தெரு விளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 11, 2012
பார்வையிட்டோர்: 11,209 
 

தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.

தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.

இளமை, மூப்பு, சாக்காடு என்பவை மனிதருக்கு மட்டும் உரிமையில்லை. எனவே, தெரு விளக்கிற்கும் இப்பொழுது மூப்புப் பருவம்.

நிற்கும் கல் – உடம்பு சிறிது சாய்ந்துவிட்டது. சிரத்தில் இருந்த கண்ணாடிச் சில் ஒரு பக்கம் உடைந்துவிட்டது. அந்தச் சிறுவன் விளையாட்டாகக் கல்லை எறிந்தபொழுது விளக்கின் கஷ்டத்தை நினைத்தானா?

காற்று அடித்தால் உயிரை ஒரேயடியாகவாவது போக்கிவிடுகிறதா? குற்றுயிராய்த் துடிக்க வைத்து அதைக் கொல்லுகிறதே!

கொஞ்சமாவது மங்கிய வெளிச்சத்தைக் கொடுக்கிறதென்று இந்தக் காற்றிற்கு நன்றி இருக்கிறதா?

போய்விட்டது! பிறகு மழையில் அதன் குளிரை யார் கவனிக்கிறார்கள்?

அது காற்றிற்குத் தெரியுமா?

இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம்! அதை எடுத்துவிட வேண்டுமாம்!

அதற்கு ஒரு தோழன் – ஒரு கிழவன்.

ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும். இதில் என்ன அதிசியம்!

விளக்கிற்குக் கிழவன்.

கிழவனுக்கு விளக்கு.

விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவனுக்குத் தெரியாது.

அவனுக்கு எப்படித் தெரியும்.

அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா?

வயிற்றுக்கில்லாமல் உயிர் வாழ முடியுமா?

தெருவிளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மன நிம்மதியை அளித்தது.

அன்று சாயங்காலம் வந்தான்.

வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.

இருள்! இருள்!!

பற்றுக்கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!
அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய், அர்த்த மற்றதாய் இருந்தது.

சாந்தி?

அது எங்கிருந்து வரும்!

உடைந்த தெரு விளக்குத்தான்! அனால், கொஞ்சமாவது அவனைத் தேற்றிவந்ததே!

வெளிச்சமில்லாவிட்டாலும் ஸ்பரிசித்துப் பார்த்து ஆறுதலடைய வெறுங் கல்லாவது இருந்ததே?

மறுநாள் காலை கிழவனின் சவம் அங்கு கிடந்ததைக் கண்டார்கள்.

***

இப்பொழுது ஒரு புது விளக்கு!

மின்சார விளக்கு!

அதன் கிழே குழந்தைகள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குப் பழைய விளக்கையும் பழைய கிழவனையும் பற்றிக் கவலை என்ன?

ஒரு காலத்தில் இவர்களும் அப்படித்தான் ஆவார்கள்!

அதற்கென்ன?

எங்கும், எப்பொழுதும் அப்படித்தான்.

பழையன கழியும், புதியன வரும்.

இது உலக இயற்கையாம்!

– ஊழியன், 24-08-1934

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *