தனக்குப்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் சம வயதுள்ள மயிலைக்காளை மாட்டிற்கு முதலாளி போட்ட சோளத்தட்டை முதலில் இழுத்துத்தின்று விட்டு பின் தனக்குப்போட்ட தட்டை தின்றது செவலைக்காளை.
செவலைக்காளை கொஞ்சம் வாய்கடுசு. மயிலை ஒரு புடி தின்பதற்கு முன் இரண்டு புடிகளை நொறுக்கித்தள்ளி விடும். தாளியில் புண்ணாக்குத்தண்ணீரை குடிக்கும் போது கூட எடுத்தவுடன் மேலிருந்து குடிக்காமல் மூச்சடக்கி, முக்குளி போட்டு அடியில் இருக்கும் ஊறிப்போன புண்ணாக்குடனான தவிட்டை ருசி பார்த்து விட்டு பின்பு தான் வெறும் தண்ணீரைக்குடிக்கும். மயிலைக்காளை குடிக்க சிறிதளவே மிச்சம் வைக்கும்.
வாய்கடுசு என்பதால் ஜல்லிக்கட்டு காளையைப்போல் கொழு, கொழுவென இருக்கும் செவலை. மயிலைக்காளையோ மிச்சம் மீதத்தைத்தின்று, உணவு பற்றாக்குறையால் இளைத்து சோம்பி நடக்கும். செவலையின் சூழ்ச்சியான திருட்டுத்தனம் முதலாளிக்குப்புரிவதில்லை. அவர் தீவனத்தைப்போடுவதோடு சரி. காளைகள் தின்பதை நின்று கவனிப்பதில்லை.
இரண்டு காளைகளையும் வண்டியில் பூட்டி ஓட்டினால் மயிலை சரியாக நடக்காமல் கொரடாவில் அடிவாங்கும். செவலை நன்றாக வண்டியை இழுப்பதால் அதைத்தொட்டுத்தடவி, நீவி முதலாளி தட்டிக்கொடுப்பதால் மகிழ்ந்து, நெகிழ்ந்து போகும். வண்டி ஓட்டி முடித்த பின் முதலாளியின் கூடுதல் கவனிப்பும் கிடைக்கும். சில சமயம் இரண்டு மடங்கு தீவனத்தை முதலாளியே நறுக்கிப்போடுவதை நொறுக்கித்தள்ளி விடும்.
நாட்கள் போகப்போக செவலையின் செயலால் மயிலை தின்ன தட்டின்றி, குடிக்க சத்துள்ள நீரின்றி உடல் நலம் குன்றி எழவே சிரமப்பட முதலாளி ஒரு முடிவுக்கு வந்தவராய் ஒற்றை மாடு பூட்டும் வண்டியில் செவலையை மட்டும் பூட்ட, தன் சுயநலத்தால் தனக்கே வந்தது ஆபத்து என மிரண்டு, அரண்டு போய் விட்டது செவலை.
ஒரு வாரம் ஒற்றை ஆளாக மண் வண்டியை மிகவும் சிரமப்பட்டு இழுத்து கண்ணீர் வடித்தது.
சிரமங்கள் கொடுத்த பாடத்தால் மனம் திருந்திய செவலை தற்போதெல்லாம் மயிலையின் தீவனத் தட்டுக்களை தன்பக்கம் இழுத்துக்கொள்வதில்லை. மயிலை தின்று முடித்த பின்பே தனது தீவனத்தை தின்ன ஆரம்பித்தது. தாளித்தண்ணீரிலும் முக்குளி போடாமல் மேலிருந்து குடிக்கப்பழகி சத்துள்ள புண்ணாக்கை மயிலைக்கும் விட்டுக்கொடுத்தது.
செவலைக்காளையின் நற்செயலால் தேவைக்கு தீவனமும், தாளித்தண்ணீரும் கிடைக்க, உடல் தேறிய மயிலை வண்டி இழுக்கத்தயாரானதும் இரண்டு காளைகள் பூட்டும் வண்டியில் முதலாளி பூட்டி ஓட்டியதில் இரண்டு காளைகளும் இழுப்பதால் வண்டியில் மண் பாரம் சுமப்பது, இழுப்பது சிரமமில்லாமல் இருப்பதை உணர்ந்து கொண்டு தனது சுயநலச்சூழ்ச்சியை முற்றிலும் கைவிட்டது செவலை.