கறவைப் பசு ஒன்று தருக!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 512 
 
 

பொன் விளைந்த களத்தூர் படிக்காசுத் தம்பிரான் தலை சிறந்த தமிழ்ப் புலவர். புலமைக்கு உரிய தகுதிகளில் வறுமையும் ஒன்று என்ற நியதி ஏற்பட்டிருக்கும் போது அது அவரை மட்டும் விட்டு விடுமா என்ன? வல்லை மாநகர்க் காளத்தியப்பர் கொடை யுள்ளம் படைத்த செல்வர். புலவர் மேல் அனுதாபங்கொண்டு சமய சந்தர்ப்பங்களில் உதவி வருபவரும் கூட, தகுதியுள்ள இத்தகைய செல்வர் சிலர் வாழ்ந்ததனாலேதான் தமிழ்ப் புலவர்கள் வறுமையை மறந்து வாழ முடிந்தது. துயரப் பிடியில் சிக்கி உழலாமல் பாடிவர முடிந்தது.

அப்போது படிக்காசுக்குக் குழந்தை பிறந்திருந்த சமயம். அவர் மனைவி தங்கச் சிலை போல் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றிருந்தாள். குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் போதவில்லை , அக்கம் பக்கத்து வீட்டில் வாங்கியளிக்க உதவுபவர்களும் இல்லை. பசுவின் பால் கிடைக்காது என்று இல்லை. அதைச் சமயமறிந்து வாங்கி அளிக்க வீட்டில் சிற்றாட்கள் ஒருவரும் கிடையாது. அந்தக் குறைதான். “குறை தீரக் குழந்தைக்கு வேளா வேளைக்குப் பால் கிடைக்கச் செய்ய என்ன வழி?” என்று யோசித்தார் படிக்காசுத் தம்பிரான் யோசனை ஒரு முடிவுக்கு வந்தது. ஏட்டை எடுத்தார். வல்லை மாநகர்க் காளத்தியப்பருக்கு ஒரு சீட்டுக் கவி எழுதினார். காரியம் வெற்றியே என்ற நம்பிக்கையுடன் ஓராள் வசம் ஏட்டைக் கொடுத்துக் காளத்தியிடம் அனுப்பினார்.

“பெற்றாள் ஒரு பிள்ளை என்மனை
யாட்டி அப்பிள்ளைக்குப் பால்
பற்றாது கஞ்சி குடிக்கும்
தரமல்ல பால் இரக்கச்
சிற்றாளும் இல்லை இவ்வெல்லா
வருத்தமும் தீர ஒரு
கற்றா தரவல்லையா? வல்லைமா
நகர்க் காளத்தியே!”

தரம் = பருவம், இரக்க = கேட்டு வாங்கிவர, சிற்றாள் = வேலையாள், கற்றா = கன்றுடன் கூடிய ஈன்ற பசு.

மறுநாள் பொழுது சாய்கின்ற நேரத்திற்கு ஏடு கொண்டு போன ஆள் தலை ஈத்துப் பசு ஒன்றும் அதன் கன்றும் உடன் கொண்டு வந்து சேர்ந்தான். புலவர் கண்களில் ஈரப்பசை தட்டியது. காளத்தி நாதரின் பரந்த மனத்தையும் தம் வாக்கிற்கு அவர் கொடுத்த மதிப்பையும் நினைத்தபோது, அவருக்கு ஆனந்தக்கண்ணீர் வந்தது. கொல்லையில் புதிதாகக் கீற்று வேய்ந்த மாட்டுக் கொட்டம் ஒன்று உண்டாக்க வேண்டிய அவசியம் – இப்போது அவருக்கு ஏற்பட்டது.

‘கறவைப் பசு தருக!’ என்று அதிகாரியைப்போல ஏடெழுதிக் கேட்டார். கனிந்த உள்ளத்துடன் கன்றோடு கூடிய பசுவை அனுப்பினார் காளத்தியப்பர்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *