கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 609 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘அசைவுள்ள சரமும், அசைவில்லாத அசரமும் சேர்ந்ததுதான் இவ்வுலகம். அதுவே சராசரம்!’

அங்கே மந்தை மேய்ந்து கொண்டிருந்தது. தன் பாதுகாப்பிலுள்ள அவற்றைப் போஷிப்பதான திருப்தி யாதவப் பயல் 

கண்ணனுக்கு ஏற்பட்டது. மரத்தின் கிளையிலே தாவி அமர்ந்து, குழலிசை பொழிந்து சுகிக்க லானான். 

குறவனாம் சிவன் அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவனுடைய கையிலே அன்றைய வேட்டைத் தேட்டமாம் முயல் ஒன்று இருந்தது. அதன் மேனியிலே சிந்திக்கிடந்த உதிரம் கண்ணனுக்குக் கொலைச் செயலை ஞாபகப்படுத்தியது. கொலைத் தொழிலால் உயிர்வாழும் அக்குறவன்மீது யாதவ னுக்கு அசூசை மிகுந்தது. 

‘குறவா! நீ புல்லியன். கொலை அதர்மமானது. பாவம். அந்த முயலை நீ கொல்வதற்கு, அது உனக்குச் செயத தீங்கென்ன?’ 

‘பசித்த வயிற்றுக்கு உணவிடுவது தர்மம். எனக்கு உணவாக இன்று இந்த முயல்தான் கிடைத்தது. இதில் எங்கே வந்து குதித்தது அதர்மம்?’… எனச் சிவன் தன் கட்சியை விளக்கினான். 

‘தர்மா அதர்மங்கள் இருக்கட்டும். ஓர் உயிரைச் சித்திர வதை செய்திருக்கின்றாயே. அவ்வமயம் ஓர் உயிர் அல்லற் படுவதைப் பார்க்க இன்பமாகவா இருந்தது? நீ துஷ்டன்; கொடூரன்’ எனக் கண்ணன் குறிக்கிட்டான். 

சிவனின் சினம் உருத்திரா தாண்டவமாடிற்று. 

‘போதும், இடையனே! நீ அமர்த்திருக்கும் இந்த மரத்தைப் பார். பல திசைகளும் கிளை பரப்பி, விண்ணோக்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பதான சோபிதத்திற் காட்சி தந்தது. வேட்டைக்குச் செல்லும் வழியில், ஒரு கணம் தரித்து, இதன் கவினைச் சுவைத்தேன். இந்த மரம் உனக்குச் செய்த குற்றம் என்ன? இரு பாரிய கிளைகளை முறித்து, உன் ஆடுகள் தழைகள் மேய்வதற்கு வசதி செய்து கொடுத்திருக் கின்றாய். கிளைகளின் மேல் பகுதிகள் முற்றாக மரணித்தும், கீழ்ப் பகுதிகள் இன்னமும் மரணாவஸ்தையிலே இன்னலுற்றுக் கொண்டிருக்கின்றன. அணு அணுவாகக் கொல்லும் இதைப் பார்க்கிலும் ஒரே அடியில் முயலை வீழ்த்துவது சித்திரைவதையாகி விடுமா?’ எனச் சிவன் ஆத்திரத்தை ஆலகாலமாகக் கக்கினான். 

கிளையிலிருந்து கீழே குதித்த கண்ணன், ‘மரம் அசரம்….’ என வார்த்தைகளைச் சப்பி உச்சரித்து இழுத்தான். 

‘அசைவுள்ள சரமும், அசைவில்லாத அசரமும் சேர்ந்தது தான் இவ்வுலகம். அதுவே சராசரம்!’ எனக்கூறிய சிவனின் கண்களில் பிறிதொரு வேட்டை தென்படவே, அதனைத் துரத்தத் தொடங்கினான். 

கண்ணனின் உள்ளத்திலே குற்ற உணர்வொன்று பல திசையும் கிளை பரப்பிச் சடைத்து வளரலாயிற்று!

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *