கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 421 
 
 

    கலையையும் கவிதையையும் உரிய முறையில் கெளரவித்துப் பாராட்டி இரசிக்காமல், வெறும் வாய்ப்பந்தலினாலேயே இரசிப்பது போலப் பாவனை செய்யும் கையாலாகாதவர்கள் எப்போதும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

    இராமானுஜப் பாவலர் காலத்திலும் அத்தகையவர்கள் குறைவின்றி நிறைந்திருந்தார்கள் போலும். ‘கண்ணெடுத்துப் பாராமல் விலகி இருந்துவிட்டாலும் பரவாயில்லை. கண்டு சுவைத்து மகிழ்வது போல் நடிக்கும் போலி நேயர்கள் தாம் கவிஞர்களின் முதல் எதிரி , சத்துரு எல்லாம். ‘அழகு! அழகு!’ என்று வாய்கிழிய வளர்த்து வானளாவப் புகழ்வது. வயிறு காயும் போது வடித்த கஞ்சி கூடத் தராமல் கதவை அடைத்து விடுவது; இவர்களா நேயர்கள்? இவர்களா இரசிகர்கள்? ‘ரசனை’ என்ற சொல்லுக்கே அவமானம். இவர்களை ரசிகர்கள் என்று சொன்னால், இவர்கள் அசல் முதல் வரிசைக் கையாலா காதவர்கள். எச்சிற் கையால் காக்காய் ஓட்ட முடியாதவன் எல்லாம் ரசிகனாக வேஷம் போடுகிறான். பசித்தபோது ஒரு கவளம் சோறும், கிழிந்தபோது நாலு முழம் துணியும் கலைஞனுக்குத் தர அஞ்சுகின்ற கயவர்களுக்கு ரசனை உணர்வும் இருக்கிறதா? அப்படியானால் ரசனை உணர்வு என்ற ஒன்று இன்றே இப்போதே மண்ணோடு மண்ணாக அழிந்து போய் விடட்டுமே!’ இப்படி எண்ணி மனங்குமைந்தார் இராமானுஜப் பாவலர். தொண்டை வலிக்க இனிய குரலில் அழகிய செந்தமிழ்ப் பாடல்களால் பல வள்ளல்களைப் பாடிப் பாடி அலுத்து விட்டது அவருக்கு. பாடி முடிகின்றவரை ‘ஆகா! அற்புதம்! அபாரம்! என்ன ஞானம் ! என்ன கலை! இதுவன்றோ கவிதை !” என்றெல்லாம் புகழ்ந்தனர். முடிந்ததும் பரிசில் என்றால் கடிந்து மொழிகிறார்கள். கதவை அடைக்கிறார்கள். சற்றே வெளியேறக் காலந் தாழ்த்தினால் கழுத்தைப் பிடித்துக்கூட வெளியே தள்ளிவிடுவார்கள் போலிருக்கிறது, இந்தக் கையாலாகாத கலாரசிக ‘சீமான்கள்!’

    வறுமை முட்களில் சிக்கித் தவித்த அவருடைய ரோஜா உள்ளம் ஆதரவிழந்து தவித்தது. முடிவில் ரோஜாப் பூவின் முட்கள் போலக் கையாலாகாத இந்த ரசிகர்களைக் குத்தி வாட்டும் சொற்கள் அவருடைய ரோஜா உள்ளத்திலிருந்து வெடித்துச் சிதறுகின்றன. கனல் கக்கும் எரிமலைக் குழம்பு போலப் பழுக்கக் காய்ச்சிய சூட்டுக்கோலை ஒத்த சொற்களால் வாய்ப் பந்தல்காரர்களுக்கு ஒரு சூடு கொடுக்கிறார். அந்தச் சூடு நெருப்பிலே காய்ச்சிய சூட்டுக்கோலால் இடப்பட்ட சூடாக இருந்தால் மறைந்து தழும்பு ஆறிப்போயிருக்கும். ஆனால் அது சொல்லிலே காய்ச்சிச் செய்யுளுருவிலே கொடுத்த சூடு! என்றும் ஆறாத சூடு. ஏன்? ஆற்றிக்கொள்ள முடியாத சூடு. கையாலாகாத வர்களின் போலி ரசனைக்குப் பரம்பரையாக நிலைத்துவிட்ட சூடு. சூட்டைக் கொடுக்கும் பாடல் இன்றும் சுடச்சுட வாழ்ந்து வருகிறது. ‘அவர்கள்’ உள்ள வரையில் அதுவும் வாழத்தானே வாழும்.

    எண்ணான்கு முப்பத்திரண்டு பற்காட்டி இசையுடனே
    பண்ணாகச் செந்தமிழ்பாடி வந்தாலும் இப்பாரிலுள்ளோர்
    அண்ணாந்து கேட்பர் அழகு அழகு என்பர். அதன் பிறகு
    சுண்ணாம்பு பட்ட வெற்றிலையும் கொடார் கவி சொன்னவர்க்கே.

    வறுமையில் ஏமாறிய கலைஞனின் மனோபாவம் துயர் வடிவமாக இந்தப் பாட்டில் அடியிலிருந்து முடி வரை அமைந்து கிடக்கிறது. இராமனுஜப் பாவலரைப்போல் எத்தனையோ கலைஞர்கள், கவிஞர்கள், திறமைசாலிகள் கலையுலகத்தில் ஏமாற்றம் என்ற உணர்விற்கு ஒரு பாரம்பரிய வாரிசாக விளங்கி வருகிறார்கள். என்றைக்கும் அந்த ஒரு பரம்பரை மூலையில் ஒதுங்கிக் கிடக்கிறது. அப்படி ஒதுங்கி முடங்கச் செய்யும் கையாலாகாத ரசிக பரம்பரைக்கும் பஞ்சமே இல்லை.

    – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

    Print Friendly, PDF & Email
    'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *