பதினேழு ஒட்டகங்கள்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,026 
 

ரொம்ப வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 3 மகன்கள். அவரிடம் 17 ஒட்டகங்கள் இருந்தன.

தமது முதுமை காரணமாக, தமது மூன்று மகன்களையும் அழைத்து, தமக்குப் பிறகு அந்தப் பதினேழு ஒட்டகங்களையும் மூன்று மகன்களும் முறையே 1/2, 1/3, 1/9 ஆகிய பங்குகளில் சண்டை போடாமல் பிரித்து எடுத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு இறந்து போய்விட்டார்.

எப்படித் தந்தை சொன்னபடி ஒட்டகங்களைப் பிரிப்பது எனத் தெரியாமல், ஓர் ஒட்டக வியாபாரியை அணுகினர் அந்த மகன்கள்.

அவரோ, “”17 ஒட்டகங்களையும் நான் வாங்கிக் கொண்டு பணம் தருகிறேன்… அதை உங்கள் அப்பா சொன்னபடி பிரித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அப்பாவின் ஒட்டகங்களை விற்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

இன்னொருவனோ, “”ஒட்டகங்களை அறுத்துப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்” என்று கேலி செய்தான். அவர்கள் ஒரு வழியும் தெரியாமல் விழித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வழியில் அவர்களைச் சந்தித்த பள்ளி செல்லும் சிறுவன், சிறுமியிடம் தங்களுடைய பிரச்னையைக் கூறி, அவர்களால் அதைத் தீர்த்து வைக்க முடியுமா என்று கேட்டனர்.

சற்று யோசித்த அவர்கள் இருவரும் சம்மதித்தனர்.

முதலில் சிறுவன், 17 ஒட்டகங்களையும் வரிசையாக நிறுத்தி வைக்கச் சொல்லிவிட்டு, வரிசையின் கடைசியில் தானும் போய் நின்று கொண்டான். “”இப்போது நானும் ஒட்டகம்தான்… என்னையும் சேர்த்து எண்ணுங்கள்” என்றான்.

அவனையும் சேர்த்து எண்ணியதில் 18 ஒட்டகங்கள் இருந்தன.

உடனே சிறுமி, “”உங்கள் தந்தை கூறியபடி, மூத்த மகனுக்கு 1/2 பங்கு, அதாவது 9 ஒட்டகங்கள்… சரியா? எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள். அடுத்தவனுக்கு 1/3 பங்கு எனவே 6 ஒட்டகங்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள். கடைசி மகனுக்கு 1/9 பங்கு, எனவே மீதமுள்ள ஒட்டகங்களை (சிறுவனைத் தவிர்த்து) எடுத்துக் கொள்ளும்படி சொன்னாள்.

மூவரும் தங்களுக்குள் 17 ஒட்டகங்களையும் குறைவின்றிப் பங்கிட்டுக் கொண்ட திருப்தியில், சிறுவனுக்கும் சிறுமிக்கும் நன்றி தெரிவித்து அவர்களை அறிவுத் திறமையை மெச்சினர்.

– வே.சின்னத்தம்பி, கோவை (ஏப்ரல் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *