ஞானோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 5,614 
 

(இதற்கு முந்தைய ‘ஆண்டாள் பாசுரம்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

“படிக்கிறதுக்கோ தெரிஞ்சிக்கவோ சந்தர்ப்பம் எதுவும் எனக்கு கெடைச்சது கிடையாது. ஆனா ஆண்டாள்னு சொன்னாலே மனசை என்னவோ பண்ணும். கேள்விப்பட்ட ரொம்பக் குறைச்சலான விஷயங்களை வச்சே, ஆண்டாள் என்னோட முற்பிறவின்னு கூட எனக்கு நெனைப்பு வரும். இன்னும் சின்ன வயசிலேயே என்னையும் பெரியாழ்வார் மாதிரி யாராவது கண்டு பிடிச்சிருந்தா நானும் ஆண்டாள் மாதிரியெல்லாம் வந்தாலும் வந்திருப்பேன்.”

“இப்பவும் காலம் கடந்து போயிடலை. ராஜலக்ஷ்மியை இந்த சுப்பையா கண்டு பிடிச்சாச்சு. ஹி வில் ப்ரிங் ஹர் அப், டோண்ட் வொரி…”

“ஆண்டாள் பாசுரங்கள் நெறைய இருக்கோ?”

“ஆமாம், இருக்கு. எக்ஸாட் நம்பர் எனக்கு மறந்து போயிடுத்து. அனேகமா இருநூறு இருக்கலாம். ஆனா திருப்பாவையின் முப்பது பாசுரங்களை புரிஞ்சுண்டாச்சுன்னா போதும். சாராம்சம் அதுதான்…”

“திருப்பாவை இருந்தா தர்றீங்களா?”

“இல்லையேம்மா… நாளைக்கு திருநெல்வேலி போறேன். அங்கே கிடைச்சா வாங்கிண்டு வரேன்.”

“எனக்கும் உங்ககூட வரணும் போல இருக்கு. அங்க நீங்க யாரையும் பாக்கணுமா?”

“நோ.. நோ. மெயின்லி நம்ம குட்டிப் பசங்களுக்கு ஸ்டேஷனரி நெறைய வாங்க வேண்டியிருக்கு… நாளைக்கு ஈவ்னிங் அவாளுக்கு அதைக் குடுத்தாகணும்.”

“எங்க ஊர்ல நீங்க பயங்கர பேமஸ் ஆகப் போறீங்க…”

“நீங்களும், நானும் வெளியில எங்காவது சந்தித்துப் பேச முடியுமா? ஆண்டாள் பாசுரமெல்லாம் பாடத் தகுந்த இடமா இருக்கணும். ஆனா கோயில் வேண்டாம்.”

“பெருமாள் கோயிலுக்குப் போற ரோட்ல நேராவே போனா, மலையில கொண்டுபோய் விடும். மலைமேல கொஞ்ச தூரம் போனீங்கன்னா பீடம் மட்டும் இருக்கிற சின்ன முப்பிடாதி அம்மன் கோயில் ஒண்ணு இருக்கும். அதுக்குப் பின்னால நெறைய நவாப் பழ மரமா இருக்கும். அந்த இடம் ஏகாந்தமா ரம்மியமா இருக்கும். அந்தப் பக்கம் யாரும் வரமாட்டாங்க. அங்கே உக்காந்து பேசலாம். துணைக்கு குயில் சப்தம் மட்டும் இருக்கும்.”

“எந்தக் குயில் சப்தம்?”

“இந்தக் குயில் சப்தமும்தான்…”

“நாளைக்கு மறுநாள் போலாமா?”

“சரி. பத்து மணிக்கு கோயிலுக்குப் போறதா சொல்லிட்டு நேரா அங்கே வந்திடறேன்.”

“நான் ஒன்பது மணிக்கே போயிடறேன்.”

அப்போது ராஜலக்ஷ்மியின் வீட்டுக் கதவு பெரிய சப்தத்துடன் தட்டப்பட்டது. எம்.எல்.ஏ வந்து விட்டார்…!

அன்று இரவு சாப்பிடாமலே சபரிநாதன் படுத்துக்கொண்டார். இரவு தூங்காமலே புரண்டு கொண்டிருந்தார்.

மந்திரி அருணாச்சலத்தை சந்தித்துவிட்டு வந்திருந்த சம்பவம் அவரின் மன வேகத்தை மேலும் ஒரு உயரத்திற்கு ஏற்றி விட்டிருந்தது. வாழ்வில் பின்னடைவு அடைந்துவிட்ட உணர்வு சபரிநாதனைப் போட்டுப் பாடாய்ப் படுத்தியது. உச்சந் தலையை வலிக்கிற அளவிற்கு மண்டையைக் குடைந்தெடுத்தது. அந்தக் குடைச்சலைத் தாங்க முடியாமல் சோர்ந்த மனத்துடன் அந்தி சாய்கின்ற நேரத்தில் வீட்டுத் திண்ணையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார். சபரிநாதன் கொஞ்சம் கொஞ்சமாக அதீதமான மன உளைச்சலுக்கு ஆளாகி அதன் மூலம் கடும் மனச் சிதைவை நோக்கி விழுந்து கொண்டிருந்தார். எதையும் யாரையும் வேகமான மன நிலையிலேயே பார்த்தார். நுட்பமான மன விஞ்ஞானம் தெரிந்தவர்களுக்கு அவரது மனச்சிதைவு புரிந்துவிடும்.

காலையில் கிளம்பிப்போன சுப்பையாவின் மோட்டார் பைக் அப்போதுதான் செம்மண் தூசியை அப்பிக்கொண்டு வந்து நின்றது.

மோட்டார் பைக்கை விட்டு இறங்கிய சுப்பையா, சபரிநாதனை திரும்பிக்கூட பார்க்காமல் காந்திமதியின் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டுத் திண்ணையில் தயாராக நின்று கொண்டிருந்தாள் காந்திமதி. பெண்கள் மயமாக இருக்கின்ற அவளது வாழ்க்கையில், அவளுக்குத் தெரிந்த ஒரே ஆண் சுப்பையாதானே! அவனிடம் தன் பெண்மை அத்தனையையும் அள்ளிக் கொடுக்க காத்துக் கிடப்பவள் அல்லவா காந்திமதி…

அவளுடைய மன சிலிர்ப்பு அத்தனையையும் மார்பில் ஏற்றி ஒரு பார்வை பார்த்தால், அதன் அர்த்தம் சுப்பையாவுக்குத் தெரியாமலா போய்விடும்? காந்திமதியிடம் இப்படி ஒரு பார்வையை எதிர் பார்க்காததால் திகைத்துப் போனான் சுப்பையா. அவனுடைய மனம் பின் வாங்கியது. ஆனாலும் அவனுக்கு இப்போது அவளுடைய அப்பா கோட்டைசாமியைப் பார்க்க வேண்டும். அதனால் கொஞ்சம் தயங்கியபடியே, “அப்பா இல்லையா?” என்று கேட்டான்.

“ஓ இருக்காங்களே…” இதைச் சொல்வதற்குள் அவளிடம் அத்தனை நெளிசல்! அத்தனை வளைசல்! அதைப் பார்த்து சுப்பையா கலவரமடைந்தான்…

“அப்பாவைக் கொஞ்சம் கூப்பிட்டா தேவலை.”

“மொதல்ல உக்காருங்க, கூப்பிடறேன்.”

சுப்பையா உட்காரவில்லை. இதற்குள் கிடைத்த சில வினாடிகளில் காந்திமதி அவளுடைய ஏராளமான மார்பின் வனப்பை சுப்பையாவுக்கு உணர்த்தி விட்டாள். சுப்பையா முகத்தை திருப்பி நின்றுகொண்டான். காந்திமதி சரியாக இல்லையென்று அவனுக்குத் தோன்றியது.

அதனால் மெல்ல தன்னுடைய வீட்டை நோக்கித் திரும்பி நடந்தான். சபரிநாதன் ஒருக்களித்துப் படுத்திருந்த திருக்கோலத்தில் இருந்தபடியே இதையெல்லாம் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். காந்திமதியை அவர் மனசில் இருந்து எப்பவோ தூக்கிப்போட்டு மிதித்து விட்டவர்தான்… ஆனாலும் அவள் வேறு ஆம்பளை யாரையாவது பார்த்தால் தாங்க முடியாமல் போய்விடுகிறது அவருக்கு! பொறாமையில் ரத்தம் சூடாகி விடுகிறது. கோபத்தில் மண்டை கொதித்துப் போகிறது.

சுப்பையா திரும்பிச் சென்றுவிட்டது காந்திமதிக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஆனால் ஏமாற்றமாக இல்லை அவளுக்கு. இப்போதுதானே முகூர்த்தக் கால் நட்டிருக்கிறாள்? இன்னும் முகூர்த்தத்திற்கு நாள் கிடக்கிறதே!?

கோட்டைசாமி சுப்பையாவின் வீட்டிற்கு ஓடிவந்தார். ‘இந்தப் பயலுக்கு என்ன இப்படி விவஸ்த்தை கெட்டுப் போய்விட்டது..! நாய்க்குட்டி மாதிரி சுப்பையாவின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறானே..என்ன சங்கதியோ?’ என்று சபரிநாதன் குமைந்தார்.

அந்தச் சங்கதி என்னவென்று அடுத்த சில நிமிடங்களில் அவருக்குப் புரிந்தது.

பதினைந்து ஏழைப் பசங்களுக்கு சுப்பையா வாங்கிவந்த ஸ்டேஷனரி ஐட்டங்களை இலவசமாக கொடுப்பதற்காக அவைகளை அவனுடைய பணத்தில் வாங்கி வந்திருக்கிறான். அதற்காக சம்பந்தப்பட்ட ஏழைப் பசங்களை வரச்சொல்லி அவற்றை எல்லாம் இப்போது வினியோகம் பண்ணப் போகிறான். கோட்டைசாமி எல்லோரையும் வரச்சொல்லி தகவல் கொடுத்துவிட்டு வர, பெரிய கூட்டமே சுப்பையாவின் வீட்டு வாசலில் கூடிவிட்டது. சபரிநாதனால் எழுந்து ஓடவும் முடியவில்லை; காலை ஆட்டிக்கொண்டு படுத்துக் கிடக்கவும் முடியவில்லை.

அந்த நிகழ்ச்சி ஒரு பெரிய விழா போலவே நடந்துவிட்டது. ஆளுக்கு ஆள் சுப்பையாவை வாய் வலிக்காமல் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள் தள்ளி! சிலர் உள்குத்து புரியாமல் மெனக்கிட்டு சபரிநாதனிடம் வேறு சுப்பையாவைப் புகழ்ந்து வைத்தார்கள். காரணம், அவன் அவர் வீட்டுக்கு வந்திருக்கும் அவரின் மாப்பிள்ளை! புகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சபரிநாதன் ஒரு மரக்கட்டை மாதிரி கேட்டுக் கொண்டிருந்தார். அன்று நடந்த குறிப்பிட்ட இரண்டு விஷயங்கள் அவர் மனதை வெகுவாகப் பாதித்து, அவரின் மன இயக்கத்தை ரேஸ் குதிரையின் வேகத்திற்கு முடுக்கி விட்டிருந்தன…

முதல் விஷயம் – சுப்பையாவின் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு முருகபூபதி, “நெசமாவே நீங்க வரப்போற இடைத் தேர்தல்ல சுயேச்சையா நின்னாக்கூட ஜெயிச்சிடலாம் சுப்பையாத் தம்பி” என்று மைக் வைத்த மாதிரி சப்தமாகச் சொன்னது!

இரண்டாவது விஷயம் – மொத்தக் கூட்டமும் கலையைப் போகிற நேரத்தில், வீட்டுக் கொல்லையில் பூத்துக் கிடந்த பலவித பூக்களையும் சின்ன மாலையாகக் கோர்த்து எடுத்துவந்த காந்திமதி அந்த மாலையை ஒரு ஏழைப் பெண் பிள்ளையின் கையில் கொடுத்து, “மாமாவுக்குப் போடுளா..” என்று சொல்லி சுப்பையாவின் கழுத்தில் போடவைத்தது.

காந்திமதி அவரைப் பழிவாங்கி விட்டதாக கொந்தளித்துப் போனார். அவருடைய கண் எதிர்லயே தன் மாப்பிள்ளைக்கு வலை வீசுகிறாள்! அவரின் அப்போதைய உடனடி விருப்பம், சுப்பையா அந்த வலையில் விழவேண்டும்! அதைக் காரணம் காட்டி அவனை ஊரைவிட்டு அடித்துத் துரத்திவிட வேண்டும்! அவனுடைய மோட்டார் பைக்கையும் அடித்து நொறுக்கிவிட வேண்டும்! அதை வைத்துக்கொண்டுதானே அந்தப் பயல் இத்தனை ஆட்டம் போடுகிறான்…? மாப்ளையாவது மயிராவது!

இப்படி வேகமான மன இயக்கத்தில் சபரிநாதன் கொதித்தபோது, அவரின் காதுக்குள் அவரே ஏதோ பேசினாற் போன்ற ஒரு குரல் கேட்டது. சபரிநாதன் கொஞ்சம் பயந்து போனார். அது நிஜமா பிரமையா என்று தெரியவில்லை. மறுபடியும் அந்தக் குரல் கேட்கிறதா என்று காத்திருந்து பார்த்தார். அப்படி எதுவும் கேட்காததில் மீண்டும் அவரின் மனம் துரித கதியில் இயங்கத்தொடங்கியது. அந்த வேகமான இயக்கம் சுப்பையாவை அடித்துத் துரத்தியதோடு சமாதானம் அடையவில்லை.

மந்திரி அருணாச்சலத்தின் மூஞ்சியில் ஆட்களை வைத்து அக்னி திராவகத்தை வீசியது; ராஜலக்ஷ்மி என்ற பாதகத்தியை என்ன செய்யலாம் என்று யோசித்தது; எந்த நேரத்தில் அவளுடைய கழுத்தில் தாலி கட்டினாரோ, அந்த நிமிஷத்தில் இருந்து நிம்மதி போய்விட்டதற்கு அவளின் கழுத்தை நெரித்துப் பழி தீர்க்கவும் சபரிநாதனின் மனவேகம் துடித்தது.

பிடித்துவைத்த பிள்ளையார் போல திண்ணையில் அமர்ந்திருந்த அவருக்கு திடீரென ஒரு ஞானோதயம் ஏற்பட்டது. ‘ஒரு ஆம்பளை ரொம்ப ரொம்ப அழகான பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டால் அதைப்போல முட்டாள்தனம் எதுவுமே கிடையாது…!’ ஆனால் அவருக்கு உண்மையாகவே ஞானோதயம் ஏற்பட்டிருந்தால் ‘ஒரு ஆம்பளை’ என்பதை ‘ஒரு வயசான ஆம்பளை’ என்று யோசித்திருப்பார்! பாவம், அம்மாதிரி ஞானோதயம் வருவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் அவர் இந்தத் திண்ணையில் உட்கார்ந்திருக்க வேண்டுமோ?!

பொழுது விடிந்து விட்டது என்பது தெரிந்த போதுதான், தான் ராத்திரி பூராவும் உறங்கவில்லை என்பது சபரிநாதனுக்குத் தெரிந்தது. கண்களின் எரிச்சல் அவரை பயமூட்டியது. எப்பேர்ப்பட்ட மன சங்கடத்திலும் இப்படி விடிய விடிய அவர் உறங்காமல் இருந்ததே கிடையாது. அவரது மண்டைக்குள் ஒருவிதமான மரத்துப் போன வறட்சி கனமாக இருந்தது. புதிதாக ஒருநாள் ராஜலக்ஷ்மி, சுப்பையா, அருணாச்சலம் போன்ற பிடிக்காத நபர்களின் நினைவுகளோடு தொடங்கி விட்டது! காப்பி குடித்துவிட்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்த போது, அவருடைய மொபைல் சிணுங்கியது…

கோவில்பட்டிக்கு பக்கத்தில் இருக்கும் கழுகுமலை என்ற ஊரில், சபரிநாதனின் சித்தி மகளை கட்டிக் கொடுத்திருந்தது. அவளின் கணவர் மச்சக்காளை நேற்று இரவு இறந்து விட்டாராம்.

இதைக் கேள்விப் பட்டதும் அவருக்கு ஒரே ‘அச்சலாத்தி’யாகி விட்டது. உடனே அவர் கழுகுமலைக்குப் போயாக வேண்டும். மச்சக்காளை சொக்காரன் வேறு; தவிர துட்டிக்கு போயேயாக வேண்டும். அதுவும் அவன் ரொம்பவே வசதியான ஆசாமி வேறு. அதனால் போனோம், வந்தோம் என்றெல்லாம் இருந்துவிட முடியாது. பாடியை இன்று ராத்திரிக்குள் எடுத்து விட்டாலும்கூட மறுநாள் பாலுக்குப் பிறகுதான் கிளம்பி வர முடியும். பக்கத்து வீட்டு மாப்பிள்ளையை நினைத்து அவர் பயந்தார்.

ராஜலக்ஷ்மியை கல்யாணம் செய்துகொண்ட பிறகு ஒரு ராத்திரிகூட அவர் வெளியே தனியாகத் தங்கியதில்லை. எங்கே போனாலும் திம்மராஜபுரம் வந்துவிடுவார். ஆனால் இன்று ராத்திரி அவர் கழுகுமலையில்தான் தங்கியாக வேண்டும். ராஜலக்ஷ்மி இங்கே தனியாக இருப்பாள். இந்தப் பக்கத்து வீட்டு மாப்பிள்ளைச் சனியன் அவளை உழுது மேய்ந்து விட்டால்?

தன்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு பயங்கர சதித்திட்டம் போட்டு நடப்பது போல் இருந்தது சபரிநாதனுக்கு…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *