கத்தரிக் குழம்பும் கருத்து முரண்பாடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 6, 2013
பார்வையிட்டோர்: 10,011 
 

நான் கனடாவுக்கு வந்த புதுசு.

அவரும் நானும் தற்செயலாகவே அறைஞர்கள் ஆனோம்.

அவர் என்னைவிட ஒரு வருடம் முந்திக் கனடாவுக்குள் வந்து தரைதட்டியவர். அந்தத் தராதரம் மிக்க தகுதியின் அடிப்படையில் – அவரது பரிபாஷையில் – அவர் ஒரு பழைய காய்.

கனடா பற்றிய கற்கைநெறியில் அவரோடு தங்கி வாழ்ந்த ஆரம்பகால வாழ்க்கை எனக்கு ஒருவகையில் குருகுல வாசந்தான்! கண்ணைக் கட்டிக் கனடாவுக்குள் விடப்பட்டது போன்ற எனது பரிதாபகரமான அந்த நாட்களில் அவரது ஆலோசனைகளும் புத்திமதிகளும் – ஏன் குயுக்திகளும்கூட – எனது காதுக்குள் வேதமாய் ஓதப்பட்டன.

ஒரு கொஞ்ச நேரம் பேசக் கிடைத்தால் போதும், ’ஐசே’ என்ற முகமனுடன் உபநியாசம் ஆரம்பமாகும். கனடிய அரசு, கனடிய மக்கள், கலை கலாசாரம், வாழ்க்கை முறை இத்தியாதிகளுடன் இந்த நாட்டு இமிகிறேஷன், வெல்ஃபெயர் சட்ட திட்ட வளைவு சுளிவுகள் யாவும் அந்த மனிதருக்கு அத்துப்படி! உலக நடப்புகளையெல்லாம் உப்புப் புளியிட்டுச் சுவைபடச் சொல்வார்.

’உலகம் ஒரு பல்கலைக் கழகம். உலக அனுபவம்தான் ஐசே, பட்டப்படிப்பு.’ இதை ஒரு நாளில் குறைந்தது ஐந்து தடவையாவது அடித்துச் சொல்லி, என்னை அடிக்கடி பயமுறுத்துவார்.

பேசப்படாத வார்த்தைகளின் பெருமதி கருதி, பொதுவாக நான் கடைப்பிடிக்கும் மௌனத்தை, பெருமாள் கோவில் கால்நடையாரின் குணாம்சமாக அவர் கணித்துக்கொண்டாரோ என்னவோ, இரண்டொரு தினங்களில் அவருக்கு என்னை வெகுவாகப் பிடித்துக்கொண்டதாம்!

தனக்கு உகந்த சக தோழனாக என்னை அங்கீகரித்து அந்த அறையை நான் தொடர்ந்தும் தன்னோடு பகிர்ந்துகொள்வதில் தனக்குப் பூரண சம்மதம் என்று திடீரென ஒருநாள் திருவாய் மலர்ந்தருளினார். தோழமை என்றவர் சொல்லிய சொல்லில் நான் புல்லரித்துப் போனேன்!

அறையில் பாவனைப் பொருட்கள் ’எனது – அவரது’ என்ற பாகுபாட்டை இழந்து பொதுவுடமை ஆயின. பூட்டுத் திறப்புக் கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, எந்நேரமும் திறந்தபடியே இருந்த ஒருவரது பெட்டிக்குள் மற்றவர் கேட்டுக் கேள்வி இல்லாமல் கைவைக்கவும், வேண்டிய நேரங்களில் காசு பணங்களைக்கூட எடுக்கவும், பின்னர் திருப்பிக் கொடுக்கவும் பழகிக்கொண்டோம். செலவு சித்தாயங்கள் சமமாகப் பகிந்துகொள்ளப்பட்டன. சமையல் சாப்பாடு, கூட்டித் துடைப்பு யாவுமே அந்த ’சமறி’ வாழ்வில் சம கடப்பாடுகளாயின.

ஓய்வு நேரங்களில் வீட்டுக் காரியங்களை இருவரும் சேர்ந்து செய்தெடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்களில், கூட்டு வாழ்க்கை, ஒற்றுமை, ஒருமைப்பாடு, புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுகொடுப்பு இன்னோரன்ன தலையைச் சுற்றும் ‘இன்ரலெக்சுவல்’ சமாச்சாரங்களில் எனக்கு இடையறாத பிரசங்கங்கள்!

இவைபற்றிய ’பிரக்ஞை’ இல்லாமல் போனதால்தான் எங்களுக்கு இந்த இழிநிலை என்று ஏகப்பட்ட உயிருள்ள – உயிரற்ற உதாரணங்கள் எனது உச்சந்தலையில் அடித்து இறுக்கப்படும்.
சுவாரஷ்யம் வேண்டி, சில வேளைகளில் வாதப் பிரதிவாதங்களை நானும் மெதுவாகக் கிளறிவிடுவதும் உண்டு. ஆனாலும் உலகானுபவங்களில் ஊறித் திளைத்துப் பதப்படுத்தப்பட்ட அவருடனான எல்லாவிதப் பொதுவிவகாரக் கருத்துப் பரிமாறல்களும் – கருத்து மோதல்களும் ஈற்றில் அவருக்குச் சார்பாக ‘சுபம்’ என்ற சுலோகத்துடன் இனிதே நிறைவுறுதல்தான் வழக்கம்!

ஒருசில மாதங்களின் பின்னர் ஒருநாள் இது நடந்தது.

அன்று மதிய உணவு தயாரிப்பில் இருவரும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, கத்தரிக்காயைக் கழுவி எடுத்து, நீள்பக்கமாக நான்காகப் பிளந்து, பின்னர் குறுக்காகச் சுமார் இரண்டங்குல நீளத் துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தேன். வழமையான தனி ஆவர்த்தன வாசிப்புடன் பருப்பைக் கழுவிப் பாத்திரத்தில் போட்டுவிட்டு அடுப்பில் வைக்கப் போனவர், நான் கத்தரிக்காயை வெட்டிய விதத்தை எதேச்சையாகப் பார்த்துவிட்டார்.
கத்தரிக்காயை அந்த விதமாக வெட்டக்கூடாதென்றும், கனடிய டொலர் நாணயக் குற்றியாட்டம் வட்டம் வட்டமாக வெட்ட வேண்டும் என்றும் நெறிப்படுத்தினார்.

‘பாதிக்குமேல் வெட்டியாயிற்று. இன்றைக்கு இந்த மாதிரி வெட்டிக் கறி வைப்போம்.’ என்று முதன் முறையாக அவரை மறுதலித்த நான், ‘நீளக் கீலங்களாக வெட்டிக் கறிவைத்தாலும் நன்றாக இருக்குமே’ என்று சொல்லிக்கொண்டு கத்தரிக்காயைக் கத்திக்கு இரையாக்கினேன்.

‘ஐசே, அது சாவகச்சேரியாற்றை முறை. அது குழம்புக்கு நல்லாயில்லை. பண்டத்தரிப்பு முறைதான் குழம்புக்கு மணியாயிருக்கும் ……..’ என்று ஆரம்பித்தவர் ஒரு நீண்ட விலாசமான நிரவலை முழங்கி முடிக்கவும், நான் முழுக் கத்தரிக்காயையும் வெட்டிச் சட்டியிலிட்டு அடுப்பில் ஏற்றவும், நேரம் சரியாக இருந்தது. என் எண்ணப்படி கத்தரி அடுப்பேறி, ஒருபடி சமையலும் முடிந்தது.

ஸ்நானம், போசனம், சயனம் என்ற வரிசைக் கிரமத்திலான அந்நாளைய முக்கிருத்திய வாழ்க்கையில், ஸ்நானம் அவ்வப்போது ஓரவஞ்சனைக்கு உட்படுத்தப்படுவதுண்டு. அன்றும் ஸ்நானத்துக்கு அதே கதிதான்.

இருவரும் மதிய உணவைக் கோப்பையில் போட்டு எடுத்துக்கொண்டு சாப்பாட்டு மேசைக்கு வந்து சாபிட ஆரம்பித்தபோதுதான் அவதானித்தேன், அவரது கோப்பையில் கத்தரிக் குழம்பைக் காணவில்லை!

சாப்பாட்டை முடித்துக்கொண்டு ஒரு முக்கிய அலுவலாக வெளியேபோய், இரவு எட்டு மணியளவில் நான் அறைக்குத் திரும்பியபோது, அவர் இராச் சாப்பாட்டுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார்.

அவருடன் சேர்ந்துகொள்ளவென அவசர அவசரமாக உடைகளை மாற்றிக்கொண்டிருந்த எனது கண்களுக்குள் அகஸ்மாத்தாய் அவரது சூட்கேசுப் பெட்டி அகப்பட்டது.

பெட்டி ஒரு பெரிய மாங்காய்ப் பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது!

– நான்காவது பரிமாணம், 10 – 1092

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *