கண்டு கொண்டேன் காதலை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 9,284 
 
 

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

எவ்வளவு நேரம், சாருமதி அப்படிக் கல்லாய் உறைந்து நின்றாளோ. யாரோ “சாருமதி!’ என்று அழைக்கவும், அவளுக்கு மீண்டும் சுற்றுப்புறம் தெளிவாயிற்று.

யாரோ என்ன? அழைத்தவன் மோகனசுந்தரம்தான். எம்டி. முதலாளி!

ஆனாலும் முதலாளியாய், என்ன மாதிரிக் குற்றம் சுமத்திவிட்டான்.

அவளுடைய தங்கையைப் போய்.., பாலாவுக்கு நிறைய ஆசைகள் உண்டுதான். பொறுப்பும் கிடையாது. அவ்வளவே, அவளைப் போய் திருடி என்பதா?

தந்தையுடைய நினைவு வந்தது. சாருவுக்கு, சிவபாலன் மக்களுக்குக் கொடுக்கத் தெரியுமே தவிர, சுருட்டுவது. கற்றுக் கொடுத்தாலும், வராது! 

தன்னையறியாது தலையைச் சிலுப்பி “பொய்! முழுப்பொய்! யாரோ இட்டுக் கட்டிய கதை” என்றாள் சீற்றத்துடன். 

ஓரத்து மேஜை மேல் இருந்த தண்ணீர் பாட்டில்களில் ஒன்றை எடுத்துவந்து, சாருமதியின் எதிரே வைத்தான் அவன். “உட்கார், உட்கார்ந்து, கொஞ்சம் தண்ணீர் குடி… நடந்த விஷயத்தை நான் சொல்கிறேன். உன் அபிப்பிராயத்தை, அப்புறம் சொல்லு” 

சில வினாடி நேரம், விறைப்பாக நின்றவள், சட்டென அமர்ந்து, பாட்டிலைத் திறந்து, வேகமாக நாலைந்து மடக்கு நீரை அருந்தி, பாட்டிலை வைத்துவிட்டு, அவனைப் பார்த்தாள். 

அவனும் ஓர் இருக்கையில் அமர்ந்து சொல்லலானான் ‘ஸ்பாட் செக்’ பற்றி, உனக்குத் தெரியும். இன்று மதியம் மூன்று மணிக்கு, உரிய அதிகாரிகள் திடுமென வந்து, பணம், பொருள் கணக்குகளைச் சரி பார்த்தபோது, சாருபாலாவின் பொறுப்பில் இருந்த பணப் பெட்டியிலிருந்து. ஒன்றரை லட்ச ரூபாய்க்கும் மேலாகக் குறைந்திருக்கிறது. மாதத்தின் முதல் வாரத்து விற்பனை. சும்மாவே, யாருடனாவது பேசிக் கொண்டு வேலையை மெதுவாகச் செய்கிறாள் என்று, அவள் மேல் ஒரு புகார் இருக்கிறது. அதற்காகத் தளத்து நிர்வாகி, அவளைக் கண்டித்தும் இருக்கிறார். ஆனால் இது பெரிய குற்றம். அவளைக் கணடிப்பது மட்டும் போதாது என்று, என்னிடம் கூட்டி வந்தார்கள். விவரம் கேட்டால், தெரியவில்லை என்று மட்டும் சொல்கிறாள். ஆனால் நிறையப் பணம் வந்ததை ஒப்புக் கொள்கிறாள். பில் போட்ட கம்பயூட்டரில் பிழைக்கு வழி இல்லை. ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டும் ரப்பர் பாண்ட் கொண்டு, கட்டிப் போட்டாளாம். அதையும், எண்ணிக் கட்டவில்லை. உள்ளே இந்தக் கட்டே இல்லை. பணப பெட்டியைப் பூட்டாமல், இடத்தை விட்டுப் போகவில்லை என்கிறாள். பின்னே, பணம் எங்கே என்று கேட்டால் அது ‘தெரியவில்லை’ தான். இது பெரிய குற்றம், பணத்துக்குக் கணக்குக் காட்டாவிட்டால், வேலை போவது மட்டுமில்லாமல் சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க நேரிடும் என்று சொல்லி, அவளை விடுதிக்குத் திருப்பி அனுப்பியிருக்கிறேன். பணத்தைப் பற்றியோ, பிடிபட்டது, மேலே நடந்தவை எல்லாமே பெரிய விஷயங்கள் என்பதால், அவை பற்றியோ, உன்னிடம் எப்படியும் சொல்லியிருப்பாள் என்றுதான். நான் உன்னிடம் அவ்வளவு விசாரித்தது. அவள் என்ன மாதிரி இதை உன்னிடம் கூறினாள் என்று தெரிந்தால், குற்றம் பற்றிக் கூடுதல் விவரம். அறியலாம் என்று எண்ணினேன். ஆனால், இனி நீதான் சொல்ல வேண்டும்” என்று முடித்தான் மோகனசுந்தரம். 

நீதான் சொல்ல வேண்டும் என்றால்? அதாவது உள்னையும் நம்பவில்லை என்று, சொல்லாமல் சொல்கிறானா? 

உண்மை பேசுகிறவர்களுக்கு, அவர்களது சொல்லை யாரும் நம்பவில்லை என்றால், மிகவும் வேதனையாக இருக்கும். சாருமதிக்கும் வலித்தது. 

முகம் இறுக, “நான் சொள்ளது நிஜம், பாலா என்னிடம் இது பற்றி… இதை மட்டுமல்ல, எதையும் பேசவே இல்லை. ஒருவேளை. விடுதியில் தனியே அமர்ந்து, இது எப்படி நேர்ந்திருக்கக் கூடும் என்று, அதையே யோசித்துக் கொண்டிருந்தாளோ, என்னவோ? ஏனெனில், அவளும், உரிமையற்ற பணத்தை தொடுகிறவள் அல்ல. அதிலும், இது திருட்டு, நிச்சயமாக, என் தங்கை செய்திருக்கவே மாட்டாள்” என்றாள் சாருமதி உறுதியோடு! 

லேசாகத் தோளைக் குலுக்கி “இருக்கலாம்” என்றான் மோகனசுந்தரம். 

அவள் திகைத்து நோக்கவும் “நீ நிர்வாகப் பிரிவில் இருப்பவள். நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு, வெறும் நம்பிக்கை மட்டும் போதாது என்று, உனக்கே தெரியும். உறுதியான சான்றுகள் வேண்டும். முத்துக்கிருஷ்ணன் சார் கூட நீங்கள் அப்படிப்பட்ட பெண்கள் இல்லை என்றுதான் சாதிக்கிறார். ஆனால்…” என்று மறுபடியும் தோளைக் குலுக்கினான் அவன். 

“அங்கிளிடம், இது பற்றிச் சொல்லி விட்டீர்களா?” என்று கம்மிய குரலில் கேட்டாள் சாருமதி.

“உங்களுக்காக சிபாரிசு செய்தவர் அவர். தெரிவித்துதானே, ஆக வேண்டும்? ஆனால் எவ்வளவுதான் மூத்த அலுவலர் என்றாலும், அவரது சொல்லுக்கும் கூட, இந்த மாதிரி விஷயங்களில், அளவு மீறி மதிப்புக் கொடுக்க முடியாது. நிச்சயமான நடப்பு பற்றித் தெரிய வேண்டும். அதற்கு நிரூபணமும் வேண்டும். நீ உன் தங்கையிடம் விசாரித்துப் பார். என்ன நடந்திருக்கும் என்று, தெளிவாகத் தெரிந்து கொள்ள முயற்சி செய். சாருபாலா ஏதாவது கொஞ்சம் விவரம் தெரிவித்தாலும், அந்த வழியில் தொடர்த்து விசாரிக்க, நிறுவனம் ஏற்பாடு செய்ய முடியும். சிசிடிவியிலும், அவள் ஓரிருவரிடம் பேசிச் சிரிப்பது தெரிகிறதே தவிர, வேறு எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் கவனி சாருமதி. இது பண விவகாரம். அதிக அவகாசம் கொடுக்க முடியாது” என்றவன், தன் செல்ஃபோளை எடுத்து எண்ணைத் தட்டியதோடு ஸ்பிக்கரையும் ஆன் செய்தான். 

அவனுடைய செயலாளர் ஃபோனை எடுத்து “சொல்லுங்கள் சார்” எனவும் “நாளைக் காலை எட்டு முப்பதுக்கு, மிஸ் சாருமதி சிவபாலனோடு எனக்கு ஓர் அப்பாயின்ட் மென்ட் ‘குறித்து வை” என்று உத்தரவிட்டான். “சாருமதியோடு, அவளுடைய தங்கையும் வருமாள்” என்றான தொடர்ந்து. 

செல்லை அணைத்துவிட்டு “புரிந்ததல்லவா? நாளைக் காலை எட்டு முப்பது வரை உனக்கு அவகாசம். அதற்குள், என கணக்கு நேர் செய்யப்பட வேண்டும். காலை எட்டரை மணிக்கு, சாருபாலாவோடு வந்து சேர். இனி, நீ போகலாம்” என்றுரைத்துத் தானும் எழுந்தான். 

சாருமதி முதலில் எண்ணிக் கலங்கியது போல அல்லாமல், முழுக்க முழுக்க நிறுவனத்து விவகாரம். ஆனால் இதையும்தான் யாரிடம் போய்ச் சொல்வது? 

யாரிடமும், எதையும் சொல்லித் தெளிய வைக்கும் எண்ணம் இல்லாமல், ஓர் இயந்திரம் போல நடந்து, தன் இடம் நோக்கிச் சென்றாள், சாருமதி! 

சூப்பர் மார்க்கெட் மூடுவதற்கு. இரவு ஒன்பது மணி ஆகிவிடும். என்றாலும், நிர்வாகப் பிரிவினருக்கு, மாலை ஆறு மணியோடு வேலை முடிந்து போகும். 

விற்பனை, கண்காணிப்பு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, இரவு ஒன்பது மணி வரையிலும் கூட, வேலை இழுத்துக்கொண்டு போகும். அவர்களுக்கு வேறு மாதிரியான ஓய்வு நேரங்களை, மோகனசுந்தரம் ஏற்பாடு செய்திருந்தான். 

இதன் காரணமாகவும், சகோதரிகள், அதிகம் பேசி உரையாடுவது குறைந்து போயிற்று எனலாம். ஏனெனில், ஓய்வு நேரம் வெளியே சுற்றுவதற்கே உரியது என்பது, சாருபாலாவின் கருத்து. 

அப்படிச் சுற்றும்போது, அவள் யார் யாருடன் பழகுகிறாளோ? சாருபாலாவின் நட்பு வட்டத்தில் ஆண் பெண் இரு பாலரும் உண்டு. யார் யார் எப்படிப் பட்டவர்களோ? 

பெற்றவர்கள் இல்லாத நிலையில், பெரியவளாகப் பொறுப்புடன் சாருமதி, அவர்களைப் பற்றித் தங்கையிடம் விசாரித்தது உண்டு. 

“போக்கா! பெரிய பாட்டியம்மா மாதிரிக் கேட்காதே. என்னைவிடம் இரண்டு வயதுதானே, நீயும் பெரியவள்? வேண்டுமானால், எங்களோடு நீயும் வா, வந்து, கண்ணுக் குத்திப் பாம்பு மாதிரி பார், அதை விட்டு, நொட்டு, நொசுக்கு என்று கேள்வி கேட்காதே. எனக்குக் கேவலமாக இருக்கிறது” என்று பாலா எரிச்சல்படவே, கேள்வி கேட்பதை விட்டுவிட்டாள். 

ஆனால், தமக்கையின் கவலைப் பார்வையும், சின்னவளுக்கு ஆத்திரத்தையே ஏற்படுத்தியது. 

“எதற்கு இப்படி ‘உம்’மென்று மூஞ்சியை வைத்துக் கொண்டிருக்கிறாய்? என்ன, இவர்களில் யாரோடேனும் ஓடிப் போய்விடுவேன் என்று நினைத்தாயா? உன்னைப் போலவே நானும் சிவபாலன் மகள்தான். அப்படியெல்லாம், அப்பா பெயரை அசிங்கப்படுத்தி விட மாட்டேன். என் கல்யாணம், ‘ஜாம்ஜாம்’ என்று எல்லோரும் அறியத்தான் நடக்கும். நீ இப்படி சிஐடி பார்வை பார்த்து, என்னை நாறடிக்காதே!” என்று கத்தவே, பெரியவள் பேசாமல் ஒதுங்கிவிட்டாள். 

அப்பா பெயரை அசிங்கப்படுத்த மாட்டேன் என்ற இளையவனின் சீறலை அடிக்கடி நினைத்துப் பார்த்து மனதை அமைதிப்படுத்தி கொள்வாள். 

இப்படிப் பேசியவள் தப்புச் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கை! ஆனால், இப்போது பாலா செய்திருப்பது என்ன என்று தவித்தவாறே விடுதியை நோக்கி வேகமாக சென்றவளுக்கு, அப்போதும் தங்கையிடம் நம்பிக்கைதான்.

ஆனால், பணம் எங்கே போயிற்று? இந்தப் பணத்தை பாலா தொட்டிருக்க மாட்டாள். அது நிச்சயமே. 

வேலை முடிந்ததும், அவளும் உட்கார்ந்து, சிசிடிவி எடுத்த படத்தை ஓடவிட்டுப் பார்த்தாள். சுற்றிச் சுழன்ற கேமரா எடுத்த படத்திலிருந்தும், ஒன்றும் அறிந்துகொள்ள முடியவில்லை. 

மேல் அதிகாரியிடம் திட்டு வாங்கிய பிறகும், அவளுடைய நண்பர்கள் சிலருடன் பேசிச் சிரித்தபடியேதான், சாருபாலா பில்லைப் போட்டுப் போட்டு பணத்தை வாங்கிப் பணப் பெட்டியின் உள்ளே வீசிக் கொண்டிருந்தாள்.

சும்மா உள்ளே வீசியவள், சுற்று கவனத்துடன் அந்தந்த நோட்டுக்களோடு பிரித்து வைத்திருந்தால், பெரிய கட்டாய் சப்பச் பான்ட் போட்டு வைத்திருந்த ஆயிரம் ரூபாய்க் கட்டைக் காணோமே என்று பார்க்கத் தோன்றியிருக்கும். ஆனால் சாருபாலாவுக்கு, நண்பர்களோடான பேச்சும், சிரிப்பும்தானே முக்கியமாக இருந்திருக்கிறது  

ஆனால், அதை நினைத்து, இப்போது எள்ள வேதனைப்பட்டுக் கொலாடிருக்கிறாளோ? கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால்?

உள்ளூா ஒரு கைப்பும், கூடவே மாக அவர்களது அறையை அடைந்த சாருமதி, சூயிங்கத்தைக் குதப்பியபடி, காதில் ‘இயர் ஃபோனுடன்’ பாட்டுக் கேட்டவாறு படுத்துக் கிடந்த தங்கையைப் பார்த்ததும், கொதித்துப் போனாள். காலையில் கிளம்பும் அவசரத்தில் வீசியெறிந்த துணிமணிகளைக் கூட, எடுத்து மடித்து வைக்கவில்லை. எல்லாம் அப்படி அப்படியே கட்டிலிலும், நாற்காலியிலும், தரையிலுமாகக் குப்பை போலக் கிடந்தன. 

இவளால் சாருமதி, மோகனசுந்தரத்தின் முன்னே தலை நிமிர முடியாத அவமானத்தோடு, குன்றிக் குறுகி இருந்துவிட்டு வந்திருக்கிறாள். இதற்குத் தீர்வு என்ன என்று, அப்போதிருந்து, தவியாய்த் தவித்துக் கொண்டும் இருக்கிறாள். 

ஆனால், இத்தனைக்கும் காரணமான இவளோ, உல்லாசமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்! 

என்னதான் பொறுப்பற்றவள் என்றாலும், தனக்கு என்ன கதி நேரக்கூடும் என்ற கவலை கூடவா இராது? 

ஆத்திரத்துடன். தங்கையின் காதுகளில் மாட்டியிருந்த ‘இயர்ஃபோன் ‘கருவியை பிடுங்கி எறிந்துவிட்டு, பாலாவிடமே அதைக் கேட்டாள் சாருமதி. 

“இந்தப் பாட்டைக் கேட்காமல், உம்மென்று முகத்தை தீட்டி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் மட்டும், பிரச்சினை சரியாகிவிடுமா” என்று சாருபாலா கேட்கவும், பெரியவளுக்குத்தாள் வாயடைத்துப் போயிற்று. 

சின்னவள் சொல்வது, சரிதானே! பாலா பாட்டுக் கேட்டதால் கெட்டதென்ன? அன்றி, பாட்டைக் கேளாதிருப்பதால், கிடைக்கப் போவதுதான் என்ன? 

ஆனால், அதைப் பற்றி யோசனையே இல்லை என்றால், அந்த அலட்சியம் சரியில்லைதானே? 

அருகில் அமர்த்தி, அன்று நடந்தது பற்றி விசாரித்தாள். 

ஆனால், “அலுவலகத்தில்தான். திருப்பித் திருப்பிக் கேட்டு, போரடித்தார்கள்! இப்போது, நீ வேறா? ஆளை விடு!” என்று கழன்று கொள்ளவே சாருபாலா முயன்றாள். 

“அந்தப் பணம் என்ன ஆயிற்று என்பது பற்றி, ஒரு சிறு விவரமாவது கிடைக்கும்வரை, உன்னைக் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். பாலா, எனக்கும், இப்போது வேறு வழியில்லை. கேட்டுத்தான் ஆக வேண்டும்”. 

“என்ன பிரயோஜனம்? மறுபடி மறுபடி கேட்டால் மட்டும், தெரியாதது, தெரிந்தது ஆகிவிடுமா? வீண் நேர விரயம், அதைவிட வேறு வழியில் முயற்சி செய்து, தொலைந்த பணத்தைக் கண்டுபிடிக்கலாம்!” என்றாள் தங்கை எரிச்சலோடு. 

‘காலை எட்டு முப்பது வரை அவகாசம்’ என்கிறான் முதலாளி. இவளானால், பேசவே தயாரில்லை. வேறு வழியில் ‘முயற்சி செய்” என்கிறாள். 

யாருக்கு ஆபத்து என்று கொஞ்சமேனும் யோசிக்கிறாளா? அதட்டிப் பேசினால், இன்னமும் எகிறுவாள். 

“பாலா, தயவு பண்ணிப் புரிந்துகொள். உன் பொறுப்பில் இருந்த பணம். காணாமல் போனது என்றால், உன்னைத்தான் குற்றம் சொல்வார்கள்….” 

“அதெப்படி? எனக்குத்தான், அது எப்படிக் காணாமல் போயிற்று என்று தெரியாது என்று சொல்கிறேனே! அப்புறம் எப்படி, என்னைக் குற்றம் சொல்ல முடியும்? அப்படி யாராவது சொன்னால், குடலைப் பிடுங்கிவிடுவேன்!” என்றாள் பாலா ஆத்திரமாக. 

“பாலா, ப்ளீஸ்! இதைப் போல எல்லாம் உளறாதே. அவர்கள். போலீசுக்குப் போனால், பெரிய ஆபத்தாகிவிடும்” 

“என்னக்கா, ஆபத்து? சும்மா எனக்குப் பூச்சாண்டி காட்டாதே” என்றாள் தங்கை அலட்சியமாக.

“இல்லை, பாலா. அப்புறம் வழக்கு, சிறை என்று நமக்கு ரொம்பக் கேவலமாகிவிடும்மா” என்று எடுத்துச் சொன்னாள் தமக்கை, 

ஆனால் சாருபாலா வேறு விதமாக எகிறினாள். “என்னது? வழக்கும் சிறையுமா? அதெல்லாம், தப்பு செய்தவர்கள்தான் பயப்பட வேண்டும். நான்தான், அந்தப் பணத்தை எடுக்கவில்லையே! அப்படியில்லை… என்மேல்தான் தப்பு என்றால், அதை, அவர்கள் நிரூபிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்! அதைவிட்டுச் சும்மா என்மேல் பொய் வழக்கு, அது இது என்று போனால், நான் அவர்களைச் சும்மா விடமாட்டேன். சுப்ரீம் கோர்ட்டு வரை போய், அவர்களைப் பிய்த்து உதறிவிடுவேன். தெரியுமா?” என்றாள் வீராவேசமாக. 

சுப்ரீம் கோர்ட்டா? அங்கெல்லாம் போய் வழக்காட, எவ்வளவு செலவாகும் என்று, இந்த மட்டிக்கு ஏதாவது தெரியுமா? வாய்க்கு வந்தபடி உளறுகிறாளே! இவளுக்கு எப்படிப் புரிய வைப்பது? 

அவ்வளவு நேரம் பேசியதை விடத் தமக்கையின் கவலைப் பார்வை, பாலாவின் மனதைத் தொட்டது போலும். 

“நீ சும்மாக் கவலைப்படாதேக்கா, அப்படி யாரும், என்னைச் சிறையில் தள்ளி விட முடியாது. முதலில் நான் தப்பு செய்ததாக, நிர்வாகம் நிரூபித்தாக வேண்டும். அது அவர்களால் முடியாது. அதனால், நாம் கவலைப்படத் தேவையே கிடையாது? தினு கூட அப்படித்தான் சொன்னான். ‘நீ திருடாதபோது, எதற்குப் பயப்பட வேண்டும்?’ சொன்னதை மட்டும் மாற்றிச் சொல்லிவிடாதே’ என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறான்” என்று தன் திடத்துக்கான விளக்கம் கொடுத்தாள், அவள் 

“தினு? யார் அந்தத் தினு?” 

இவளுக்கு மேல் ஞானசூனியமாக இருப்பான் போலத் தெரிகிறதே என்று எரிச்சலுடன் சாருமதி கேட்க, “என் சினேகிதன்!” என்று பெருமையாகச் சொன்னாள் சாருபாலா “அவன் மட்டுமில்லை, அக்கா, சோனா, சுரேஷ், சங்கர் எல்லோருமே. அப்படித்தான் சொல்லுகிறார்கள்!” 

பரமார்த்த குருவுடைய சீடர்கள் போல, மட்டி, மடையன், முட்டாள், மூடனாக அல்லவா. இவளுடைய நண்பர்களும் இருக்கிறார்கள்! கவலைப்படத் தேவை கிடையாதாமா? இவர்கள் பேச்சைக் கேட்பதற்கு பாலா விலங்கை எடுத்துத் தன் கைகளில், தானே மாட்டிக் கொள்ளலாம்! 

பேசுகிற பேச்சைப் பார்த்தால், அப்படித்தான் ஆகப் போகிறது. என்பது, நிச்சயம்! சுப்ரீம் கோட்டில், பிய்த்து உதறுகிற யோசனையையும், இந்த வள்ளல்கள்தான் வழங்கியிருப்பார்கள்! அறிவுக் கொழுந்துகள்! அதற்குமேல் பொறுமையை இழுத்துப் பிடிக்க, மூத்தவளால் முடியவில்லை. 

உன்னைப் போல “உன் சினேகிதர்கள்தானே? அரை வேக்காடாகத்தான் இருப்பார்கள்” என்றாள் கடுமையான குரலில். 

“அக்கா!” என்று முறைத்தவளிடம் “முதலில் இந்த விஷயத்தில் உனக்கு ஆலோசனை சொல்ல. அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது! சொல்லு? முன் அனுபவமா ? அல்லது, இது பற்றிய கல்வியா? ஒன்றும் கிடையாதில்லையா? அதனால், ஜெயிலில் களி தின்ன வேண்டாம் என்ற எண்ணம். கொஞ்சமேனும் இருக்குமானால், அவர்கள் சொல்லும் இந்த அசட்டு வீராப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, நிர்வாகம் படித்த நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேள்” என்ற பெரியவளின் அதிகாரக் குரலுக்குச் சற்று மதிப்பு இருந்தது. 

சாருபாலா சற்றே வாயை மூடவும், மேற்கொண்டு, சட்டப்படி என்னென்ன நடக்கக்கூடும் என்று சாருமதி எடுத்துச் சொல்ல, சின்னவள், உள்ளூரக் கொஞ்சம் பயந்தும் போனாள். 

ஆனால், சாருபாலாவின் பயம், பணிவினாலும், எந்தப் பயனும் இருக்கவில்லை. 

ஏதோ மாயாஜால நிகழ்ச்சியில் வருவது போல, அந்த ஒன்றரை லட்ச ரூபாய்ப் பணம் போன விதம், இருவருக்குமே புரியவில்லை. 

மதிய உணவுக்குச் செல்லும்போதுதான், ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைத் தனியே எடுத்துக் கட்டிவிட்டு, சாருபாலா சென்றது. அப்போதும் பணப் பெட்டியைப் பூட்டிச் சாவியை கைப்பையில் வைத்து அதை கையோடு எடுத்துக் கொண்டுதான் சென்றாள். 

அந்த நேரத்தில் பணப் பெட்டியை அடுத்தவரிடம் ஒப்படைப்பது கிடையாது. எண்ணிக் கொடுத்து, உணவின்பின் எண்ணி வாங்குவதில், அதிக நேரம் வீணாகும் என்பது, நிர்வாகத்தின் கருத்து. எண்ணிக் கொடுக்கவில்லை என்றால், பிற்பாடு கணக்கில் தகராறு வந்தால், பெரிய பிரச்சினையாகிவிடும். 

எனவே, பில் போட இருக்கும் நாலு பேரும், இரண்டிரண்டு பேராகப் போய் உணவருந்திவிட்டு வருவார்கள். எப்படியும், இரண்டு பேர் பில் போட இருப்பதால், விற்பனையும் பெரிதாகத் தடைப்படாது. 

சினேகிதர்கள் ஐந்து பேரும் சேர்த்து சாப்பிடப் போய். சேர்ந்தே திரும்பி வந்தார்கள்.

“சோதனைக்கு வரும்வரை. நாலு பேரும் கூடவே இருந்தார்களா?” என்று சாருமதி கேட்டாள்.

அப்படி இருந்திருந்தால், அவர்களில் யாருக்கேனும், ஏதாவது தெரிந்திருக்கக்கூடும். அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று அவள் யோசிக்குமுன், அப்படியில்லை என்றால் தங்கை. 

அவரவருக்கு ஏதேதோ சாமான்கள் வாங்க வேண்டியிருந்ததால், சேர்ந்தோ பிரிந்தோ போய், வாங்கிக் கொண்டு வந்தார்கள். “அவர்கள் முழு நேரமும் பக்கத்தில் இருந்திருந்தால், இந்த மாதிரித் திருட்டுப் போக விட்டிருப்பார்களா? திருடிய கழுதையை, அந்த வினாடியே பிடித்துத் தோலை உரித்திருக்க மாட்டார்களா?” என்று வீரமாகக் கேட்டாள் தங்கை. 

ஆனால், பக்கத்திலேயே நின்று, ஏதாவது பேசிச் சிரித்து, அவளது கவனத்தைக் கலைக்காமல் இருந்திருந்தால், தப்பு நடக்க வாய்ப்பே இருந்திருக்காது என்றிருந்தது, மூத்தவளுக்கு. 

அதைச் சொல்லி தங்கை இருக்கும் இணக்கத்தைக் கெடுத்துக் கொள்ள கூடாது என்று அவள் பேச்சை அடக்கும்போதே, சின்னவளே. மறுபடியும் தொடர்ந்தாள். 

“யாரோ நடுத்தர வயது பெண் ஒருத்தி, பணத்தைக் கொடுத்துவிட்டுப் பொருட்கள் பையை வாங்கும்போது ரொம்ப ஒட்டி, சிசிடிவி காமிராவை மறைக்கிற மாதிரி நின்றாள் என்று, தினு சொன்னான், அக்கா. ஆனால், டீவியில் பார்த்தால். நடுத்தர வயதில் ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். தனியாக எதுவும் தெரியவில்லை. எல்லோருமே, ஒரு மாதிரி நிற்பது போலத்தான் இருந்தது. ‘நீ கூட, அப்படித்தானேப்பா நிற்கிறாய்’ என்று நிர்வாகி அலட்சியமாகச் சொல்லிவிட்டார், அக்கா. எல்லோருக்கும் மேல் அதிகாரி என்கிற திமிர் அவருக்கு!” என்றாள் பாலா கோபமாக, 

இதற்கு என்ன பதில் சொல்வது? என்னவானாலும், தளத்து நிர்வாகியைத் திட்ட, சாருமதிக்கு மனமில்லை. அவளும், ஒரு தளத்துடைய நிர்வாகிக்குச் செயலாளராகப் பணி புரிகிறவள் அல்லவா? அவரது பொறுப்புகள் பற்றி, அவளுக்குத் தெரியும். அவரது அதிகாரத்தின் கீழ் இயங்கும் தளத்தில் இப்படி நடந்ததற்கு எம்டியிடம் அந்த நிர்வாகியும் பதில் சொல்லியாக வேண்டுமே!

ஆனால், உடன் பிறந்தவளின் பதிலை எதிர்பாராமலே “தினுவுக்கு முகத்தில் அடித்த மாதிரி ஆகிவிட்டதுக்கா. உதவியாக இருக்குமோ என்று சொன்னால், என்னையே மாட்டிவிடப் பார்க்கிறாரே என்று ரொம்ப வருத்தப்பட்டான்! பாவமில்லை?” என்று நண்பனுக்காக உருகினாள் சாருபாலா. 

“பாவம்தான்!” என்று அவளுக்கு ஒத்து ஊதிவிட்டு “ஆனால் பாலாம்மா, நாம் இப்போது அவனை விட, ரொம்பப் பாவமான நிலையில் இருக்கிறோம். அதனால் முதலில் இந்தப் பிரச்சினையில் இருந்து, நாம் எப்படி மீள்வது என்று, அதைப் பற்றி யோசிப்போமா ?” என்று, அந்தத் தினுவிடமிருந்து தங்கையின் கவனத்தைத் தங்களிடம் திருப்பினாள் சாருமதி. 

அத்தியாயம்-4

நண்பன் தினு சொன்ன நடுத்தர வயதுப் பெண்கள் அத்தனை பேரையும், ஒவ்வொருவராக நினைவில் கொண்டு வந்து, சாருபாலா மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தாள். 

“பச்சைச் சேலை, நீலச் சேலை, பச்சையும் நீலமும் கலந்து பூப்போட்டது. இந்த மூன்று பேரில் ஒருத்தர்தான் பணத்தைச் சுருட்டியிருக்க வேண்டும் என்று, எனக்குத் தோன்றுகிறது அக்கா. மூன்று பேருமே தினு சொன்ன நடுத்தர வயது, அவர்களில் யாராக இருக்கும்?” என்று அதே யோசனை சின்னவளுக்கு. 

பத்தாவது தடவையாக இதைக் கேட்டுவிட்டு “வயதைச் சொன்ன தினு, அவள் கட்டியிருந்த சேலையையும் கவனித்திருக்கலாம்” என்றாள் சாருமதி, சலிப்புடன். 

“என்னக்கா, நீயும் நிர்வாகி போலவே பேசுகிறாய்? அவரும் அசட்டுத்தனமாக, இதையேதான் கேட்டார். தினு ஆண்பிள்ளை. அவனுக்குச்சேலை நிறம் எல்லாம் எப்படி நினைவிருக்கும்? அதுவும் மூன்று சேலைகளுமே. கொசகொசவென்று கண்டபடி பூப் போட்டிருந்தது. எனக்கே குழம்பிப் போகிறது, பாவம், தினுவுக்கு எப்படி நிளைவிருக்க முடியும்? ஓகோ! அக்கா, இப்படிக் குழம்பட்டும் என்றுதான், அந்தத் திருடி, அதுபோலச் சேலை கட்டியிருந்தாளோ?” என்று பரபரப்புடன் கேட்டாள் சின்னவள். 

“எந்தத் திருடி?” 

சொத்தென்றாகிவிட்டது பாலாவுக்கும். 

“அதுதானே, எந்தத் திருடி? நிச்சயமாகத் தெரியாமல், போலீசிலும் ஒன்றும் சொல்ல முடியாது. இல்லையாக்கா? நாம், இப்படிக் கஷ்டப்படுகிற இவ்வளவு நேரத்தில் அந்த திருடி. அந்தப் பணத்தை எங்கெங்கோ, எப்படியெப்படிப் பதுக்கி விட்டாளோ? அல்லது ஜாலியாக செலவளித்தாளோ, என்னவோ? நல்ல நகை கூட வாங்கியிருப்பாள் அந்தத் திருடி!” என்று புலம்பி பொருமினாள் அவள், 

“சும்மாத் திருடி, திருடி, என்று தெரிந்த மாதிரிச் சொல்லாதே, பாலா, பணத்தை எடுத்தது, ஆனாகவும் இருக்கலாம்.. “

“ஆனால், தினு சொன்னானே..” 

இப்போது குறுக்கிட்டது, சாருமதி “அந்த தினு என்னத்தை உருப்படியாகச் சொன்னான்? எவளோ ஒரு நடுத்தா வயதுக்காரி, உன் பக்கத்தில் நின்றதாக மட்டும்தான் சொன்னான். அது யார், என்ன என்று எதுவும். இவனுக்கே தெரியாது. அப்புறம் என்ன? அதனால், அந்தப் பேச்சை விடு. இப்போது, நம் பிரச்சினையைப் பார்ப்போம்” 

தினு என்கிற தினகரனை, அப்படி விட்டுவிட, சாருபாலாவுக்கு விருப்பு இல்லைதான். ஆனால், முன்னிருந்த பிரச்சினை பூதாகாரமாக எழுந்து மருட்ட, அக்காவும் அதட்ட, வேறு வழியின்றி, அதைப் பற்றிய ஆலோனையில் கலந்துகொள்ள முன் வந்தாள். 

ஆனால், திருட்டைப் பற்றிச் சிறு குறிப்பைக் கூடக் கண்டு பிடிக்க முடியாமல் போனதால் மீந்திருக்கும் அடுத்த வழியைப் பற்றி சாருமதி சொன்னாள். 

திருட்டுப் போன பணத்தைக் கட்டிவிடுவது? 

வழி சொன்ன தமக்கையை, வெறித்துப் பார்த்தாள், தங்கை.

“இவளுக்கென்ன, பைத்தியமா? என்று சந்தேகம் வந்துவிட்டதா, பாலா? அப்படி எதுவும் இல்லை. நிர்வாக விதிகளின்படி ஒருவரின் பொறுப்பில் இருந்த பணம் தொலைத்ந்து போயிற்று என்றால், அதைத் திருப்பி வைப்பது, அவர்கள் பொறுப்பு. திருடியது யார் என்று தெரிந்து சொல்ல முடிந்தால், திருடனைத் துரத்திப் பிடிப்பார்கள். இப்போது திருடிய ஆள் பற்றி எதுவுமே தெரியாத நிலையில், நம் பேரில்தான் பழி விழும் சட்டப்படி, அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். அதாவது, நாம்தான் திருடியதாக…” 

“ஐயய்யோ, அக்கா!” என்றாள் பாலா மிரண்டுபோய், 

இப்போது பயந்து என்ன செய்வது?. 

ஒரு பெருமூச்சுடன் சாருமதி தொடர்ந்தாள், 

“அது நடக்காமல் இருக்க வேண்டுமானால், திருட்டுப் போன பணத்தை, அப்படியே நாம் திருப்பிக் கட்ட வேண்டும்..” 

“இது அனியாயம்க்கா. நாம் தொடவே இல்லாத பணத்தை, நாம் திருப்பிக் கட்டுவதா? ஒன்றரை லட்சம் என்றால், எவ்வளவு பணம்! இதில் என்னென்ன செய்யலாம். ஒரு பீட்சா. ஒரு கார்னட்டோ ஜஸ்க்ரீம் கூட வாங்கிச் சாப்பிட்டிருக்காத பணத்தை, நாம் திருப்பிக் கொடுப்பதா? நான் இதை ஒப்புக்கொள்ளவே மாட்டேன். நான் சொல்லுகிறேன். கொடுக்கக் கூடாதுக்கா!” என்றாள் வேகத்துடன்.

தன்னையறியாமல் உதடு நெளிய “நீ கொடுக்கச் சொன்னால் கூட நம்மால் முடியாதும்மா” என்றவளின் பார்வை. அறையில் அங்கங்கே சிதறிக் கிடந்த விலை உயர்ந்த பொருட்களின் மீது படிந்தது. 

எத்தனை அலங்காரப் பொருட்கள்! எத்தனை உடைகள்! செருப்பு, கைப்பை என்று எத்தனை? இன்னும் எததனை ஊர்சுற்றல் செலவுகள்! 

இவையெல்லாம் சோத்து, அந்த ஒன்றரை லட்சத்துக்குக் கிட்டே கூட வராதுதான். ஆனால் மோகனசுந்தரத்திடம் கொஞ்சமேனும் கெளரவமான ஒரு தொகையைச் சொல்ல முடிந்திருக்குமே! இப்போது, பிச்சையெடுப்பது போல அல்லவா. தோன்றும்! 

வாசகர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை கிடையாது என்ற பொருள் கொண்ட ஆங்கில பழமொழி, ஏனோ அவளுக்கு, அப்போது நினைவு வந்தது. 

அப்படியானால், மோகனசுந்தரம்தான், அவர்கள் கதியை நிர்ணயிக்கப் போகிறான். இந்தச் சின்ன பெண்ணிடம், அவனுக்கு இளக்கம் தோன்ற வேண்டுமே! 

சாருபாலா அசட்டுத்தனமாக ஆசைப்படுவாளே தவிர, அவளும் முட்டாள் அல்ல. தமக்கையின் பார்வையைத் தொடர்ந்தவளுக்கு முகம் கன்றிக் கறுத்தது. 

ஒரு வேகத்துடன் எழுந்து சென்று, அலமாரியைத் திறந்து உருட்டிப் புரட்டிவிட்டு, சோர்வுடன் திரும்பி வந்து அமர்ந்தாள். “மறுபடி விற்றுப் பணம் புரட்டக் கூடிய மாதிரியாக ஒன்றுமே இல்லைக்கா” என்றாள் வருத்தத்துடன். 

இருக்காதுதான். அன்றன்றைய நாகரீகம் என்று வாங்கிக் குவித்ததில், எதைப் பின்னாளில் விற்க முடியும்? அதுவும், அவளே மீண்டும் பயன்படுத்த விரும்பாத பொருட்களை? 

ஆனாலும் வீட்டுக்குச் செல்லப் பெண்ணாக வளர்ந்த தங்கை வருந்துவது பொறுக்காமல், அவளது கையைப் பற்றிக் தட்டிக் கொடுத்தாள் சாருமதி. 

“இருக்கட்டும். பாலும்மா திருட்டுப் போன் பணத்தைத் தவணை முறையில் கட்டுவதாகக் கேட்போம். இருவர் சம்பளத்திலுமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று…”

கையை உருவிக்கொண்டு “அதெப்படிக்கா முடியும்? இப்போதே. என் செலவுக்கு என் சம்பளம் பற்றவில்லை. இதில் பிடித்தம் வேறு செய்தால், என் செல்வை என்னால் எப்படிச் சமாளிக்க முடியும்? ஊஹூம், நான் கொடுக்க மாட்டேன். என்னால் முடியாது” என்று கிரீச்சிட்டதங்கையை வெறித்துப் பார்த்தாள், சாருமதி, 

கவனக் குறைவாகப் பணத்தைத் தொலைத்தவள் சாருபாலா ‘நீ உன்’ என்று ஒருமையில் பேசினால், தனித்து நிற்பது போலத் தங்கை வருத்தப்படுவாளே என்று நம்முடை பிரசசினை என்று, தன்னையும் இணைத்தே சாருமதி பேசிவந்தாள். தன் வருமானததையும் சேர்த்துக் கொடுக்கவும் முன்வந்திருந்தாள். 

ஆனால், தன் வருமானத்திலும் கொஞ்சம் குறையக கூடும். என்றதும், பாலா என்னமாக மாறிவிட்டாள்! 

தன்னை மீறி எழுந்த எரிசசலில், “சரி போய் எம்.டியிடம் இப்போது என்னிடம் கூறியதை, அப்படியே சொல்லு. எம்.டி. கண்டிப்பானவர் என்று கேள்வி, அவர், உடனே போலிசைக் கூப்பிடுவார். அப்புறம் என்ன நடக்கும் என்று, நீயே யோசித்து உன் விருப்பம் போல நடந்துகொள்” என்றாள் சாருமதி சுள்ளென்று. 

வழக்கம் போல, அக்காவே எப்படியாவது சமாளித்து விடுவாள் என்று எண்ணிப் பேசிய சாருபாலாவுக்குத் தமக்கையின் பேச்சு அதிர்ச்சியைத் தர “ஐயய்யோ! ஐயோக்கா! என்னைத் தனியாக விட்டுவிடாதே” என்று காலில் விழாத குறையாகக் கெஞ்சத் தொடங்கினாள்.

அவளை அமைதிப்படுத்தி, பணத்தைத் திருப்புவது பற்றிய தன் திட்டத்தை தங்கையிடம் சாருமதி விவரித்தாள். 

அவள் சொன்ன கணக்குப்படி பார்த்தால், உணவு. உறைவிடத்துக்காக விடுதிக்குக் கொடுப்பது போக பணமே மிஞ்சாது என்று புரிய, பாலா அதை மிகவும் எதிர்த்தாள். 

“ஒருநாள் பீட்சாவோ, பர்க்கரோ சாப்பிடக் கூடப் பணம் இருக்காது. இந்த விடுதிச் சாப்பாட்டையே சாப்பிட்டு, நாக்குச் செத்துப் போகும். துணிமணிவெல்லாம் போட்டதையே திரும்பத் திரும்ப அணிந்து, நண்பர்கள் நடுவே கேவலப் பட நேரும்…” என்று எத்தனையோ ஆட்சேபணைகளை அடுக்குப் பார்த்தாள். 

ஆனால் இதையும் மறுத்து, எம்டி அவளைச் சிறைக்கே அனுப்பவும் கூடும் என்று மூத்தவள் எடுத்துக் கூறவும், உடனே அடங்கினாள். 

“செய்வாராக்கா? ஜெயில் என்றால், ரொம்பப் பயமாக இருக்கிறதே!” என்று அவள் அச்சத்துடன் கேட்க, சாருமதிக்கு அது இன்னமும் வேதனையாக இருந்தது. 

“எம்டியிடம் பேசிப் பார்ப்போம், பாலா. அவருக்குத் தன் பணத்தைத் திரும்பப் பெறுவதுதானே, முக்கியமாக இருக்கும். மறுத்து, சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால், பணம் ஒரேடியாகப் போய்விடுமே! அதனால் ஒத்துக் கொள்வார் என்று நினைக்கிறேன்’ என்று, தங்கைக்கு மட்டுமின்றித் தனக்கும் தென்பூட்ட முயன்றாள். 

மோகனசுந்தரத்தின் கைக்கு வந்தபோது இருந்ததை விடத் தொழிலையும் லாபத்தையும் அவன் பல மடங்கு பெருக்கியிருப்பதாக, முத்துக்கிருஷ்ணன் அவளிடம் சொல்லியிருக்கிறார். பணத்தை அலட்சியப் படுத்துகிறவனால், அது முடியாது. 

எனவே, காணாமல் போன பணம், சிறு தொகையாகவேனும் திரும்பக் கிடைக்குமானால், அவன் அதை விட மாட்டான் என்று ஓர் எண்ணம் சாருமதிக்கு, 

அதையே விடாப்பிடியாக பிடித்து, நம்பிக்கையையும் திடத்தையும் முயன்று, மனதுள் வளர்த்துக் கொண்டாள். 

ஆனால் இருவருமாக மறுநாள் காலை எட்டு முப்பதுக்கு நிறுவனத்துடைய எம்டி மோகனசுந்தரத்தின் முன்னே போய், இந்த யோசனையை, அவள் சொன்னபோது, அதை ஒத்துக்கொள்ள, முதலாளி அடியோடு மறுத்துவிட்டான். 

‘பிளான் பி’ என்று தொழில் வட்டாரத்தில் சொல்வதுண்டு. முதலில் போடும் திட்டமான ‘பிளான் ஏ’ தவறாகப் போகும் பட்சத்தில், உடனே பயன்படுத்துவதற்காக ‘பிளான் பி’ என்று மாற்றுத் திட்டம் ஒன்றையும் தயாரித்து வைத்திருப்பார்கள். 

முதல் திட்டம் சரிவரவில்லை என்றால், சுணக்கமே இல்லாமல், அடுத்ததைச் செயல்படுத்தத் தொடங்கி விடுவார்கள். 

மோகனசுந்தரத்துக்கும், இதுவே வழக்கம், புதிதாக எதையும் செய்வது என்றால், அதற்கு, இரண்டு திட்டங்கள் தயாரிக்கச் சொல்லுவான். 

அதே பழக்கத்தில் “அடுத்த யோசனை என்ன?” என்று அவன கேட்டபோது, ஒன்றும் சொல்ல முடியாமல், இரு பெண்களும் பேந்த விழித்தனர். 

பாலா வேறு ‘ஒத்துக் கொள்வார் என்றாயே” என்பது போல, அவளைப் பார்க்க, சாருமதி ரொம்பவுமே திணறிப் போனாள். 

“என்ன சாருமதி?” என்று, அவனது கேள்வி வேறு! 

முயன்று சமாளித்துக்கொண்டு “வே…வேறு எந்த வழியிலும், காணாமல் போன பணத்தை ஈடு செய்ய வழியில்லை, சார். சொத்து, நகை, சேமிப்புப் பணம் என்று எதுவும் இல்லை… ” என்றவளின் பேச்சில் குறுக்கிட்டு “ஏன்? ” என்று கேட்டான் மோகனசுந்தரம். 

“இரண்டு பெண்கள் சம்பாதிக்கிறீர்கள். விடுதிக்கு எவ்வளவு கட்ட நேரும் என்று, எனக்கு ஊகம் உண்டு. பின்னே ஏன் சேமிக்கவில்லை?

சிறு அமைதியின் பின் “சரி. உங்கள் நிலைமை பற்றி, எனக்கு ஒன்றுமில்லை. ஆனால் உங்களது இந்த யோசனையை, நான் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணம் குறித்து, உன்னிடம் மாற்றுத் திட்டம் எ எதுவும் இல்லை என்றால், நான் வேறு நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என்றான் அவன் தெளிவாக. 

பாலாவின் உதறலைச் சாருமதியால் உணர முடிந்தது. 

“சார். ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சுதலாக, “சற்று யோசித்துப் பாருங்கள். நாங்கள். இந்தப் பணத்தை எப்படியாவது திருப்பித் தரத்தான் நினைக்கிறோம். எங்களால் முடிந்ததைத் தருவதாகத்தான்…” 

“நீ தருவதாகச் சொல்லும் தொகை, என் இழப்புக்கு வட்டிகூடக் கட்டாது என்பது. உனக்கே தெரிந்திருக்கும். ஆனால் உன் யோசனையை, அதற்காக மட்டுமாக நான் மறுக்கவில்லை. ஆனால் உன் திட்டத்தை ஏற்று. அதை நான் அமல்படுத்தினால், அது எவ்வளவு மோசமான முன் உதாரணமாக அமையக்கூடும் என்று, ஒரு தரமேனும் நீ யோசித்துப் பார்த்தாயா?” 

“ஒழுங்காக இருப்பவர்களையும் அது கெடுத்துவிடும், சாருமதி. எண்ணிப்பார். பெரிய தொகையை திருடிவிட்டு, மாதம் கொஞ்சமாகத் திருப்புகிறோம் என்று எல்லோரும் திருடத் தொடங்கி விட மாட்டார்களா?” 

“நாங்கள் ஒன்றும் திருடவில்லை சார்!” என்றாள் சாருபாலா ரோஷத்தோடு.

“நாங்களா? உன் தமக்கையை இதில் சேர்க்காதே, சாருபாலா. குற்றம் முழுக்க முழுக்க உன்னுடையது. அத்தோடு, உன் பொறுப்பில் இருந்த பணம், இப்போது கல்லாவில் இல்லை. உன்னால் கொடுக்கவும் முடியவில்லை என்றால், அதன் பெயர் திருட்டுத்தான்” என்றான் அவன் கடுமையாக. 

காது மடல் வரை சிவக்க, குறுகிக் தலை குனிந்துவிட்டாள் சின்னவள். 

சாருமதிக்குக் கஷ்டமாக இருந்தது, ஆனால் இதில் அவள் எப்படிக் குறிக்கிடுவது?

சொல்பவன் முதலாளி, நேரடியாகத் திருட்டாவிட்டாலும் அவனது இழப்புக்கு தங்கைதானே காரணம்? 

ஒரு பெரிய சொட்டுக் கண்ணிர், பாலாவின் மடியில் விழுந்து சிதறுவதைக் கண்டதும் பொறுக்க முடியாமல் “சார்…சாருபாலாவின் பிழை, கவனக் குறைவுதானே தவிர அது ஒன்றும் தப்பில்லை என்று நான் சொல்ல வரவில்லை சார். தப்புதான். ஆனால் அவள் சின்னப் பெண், மனிதர்களின் தன்மை பற்றிச் சரியாகத் தெரியாததால் நோந்த தவறு, ” என்று என்ன சொல்லி, எம்டியை இளக வைப்பது என்று புரியாமல், தங்கைக்கு ஆதரவாக மனதில் தோன்றியதையெல்லாம் சொல்லிக் கொண்டே போனவள், மோகனசுந்தரத்தின் புருவங்கள் உயர்ந்த விதத்தில் பேச்சை நிறுத்தினாள். 

“பேசுவது முத்துகிருஷ்ணன் சாருடைய செயலாளரா என்று இருக்கிறது!” என்று வியந்து கேட்டான் அவன். “நிர்வாகப் படிப்பில் நல்ல ‘கிரேடு’ வாங்கியதாகக் கேள்வி பட்டேனே!” 

எதிராளியைக் குன்ற வைப்பதில், இவன் ரொம்பக் கெட்டிக்காரன் என்று எண்ணினாள் சாருமதி. கால் பெரு விரலை அழுத்தமாக ஊன்றி, தங்கையைப் போல முகம் சிவந்து விடாமல் அடக்க, அவள் முயன்று கொண்டு இருந்தபோது, அவன் மீண்டும் பேசினான். 

“உன் தங்கை ஒன்றும் சின்னப் பெண்ணில்லை, சாருமதி. இன்னமும் ஓரிரு மாதங்களில், அவளது பத்தொன்பதாவது பிறந்த நாள் வந்துவிடும் என்று, அவளது அலுவலகக் குறிப்பு சொல்கிறது. ஓட்டுப் போடும் உரிமை வந்தே, ஓர் ஆண்டு ஆகப் போகிறது. அத்தோடு, எப்போதும் நாலைந்து பேர் புடை சூழச் சுற்றுகிறவளுக்கு, மனித இயல்பு தெரியாதிருக்கவும் வாய்ப்பில்லை. ஆகவே, உன் தவறான கருத்துக்களை உடனே மாற்றிக் கொள்வது உனக்கு நல்லது. இப்போதைய பிரச்சினைக்கு, இவை எல்லாமே சற்றும் அவசியம் அற்றவை. எனக்கு, என் பணக் கணக்கு நேர் செய்யப்பட வேண்டும். அது இல்லை என்றால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்ய வேண்டும் அவ்வளவே. இறுதியாக என்ன சொல்கிறாய்? என் இழப்பு சரி செய்யப்படட் ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா?” என்று சாருமதியை நேராகப் பார்த்துக் கேட்டான்.

இதற்கு என்ன சொல்வது? அவள் சொன்ன யோசனையைத்தான், அவன் ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டானே!

அல்லது ஒருவேளை பரவாயில்லை என்று இளகி… சாருமதி பரபரப்புடன் நிமிரும்போதே, “மாதாமாதம் காட்டுகிற பழைய ஐடியா என்றால், ப்ளீஸ் சாருமதி, அதைச் சொல்லாதே, அனாவசிய நேர விரயம்” என்று அவசரமாக எச்சரித்தான் மோகனசுந்தரம். 

சொல்வதற்கு, வேறு என்ன இருக்கிறது?. 

பணம் பற்றி வாய் திறக்க வழியிலலை. சிறு வயது என்று கெஞ்சவும் முடியாமல், ஓட்டுப் போட உரிமை பற்றிச் சொல்லி வாயடைக்கப் பண்ணிவிட்டான். 

இனி, முதலாளியாய் மோகனசத்தாம் என்ன சொன்னாலும், அதற்குப் பணிவதைத் தவிர அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்?

ஆனாலும், இவ்வளவு கல் நெஞ்சனாக ஒருவன் இருப்பானா?

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, இரு பெண்களும் அவனைப் பார்க்க, மோகனசுந்தரம் சாருபாலாவை விளித்தான்.

“நீ சற்றுநேரம் வெளியே காத்திரு. உன் சகோதரியுடன் பேசிவிட்டு, உன்னை கூப்பிடுகிறேன்” என்றான்.

இவனுக்குக் கூட, பாலாவின் முகத்தை நேரே பார்த்து, அவளைப் போலீசிடம் ஒப்படைக்கப் போவதாகச் சொல்ல முடியவில்லை போலும். பெரிதாகச் சின்னப் பெண் இல்லை என்றானே! அவன் தன்னிடம் சொல்லி தான் போய்த் தங்கையிடம் சொல்லி…. என்ன கொடுமை இது! 

மோகனசுந்தரத்தின் பார்வை, தன் முகத்தில் இருப்பதை உணர்ந்த சாருமதி, முகத்தை உணர்ச்சியற்றதாகச் செய்து கொள்ள முயன்றாள். 

ஆனால், அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாது என்று உணர்ந்து “எதுவானாலும் சீக்கிரமாகச் சொல்லுங்கள் சார், என்னவோ, ஏதோ என்று, பாலா வெளியே தவித்துக் கொண்டிருப்பாள்” என்று கேட்கும்போதே, என்ன அசட்டுத்தனமான பேச்சு என்று, அவளுக்கே தோன்றிவிட்டது. 

பாலாவோ, அவளுடைய தங்கையோ தவிப்பது பற்றி, இந்த முதலாளி மனிதனுக்கு என்ன கவலை?. அவனுக்கு அவனது பண விஷயம் மட்டும்தான் முக்கியம் என்று அவனே சொன்னானே!

அவள் எண்ணியதற்கு ஏற்ப “நன்றாகவே தவிக்கட்டும், எவ்வளவுகே கெவ்வளவு தவிக்கிறாளோ, அவ்வளவுக்கு எதிர்காலத்தில் வேலையில் கவனமாக இருப்பாள்” என்றான் அவன், இரக்கமற்று.

சிறைக்குள் சென்று, எவ்வளவு அவலமாக இருந்து என்ன பயன் என்று எண்ணமிட்டவள், ஏதோ உறைக்க, விலுக்கென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அல்லது பாலாவை, இவன் சிறைக்கு அனுப்புவதாக இல்லையோ? மற்றபடி, எதிர்காலத்து கவனம் பற்றி இவன் ஏன் பேசுகிறான்? அதுவும் வேலையில்? ஒருவேளை… ஒருவேளை…ஆனால்…

நம்பிக்கையும், அவநம்பிக்கையும் மாறி மாறி, கண்களில் வர்ணஜாலம் புரிய, ஏக்கவும் பயமுமாக, மோகனசுந்தரத்தின் முகத்தைப் பார்த்தாள், சாருமதி.

சில வினாடிகளுக்கு முன் இருந்த கடுமையான கண்டிப்பும் இப்போது அங்கே இல்லை! 

மாறாக “சந்தர்ப்பம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது!” என்றான் அவன், சன்னமாய் முறுவலித்து.

சந்தர்ப்பம்? சந்தர்ப்பம்? என்ன சந்தர்ப்பம்?

– தொடரும்…

– கண்டு கொண்டேன் காதலை (நாவல்), முதற் பதிப்பு: 2011, அழகிய மங்கையர் நாவல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *