ஒரு காதல் கதை!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 22,429 
 

ஒரு காதல் கதைபேசி முடித்து தொலைபேசியை அதன் இடத்தில் வைத்த சந்திராவைப் பார்த்து ‘‘என்னடி ஆபீஸ் கிளம்பணுமா?’’ என்றாள் அவள் அம்மா. அன்று சனிக்கிழமை விடுமுறை நாள். விடுமுறையில் கூட வேலைக்குப் போகணுமா என்பதுதான் அம்மா கேட்க வந்தது. ஆனால், அம்மா எப்போதும் இப்படித்தான் கேட்பாள். “ஆமாம்மா, கொஞ்சம் வேலை…’’ என்றபடி கைப்பையை எடுத்தபடி கிளம்பினாள்.“தலையை வாரி கிளிப்பாவது போட்டுட்டுப் போடி…” என்றாள் அம்மா. அம்மாவுக்காக இல்லையென்றாலும் ஆனந்துக்காகவாவது கண்டிப்பாக தலைவாரிப் போகவேண்டும். இல்லையென்றால் அதை முன்னிட்டு ஒரு ஐந்து நிமிடம் லெக்சர் அடிப்பான். தலைமுடி என்றில்லை, எல்லாவற்றிலும் அவன் கவனம் இருக்கும்.

ஆனந்துடனான முதல் சம்பாஷணையே அது போன்ற ஒரு உரையாடலிலேயே தொடங்கியது. இப்போது நினைத்தாலும் சந்திராவுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன், படித்து முடித்ததும், வேலைக்குச் சேர்ந்த இரண்டாவது வாரத்தில் நடந்த சம்பவம் அது. காரிடாரில் இருந்த வாட்டர் கூலரில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டு டம்ளரை கூலர் மேல் வைத்துவிட்டு திரும்பியவள், அருகில் நின்றிருந்தவனை அப்போதுதான் பார்த்தாள். பெயர் தெரியும். ஒன்றிரண்டு முறை பேசியிருந்தால் அதிகம். “நீங்க முஸ்லிமா?” என்று கேட்டபடி டம்ளரில் தண்ணீர் பிடிக்கத் தொடங்கினான். “இல்லையே… ஏன் கேட்கிறீங்க?” என்ற சந்திராவின் நெற்றியைப் பார்த்தபடி “இல்ல… நெத்தியில பொட்டு வைக்கிறது இல்லையே… அதால கேட்டேன்!” என்றான்.

“என் பேரு சந்திரான்னு தெரியும்ல?” “சந்திரா பாய்னு இருக்கலாம் இல்லையா?”“இப்ப என்ன பிரச்னை உங்களுக்கு?” “இல்ல… பொட்டு இருந்தா நல்லா இருக்குமேன்னு…” “ஹலோ… போய் ஏதாவது வேலை இருந்தா பாருங்க…” என்று சொல்லிவிட்டு தன் இருக்கைக்குப் போய் அமர்ந்தவளுக்கு, கொஞ்சம் அதிகமா பேசிட்டமோ என்றிருந்தது.ஆனால், ஆனந்த் அப்படிக் கேட்டது அவளுக்கு கொஞ்சம் விசித்திரமாக இருந்தாலும் பிடித்திருந்தது. அப்பாதான் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். காலேஜ் கிளம்பும் அவசரத்தில் அநேக நாட்களில் வைக்க மறந்து போன பொட்டை, அப்பாவின் ஞாபகப்படுத்தலிலேயே திரும்ப ட்ரெஸ்ஸிங் டேபிளுக்கு ஓடி வைத்துக் கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள்.இதோ இப்போது விடுமுறை நாளில் ஆனந்தைப் பார்க்க ஆபீஸ் போவது… எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி அதுதான். ஆனந்த் நிறைய விஷயங்களில் அப்பாவை பிரதிபலித்ததுதான்.

இன்றைக்கு பொழுது எப்படி முடியும் என்று இப்போதே அவளால் யூகிக்க முடிந்தது.நிச்சயம் ஆனந்த் கேட்கப் போகும் கேள்விகளில் ஒன்றுக்குக் கூட அவளால் பதில் சொல்ல முடியப் போவதில்லை.கடந்த நான்கைந்து மாதங்களாகவே நடந்து வருவதுதான். சனிக்கிழமை வந்தாலே சந்திராவுக்கு உதறல் எடுக்க ஆரம்பிக்கும் அளவுக்கு இருக்கும் அவன் கேள்விகள். போன சனிக்கிழமை நடந்த உரையாடல் அவள் நினைவில் வந்து போனது.ரெஸ்டாரண்டில் ஆர்டர் செய்து வந்த தயிர் சாதத்தில் இருந்த திராட்சைகளைத் தேடி எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை நோக்கி வீசப்பட்டது முதல் கேள்வி.“சொல்லிட்டியா?” “யார்கிட்ட?” “உங்க அப்பாகிட்ட!” “என்ன சொல்லணும்?” “நம்மளைப் பத்தி..!” “என்னன்னு சொல்லணும்?” “கொஞ்சம் சீரியஸா பேசறியா?” ‘‘….’’ “நான் வந்து பேசட்டுமா?” “என்னன்னு பேசுவீங்க?” “சந்திராவும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்…” “அய்யய்யோ!” “என்ன அய்யய்யோ… நீயும் பேசமாட்ட… நான் வந்து பேசேறன்னாலும்…” “எங்கப்பா ஒரு ஹார்ட் பேஷன்ட் தெரியுமா..?’’ “சரி… எப்பவாவது சொல்லித்தானே ஆகணும்…” “கொஞ்ச நாள் கழிச்சு…” “எவ்ளோ நாள்?” “நேரம் பார்த்து நானே பேசறேன்…”இன்றைக்கு உரையாடல் எப்படித் தொடங்கும் என்ற நினைவோடு பேருந்துக்குள் ஏறி கிடைத்த சீட்டில் உட்கார்ந்தபடி கைப்பையில் இருந்த நாவலை எடுத்து விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்.

அலுவலகத்துக்குள் நுழைந்ததும் இன்டர்காமில் ஆனந்தை அழைத்தாள். அடுத்த நிமிடம் அவர்கள் வழக்கமான சந்திப்பு இடமான, இரு தளங்களுக்கு இடைப்பட்ட படிக்கட்டு ஏரியாவுக்குப் போனவள், அங்கு காத்திருந்த ஆனந்தைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையுடன் ‘‘என்னாச்சு… ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்க…” என்றாள். “எங்க வீட்ல கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிருக்காங்க…” “யாருக்கு?”“ம்ம்… எனக்குத்தான்!’’ “உங்க தங்கச்சிக்கு முடிச்சிட்டுதான் உங்களுக்குனு சொல்லியிருந்தீங்க…” “ரெண்டு பேருக்கும் சேர்ந்து முடிக்கற மாதிரி ஒரு பிரபோசல் வந்திருக்கு…” “உங்களுக்கு ஓகேவா?” “சரி சொல்லிடலாம்னு நினைக்கிறேன்.” “…” “என்ன பதிலே காணும்?” “நான் என்ன சொல்ல?” “ஏதாவது சொல்லு” “உங்க தங்கச்சிக்கு ஒரு நல்ல வரன் அமையுதுன்னா…” “அமையுதுன்னா?” “இது ஒரு நல்ல சான்ஸ் இல்ல..!” “எதுக்கு?” “நீங்களும் அப்படியே செட்டில் ஆறதுக்கு!” “கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா உனக்கு?”

“அது அவ்ளோ முக்கியமில்லை… ரொம்ப நாளா தள்ளிப்போயிட்டிருக்க உங்க தங்கைக்கு ஒரு வாழ்க்கை அமையுதுங்கறதுதான் முக்கியம்!” “நான் இதை எதிர்பார்க்கல…” “வேறென்ன எதிர்பார்த்தீங்க?” “கொஞ்சமாவது சோகம் அடிக்கும்னு பாத்தேன்!” “நீங்க சொன்னதெல்லாம் உண்மையாயிருந்தா, கொஞ்சம் சோகம் அடிச்சிருக்கும்…” “அப்ப… நான் சொன்னதெல்லாம் பொய்னு சொல்றியா?” “பின்னே..?” “எப்படிப் பொய்னு சொல்றே?” “தெரியும்!” “அதான் எப்படி?” “எப்படியோ?” “சரி எப்ப சொல்லப்போறே?” “உங்க தங்கைக்கு வரன்லாம் பார்த்து முடிங்க…” “இப்ப ஏன் அதை இதோட முடிச்சி போடறே?” “அதுவும் முக்கியம் இல்லையா…” “பேச்சை மாத்தாத… ஏன் இதெல்லாம் பண்றேன்னு புரியுதா?” “புரியுது!’’ “ஆனா, வீட்ல எதுவும் பேசமாட்டே…” “நாளைக்கு எப்படியும் பேசிடறேன்!” “பார்ப்போம்!” அடுத்த திங்கட்கிழமை சந்திரா அலுவலகம் வந்ததும் இன்டர்காமில் ஆனந்த் அழைத்து ‘‘என்னாச்சி?’’ என்றான். ‘‘ஒண்ணும் ஆகலை…’’ “ஏன்?” ‘‘அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்!’’ “எப்போ..?’’“சண்டே காலைல!”

“எதனால… இதுக்கு முன்னால வந்திருக்கா?” “இல்லை.. .இதான் முதல் தடவை…” “இப்ப எப்படி இருக்கார்?” “இப்போ ஓகே… ஆஸ்பிடல்லதான் இருக்கார்… கூட அம்மா இருக்கா…”“சரி… ஒரு மீட்டிங்க்கு போறேன்… வந்து கூப்பிடறேன்…” “சரி…” அடுத்த நான்கைந்து நாட்கள், சந்திராவுக்கு, ஆஸ்பத்திரி, அலுவலகம், வீடு என்று மாறி மாறி பயணித்ததில் போனது. அலுவலகத்தில் வேலையும் கொஞ்சம் கூடுதலாகச் சேர்ந்து கொண்டதில், அவ்வப்போது இன்டர்காமில் அழைத்த ஆனந்திடமும் நேரம் எடுத்துப் பேச முடியவில்லை. வெள்ளியன்று அப்பா வீடு வந்தார். ஒருவாரம் பெட்ரெஸ்ட்டில் இருக்க வேண்டும். அம்மா ரொம்பவே இடிந்துபோய் இருந்தாள்.மறுநாள் காலை அலுவலகம் கிளம்பிய சந்திராவைப் பார்த்த அம்மா எதுவும் கேட்கவில்லை. அவளாகவே ‘‘கொஞ்சம் வேலை இருக்கும்மா. ஆபீஸ் போய்ட்டு வரேன்…’’ என்றாள். வீட்டை விட்டு வெளியே வந்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ஆனந்த் கண்டிப்பாய் அலுவலகம் வந்திருப்பான்!

– ஜனவரி 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *