல் வரவில்லையா?” என்று வாசு தபால்காரனைக் கேட்டான். 

“இல்லை ஸ்வாமி” என்று சொல்லிவிட்டுத் தபால்காரன் போய்விட்டான். 

வாசு கடிதங்களைப் பிரித்துப் பார்த்தான். முதல் கடிதம் ஆபீஸ் முதலாளியிடமிருந்து வந்தது. “மூன்று வாரங்களாய் உன்னிடமிருந்து சேதியே இல்லை. என்ன காரணம்? உடனே பதில்” என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டாவது கடிதம் “மதராஸ், முல்லாராம் முடுக் சந்த் ஷாப்” பிலிருந்து வந்தது. அதில்:-“இன்று தங்களுடைய ஆர்டர் பிரகாரம் மூன்று முதல் தரமான பட்டு ஸாரிகளும், அதே வர்ணங்களில் ஸாரிக்கு இரண்டு வீதம் ஜாக்கெட் துணிகளும், இன்னும் இதர சாமான்களும் அடங்கிய பார்ஸலைத் தங்கள் விலாசத்துக்கு அனுப்பி இருக்கிறோம். போனவாரம் அனுப்பிய தங்க வேலை செய்த தந்த நகைப் பெட்டியின் விலை ரூபாய் 750-ஐயும் தயவுசெய்து அனுப்பும்படி கோருகிறோம்” என்று எழுதப்பட்டிருந்தது. 

“அடாடா! என்ன இவ்வளவு அவசரம் பணத்திற்கு?” என்று சொல்லிக்கொண்டே வாசு மூன்றாவது கடிதத்தைப் பார்த்தான். முதல் வரியைப் படித்தவுடனே முகத்தைச் சுளித்து மறுபடியும் மேல் விலாசத்தைப் பார்த்தான். சரியாய்த்தான் இருந்தது தன் பேர்தான். இல்லை! இல்லை! “மிஸஸ் வாசுதேவன்” என்று இருந்தது. ஆஹா! லக்ஷ்மிக்கு வந்த கடிதத்தைப் பிரித்து விட்டான். ஆனால் இது வாஸ்தவமாயிருக்குமா? நம் கண்களே மோசம் செய்கின்றனவா?” மறுபடியும் படிக்க ஆரம்பித்தான். 

“என் ஆசைக் களஞ்சியமே…ஐயோ! ஐயோ! இதென்ன அநியாயம்! என் கண்களை இந்த மொழிகள் நெருப்பைப்போல் தகிக்கின்றனவே! லக்ஷ்மிக்கு இம்மாதிரி எழுதக் கூடியவர் யார்? ஈசனே! ஈசனே!” என்று அலறிக்கொண்டு மறுபடியும் படிக்க ஆரம்பித்தான். 

“என் ஆசைக் களஞ்சியமே! இனி என்னால் பொறுக்க முடியாது! எத்தனை நாட்கள் உன்னைத் தூர நின்று தரிசித்து விட்டுத் துன்பத்துடன் போவது? எப்போது நான் உன் அருகில் வந்து உன் இணையற்ற வாயிலிருந்து வரும் இனிய மொழிகளைப் பருகுவது? உன் விழிகள் விளைக்கும் கலகத்தை அடக்க ஒரு வழியே நான் அறிவேன். அது உன் மோவாய்க்கட்டையின் நடுவிலிருக்கும் அழகிய குழிவுக்கு முத்தமிடுவதுதான். உன் வளையல்கள் அசையும்போது உண்டாகும் ஓசைக்கு முன் வீணாகானம் என்ன செய்யும்?… இன்னும் எவ்வளவோ எழுதமுடியும். ஆனால் கஷ்டமுடன் பொறுத்துக் கொள்வேன். இன்றிரவு 10- மணிக்குக் காதலர் போற்றும் காவிரிக் கரையோரத்தில் காட்டரச மரத்தின் கீழ்க் காமபாணத்தில் பட்டு உன் காலிடைக் கிடந்து உன் காதார என் ஆசை மொழிகளைப் பொழிவேன். கண்ணே, மறவாதே! காத்திருப்பேன் உன்னடிமை! 

உடை : நீண்ட அங்கியும் நீலநிற முகமூடியும்.

சமிக்ஞை: உன் மிருதுவான கைகளை மூன்று முறை தட்டுதல். 

பலன் : இந்திர போகம். உனக்காக உயிர்வாழும் உன் காதலன். 

இதைப் படித்ததும், வாசு தடுமாறி நிலை குலைந்தான். “ஆஹா! இவ்வளவு துரோகமா? என்ன மாயம்! என்ன மோசம்! இருக்கட்டும்!” என்று பற்களை நறநறவென்று கடித்தான். மறுபடியும் கடிதத்தை முன்போலவே ஒட்டி லக்ஷ்மியின் அறையில் வைத்துவிட்டு வெளியேறினான். “இரவு பத்து மணிக்குக் காவிரி யோரத்தில் காட்டரச மரத்தின் கீழா சந்திக்கப் போகிறார்கள்? தகுந்த இடந்தான்! (சில வேளைகளில் வாசு முக்தாமணியைச் சந்தித்த இடமும் அதுதானே?) பார்ப்போம்! இன்று இரவு அவர்கள் படப் போவதை ஜன்ம முழுதும் மறக்கக்கூடாது” என்று தீர்மானித்துக்கொண்டான். 

ராஜு ஸ்நானம் செய்யும் அறைக்குள் நுழைந்தான். சரஸ்வதி அப்பொழுதுதான் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு வெளியே போனாள். அவள் அவிழ்த்துப் போட்ட புடைவையின் அருகில் ஒரு கடிதம் கிடந்தது. ராஜு அதை எடுத்து மெல்லப் பிரித்தான். ஆண் பிள்ளையின் கையெழுத்து! 

வாசுவின் வீட்டில் நடந்த சம்பவங்கள் இங்கும் நடந்தன. அதேவிதமான கடிதம்! அதே விதமான கோபக் குறிகளும் சித் தீர்மானமும் ஏற்பட்டன. 

8- மணிக்கு முக்தாமணி தன் மிருதுவான படுக்கையை விட்டு எழுந்தாள்.பல்லை விளக்கிப் பலவிதமான வாசனைப் பொடிகளைக் கரைத்த பன்னீர் போன்ற வெந்நீரில் பளிங்கு போன்ற தன் மேனியைப் பரிசுத்தம் செய்துகொண்டாள். பளபள வென்று பிரகாசிக்கும் பட்டு உடையைத் தரித்தாள். பதமாய்ச் செய்யப் பட்ட காபியைப் பருகினாள். படிவழியே பரிசுகளைச் சுமந்து பல்லை இளித்துக்கொண்டு வரும் வாசுவின் வரவை எதிர்பார்த்தவாறு பத்திரிகையைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். 

வேலைக்காரி வெள்ளித் தட்டின்மேல் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு வந்து,”இப்பொழுது வந்ததம்மா” என்று வணக்கமாய் வைத்துவிட்டுப் போனாள். 

உயர்தரமான கடுதாசி! எழுத்தும் நூதனமாயிருந்தது. மேல் விலாசம், ‘ஸ்ரீமதி முக்தாமணி முகர்ஜி அவர்களுக்கு’ என்று அழகான எழுத்துக்களில் இருந்தது. ஒரு மூலையில் ‘ப்ரைவேட் என்று துணுக்கி எழுதியிருந்தது. முக்தாமணிக்குக் கொஞ்சம் பரபரப்பும் குதூகலமும் அதிகரித்தன. நாஸுக்காய் லகோடாவைப் பிரித்துக் கடிதத்தை எடுத்துப் பார்த்தாள். முதல் வரியைப் படித்ததும் மூச்சுத் திணற ஆரம்பித்தது. இருதயப் படபடப் புடன் முழுதும் படித்தாள். 

“ஆட்கொண்ட தெய்வமே! 
உ ற்றெங்கு நோக்கினும் உன்னையே காண்கிறேன்!
ஊணுறக்க மற்ற உன்மத்த னானேன். 
குற்றமொன் றறியேன் – குறைதீர்க்கில் தரியேன்!
நற்றவப் பயனை நீ நல்குவாய் நங்காய்!
காதலர்க் கேற்றதாய்க் காவிரிக் கரையினில்
காட்டர சொன்றுமேல் ஓங்கியே காணுமாம்
ஆதவன் மறைந்ததும் ஆங்குனைத் தேடுவேன்.
நன்மைசெய் இரவினில் நாழிகை பத்தினில்
மதியுடன் ரேவதி மகிழ்ந்திடும் நாளினில்
நீண்டதோர் அங்கியும் நீலமுக மூடியும்
பூண்டவர் அங்குற்றுப் புற்றரையில் நின்று
பூவனைய கைகளால் ‘பட்-பட்-பட்டெனவே 
மும்முறை ஒலித்திடில் என்முக்திமணிப் பாவாய்
மூவுலகை வென்றபயன் அன்றே அடைவாயே.- “

கையொப்பம் எதுவும் இல்லை. அதற்குப் பதில் இருதயத்தில் ஓர் அம்பு ஊடுருவி இருப்பதுபோல் ஒரு சித்திரம் வரையப் பட்டிருந்தது. 

இதைப் பார்த்ததும் முக்தாமணிக்கு உடலெல்லாம் பூரித்தது. “ஆஹா! இது யாராயிருக்கக் கூடும்! என்ன அழகாய் எழுதப்பட்டிருக்கிறது! நன்றாய்ப் படித்து உயர்ந்த ஸ்திதியில் இருப்பவர் யாரோதான் இதை எழுதியிருக்கக்கூடும்! வெகு நாளாய்க் காதல் கொண்டு தாங்க முடியாமல் இதை எழுதினவர் யாராயிருக்கும்?.. இல்லை !… இல்லை !… இருக்குமா!… ஐயோ! அப்படி இருந்தால் வேறென்ன வேண்டும்? ஆயினும் இதை எழுதியவர் ஸப்- கலெக்டர் சங்கர ஐயராகத்தான் இருக்கவேண்டும்.” என்று முக்தா மணிக்குத் திடமாய்த் தோன்றிற்று. நல்ல அழகும், படிப்பும் வாய்ந்தவர். பல மாதங்களாய் அவரைத் தன் வலையில் சிக்கவைக்க வேண்டி அவள் செய்துவந்த பிரயத்தனங்கள் கணக்கற்றவை. அப்பா ! கடைசியில் அகப்பட்டார்! 

இந்த விதமாய் முக்தாமணி தனக்குத் தானே பலவாறாய் ஆனந்த மடைந்து இரவு பத்து மணி எப்போது வருமென்று ஆவலாய் எதிர்பார்த்தாள். 

இரவு நல்ல நிசப்தமாயிருந்தது. பிறைச் சந்திரன் கீழ்வானத்தில் நக்ஷத்திரங்களிடையே தென்பட்டது. காவேரி நதியின் பிரவாகம் கலங்கிக் கரைபுரண்டு சலசலவென்று ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. எங்கும் நிறைந்த நிசப்தத்தில் அப்போ தைக்கப்போது சிறிய ஓசைகள் ஏற்பட்டு, அரசமரத்து இலைகள் ஆடுவதாலும், அருகிலிருந்த ஆந்தைகள் அலறுவதாலுமே உலகம் உயிர்த்திருப்பதாய்த் தோன்றிற்று. 

இந்த நிசப்தமான உலகில், ஒரு மனிதன் மெதுவாய் அடிமேல் அடி வைத்துக்கொண்டும், அங்கும் இங்கும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டும் பிரவேசித்துக் காட்டரச மரத்தடியில் வந்து கள்ளத்தனமாய் அதன்மேல் ஏறி ஒரு பெரிய கிளைமீது மறைந்து உட்கார்ந்து கொண்டான். அவன்தான் வாசு. “வரட்டும் அவள். கெட்டழிந்த கழுதை!” என்று பற்களைக் கடித்துக்கொண்டு முணு முணுத்தான்.”மூன்றாவது முறை கைகளைத் தட்டினதும்,அவள் கள்ளக் காதலன் தோன்றிக்கட்டி அணைப்பதற்குள் பழிவாங்கும் பேயைப்போல் நான் தோன்றிப் பதற வைக்கிறேன். காதலன் ஸ்பரிச த்திற்குக் காத்திருக்கும் கன்னத்தில் பேயறைவது போல் அறைகிறேன். பிறர் மனைவியை இச்சித்துவரும் சண்டாளனுக்குத் தகுந்த பரிசு!” என்று தன் கையில் வைத்திருந்த கனமான குட்டைத் தடியைத் தடவி ஆனந்தமடைந்தான். 

இந்தயோசனையில் இருக்கும்போது,மற்றோர் உருவம் வெகு ரகசியமாயும் சந்தடி செய்யாமலும் வந்து எதிரே இருந்த மற்றொரு மரத்தின்மீது ஏறி ஒளிந்துகொண்டதை வாசு பார்க்க வில்லை. அங்கிருந்து ராஜு சரஸ்வதியை நிந்தித்துச் சபித்ததும் அவளுடைய கள்ளக் காதலனைப் பலபல விதங்களில் சித்திரவதை செய்யப் போவதாய்ப் பேசிக் கொண்டதும் வாசுவின் காதில் விழவில்லை. 

இரண்டு கைக்கடியாரங்களில் மணி பத்தாயிற்று. இரண்டு தலைகள் நிமிர்ந்து எந்தத் திக்கிலிருந்து சப்தம் வருகிறதென்று எதிர்பார்த்தன. எங்கும் நிசப்தம்! திடீரென்று ஒரு கழுதை கத்திற்று. “நமக்கு ஐயந்தான்” என்று இருவரும் சொல்லிக் கொண்டார்கள். மெள்ள மெள்ள ஐந்து நிமிஷங்கள் சென்றன. சற்றுத் தூரத்தில் சலசலவென்று சப்தம் கேட்டது. மார்புகள் படபட வென்று அடிக்க, கண்கள் கொட்டாமல் காரிருளைப் பிளக்கப் பார்க்க, இரண்டு காட்டு மிருகங்கள், மரங்களின் மீதிருந்து காத்திருந்தன. 

நீண்ட அங்கியால் உடலை முற்றும் மறைத்துக் கொண்டு, முகத்தையும் முகமூடித் துணியால் மூடிக்கொண்டு, அடிமேல் அடி வைத்து ஓர் உருவம் காட்டரச மரத்தை நோக்கி வந்தது. 

“வரட்டும்! துரோகி!” என்று உறுமிக்கொண்டான் வாசு.

“வா! வா! வஞ்சகக் கள்ளி!” என்று சீறினான் ராஜு. 

உருவம் கிட்டக் கிட்ட வந்தது. அடிக்கடி நின்று நின்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்து, அணுகிற்று. 

”ஆஹா! நான் பார்த்து அனுபவித்த அந்த இடையசை வுடன் தன் சோர புருஷனைக் கூடி ஆனந்திக்கவா வருகிறாள் ! ஐயோ லக்ஷ்மி!” என்று மனத்திற்குள் புலம்பினான் வாசு. 

“என்னை மயக்கிய அந்தக் கழுத்தசைவால் கள்ளக் காதலனையும் மயக்கப் பார்க்கிறாளே !… சரஸீ” என்று முறுகினான் ராஜு. உருவம் மரத்தடியில் வந்து சேர்ந்தது. கைகளை அசைத்தது. கலகலவென்று வளையல்கள் குலுங்கும் சப்தம். பிறகு “பட்-பட்-பட்” என்று மிருதுவாய் மூன்று முறை கைகளைத் தட்டும் சப்தம் கேட்டது. 

ஒரே சமயத்தில் இரண்டு திக்கிலிருந்து இரண்டு பயங்கர உருவங்கள் இடிமுழக்கம்போல் கத்திக்கொண்டு வாயு வேகமாய் வந்தன. அடுத்த கணம் “பளீர்’ ‘பளீர்’ என்று இரண்டு அறைகள் இரண்டு கன்னங்கள் மேல் ஒரே சப்தத்துடன் விழுந்தன். இரண்டு குரல்கள் ஒரே சமயத்தில், “நீ யாரடா என் மனைவியை அடிப்பவன்?” என்று கூக்குரலிட இரண்டு கோர உருவங்களும் ஒன்றை யொன்று தாக்கித் ‘தப்பு’ ‘திப்பு’ என்று அடிகளாலும் குத்துகளாலும் ஓசையைக் கிளப்பின. 

இதற்குள் இரண்டு பெண்ணுருவங்கள் எங்கிருந்தோ வேகமாய் உட்புகுந்து ஆளுக்கு ஓர் அசுரனைப் பிடித்து இழுத்துச் சண்டையை விலக்கப் பார்த்தன. ஒரே கோலாகலம். அரற்றி உருட்டும் ஆண் குரல்களும் அழுகையும் சிரிப்புமான பெண் குரல்களும் ஒரே சமயத்தில் முழங்கின. திடீரென்று எல்லாம் அடங்கி முழு நிசப்தம் உண்டாயிற்று. 

உடம்பெல்லாம் காயங்களும், சிவந்த தாடைகளும், சிந்தின மூக்கும், கண்ணீரைப் பெருக்கும் கலங்கிய கண்களுமாய் ஒருத்தி இருபுறமும் நோக்கியவாறு நின்றாள். இரண்டு ஜோடித் தம்பதிகள் இரு புறங்களிலும் இணைத்த கரங்களும் இடைவிடா உடல்களுமாய் இருட்டில் மறைந்தனர். நின்றவளுக்கு ஆடைகள் கசங்கி முகமூடி கிழிந்துபோய் காதில் தொங்கிக்கொண்டிருந்த மாட்டல்களுடன் சிக்கிக்கொண்டு, கன்னங்கள் இரண்டும் விண் விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்தன. துச்ச மொழிகளையும், தூஷணைகளையும் பொழிந்துகொண்டு, முகமூடியை வெடுக்கென்று பிய்த்து எறிந்தாள். விம்மி விம்மி அழுது கொண்டு, விதியை நொந்தவாறு விரைந்து வீட்டை நோக்கி மறைந்தாள். 

“என் கண்மணி லக்ஷ்மி!” என்று வாசு தன் மனைவியை அன்றுதான் பார்ப்பவன்போல் ஒற்றைக் கண்ணால் ஓயாது நோக்கினான். அது அவன் மேல் குற்றம் இல்லை. மற்றொரு கண்ணைத் திறக்கமுடியாமல் மாங்காயளவு பெரிய வீக்கமொன்று அதன் மேல் இருந்தது. 

“என் செல்வச் சிங்கக்குட்டியே!” என்று லக்ஷ்மி அவனை அணைத்துக் கொண்டு அழுகையும் சிரிப்பும் கலந்த குரலில் தாலாட்டித் தலைமயிரைத் தடவிக்கொடுத்து, அவன் பட்ட காயங் களிலிருந்து வடிந்த ரத்தத்தைத் தன் பட்டு முன்றானையால் துடைத்துக்கொண்டிருந்தாள். மறுநாள் “முல்லாராம்” ஷாப்பிலிருந்து மூன்று உயர்ந்த ஸாரிகள் பார்ஸல் தன் முரட்டுக் கணவன் பேருக்கு வருமென்று தெரியுமோ என்னவோ? 

“போக்கிரிக் குட்டி ! போகாதே எட்டி” என்று ராஜு” தன் மனைவியை இழுத்து மறுபடியும் மடிமேல் அமர்த்திக்கொண்டு இரண்டு பற்களை இழந்து ரத்தம் பெருகும் தன் வாயை அவள் முகத்தருகில் கொண்டு போனான். சந்திரன் அடர்ந்த மேகத்தின் பின் மறைந்தான். 

“லக்ஷ்மி! லக்ஷ்மி! எங்கிருக்கிறாய்?” 

“இதோ! இங்கேதான் சரஸு! வா இப்படி, அந்த அசட்டுப் புருஷனுடன்”. 

நால்வரும் மெல்ல ஒன்றாய் நடந்து செல்ல ஆரம்பித்தார்கள். “பைத்தியக்காரப் பெண்களே! இதென்ன காரியம்? ஒரு வார்த்தை சொல்லி யிருந்தால்…” என்று பேச ஆரம்பித்தான் வாசு. அதற்குள் அழகிய கை ஒன்று மேற் கிளம்பி அவன் வாயைத் திறக்க வொட்டாமல் தடுத்தது. 

ஆனால் ராஜு “உங்களுடைய மனக் குறைகளை நாங்கள் அறிந்திருப்போமே!” என்று முடித்தான். 

லக்ஷ்மியும், சரஸ்வதியும் இருட்டில் மனமார ஆனந்த பாஷ்பம் சொரிந்தார்கள். 

“அந்த ஸ்திரீ யார்?” என்றான் வாசு. 

“இந்தக் கந்தல் முகமூடியைக் கேளுங்கள் என்றாள் சரஸ்வதி. 

“முக்தி யளிப்பவள் முகத்தைக் காத்தது” என்றாள் லக்ஷ்மி.

“சக்தி இழந்தது சேரிடம் சென்றது” என்று ராஜு சொல்லிக்கொண்டே அதைச் சுருட்டி நடு ஆற்றில் எறிந்தான். 

“இதற்கெல்லாம் என்ன காரணம் இருந்திருக்கும்?” என்றாள் சரஸ்வதி. அதற்கு லக்ஷ்மி, “நான் மூன்று முறை கைகளைத் தட்டுகிறேன். மூன்றாவது முறை தட்டி முடிந்தவுடன் அவரவர்களுக்கு என்ன காரணம் தோன்றுகிறதோ அதைச் சொல்ல வேண்டும்” என்று சொல்லிவிட்டு, “பட்-பட்-பட்” என்று தட்டி முடித்தாள். நால்வரும் ஒரே குரலில், “ஆனந்தத் தாண்டவம் ஆண்டு மலர்” என்றார்கள். 

‘முக்தி’ யெனும் பங்களாவுக்குமுன் ‘குடிக்கூலிக்கு விடப்படும்’ என்று, பூட்டப்பட்ட கதவிலிருந்து ஓர் அறிக்கை தொங்குகிறது.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *