அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 4,778 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கார்த்தி, உன் ஸ்டோரிஸ்க்கு ஒரு கேரக்டரா நினைச்சு, உனக்குத் தேவையான வசனங்களை பிராக்டிஸ் பண்ணத்தான் என்கிட்ட பழகுறியா?”

அம்மு இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டதற்கான காரணம், நான் எழுதிய கீழே இருக்கும் இரண்டு வரிக்கதை தான்.

– அன்பாய் இருக்கிறாய் பயமாயிருக்கிறது, என்றதற்கு அம்முவின் பதில் பயமாயிருக்கிறது, அதனால் அன்பாய் இருக்கிறேன் –

அவள் கேட்டதிலும் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. புதினங்களிலும் திரைகளிலும் தெரிந்த, நாயகி பிம்பங்களைத் நிஜத்தில் தேடி அலைந்த நான், ஒரு கட்டத்தில், நான் படைக்கும் பாத்திரங்களுக்காக, பிம்பங்களையும், குணங்களையும் தேடிய அலைய ஆரம்பித்தேன். இவற்றில் சிக்கியது முன்னாள் காதலிகளும் நெருங்கிய நண்பர்களுமே !! ரத்தமும் நகமும் சதையுமாய் சக மனிதர்களைப் பார்க்கும் காலம் மாறி, எல்லாவற்றையும் கதாபத்திரமாய் பார்ப்பது ஒரு சினிமாவை வெகு அருகில் இருந்து பார்ப்பது போல இருக்கின்றது. பிடித்திருக்கவும் செய்கின்றது.

அம்மு என் மேல் வைத்திருக்கும் பாசத்தை நான் ரசிக்கின்றேன், நேசிக்கின்றேன்… தேவையான பொழுது பட்டும் படாமலும் திருப்பியும் தருகின்றேன், ஆனாலும் அவளின் அன்பு , பயத்தையும் ஆரம்பத்தில் இருந்து தந்து கொண்டிக்கின்றது… காரணம் அவளல்ல, அவளின் சாயலில் என் வாழ்க்கையில் சில காலம் தென்றலாய் வீசி, பின் புயலாய் கரையைக் கடந்தவர்களால்தான்.

என் பயத்தைப் பற்றி அவளிடம் சொன்னதற்கு,

“கார்த்தி, உன்னிடம் பாசமா இருக்கிறப்ப, என்னோட துக்கம், கவலைகள், இன்செக்யூர்ட் ஃபீல் எதுவுமே எனக்கு தெரியறதில்லை, ஒரு வேளை, இந்த பாதுகாப்பு உணர்வு தொடர்ந்து வேணுங்கிறதனாலத்தான் அன்பா இருக்கேன்னு நினைக்கிறேன்”

புதுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் வரும் பெண்கள், முந்தைய உணர்வுகளை அடித்து நொறுக்கி விடுவார்கள். அதில் பழைய மகிழ்ச்சியான தருணங்களும் அடங்கி விடுகின்றன என்ற வருத்தம் இருந்தாலும், புதியக் கோப்பைகளையும் பிடிக்கத்தான் செய்கின்றன. எத்தனை புதுக்கோப்பைகள் வந்தாலும், அவற்றிற்கு எல்லாம் நான் வைக்கும் பெயர், அம்மு.

காமம் மட்டும் நிரம்பி வழிந்த என் மனம், அழுகிப்போகும் முன்னர், காமத்தை பின் தள்ளிவிட்டு, வெறும் சாயலினால் மட்டும் அல்லாமல், தன் பெண்மையாலும் என்னை ஆட்கொண்டதால் அம்முவை எனக்குப் பிடிக்கும்.

அம்முவும் நானும் எப்படி சந்தித்துக்கொண்டோம், எப்படி அறிமுகமானோம் என்பதையும் சொல்ல விருப்பம்தான், ஆனால் கதையின் நீளம் அதிகமாகிவிடும். அவற்றை எல்லாம் சிலக் குறிப்புகளாக ஆங்காங்கே எழுதிவைத்திருக்கின்றேன். கூகுள் போன்ற ஏதாவது ஒரு இணையத் தேடுபொறியில் “அம்மு + கார்த்தி” எனப் போட்டு சலித்தீர்கள் என்றால் எங்கேயாவது சிக்கும்.

தூக்கம் சுகம் தான், விடியலில் எழுவது கூட சுகம் தான்… அதைவிட சுகம், தூங்கியும் தூங்காமலும், எழும் முன் இருக்கும் ஓர் அல்லாடல் … அவ்வித அல்லாடலை அவள் உணர்வதை தெளிவாக அவளின் பேச்சுக்கள் காட்டிக்கொடுத்து விடுகின்றன. ஒரு கட்டத்திற்குப்பின் பெண்களுக்குப் பூடகமாக பேசத் தெரியாது.

“கார்த்தி, இது நல்லா இருக்கா” தான் புதிதாக அணிந்து வந்திருந்த சுடிதாரைக் காட்டி கேட்டாள்.

“இவ்வளவு நேரமும், சுடிதாருடன் உன்னையும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்”

“அப்புறம், ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொன்னாத்தான் என்ன?”

“பூக்களை ரசித்துக்கொண்டிருக்கிறோம் என்று பூக்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”

உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமகும். வாழ்க்கையே ஓர் உருவகம் தானே, உணர்வுகளை உருவகங்களாக நான் சொல்லுவதை ரசிப்பாள்.

ஒரு நாள் “கார்த்தி, நாளைக்கு உன்னிடம் பேச வேண்டும் ” என்றாள். தினமும் தானே பேசுகின்றோம்!!! பேசாப்பொருளை பேசத் துணியப் போகிறாள் எனப் புரிந்தது.

மறுநாள் படபடப்பாய் இருந்தாள். மதியத்தில் இருந்து மாலை வரை ம்ம், ம்ஹூம் என்பதைத் தவிர வேறு எதுவும் பேச வில்லை. நீல நிறத்தில் எனக்கு ஒர் சட்டை வாங்கிக் கொடுத்தாள். “இந்த ஷர்ட் உனக்கு வாங்கித்தரத்தான் கூப்பிட்டேன்”

வீட்டிற்குப்போனதும் “நீ சொல்வதால் மட்டும் பொய் கூட கவிதையாகின்றது” என ஒரு குறுந்தகவல் அனுப்பி வைத்தேன். பதில் வரவில்லை.

“நீ பேச மறந்த, பேசாப்பொருளை நானே நாளை பேசுகின்றேன்” எனத் திரும்ப மற்றொரு குறுந்தகவல் அனுப்பினேன். இதற்கும் பதில் வரவில்லை.

2003, 2006, 2008 என மூன்று முறை பயிற்சி இருந்தாலும், கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. கண்ணாடி முன் நின்று, பேசிப்பார்த்துக் கொண்டேன். தமிழில் சொல்லலாமா !!! ஆங்கிலத்தில்…. பிரெஞ்சில் சொன்னால், கொஞ்சம் கவர்ச்சியாக இருக்குமே !!!

வழக்கமான இடத்தில் சந்தித்தோம். நேற்றை விட இன்று அழகாக இருந்தாள். நாளை இதைவிடவும் அழகாக இருப்பாள். 99 ஓட்டங்கள் திருத்தமாக ஆடி எடுத்திருந்தாலும், அடுத்த ஓட்டத்தை எடுக்கும் பதட்டத்தில் ஆட்டமிழப்பதைப்போல, யோசித்து வைத்திருந்ததை சொல்ல எத்தனிக்கையில், எனக்கான தேநீர், அவளின் கைபேசியில் தவறிக் கொட்டியது.

“உன் குரலில் இதுநாள் வரை
குளித்துக் கொண்டிருந்த என் கைபேசி
இன்று தேநீராலும் குளித்தது”

என் வருத்தத்தையும், பதட்டத்தையும் தணிக்க அவள் சொன்ன மேற்சொன்ன கவிதையைத் தவிர, வேறு எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த நாளும், அதற்கடுத்த நாளும் என்ன நினைத்தோமோ அதை மட்டும் விடுத்து, ஏனைய அனைத்து விசயங்களையும் பேசிக்கொண்டோம்… இந்தத் தென்றல் தீண்டியதா, இல்லை புயலாய் கரையைக் கடந்ததா, சூறாவளியாய் சுழற்றி அடித்ததா என்பதை ஆறு மாதங்களோ அல்லது ஓராண்டோ கழித்து, ‘அம்மு+ கார்த்தி ” என கூகுளில் போட்டுத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள். சிறுகதையாகவோ அல்லது தொடர்கதையாகவோ நான் எழுதி வைக்கலாம்.

அது வரை ஒவ்வொரு தினமும் மதிப்புயரும், காக்க வைக்கப்பட்ட வைனைப்போல நானும் அம்முவும் பேசாப்பொருளை பேசாமலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்…

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *