ஒட்டுப்புல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,099 
 
 

அந்தப் பள்ளிக் கூடத்தில் வேறு என்ன இல்லாவிட்டாலும் அந்தக் காலை வேளையில் கலகலவென்று சத்தம் இருந்தது. பள்ளிக்கூடத்திற்கே உரிய கதம்பமான ஒலிகள். கான்வாஸ் சப்பாத்துகள் தரையில் எழுப்பும் தட் தட் ஓசை; நாற்காலிகள் இழுக்கப்படும் ஒலிகள்; கரும்பலகையில் சாக்பீஸ் கிறீச்சிடும் ஒலி; “வணக்கம் டீச்சர்” என்ற ஒரு கோரஸ்; “யார் கரும்பலகையில இப்படி கிறுக்கினது?” என்ற ஓர் ஆசிரியரின் கர்ஜனை.

தலைமை ஆசிரியர் நடேசனுக்குப் பக்கமாக அன்பரசன் ஆறாம் வகுப்பு அறையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது இந்த ஒலிகள் எல்லாம் வந்து அவன் காதைத் தாக்கின. அவனுக்கு எல்லாம் புதியவையாக இருந்தன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று இப்போதுதான் வெளியேறியுள்ள இன்னும் பளபளப்பு மங்காத புதிய ஆசிரியன். புதிய அனுபவங்களை மேற்கொள்ளப் போகும் மனப் படபடப்பு இன்னும் அடங்கவில்லை. அங்குள்ள பழுத்த அனுபவமுள்ள ஆசிரியர்களையும், “யார் புதிய ஆள்?” என்று முறைத்துப் பார்க்கும் மாணவர்களையும் பார்த்த போது கொஞ்சம் பயமாயும் இருந்தது.

அந்தப் பினாங்குத் தமிழ்ப்பள்ளிக்கு காலையில் வந்து சேர்ந்து கட்டடத்தைப் பார்த்த போதே “இவ்வளவுதானா!” என மனம் சோர்ந்தது. ஆனால் தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியன் இதை விட அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது எனத் தன்னைத் தேற்றிக் கொண்டான்.

தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். “நல்ல நேரத்துக்கு வந்திங்க! ஆறாம் வகுப்புக்கு வகுப்பாசிரியையாக இருந்தவங்க போன வாரத்தோட நின்னுட்டாங்க! ஆளில்லாம தவிக்கிறோம் இங்க!” என்றார்.

“ஏன் சார் நின்னுட்டாங்க?” என்று கேட்டான் அன்பரசன்.

“அவங்க கணவர் இன்சூரன்சு ஏசன்ட். இவங்களயும் இழுத்துப் பகுதி நேர ஏசன்டா வச்சிருந்தாரு! அதில வர்ர கமிசன் வருமானம் ஆசிரியர் சம்பளத்த விட ரெண்டு மடங்கு அதிகமா இருக்காம். அப்புறம் எதுக்கு இந்த சள்ளை பிடிச்ச வேலைன்னு விட்டுட்டாங்க!” என்றார்.

இது அடிக்கடி கேட்ட கதைதான். ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே இந்த வேலையை விட்டு வேறு வேலைகள் தேடிக்கொள்ள எத்தனை விதமான வழிகள் இருக்கின்றன என்பதை அவன் சக பயிற்சி மாணவர்கள் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.

“நெறைய நேரம் இருக்கும் அன்பு. சாயந்திரத்தில ஒரு “டைரக்ட் செல்லிங்” வியாபாரம் ஆரம்பிச்சிட்டா ஒரு மாசம் ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலாம்.” எம்வே, சேக்லீ., ரோசினி, அடிபிடிக்காத அலுமினியப் பானை, நீர் வடிகட்டும் கருவி எல்லாவற்றையும் காட்டினார்கள். “இன்சூரன்சுக்கு ஆள் பிடிச்சிக் குடுத்தா ஒவ்வொரு ஆளுக்கும் கமிசன் மூணு வருசத்துக்குக் கிடைக்கும். செய்றியா? எனக்குத் தெரிஞ்ச ஏசன்ட் இருக்கார். சொல்லட்டுமா?”

“எப்படியாச்சும் ம.இ.கா.வில சேந்திடு அன்பு! ஒரு வருசத்தில ஒரு கிளைய கேட்டு வாங்கிடலாம். அப்புறம் அப்படியே தலைவருக்கு நெருக்கமாயிட்டா, அப்பறம் என்ன? தலைமை ஆசிரியர் மூக்கில விரல விட்டு ஆட்டிடலாம்!”

எந்த ஆண்பிள்ளைக்கும் ஆசிரியர் வேலையில் அர்ப்பணிப்போடு இருந்து இந்த “பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்ள” உதவ வேண்டும் என்ற அர்ப்பணிப்பு இருக்கவில்லை. சில பயிற்சி ஆசிரியைகள் மட்டுமே இந்தப் பள்ளிக் கூடங்களுக்குச் சென்று இந்த ஏழைத் தமிழ்ப் பிள்ளைகளை எப்படியாவது உயர்த்தி இந்த சமுதாயத்தைத் தூக்கி விட வேண்டும் என்ற உணர்வு இருந்தது.

அன்பரசனுக்கும் இது தன் வாழ்க்கையில் ஒரு தற்காலிகக் கட்டம் என்றுதான் தோன்றியது. இந்த வேலை ஒரு கண்ணியைப் போல. எப்படியோ வந்து மாட்டிக் கொண்டோம். விரைவில் காண்டிராக்டை முடித்துக் கொண்டு இதிலிருந்து விடுபடவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது.

ஆறாம் வகுப்பில் ஆசிரியர் இன்னும் வந்திருக்காத காரணத்தால் சத்தம் காதைத் துளைத்துக் கொண்டிருந்தது. வகுப்புக்குள் நுழைந்த போது “நான் ஒருதரம் சொன்னா நூறு தரம் சொன்ன மாதிரி” என்று ஒரு மாணவன் ரசினிகாந்த் வசனம் பேசிக்கொண்டிருந்தது தெளிவாக விழுந்தது.

இருவருமாக வகுப்புக்குள் நுழைந்ததும் மாணவ மாணவிகள் தடதடவென்று எழுந்து “வணக்கம் சார்” என்றார்கள்.

“வணக்கம். உட்காருங்கள். மாணவ மாணவிகளே, இவர் நம்முடைய பள்ளிக்குப் புதுசா வந்திருக்கிற ஆசிரியர். பேரு அன்பரசன். இவர்தான் உங்க வகுப்புக்கு வகுப்பாசிரியர். சரியா?”

“சரி சார்” என்று கோரஸ் எழுந்தது.

“ஆசிரியர்கிட்ட பணிவா நடந்து நல்ல பேர் எடுக்கணும், என்ன?”

“சரி சார்”

அன்பரசனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வெளியே போனார் தலைமை ஆசிரியர். அன்பரசன் வகுப்புப் பதிவேட்டைத் திறந்தான். அந்த வகுப்பில் பதினெட்டு பேர்கள் இருந்தார்கள். கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டமிட்டான். மையூறிய அடையாளங்களும் கத்தியால் கீறல் போட்ட காயங்களும் உடைய மர பெஞ்சுகளின் பின்னால் கருத்த, பழுத்த, சிலமட்டுமே சிவத்த முகங்கள் தெரிந்தன.

“அம்பலவாணன்”

“உள்ளேன் சார்!” குட்டையாய் கருப்பாய் இருந்தான்.

“ஆனந்தி”

“உள்ளேன் சார்!” கீச்சுக் குரலில், நெற்றியில் பெரிதாய் திருநீறு பூசி மாநிறத்தில்…

“கருணாநிதி”

“உள்ளேன் சார்!” பெண் குரலாக இருந்தது.

“உன் பேர் கருணாநிதி]யா? பையன்னு நெனச்சனே!”

வகுப்பு கலகலவெனச் சிரித்தது. மெலிந்த பெண் வெட்கத்துடன் நின்றாள்.

“அவங்கப்பா ஆம்பிள புள்ள பொறக்கும்னு நெனச்சாராம் சார். பொம்பிள பிள்ள பொறந்ததும் அதே பேர வச்சிட்டாரு” என்றான் ஒரு சுட்டி மாணவன். வகுப்பு மீண்டும் கலகல.

“காயத்ரி!”

“உள்ளேன் சார்!” நின்று உட்கார்ந்தாள். பளிச்சென்று இருந்தாள். வட்டமான முகம். அதிலே அடக்கமான சாந்துப் பொட்டு. இரட்டைச் சடை. கண்களில் ஒரு புத்திசாலித்தனம். இங்கே இப்படி ஒரு பெண்ணா?

————-

காயத்திரியின் கையெழுத்து அவள் முகம் போலவே பளிச்சென்றிருந்தது. அவள் எழுதியிருந்த கட்டுரையில் கருத்துக்கள் கோவையாக இருந்தன. ஆனால் எழுத்துப் பிழைகள் சகிக்க முடியவில்லை. அந்த ஆண்டு யூபிஎஸ்ஆர் உட்காரவிருக்கும் அந்தப் பதினெட்டு பேரில் பத்துப் பேர் தேர்ச்சியடைந்தாலே பெரிய விசயம் என்று அந்த ஒரு வாரத்தில் அன்பரசனுக்குத் தெளிவாகிவிட்டது அதிலும் அவர்களுக்குப் பாடத்தை இன்னும் தீவிரப் படுத்தினால்தான் முடியும். மிகை நேரப் பாடம் நடத்த வேண்டும். இரண்டு பிள்ளைகள் பல “ஏ” வாங்கும் தரத்தில் இருந்தார்கள். ஒருத்தி காயத்ரி. மற்றவன் அம்பலவாணன்.

பிள்ளைகளுக்கு மாலையில் டியூசன் நடத்தும் விசயம் பற்றி ஒருநாள் இடைவேளை ஓய்வின் போது சில சக ஆசிரியர்களிடம் பேசினான். அநேகமாக அனைவருக்கும் ஆர்வம் இருந்தது. ஆனால் பிற்பகல் மாலை வேளைகளில் ஏதாவது ஒரு வெளிவேலை அவர்களுக்கு இருந்தது. ஓய்வில்லை என்றார்கள். “நம்ப குணாளன் போன வருசம் ஐந்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூசன் நடத்தி அப்புறம் விட்டுட்டார்! அவரக் கேட்டுப் பாருங்களேன்!” என்றார்கள்.

குணாளனைத் தேடிப்பிடித்து தன் விருப்பத்தைச் சொன்னான்.

“அதெல்லாம் இங்க காசு குடுத்து டியூசன் கத்துக் குடுக்க பெற்றோர்கள் தயாரா இருக்க மாட்டாங்க அன்பரசன்” என்றார் குணாளன்.

“காசு வேண்டாங்க சார். இலவசமாவே நடத்தலான்னுதான் இருக்கேன்!” என்றான்.

“அதுக்குக் கூட வரமாட்டாங்க. நான் முயற்சி பண்ணித் தோத்துப் போயிட்டேன். என் வீட்டிலியே வச்சி சொல்லிக் குடுத்துப் பாத்தேன். ஒண்ணு ரெண்டு வாரம் வந்தாங்க. அவ்வளவுதான்” என்றார்.

“அந்த பொண்ணு காயத்ரியும் பையன் அம்பலவாணனும் நல்ல திறமை உள்ள பிள்ளைங்க! டியூசன் கொடுத்தா பல “ஏ” வாங்கக் கூடியவங்கன்னு நெனைக்கிறேன்!” என்றான்.

“ஓ! ஆமா அந்தப் பொண்ணு. நல்ல சூட்டிகையான பொண்ணு. அவங்க அப்பன்தான் சரியில்ல. சரி முயற்சி பண்ணுங்க!” என்றார்.

“நீங்களும் கூட உதவி பண்ணினா…!”

“ஐயோ என்னால முடியாது அன்பரசன். எனக்கு சில பார்ட் டைம் வேலைகள் இருக்கு! என்ன விட்டுங்க!” என்றார்.

நல்ல வேளையாகத் தான் இன்னும் எந்த பகுதி நேர வேலையிலும் மாட்டிக் கொள்ளவில்லை. ஆகவே தானாவது இந்தப் பிள்ளைகளுக்கு கணக்கு, தமிழ் ஆகிய பாடங்களை நடத்தலாம் என முடிவு செய்தான். தலைமை ஆசிரியரிடம் சொன்னான்.

அவர் அவனைக் கொஞ்ச நேரம் வெறுமையாகப் பார்த்தார். அப்புறம் கேட்டார்: “ஏன் உங்களுக்கு இந்த ஆசை, அன்பு? இதிலெல்லாம் நன்மை வர்ரத விட பிரச்சினைகள்தான் அதிகம் வரும்கிறது என்னுடைய அனுபவம்.”

அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் அவரும் பல்வேறு வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டு பள்ளிக்கூடத்தை விட்டு மனத்தளவில் தூரமாக ஒதுங்கியிருக்கிறார் என்பது அன்பரசனுக்குத் தெரிந்த விசயம்தான்.

“நான் மாலை நேரங்கள்ள ஓய்வாத்தான் இருக்கிறேன். முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் சார்!” என்றான்.

அவர் ரொம்ப யோசித்து பிறகு “ரொம்ப ஆசப்பட்றிங்க, சரி! பிரச்னைகள் வராம பாத்துக்குங்க!” என்றார்.

“பள்ளிக்கூடத்திலேயே மாலை நேரத்திலேயே வச்சிக்கிலாமா சார்?”

“சரி” என்றார் நடேசன்.

வகுப்பில் அறிவித்து நாள் குறித்து முதல் நாள் டியூசனுக்கு வந்த போது ஆறு பேர்தான் வந்திருந்தார்கள். அம்பலவாணன் வந்திருந்தான். காயத்ரி வரவில்லை.

“ஏன் காயத்ரி வர்ல?” என்று அன்பரசன் மற்ற பையன்களிடம் விசாரித்தான்.

“தெரில சார். அவங்க அப்பா விடமாட்டார் சார்!” என்று பதில் வந்தது.

“ஏன் விடமாட்டார்?”

“தெரியாது சார்!” என்றார்கள்.

வகுப்பைத் தொடங்கினான். மாணவர்களுக்குத் தனித் தனிப் பயிற்சிகள் கொடுத்துப் பிழை திருத்தி சிரித்துப் பேசி உதவினான்.

மறுநாள் பிற்பகல் காயத்ரி வீட்டுக்குப் போனான். அவள் அப்பா ஒரு தொழிற்சாலையில் டெக்னசியன். சிப்டு வேலைக்காரர். நல்ல வேளையாக வீட்டில் இருந்தார்.

வீட்டில் வீடியோவில் ஏதோ தமிழ்ப்படம் ஓடிக் கொண்டிருந்தது. எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அன்பரசனைக் கண்டதும் அரைமனதோடு சத்தத்தைக் குறைத்து அவனுடன் பேசத் தயாரானார் அவர்.

“நான் ஆறாம் வகுப்பு பிள்ளைகளுக்கு டியூசன் ஆரம்பிச்சிருக்கங்க. இந்த வருசம் யூபிஎஸ்ஆர் பரிட்சையில அதிகமான பிள்ளைகளை நல்ல முறையில பாஸ் பண்ண வைக்கணும். அதுக்கு இவங்களுக்கு டியூசன் குடுத்தாதான் முடியும். காயத்ரி நல்லா படிக்குது. ட்யூசனுக்கு வந்தா நல்லா பாஸ் பண்ணும்” என்றான்.

காயத்ரியின் அப்பா கொஞ்சம் யோசித்தார். “ஆமா பல இடங்கள்ள டியூசன் குடுக்கிறாங்க. தெரியும். ஆனா நாங்க பொம்பிள பிள்ளய தனியா வெளிய அனுப்பிறதில்ல! அனுப்பினா தகராறாப் போகுது!” என்றார்.

“பள்ளிக்கூடப் பாடத்த மட்டும் நம்பியிருந்தா போதாது. என்கிட்ட நிறைய பயிற்சிப் புத்தகங்கள் இருக்கு. அத செய்யச் சொல்லித் திருத்திக் குடுத்தா முன்னேற்றம் இருக்கும்!”

“டியூசன் எங்க நடக்குது?” என்று கேட்டார் அவர்.

“பள்ளிக்கூடத்திலேயே! சாயந்தரத்தில!” என்றான்.

“எத்தன பிள்ளைங்க வர்ராங்க?”

இன்னைக்கு ஏழு பேர் வந்தாங்க. மற்ற பிள்ளைகள வரச் சொல்லி வற்புறுத்திக்கிட்டு இருக்கேன்!” “வேற யார் உங்களோட சொல்லிக் குடுக்கப் போறாங்க!”

“இப்ப நான் ஒருத்தன்தான். மற்ற ஆசிரியர்கள மெது மெதுவாத்தான் கேட்டுப் பாக்கணும்!” என்றார்.

“குணாளன் வாத்தியாரு சொல்லிக் கொடுக்கப் போறாரா?”

அவர் பெயர் அங்கு எழும்பியது அவனுக்குச் சற்று வியப்பாக இருந்தது. “இல்ல, நேரமில்லன்னு சொல்லிட்டாரு!”

யோசித்தார். “சரி போங்க! அனுப்பி வைக்கிறேன்!” என்றார்.

காயத்ரி உள்ளிருந்து நன்றியோடு எட்டிப் பார்த்தாள்.

—————-

டியூசன் வகுப்பு சத்தமில்லாமல் இருந்தது. மாணவர்கள் தலைகள் நிமிருவதும் குனிவதுமாக இருந்தன. அன்பரசன் கரும்பலகையில் எழுதியிருந்த கணக்குகளை நோட்டுப் புத்தகத்தில் பெயர்த்தெழுதி விடைதேடுவதில் அவர்கள் கவனம் முழுமையாக இருந்தது.

அன்பரசன் அந்த முகங்களை நோட்டமிட்டான். மாணவர்கள் தங்களை மறந்திருக்கும் இந்த நேரம்தான் அவர்களைக் கவனிப்பதற்குச் சரியான நேரம். வகுப்பிலிருந்த ஒன்பது பேரில் மூன்று பேரின் முகத்தில் குழப்பம்தான் மிகுதியாக இருந்தது. மூளையில் கணக்கின் நெளிவு சுளிவுகள் நுழையாமல் அவர்கள் தரை, கால், தாள் இவற்றை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூளையில் இருந்த வெறுமை முகத்தில் தெரிந்தது.

மற்ற மாணவர்களின் இமைகள் படபடத்துக் கொண்டிருந்தன. விழிகள் அலைந்தாலும் மூளையில் எண்களின் ஓட்டமும் ஒரு விடையை நோக்கி அவற்றை நகர்த்தும் தீவிர முயற்சியும் அவற்றில் தெரிந்தன.

காயத்ரி அப்படித்தான் கணக்கில் மூழ்கியிருந்தாள். அவள் இரட்டைச் சடைகளில் ஒன்று முது கிலிருந்து நகர்ந்து அடிக்கடி தோளில் சரிந்து கன்னத்தைத் தழுவி அவள் நோட்டுப் புத்தகத்தில் விழ தானியங்கியாக அவள் அதைப் பின்னால் வீசுவது அழகாக இருந்தது. பள்ளிக்கூடச் சீருடை இல்லாமல் வண்ணப் பாவாடை சட்டையில் இன்னும் அழகாக இருந்தாள். முகத்தின் பளிச்சென்ற நிறம்… கன்னத்தின் கதுப்புக்கள்… செதுக்கிய மூக்கு… அளவெடுத்துத் தீட்டிய அதரங்கள்… இத்தனை அழகு இந்தப் பெண்ணுக்கு எப்படி வந்தது?

இயற்கையாக அவள் மேல் ஆசை வந்தது. “சீ” என்று அடக்கினான். ஆனால் கண்கள் நகரவில்லை. ஆழ்ந்த கவனத்தில் இருந்தவள் சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். விழிகளை அம்புகள் என கவிஞர்கள் வருணித்தது அங்கு அவனுக்கு நிதர்சனமாக இருந்தது. அவன் விழிகளுக்குள் பாய்ந்து நெஞ்சில் சுளீரென்று குத்தி….

சில கணங்கள் ஆனாலும் யுகங்கள் போல் இருந்தன. கண்கள் மோதி கொக்கி போல் மாட்டிக்கொண்ட இந்த விபத்திலிருந்து யார் முதலில் பின்வாங்குவது என்ற போட்டியில் திகைத்திருந்து, அவன்தான் முதலில் தலை திருப்பினான். மீண்டும் அவள் தலை குனிந்த பின் ஒரு மெல்லிய புன்னகைக் கோடு அவள் இதழ்களில் தவழ்ந்திருந்தது. மீண்டும் ஒருமுறை மின்னல் போல் தலைநிமிர்ந்து அவனைப்பார்த்துக் குனிந்து விட்டாள். முதல் அம்பு பாய்ந்தது விபத்து என்றால் இந்த இரண்டாம் அம்பு குறிபார்த்து வீசியது போல் இருந்தது.

“செஞ்சிட்டேன் சார்!” என்றான் அம்பலவாணன். எழுந்து அவன் அருகில் போனான் அன்பரசன்.

———-

“டியூசன் ரொம்ப வேகமா நடக்குது போல இருக்கே!” என்றார் சுப்ரமணியம் என்ற சக ஆசிரியர். அது ஓய்வு நேரம். அருகில் உள்ள காப்பிக்கடையிலிருந்து காப்பியும் பலகாரமும் வரவழைத்து பருகிக் கொண்டிருந்தார்கள் ஆசிரியர்கள்.

“நடக்குது சார்! ஆனா பிள்ளைகள் கவனமா வர்ரதில்ல! ஒரு நாள் வந்தா நாலு நாள் வர்ரதில்ல!” என்றான் அன்பரசன்.

“காயத்ரி தொடர்ந்து வருதா?” என்று கேட்டார் சுப்ரமணியம்.

“பெரும்பாலும் வருது!”

“அப்புறம் மத்த பிள்ளைங்க வந்தா என்ன, வராட்டா என்ன!”

அன்பரசன் அவரை வியப்போடு பார்த்தான். “ஏன் சார் அப்படிச் சொல்றிங்க? காயத்ரியை விட மத்த பிள்ளைங்கதான் பலவீனமா இருக்காங்க! அவங்க தொடர்ந்து வர்ரதுதான் இன்னும் முக்கியம்!” என்றான்.

“என்ன முக்கியம் போங்க! காயத்ரி வந்தா வகுப்பு கலகலப்பா இருக்கும். இல்லைன்னா அதில சுவாரசயமே இருக்காதே!” என்றார் அந்த அறையிலிருந்த சக ஆசிரியை அம்பிகா.

அந்த விசாரிப்புக்கள், அதிலிருந்த குறும்புகள் அன்பரசனுக்கு விளங்காமலில்லை. இவர்களுக்கு பதில் சொல்லி வாயை அடக்க வேண்டும் என்று எண்ணினான்.

“காயத்ரி உண்மையிலேயே கெட்டிக்காரப் பொண்ணு. இந்தப் பள்ளிக்கூடத்தில யூபிஎஸ்ஆர்ல மூணு நாலு “ஏ” எடுக்கிற திறமை அந்தப் பிள்ளைக்கும் இந்த அம்பலவாணனுக்குந்தான் இருக்கு. அது க்காகத்தான் அவங்க மேல இத்தனை அக்கறை செலுத்துறேன் டீச்சர்” என்றான்.

“ஆமா, குணாளன் சாரும் அப்படித்தான் சொல்லிக்கிட்டிருந்தாரு. கடசியில…”

“கடசியில…?”

அவரவர்கள் வேலையைப் பார்த்தார்கள். யாரும் பதில் சொல்லவில்லை. சிலரின் முகங்களில் குறும்பான சிரிப்புகள் இருந்தன.

காயத்ரியும் அம்பலவாணனும் அசாதாரணமானப் புத்திசாலித் தனம் காட்டினார்கள். அம்பலவாணனின் கவனக் கூர்மை அன்பரசனையே வியப்பில் ஆழ்த்தியது. அவன் வகுப்புக்குத் தவறுவதில்லை. வந்தால் நேரத்தை வீணடிப்பதில்லை. கணக்கு செய்யப் புகுந்தால் சுற்றியுள்ள உலகம் அவனுக்கு மறந்து விடும். பக்கத்தில் யார் இருக்கிறார்கள் இல்லை என அவன் கண்டு கொள்வதில்லை. ஒரு பஞ்சு போல அறிவை விரைவாக உறிஞ்சிக் கொண்டான்.

காயத்ரி அப்படி இல்லை. பேச்சும் விளையாட்டுமாக இருந்தாள். அன்பரசனை அடிக்கடி பார்த்து கண் இமைகள் படபடத்தாள். அன்பரசன் அவள் கண்களை எவ்வளவுதான் தவிர்க்கப் பார்த்தாலும் அவள் கொக்கிகள் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தாள். முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் முயற்சி செய்தான். ஆனால் அது முடியவில்லை. அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் அது கனிந்து போயிற்று.

அவள் கணக்குகளைச் சரியாகப் போடுவதில்லை. அவள் மூளை முற்றாகப் பயன்படுத்தப் படுவதை ஏதோ கற்பனைகள் தடுத்துக் கொண்டிருந்தன. சேம இலைமீது தண்ணீர் ஊற்றியதைப் போல அவன் சொல்வதெல்லாம் அவளிடம் ஒட்டாமல் வழிந்து போய்க் கொண்டிருந்தது.

ஆனால் அடிக்கடி அவனிடம் வந்து சந்தேகம் கேட்டாள். சொல்லிக் கொடுத்ததையே திரும்பத் திரும்ப அவள் கேட்பது புரிந்தது. கேட்கும் போது பக்கத்தில் நின்று உரசினாள். அவனைப் பார்த்துச் சிரிப்பதும் தலை கவிழ்வதுமாக இருந்தாள்.

அன்று வகுப்பு முடியும் வேளையில் காயத்ரி அவன் கொடுத்திருந்த கணக்கை முடிக்காமல் இருந்தது சௌகரியமாகப் போனது. “காயத்ரி! இந்தக் கணக்க முடிச்சிட்டு வீட்டுக்குப் போ! மத்தவங்க போகலாம்!” என வகுப்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தான். மற்ற மாணவ மாணவிகள் போனதும் வகுப்பு “ஓ”வென்றானது.

காயத்திரி ஒரு சிருங்காரப் புன்னகையுடன் சந்தோசமாக உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் போய்விட்ட பின் அன்பரசனுடன் தனியாக இருப்பதை அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததைப் போல இருந்தது. கணக்குப் போடுவது போல பாவனை காட்டிக்கொண்டு மனத்தை எங்கோ ஓடவிட்டுக் கொண்டிருந்தாள்.

அன்பரசன் அவள் அருகே போனான். பேசினான்: “காயத்ரி! கணக்குப் போட்டது போதும். புத்தகத்தை எடுத்து வை! உங்கிட்ட கொஞ்சம் நான் பேசணும்!” என்றான். சிரிப்பு மாறாமல் புத்தகத்தை எடுத்து வைத்தாள். ஒரு காதல் உரையாடலுக்குத் தயாரானவள் போல் இருந்தாள்.

“காயத்ரி! இப்பல்லாம் உன் கவனம் படிப்பில இருக்கிறதா தெரியில. கவனம் சிதறுது. கற்பனையிலேயே இருக்கிற. இதுக்கு என்ன காரணம்?”

“உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!” என்பது போலத் தலை குனிந்து அர்த்தத்தோடு இமைகள் படபடக்கச் சிரித்தாள்.

“இதப் பாரு. உன் மனசில நீ நெனச்சிருக்கிறது என்னன்னு எனக்குக் கொஞ்சம் தெரியுது. ஆனா அந்த அசிங்கத்துக்கெல்லாம் நான் ஆளில்ல. எனக்கு உன் மாதிரி உன் வயசில ஒரு தங்கச்சி இருக்கு. அதுவும் நீயும் எனக்கு ஒண்ணுதான்!”

காயத்ரி நிமிர்ந்து பார்த்தாள். புன்னகை மறைந்து விட்டது. தட்டுத் தடுமாறிச் சொன்னாள்: “சார் நான் உங்கள…”

“காதலிக்கிறேன்னு சினிமா வசனம் பேசப் போறியா? தோ பாரு! இந்த மாதிரி நெனப்பெல்லாம் விட்ரு! இதெல்லாம் விடாம சினிமாவும் வீடியோவும் பாக்கிறதினால வர்ர வீண் நினைப்பு. வாழ்க்கைக்கு உதவாது. விட்டுத் தொலை! படிப்பில கவனத்த செலுத்து! யூபிஎஸ்ஆர் நல்ல முறையில பாஸ் பண்றதப் பார்!” என்றான்.

“சார்! என் மனசுக்குள்ள நான் உங்களத்தான்…!” என்று இழுத்தாள்.

இந்த எண்ணம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று தெரிந்தது. இந்தப் பருவத்தில் இந்தக் காதல் மண்ணாங்கட்டி ஆசைகள் ஒட்டுப்புல்லைப் போல பரபரவென்று மனதில் ஒட்டிக் கொள்ளுகின்றன. யார் எவர் என்பது இரண்டாம் பட்சமாக இருக்கிறது. நெருங்குவதும் உரசுவதும் இருந்தால் போதும் பற்றிக் கொள்ள. தன் மனதிலும் கூடத்தான் பற்றுகிறது. ஆனால் தனக்கு அதைப் பிய்த்து எரியும் பக்குவம் இருக்கிறது. அவள் மனதிலிருந்தும் அதைப் பிய்த்து எரிய வேண்டும். மென்மையாக அதைச் செய்ய முடியாவிட்டால் முரட்டுத் தனமாகவாவது செய்யத்தான் வேண்டும். குரலைக் கடுமையாக்கிக் கொண்டு பேசினான். “இதப்பாரு காயத்ரி! நான் கண்டிப்பா சொல்றேன். இதெல்லாம் விட்ரு! இந்த நெனப்பு ஒன் மனசில தொடர்ந்து இருந்து, நீ இப்படியே நடந்து க்கிட்டிருந்தா, என்னப் பாத்து அடிக்கடி சிரிக்கிறது, கிட்ட வந்து உரசிறது இப்படி வேலயெல்லாம் வச்சிக்கிட்டினா, நானே உங்கப்பாகிட்ட நேரா வந்து நீ செய்றத சொல்லிடுவேன். டுயூசன விட்டு நிப்பாட்டிடுங்கன்னு நானே சொல்லிடுவேன்”

அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள். தலைகுனிந்தாள். “மன்னிச்சிடுங்க சார்! இனிமே அப்படி நடந்து க்க மாட்டேன். தயவு செய்து எங்க அப்பாகிட்ட இதச் சொல்லிடாதிங்க! அவரு… அவரு, ரொம்பக் கோவக்காரரு. போட்டு அடிஅடின்னு அடிச்சிடுவாரு!” அவள் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.

அன்பரசனுக்குப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “இவள் கதுப்பான கன்னங்களைக் கிள்ளிப் பார்க்க வேண்டும் என்று முதலில் மனதுக்குள் காமுகித்தேன். இப்போது அவளை வருத்தி அழவைக்கும் கொடுமைக்காரனாகிவிட்டேன்” என்று மனதுக்குள் உருகினான்.

ஆதரவாக அவள் இரண்டு கைகளையும் தன் கைகளில் பற்றினான். “அழுவாத காயத்ரி! உன் நன்மைக்குத்தான் சொல்றேன். உன் படிப்பு முடிஞ்சி உனக்கு உரிய பருவம் வரும்போது உன் அழகுக்கு யாராவது ஒரு அழகான அறிவான இந்தத் தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியர் வேலயவிட உயர்வான வேல செய்யக்கூடிய உன் வயசுக்கொத்த ஒரு காதலன் உனக்கு வாய்ப்பான். வாத்தியார, வாத்தியாரா நினை. காதலனா நினச்சினா அவனும் கெட்டுப் போவான். நீயும் கெட்டுப் போவ!” அவள் கண்ணீரைத் தன் கைகளால் துடைத்தான். அவள் தோள்களை ஆதரவாகப் பிடித்துவிட்டான். அவள் புத்ததகங்களை அள்ளிக்கொண்டு வகுப்பறை வாசலுக்குப் போய் ஒரு முறை அவனைத் திரும்பப் பார்த்துவிட்டு ஓடினாள்.

அவள் போனபின் கொஞ்ச நேரம் தனிமையில் உட்கார்ந்திருந்தான் அன்பரசன். ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் மனதில் அரும்புகின்ற காதல் ஒரு உன்னதமான உணர்வு. மனதை பதனப்படுத்துகிற, மேகங்களூடே பறக்க வைக்கிற, பிற வாழ்க்கைக் கவலைகளை மறைத்து மயக்கப் படுத்துகிற உணர்வு. அந்த வயதுக்கே உரியது. இன்னமும் காமம் வந்து கலக்காத மாசு படாத வானவில் போன்ற உணர்வு. அவனும் அனுபவித்திருக்கிறான். அவள் மனதிலிருந்து அதை முரட்டுத்தனமாகப் பிய்த்து எறிந்து விட்டோம் என்ற சோகம் மனதில் வந்து தங்கியது. தானே இப்படிப் பிழியப்பட்டால் இந்தப் பெண் இன்னும் எவ்வளவு மனசுக்குள் கசக்கப்பட்டிருப்பாள்?

ஏன் இயற்கை இப்படி விளையாடுகிறது? ஏன் படிப்பை முற்றாகக் கிரகித்துக் கொள்ள வேண்டிய அதே பதின்ம வயதில் இந்தக் காதல் உணர்வுகளையும் அரும்ப வைக்க வேண்டும்? வாழ்க்கையின் உன்னதமான லட்சியத்தைப் நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இளவயதில் ஏன் கிளைப் பாதைகளுக்கு இழுக்க வைத்து அலைக்கழிக்கிறது மனசு? “இது வேண்டாம். இது போலி. இது பொய். இது உனக்கு உதவாதது. இது வாழ்க்கையை வீணாக்கும் வேலை” என்று எப்படி அவளுக்கு உணர்த்துவது? உணர்ந்திருப்பாளா? அல்லது தான் கட்டிய அழகிய மலர் மாலைகளைப் பிய்த்துப் போட்ட குரங்கு எனத் தன்னை நினைப்பாளா?

வகுப்பறைக் கதவைப் பூட்டிக் கொண்டு வெளியேறிய போது இப்படி இன்னொரு அழகான பெண் தன்னை விரும்பிக் காதலிக்கும் வாய்ப்பு இனிமேல் தனக்கு வாய்க்கப் போவதில்லை என்ற ஏக்கமே மனதில் இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *