கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 65 
 
 

சோழன் கூறிய அந்தக் கருத்து ஒளவையாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “சிலர் சில செயல்களுக்காகவே தனித் திறமையுடன் பிறக்கிறார்கள். அவர்களைத் தவிர அந்தச் செயல்களை அதே திறமையுடன் செய்ய வேறு எவராலும் முடிவதில்லை . “இதுதான் சோழன் கூற்று. தன்னுடைய சித்தாந்தத்திற்கு மேற்கோளாகச் சில துறைகளில் சிறந்த தனி ஆற்றல் பெற்ற சிலரையும் குறிப்பிட்டு நிரூபிக்க முயன்றான் சோழ மன்னன். “பெருங்காப்பியம் பாடுவதில் தமிழ் இலக்கிய உலகத்திலேயே இன்னார்தான் சிறந்தவர். அவருக்கு இணையாக வேறு எவருமே இல்லை” என்று ஒருவரைக் குறிப்பிட்டு அவன் உயர்த்திப் பேசிய போது அதுவரை மெளனமாக இருந்த ஓளவையார் வாய் திறந்து அவனுக்கு மறுமொழி கூறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. திறமைக்கும் திறமையுடையவனுக்கும் உள்ள தொடர்பை அந்த மறுமொழி மூலம் சோழனுக்கு நன்றாக விளக்கினார். ” திறமை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் முழுமையாக அமைந்திருக்கும். அதைக்கொண்டு மற்றவர்கள் திறமையற்றவர்கள் என்று முடிவு கட்டுவது பெரிய தவறு. ஒளவையார் சோழனுக்கு அதை விளக்க இந்த அடிப்படையை மேற்கொண்டார். சோழன் தன் முடிவைப் பற்றிச் சிந்திக்கும்படி இருந்தது ஒளவையார் தக்க சான்றுகளோடு அவனுக்குக் கூறிய மறுமொழி.

செத்தை, நார் இவைகளைக் கொண்டு தூக்கணாங்குருவி கட்டுகின்ற கூட்டை நாம் ஆறறிவு படைத்த மனிதர்களாக இருந்தும் கட்ட முடியாது. இவ்வளவுக்கும் அந்தத் தூக்கணாங் குருவி நம்மினும் இழிவான அஃறிணையைச் சேர்ந்த ஒரு சிறு பறவைதான். அது பின்னுகிற ஒரு கூட்டை நாம் பின்ன முடியவில்லை என்பதனால் நம்மைத் திறமையற்றவர்களாகத் தீர்மானித்துவிட முடியுமா? அதுதான் போகட்டும்! சிறு சிறு மண் சிகரங்களோடு கரையான் சமைத்துக் கொள்ளும் புற்றுக்களைப் போல் ஒன்றாவது நம்மால் சமைக்க முடியுமா? காற்றில் பறந்துவிடுமோ என்று சந்தேகம் கொள்ளத்தக்க சிறிய உருவம். அது படைக்கிறது அழகு அழகான மண்புற்றுக்களை! மாடமாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டி வனப்புச் செய்யும் மனிதக் கரங்கள் கேவலம் இந்தக் கறையான் புற்றுக்களைக் கட்டிவிட முடியாதா? முடியாதென்று இல்லை! ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு வேலையிலே திறமை. அவ்வளவு தான். அதுவே வேண்டாம்! மரக்கொம்பிலே கட்டுகின்ற தேன் கூட்டைப்போல் ஒரு கூடு கட்ட அந்தத் தேனீயைக் காட்டிலும் பல வகையிலும் உயர்ந்த மனிதனால் முடியுமா? சிறு சிறு துவாரங்களுடன் அமைந்திருக்கும் நுண்ணிய தேன் அடையைச் சில சிறிய ஈக்கள் அல்லவா செய்துவிடுகின்றன? அப்படிச் செய்ய முடிவதனால் மட்டும் தூக்கணாங்குருவியும் கரையானும் தேனீயும் மனிதர்களைக் காட்டிலும் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டுவிட முடிகின்றதா, என்ன? இதே போலத்தான் அவரவருக்கென்று அமையும் திறமையும்!

“வான் குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் – யாம் பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது”

வான் குருவி = தூக்கணாங்குருவி, சிலம்பி = சிலந்தி, கரையான் = கரையானின் புற்று.

ஒளவையார் பாடி முடித்தார். சோழன் தலை குனிந்தான். தன் கருத்தில் இருந்த பிழையை எடுத்துக் காட்டியதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி செலுத்தி வணங்கினான். செயலையும் செயல் வன்மையையும் பொறுத்து எழுகின்ற வன்மை, மென்மை உணர்ச்சிகளைப் பற்றிய அருமையான சித்தாந்தம் ஒன்றை யாவருக்கும் விளக்கி விடுகின்றது இந்த வெண்பா.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *