வார்த்தைகளின் வலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,490 
 

நரேன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான், அவன் மனைவி மாலதி அருகில் வந்து, “என்னங்க” என்றாள்.

நரேன் சைகையிலே அமைதியாக இருக்கும்படி கூறினான். அவன் சொல்வதை புரிந்து கொண்ட மாலதி அமைதியாக நின்று அவன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

நரேன் பேசி முடித்ததும், “மாலதி அப்பாதான் பேசினாங்க, அண்ணனுக்கு கடன் அதிகாமாகி விட்டதாம், அதனால் ஊரில் வாங்கிப் போட்ட நிலங்களை விற்றுத் தரும்படி கேட்கிறானாம், அப்பாவும் சரி என்று சொல்லிட்டாங்க, அதில் நமக்கும் சமபங்கு கொடுக்கச் சொல்லியிருக்காராம்” என்றான்.

“அப்போ நமக்கு எவ்வளவு தொகை வரும்ங்க”

“இப்போ ஊரில் நிலங்களுக்கு உள்ள மதிப்புபடி பார்த்தால், நமக்கு பத்திலிருந்து பதினைந்து லட்சம் வரைக்கும் கிடைக்கும்”

“சரிங்க நீங்கள் அந்த பணத்தை என்ன செய்யலாம் என்று, யோசனையில் இருக்கீங்க, இதுவரை எதுவும் யோசிக்கல மாலதி, உன்னிடம் எதுவும் ஐடியா இருக்கா”

“ஆமாங்க வரும் பாதி பணத்தில் சின்னதா ஒரு நிலம் வாங்கிக்கலாம், மீதி பணத்தில் ரொம்ப வசதியாக இல்லாமல் சின்னதாக ஒரு வீடும் கட்டிக்கலாம்”

“என்னம்மா உன் ஆசை சின்ன ஆசை மாதிரி தெரியல, பேராசை மாதிரி இருக்கு, வரும் பணத்தில் நிலம் வாங்குவதே கடினம், நீ வீடு கட்டனும் என்கிறே”

“என்னங்க நாம இப்போது இருக்கும் பகுதியில் வாங்கினால்தான் விலை அதிகமிருக்கும், கொஞ்சம் உள்ளே தள்ளி வாங்கினால் விலை குறைவாகதான் இருக்கும், கால் கிரவுண்ட் வாங்கினால் போதும், இப்போது இருக்கும் விலைவாசியில், வீடு கட்டுவதுதான் கடினம் பணம் போதாது, அதனால் வங்கியில் கடன் வாங்கலாம்”

“என்னம்மா நீ, வங்கியில் கடன் வாங்கினால் அதைக் கட்டுவது எப்படி நீ விளையாடறியா”

“இல்லைங்க இப்போது நான் வாடகையே ஏழாயிரம் கொடுக்கிறோம், அதுவும் இல்லாம மின்கட்டணம், தண்ணீர், மோட்டார் என்று அதற்கு மூவாயிரம் கொடுக்கிறோம், அதை அப்படியே வங்கிக் கடன்க்கு செலுத்திவிடலாம் தானே, நாம் சொந்த வீட்டில் இருக்கிறோம் என்ற சந்தோஷம் இருக்குமில்லே”

“நீ சொல்வது சரிதான், முதலில் நமக்கு வர வேண்டிய தொகை வரட்டும், அதற்குள் நிலமும், வங்கியில் கடன் எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி விசாரிப்போம்”

இருவரும் பேசியது போலவே காரியத்திலும் இறங்கினர், அவர்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டில் நிலமும் கிடைத்தது, ஊரில் விற்ற இடத்திற்கு சமபங்கு அண்ணன் தருவான் என்று எதிர்பார்த்த நரேன், அவன் கடன் அது இதுவென்று எட்டு இலட்சம் மட்டுமே கொடுத்தான்.

“மாலதி அண்ணன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை, நானும் அப்பாவும் எவ்வளவோ பேசிப் பார்த்தோம், பணத்தை கொடுக்க மறுக்கிறான், என்னை நன்றாக ஏமாற்றிவிட்டான்”

“சரி விடுங்க, நமக்கு இதுதான் என்று இருந்தால் அதை யாராலும் மாற்ற முடியாது, அவர் ஏமாற்றினால் அதற்குரிய பலன் அவருக்கு கிடைக்கும், நாம் மேற்கொண்டு ஆக வேண்டியதை பற்றி யோசிக்கலாம்”

ஏற்கனவே பார்த்த நிலத்தை வாங்கி அதில் வீடும் கட்டிவிட்டனர், அதற்கு கிரகப்பிரவேசம் பண்ண உறவினர்களை மட்டும் அழைத்திருந்தான்.

நரேன் அண்ணன் சந்திரனும் வந்திருந்தான், வீட்டைப் பார்த்ததும், அவனுக்கு உள்ளுக்குள், நமக்கு முன் இவன் கட்டிவிட்டானே பொறாமை அதிகமாகியது, அதை வார்த்தைகளாக வெளிப்படுத்த தொடங்கினான், “என்னடா வீடு கட்டியிருக்கே, குருவிக் கூடு மாதிரி, ஒரு நாலு பேர் அதிகமாக வந்து விட்டால், வெளியிலா படுக்கச் சொல்வே, உன்னுடைய தகுதிக்கு இப்போ எதுக்குடா இந்த வீடு, வங்கியில் கடன் வாங்கியிருக்கே, அதை எப்படி செலுத்துவே, அந்த கடனை அடைக்க முடியாமல், நீ நல்லா கஷ்டப் படப் போறே” என்றான் சந்திரன்.

பிள்ளைகள் வளர்ந்துவிட்டாதால் இரு சக்கர வாகனத்தில் எங்கும் செல்ல முடியவில்லை, அதனால் சிறிய பட்ஜெட்டில் பழைய கார் ஒன்றை வாங்கியிருந்தான், அந்த காரை பார்த்ததும் சந்திரன், “வீடே குருவிக் கூடு மாதிரி இருக்கு, இதுல உனக்கு கார் தேவையா, இருக்கறதுக்கு வீடே சரியில்லை, நடுத் தெருவில் நிற்பது போலிருக்கு, இதுல உனக்கு கார் ஒரு கேடு”

நரேன் தன் அப்பாவிடம், “அப்பா, சந்திரன் என்னை நல்லாயிரு என்று சொல்லவில்லை என்றாலும் பரவாயில்லை, அவனுக்கு பிடிக்கவில்லையென்றால் அமைதியாக போயிருக்கலாம் இப்படியா பேசுவான்”

“நரேன் அவன் பேசியதை பெரிதாகக் எடுத்துக் கொள்ளாதே, நீ மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்” என்றார்.

வீட்டில் எல்லா வேலைகளும் முடிந்து புது வீட்டில் சந்தோஷமாக குடியேறி விட்டனர், மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்க்கையும் நகரத் தொடங்கியது, நகர்ந்து வருடம் ஒன்றாகியது.

மழையினால் அவர்களுடன் விதி விளையாடியது, அந்த வருடம் பெய்த மழையினால் வந்த வெள்ளத்தில் வீடு கார் என்று நீரில் மூழ்கியது, ஐந்து நாட்கள் ஆனது தண்ணீர் வடிய, பொருட்கள் ஒன்று கூட தேரவில்லை, கார் ஏற்கனவே பழைய கார் என்பதால் சரி செய்ய முடியாது என்று சொல்ல,

வீட்டை சரி செய்து, வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு லட்சத்திற்கு மேல் தேவைப்படுகிறது, வங்கியில் கடன் என்பதால் சேமிப்பு என்று எதுவும் இல்லை, என்ன செய்வது என்று வீட்டை வந்த விலைக்கு விற்றுவிட்டு, வங்கி கடனையும் அடைத்துவிட்டு, மீண்டும் வாடகை வீட்டுக்கே வந்துவிட்டனர்.

நரேன் வெகு நேரமாக எதையோ யோசித்துக் கொண்டிருக்க, “என்னங்க ரொம்ப நேரமா எதை யோசிக்கறீங்க” என்றாள் மாலதி.

“மாலதி என் அண்ணன் பேசிய வார்த்தைகள், என்னை முள்ளாய் குத்துகிறது, நடுத்தெருவில் நிற்பாய் என்று சொன்னான், அது போலவே நடந்துவிட்டது, இயற்கையினால் நடந்தது என்றாலும், அவன் சொன்ன வார்த்தையால்தான் எனக்கு இப்படி நடந்திருக்கு”

“என்னங்க ஏன் இப்படியெல்லாம் நினைக்கறீங்க, கடவுள் நமக்கென்று என்ன வைத்திருக்கிறாரோ அதுதான் கிடைக்கும், நடக்கும், நீங்கள் மனதை போட்டு குழப்பிக்காதீங்க”

“இல்லை மாலதி, அவன் பேசிய வார்த்தைகளால்தான், எனக்கு இப்படி ஆகிவிட்டது” என்று புலம்பிக் கொண்டேயிருந்தான்.

ஒருவரை பிடிக்கவில்லை என்றால், அவர்களிடமிருந்து விலகிவிடுங்கள், அவர்களை வார்த்தைகளை கொண்டு வதைக்காதீர்கள், இக் கதையில் நரேன்க்கு நடந்த சம்பவம் இயற்கையால் என்றாலும், அவன் அண்ணன் சொன்ன வார்த்தைகளால்தான் நடந்தது என்ற, எண்ணத்தை உண்டாக்கிவிட்டது. இந்த வலி அவனுக்கு மறக்க முடியாத, வலியாகதான் இருக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *