கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 506 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பந்தம் – தொந்தம்- உறவு எல்லாம் மாயையினால் விளைபவை. மாயை நீங்கினாற்றான் உண்மையின் உண்மைச் சொரூபத்தைத் தரிசிக்கலாம்….!’ 

அத்தியந்த இரத்த பாசமே நிச்சயமானது எனத் தந்தையும் மகனும் நம்பினார்கள். 

‘பந்தம் – தொந்தம்-உறவு எல்லாம் மாயையினால் விளைபவை. மாயை நீங்கினாற்றான் உண்மையில் உண்மைச் சொரூபத்தைத் தரிசிக்கலாம்!’ என்றார் சந்நியாசி. 

‘சொந்த உறவுகள் எதுவுமற்ற தேசாந்தரியாக ஊர் சுற்றும் சந்நியாசிகள் மாயை என வறட்டுத் தத்துவம் பேசலாம். நான் தந்தை. இவன் என் மகன்-இருவருக்கு மிடையில் இரத்த உறவு இருக்கிறது. எனவே, இந்தத் தொந்தத்தில் விளையும் பாசம் நிச்சயமானது….’ என்றான் தந்தை. 

*நிச்சயம் என அடித்துப் பேசுவதும் மாயையைச் சார்ந்ததே. மனிதனின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப மாயையின் தோற்றங்களும் மாறுபடுகின்றன….’ என்றார் சந்நியாசி. 

‘ஊர்மனைக்குட் புகுந்து, இல்லற சுகம் மாத்துவோர் மனங்களில், ‘சஞ்சலத்தையும் பேதலிப்பையும் ஏற்படுத்து வதற்காக மாயை என்ற சொல்லை பூச்சாண்டியாக உபயோகிக்கின்றீர். மாயை என நீர் கருதுபவற்றைத் திருட்டாந்தமாக விளக்காவிட்டால், உம்மை….” என்று தந்தை தோலோ தோலென உதடுகளைக் கடித்தான். 

‘விளக்கம்!… திருட்டாந்தம்!….அதையும் மனிதன் பக்குவ நிலையில் உணர்தல் வேண்டும். எதற்கும் வாருங்கள். சற்று தூரம் வரை நடந்து வரலாம்….’ எனச் சந்நியாசி அழைத்தார். மூவரும் புறப்பட்டார்கள். 

வழியிற் கடைத்தெரு. அங்கு ஒரு பொம்மைக்கடை.. பலவகைப் பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மகனின் கவனம் குறிப்பிட்ட பொம்மை ஒன்றிலே நிலைத்தது. ‘அப்பா, அதோ அந்தப் பாம்பை வாங்கித் தா’ என மகன் கூறினான். 

‘பாம்பா?….அது பொம்மையடா!’ எனக் கூறித் தந்தை சிரித்தான். சந்நியாசியும் சிரித்தான். 

இரவாகியது. சனசஞ்சாரமற்ற வழிப்பாட்டில் நடக்கலாயினர். 

திடீரென்று, ‘ஐயோ பாம்பு!’ என்று தந்தை கத்தினார். 

‘பாம்பா? இது தாம்பு!’ எனக் கீழே கிடந்த கயிற்றுத் துண்டை எடுத்து எறிந்து சந்நியாசி சிரித்தார். மகனும் சிரித்தான். 

நடையில் மேலுந்தூரம் நகர்ந்ததும், பாம்புப் புற்று ஒன்று தெரிந்தது. புற்றின் நுழைவாயில்களிலே உழவன் ஒருவன் பாலூற்றி, பூஜை செய்து கொண்டிருந்தான். 

அப்பொழுது பாம்பொன்று நெளிந்து, படம் எடுத்து அடியபடி புற்றுக்கு வெளியே லாவகமாக வந்தது. 

‘பாம்பு! பாம்பு!’ எனத் தந்தையும் மகனும் கத்தினார்கள். 

‘உஸ்… நமது குலதெய்வம் நாகதம்பிரானைக் குழப்பாதீர்கள். அவர் இப்பொழுதுதான் பூஜையிலே பக்குவமாகக் கலக்கின்றார்….’ என்றான் குடியானவன். 

‘பாம்பு கடவுளா?’ எனத் தந்தையும் மகனும் கேட்டார்கள். 

‘வயல் வெளிகளிலே நாங்கள் பாடுபட்டுழைக்கின்றோம். பூச்சி புழுக்கள் நமது பயனை அழிக்க வருகின்றன. அந்தப் பூச்சிகளை அழித்து, நமது பயன் முழுமையாகக் கிடைக்கும் வகையில் காவல் செய்யும் பாம்பு தெய்வமில்லையா?’ என உழவன் பக்திப் பரவசத்துடன் கூறினான். 

சந்நியாசி சிரித்தார். தந்தையும் மகனும் எதுவும் புரியாமல் விழித்தார்கள். 

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *