பச்சோந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 9,450 
 

சிக்னலையும் மதிக்காமல் ரோட்டை கடந்து இரு வாகனங்களையும் லேசாக முட்டி தள்ளி விட்டு ரோட்டோரமாய் இருந்த பிளாட்பாரத்தில் மாருதி 800 முட்டி நின்றது. அங்கிருந்த நடைபாதை கடைகள் நாசமாகின.

அங்கிருந்த ட்ராபிக் இன்ஸ்பெக்டர் நீதிதேவன் மற்றும் முத்துராம், வாகனம்பிள்ளை என்ற இரு ட்ராபிக் கான்ஸ்டபில்கள் வேகமாக கார் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

யோவ் என்னையா இது புதுவண்டியாட்டம்ல தெரியுது நம்பர் பாருவே என்றார் நீதி.
சார் ரிஜிஸ்ட்ரேசன் கூட பன்னல சார் இது கான்ஸ்டபில் முத்துராம்.

நீதி: யோவ் யாருலே. கார விட்டு எறங்கு.

காரில் இருந்த டிரைவர் மெதுவாக கீழ் இறங்கினான்.

நீதி: சிக்னல கூட மதிக்காம இவ்வளவு வேமா எங்கள்ள போற? ஓ பேருன்ன?

சத்யன்யா என்றான்.

அங்கிருந்த நடைபாதை வியாபாரிகள் அதிகாரியிடம் புலம்ப ஆரம்பித்தனர்.

வியாபாரி முத்தம்மாள்: அய்யா இங்க பாருங்கோ. எம்புட்டு காய்கறிக நாசாமா போவிடுத்து. விடாதிங்க அய்யா அடிங்க. இப்படியா வண்டி ஒட்டி வரவா? விடாதிங்கயா.

நீதி: இருமா பேசுறேன்ல. பைன் போடுல. ஜீப்ப கொண்டா. ஏத்துல வண்டியல…

சத்யன்: சார் சார் தெரியாம பண்ணிட்டேன். சாரி சார்.

வாகனம்: சார் செத்த இங்குட்டு வாங்க.

நீதி: என்னயா?

வாகனம்: இதே காரு தான் சார். இதே காரு தான். நேத்து கமிசனர் ஐயா வீட்டுல பாத்தே. நீங்க பாட்டுக்கே பைன் எதுவும் போட்டு விட்டுடாதிங்கே. இந்த பையன பாத்தாக்க அங்கிருந்த டிரைவர் மாதிரியே இருக்காப்புல..

நீதி: என்னாயா சொல்ற?!

வாகனம்: அட ஆமாயா!

நீதிதேவன் தொப்பியை கழட்டி காரின் மீது வைத்தான்… தொப்பியில் இருந்த சிங்கமோ சப்பென்று மங்கலாக தெரிந்தது.

நீதி: எவ்வளவு வெயிலு கொஞ்சநெஞ்சமாவா வெயிலடிக்குது. சூ… ப்பா…
ஏலே கெழவி பிளாட்பாரத்துல கடைய விரிக்காதன்னு எத்தன தடவ சொல்லிர்க்கே. ஒரு மொரயாவது கேட்ருக்கியாலே இதுல இவங்கள வேற அடிக்க சொல்லுதுவே. யோவ் முத்துராமு கொண்டாயா பேப்பர… எழுதுயா இந்தம்மா பேர… எழுதி பைன் போடு. யாருயா நீ ஓ பேரு என்ன எல்லார் பேரையும் எழுது… ஒருத்தனையும் விடாதே.

இவ்வாறு கூறியவுடன் அங்கிருந்த வியாபாரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர். கிரகபுடிச்ச பயவுள்ள தினைக்கும் வந்து காசுவாங்கிட்டு நம்ம மேலே பைன் போடுதாமுள்ள பைனு என்று மனதில் நினைத்து கொண்டாள் வியாபாரி முத்தம்மாள்.
முத்துராம்: சார் என்ன சார் இடிச்சவன விட்டுபுட்டு இடிவாங்குனவங்கள புடிக்குரிங்க…
வாகனம்: யோவ் விவரம் தெரியாம பேசாதய்யா இது கமிசனர் காரு.

முத்துராம்: என்னது கமிசனர் காரா? இதுவா? அட போங்க சார். கமிசனர் ஆவது இந்த சின்ன கார வாங்குரதாவது.

நீதி: அதானே இம்புட்டு சின்ன காரா வாங்க போறாரு. அவர் கிட்ட இருக்குறது எல்லாமே இனோவா, பொலிரோன்னு பெருசு பெருசாவில்லையா இருக்கும்.

என்று பேசிக்கொண்டே…

தொப்பிய கலட்டுனாக்க வெயிலு மண்டைய பொலக்குதையா என்று காரின் மீது இருந்த தொப்பியை எடுத்து மாட்டி கொண்டார். தொப்பியில் இருந்த சிங்கம் கம்பீரமாய் பளீர் என்று தெரிந்தது.

அடேய் மாட்டு பயலே. கண்ணுமுன்னு தெரியாம இப்படியா வண்டியே ஒட்டுவீறு. ஜனங்களுக்கு ஏதாவது ஒன்னு கணக்கா ஒன்னு ஆகிருந்தா என்னாவுல பண்ணுவீரு? ஜீப்ப கொண்டாயா ஏத்துயா வண்டியில.

வாகனம்: சார் நீங்கபாட்ல இந்த முத்து பேச்ச கேட்டு எதுவும் பண்ணிடாதிங்கே… கமிசனருக்கு ஒரு பொண்ணு இருக்கு தெரியும்லே.

நீதி: ஆமா.

வாகனம்: அந்த பொண்ணுக்கு வாங்கினது தான் இந்த காரு.

நீதி: அந்த பொண்ணு பாரின்லல்லயா இருக்கு.

வாகனம்: அட வந்து மூணு நாள் ஆவுது சார். இது கூட தெரியாம என்ன சார் பெரிய அதிகாரி நீங்க.

நீதி: யோவ் அப்போப்போ சார் வீட்டுக்கு கூட மாடே ஒத்தாசி வேல நீ தாம்லே பாத்துகிட்ருக்கே…
வாகனம்: அதுக்கு முன்னாடி நீங்க தானே பாத்திங்கே… என்றான் முனங்கிய படி.

நீதி: என்னயா?

வாகனம்: அட ஒண்ணுமில்ல சார். வீணா பேசி வம்புல மாட்டிகாதிங்கே.. அவ்வளோ தான் சொல்லுவே. நீங்க அந்த பையன அப்படியே அனுப்புங்க. இங்குட்டு க்ரொவ்ட நா பாத்துக்குறேன்.
நீதி: வெயிலு கொஞ்சம் தூக்கலா தான்யா இருக்கு. என்று சொல்லி கொண்டே தொப்பியை கார் மீது வைக்க சென்றார். அந்த பையனை பார்த்து விட்டு தொப்பியை கவுட்டை கைக்குள் வைத்து கொண்டு. கெளம்புங்க தம்பி. நீங்க கெளம்புங்க. சார கேட்டதா சொல்லுங்க.

சத்யன்: சார் சாரி சார்.

நீதி: பரவால்ல இருக்கட்டும்.

சத்யன்: இது கமிசனர் வண்டில்ல அவரு பொண்ணு வண்டி அதான் என்ன பண்றது எப்டி சொல்றதுன்னு புரியாம நின்னுருந்தேன். நீங்களே புரிஞ்சி கிட்டிங்க. ரொம்ப தாங்க்ஸ் சார்.
வியாபாரி முத்தம்மாள்: அடேய் நில்லுடா நசுக்குன பொருளுக்கு பணத்த வச்சிட்டு கெளம்பு.
நீதி: கெழவி சும்மா இருக்கமாட்டே? நீங்க போங்க தம்பி.

டிரைவர் கார் எடுத்து கிளம்பினான்.

அங்கிருந்த வியாபாரிகள் அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை பார்த்து நக்கலாய் சிரித்தனர்.
தங்கள் நிலைமையை புரிந்து கொண்ட நீதிதேவன்.

நீதி: ஏலே கெழவி நசுங்குன காயா போட்டுடாதே… நாளக்கி கொண்டாருவையே சுத்தமான காயி அத வீட்டுக்கு அனுப்பி வையி. என்னா சொன்னது விளங்கிடதாவுல?

வியாபாரி முத்தம்மா: நல்லா காயா போட்டுவிடுறேன் ராசா.

நீதி: ம்ம். கெளம்பு கெளம்பு…

கம்பீரமாய் தொப்பியை எடுத்து மாட்டி கொண்டார் நீதிதேவன்.

தொப்பியில் இருந்து சிங்கம் தவறி கிழே விழுந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *