கரிசல் காட்டு காதல் கதைகள்! – 10

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,167 
 
 

பொண்ணும் பொன்னும்!

‘‘தாலி கட்டின அன்னிக்கே எங்காத்தா உன்ன வெச்சி
வாழவேண்டாம்னு சொன்னா, அப்பவே உன்ன விட்டுடுவேன்’’ என்ற
தேவாவை மனைவி தாசனாக மாற்றியது எது?

களவெட்டுக்காக வந்த சாந்திக்கு வேலையே ஓடல. தேவாவோட தல எங்கிட்டாச்சிலும் தெரியுதான்னு சுத்தியும், முத்தியும் பாக்கா… பாத்துக்கிட்டே இருக்கா. அவன் ஆளவே காணோம். அவனக் காணோமின்னதுமே பச்சையோடி கெடந்த வெள்ளாமையெல்லாம் மறைஞ்சி, எங்க பாத்தாலும் வெக்கரிச்சிப் போன மாதிரி கெடக்கு.

தேவான்னா அவளுக்கு உசுரு. அவன என்னிக்கு முதன் முதலா பாத்தாளோ அன்னிக்கே இவ மனசு பசக்குனு வெட்டுக்கிளி கணக்கா போயி அவன்கிட்ட ஒட்டிக்கிடுச்சி. அன்னியிலருந்து சாந்திக்கு சாப்பிட்ட மாதிரியும் இல்ல, உறங்கின மாதிரியும் இல்ல. தேவாவோட நெனப்புத்தான் அவளப் பாடா படுத்துது, பம்பரமா சுத்துது.

இத்தனைக்கும் தேவா அவகிட்ட எத்தனையோ தடவ ‘‘இந்தா பாரு சாந்தி! எங்காத்தா குணம் ஒரு மாதிரி. அவ என்ன வளக்கதுக்கு ஒத்தையா அந்தப் பாடு பட்டிருக்கா. சாவற வரைக்கும் நானு என் ஆத்தாவுக்கு மவனா இருக்கணுமின்னு ஆசப்படுதேன்’’னு சொல்லி முடிக்கமின்ன சாந்தி, ‘‘அப்படியே இரும். உம்ம என்ன எனக்கு மவனாவா இருக்கச் சொல்லுதேன்? எனக்குப் புருசனாத்தேன் இருக்கச் சொல்லுதேன்’’னு எடக்குப் பேசி சிரிப்பா.

அப்ப தேவாவுக்கு அவ மேல பாவமா இருக்கும். ‘‘சாந்தி! நீ என்கிட்ட என்ன சொகத்த அனுபவிக்கப் போறே. தாலி கட்டுன அன்னிக்கே எங்காத்தா உன்ன வச்சி வாழவேண்டாம்னு சொன்னா நானு ஏன், எதுக்குன்னுல்லாம் கேக்கமாட்டேன். அப்பவே உன்னக் கொண்டு போயி உங்க வீட்டுல விட்டுட்டு வந்துருவேன்’’னு சொல்லியும் பாத்துட்டான். ஆனா, சாந்தி கேக்கல. ‘‘நீரு என்ன சொன்னாலும் சரி. உமக்கு வாக்கப்பட்டு உம்ம ஆத்தாளுக்கும் உமக்கும் பாதம் பணிஞ்சி பணிவிடை செஞ்சி, வாழ்ந்தா வாழ்வேன். அப்படி வாழ்க்கை எனக்கு ஒத்த நாளு கெடச்சாலும் போதும். இல்லேன்னா காலம் பூரா உம்ம நெனப்போட வாழ்ந்துட்டு செத்துப் போவேன். இனி உம்ம பிரியந் தேன்’’னு சொல்லிட்டா.

தேவாவுக்கு என்ன செய்யன்னு தெரியல. அவனும் முழு இளவட்டமா ஆயிட்டான். ஆனாலும், அவன் ஆத்தா மவாளி இதுவரைக்கும் கல்யாணப் பேச்சவே பேசமாட்டேங்கா. இவன் வீட்டுக்கு எதிர்வீட்டுல இருந்த புசுப்பா வந்து ஒருக்கா இவன் ஆத்தாகிட்ட இவன் கல்யாணத்தப் பத்தி பேசுனப்போ, ‘‘எம்மவன் கல்யாணத்தப் பத்தி நானே விசாரப்படல. நீ எதுக்கு இப்ப அக்குசா கேக்க? கல்யாணம், காச்சின்னு எம்மவனுக்கு முடிச்சி வச்சா, வர்ற சிறுக்கி எங்கிட்ட இருந்து எம்மவனப் பிரிச்சிருவா. எம்மவன் காலம் பூரா எனக்கு மவனாவே இருந்துட்டுப் போவட்டும்’’னு சொல்லிக்கிட்டு இருந்தத மறவா நின்னு ரெண்டு காதாலயும் கேட்டு அன்னிக்கு பெத்தவ மனசுல இருந்த அச்சத்தப் பாத்து விக்கி, வெரச்ச வந்தவன்… இன்னவரைக்கும் கல்யாணத்தப் பத்தி பேசவே இல்ல. ஆனா, சாந்தி இப்ப இவன சுத்தி, சுத்தி வந்ததோட இவன் மனசுலயும் ஆசய உண்டாக்கிட்டா. இவனுக்கு என்ன செய்யன்னு தெரியல. ஒரு மாசமா யோசிச்சு, யோசிச்சுப் பாத்துட்டு, இவன் மேல உசுரா இருக்க ரங்கசாமி சீயான்கிட்டப் போயி ஆத்தா நினைப்பப் பத்தியும், தன் ஆசையப் பத்தியும் சாந்தியப் பத்தியும் விவரமா சொல்லிட்டான்.

அவருக்கின்னா கேலியும், சிரிப்புமா இருக்கு. ‘‘ஏலேய் கிறுக்கு பயபுள்ள. ‘எனக்கு கல்யாணம் முடிச்சி வைக்கயா? இல்ல ஒருத்திய கூட்டியாந்து வீட்டுல வச்சிக்கிடட்டா?’னு ஆம்பளப் புள்ளயா, லச்சணமா கேளாம, இப்படி பரிதவிச்சிக் கெடக்கேயேடா’’ன்னவரு அன்னிக்கே மவாளிக்கிட்ட வந்து கல்யாணப் பேச்சை எடுத்து விட்டார். மவாளியும் எதையெல்லாமோ சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்தா. முடியல. ரங்கசாமிகூட இன்னும் சில தாயீ, புள்ளைகளும் சேர்ந்துக்கிட்டு அவளை கொத்திப் புடுங்கினப்போ சம்மதமே இல்லாம, மகன் கல்யாணத்துக்கு சம்மதிச்சா.

ஆனாலும், ‘‘கல்யாணத்துக்கு நானு ஒரு முக்காத்துட்டு கூட செலவழிக்க மாட்டேன். அவுகதேன் அம்புட்டு செலவையும் செய்யணும். அதோட, பொண்ணுக்குப் போடுத நக, நட்டு, பண்டம், பாத்திரம்னு அம்புட்டயும் கணக்குப் பாத்து எங்கையில துட்டா கொடுத்திரணும். எம் மவன் பொண்டாட்டி கட்டுன சீலயோடதேன் என் வீட்டுக்கு வரணும்’’னதும் எல்லாருக்கும் திகப்பூண்டுல மிதிச்ச மாதிரி ஆகிடுச்சு.

ரங்கசாமி மவாளிய ஒதுக்குப்புறமா கூட்டிப் போயி யாருக்கும் தெரியாம கிசுகிசுத்தார். ‘‘என்னத்தா இப்படிப் பேசுதே. ஒரு வீட்டுக்கு வாழ வர்ற புள்ள வெறுமனேவா வருவா. அதிலயும் வயசுப் புள்ளயும்கூட. நக, நட்டுப் போட ஆசப்படுமில்ல’’னு ஆதங்கத்தோட கேட்க, மவாளி சீறினா…

‘‘நீரு பேசாம வாயை மூடிக்கிட்டு இரும். உமக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணமே வேண்டாமின்னு அப்புரானியா கெடந்த எம்மவனுக்கு கல்யாணம் முடிச்சி வச்சதுமில்லாம வாய் வேற பேசுதீராக்கும்? இன்னிக்கு மருமவக்காரி நக, நட்டுன்னு போட்டு மினுக்கிக்கிட்டு வந்தானா அவளுக்குப் பவுசு கூடிப் போவும். எம் மவன் கையிலயே துட்டு, துக்காணின்னு இருக்க விட மாட்டேன். நம்ம கையில நாலு காசு இருந்தாத்தேன் என்ன உச்சாணிக் கொம்புல வச்சிருப்பாக. நீரு உம்ம சோலியப் பாரும்’’னு எகிற, ரங்கசாமி வாயை மூடிக்கிட்டார்.

மூளிக்காது, மூக்கு, கழுத்துனு பொட்டு தங்கமில்லாம, கழுத்துல வெறும் தாலி கவுத்தோட சேலை பொதிவுக்குள்ள வெறுமையா புருசன் வீட்டுக்கு வந்தா சாந்தி.

மூணு மாசமாகிடுச்சு. ஒருநாள் ராத்திரி புருசனோட தனிச்சிருந்த சாந்தி, அவன் கையில மூக்குத்தியை கொடுத்து தனக்குப் போட்டு விடும்படி சொன்னா. அவனும் போட்டுவிட்டான். பெறகு, காதுக்குத் தோடு, கைக்கு வளையல், கழுத்துக்கு சங்கிலினு ஒவ்வொண்ணா கொடுத்து போடச் சொல்ல… அவனும் அத்தனையையும் போட்டு விட்டான்.

அத்தனை நகையையும் போட்டுக்கிட்ட சாந்தி, ‘‘இப்ப நானு எப்படி இருக்கேன்’’னு கேட்க, தேவாவும் ‘‘மண்ணுக்கு உரமிட்டுப் பாரு, பொண்ணுக்கு பொன்னிட்டுப் பாருன்னு அம்புட்டு அளகா இருக்கே…’’னு அவளை ஆசையா அணைச்சுக்கிட்டப்போ சாந்தி சொன்னா… ‘‘இம்புட்டு நகையும் எப்படி வாங்குனேன் தெரியுமா?’’

‘‘சொல்லு.’’

‘‘உங்காத்தா உம்ம கண்ணை மறச்சி சேர்த்து வச்ச துட்ட எடுத்துத்தேன் வாங்குனேன்’’னு சொல்லவும், இன்னும் கொஞ்சம் இறுக்கமா அணைச்சுக்கிட்டான்.

மறுநாள் காலையில வழக்கம்போல தான் ஒளிச்சு வெச்சிருந்த பணத்தை பார்க்கப் போன மவாளி ‘‘அய்யய்யோ, அய்யய்யோ’’னு அலறினா.

‘‘என்னத்தா இப்படி அலறுதே?’’னு தேவா கேட்டான்.

‘‘ஏலேய், உம் பொண்டாட்டி களாணி சிறுக் கிடா… எம் பணத்தயெல்லாம் எடுத்துக் கிட்டா’’னு மவாளி சொன்னதும், ‘‘உன் பணத்த எடுத்து அவ நகையாத்தேன் செஞ்சி போட்டு இருக்கா. பாக்கப் பாக்க அம்புட்டு அழகா இருக்கு. நீ வாய மூடு’’ன்னான் தேவா.

– மே 2006

அடிப்படையில் பாரததேவி ஒரு கதைசொல்லி. ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன்...’ என்று அவர் ஆரம்பித்தால், அவரது சொக்கலிங்கபுரம் கிராமமே (ராஜபாளையம் அருகில் உள்ளது) வந்து கதை கேட்க உட்கார்ந்துவிடும். நாகரிகப் பூச்சு அறியாத வார்த்தைகளும் வர்ணனைகளும் பாரததேவியின் ஸ்பெஷாலிட்டி! களத்துமேடுகளிலும், கண்மாய் கரைகளிலும் சொல்லப்படும் கிராமத்துக் கதைகள் காற்றோடு கரைந்துவிடாமல் சேகரித்து, 6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கும் பாரததேவி படித்தது, ஐந்தாம் வகுப்பு வரைதான்! சிறுவயதில் மாடுமேய்க்கப் போனபோது கதை கேட்டு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *