போரும் முடிவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 2,224 
 

(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆணின் அணைப்புள், வார்த்தை இழந்து, புறத்தில் மோனமாகி விடும் புதுப்பெண்ணைப் போன்ற, இருளின் கவசப் போர்வையுள் பிரபஞ்சம் ஊமைத்தனம் அடைந்து கிடக்கிறது. நிலத்தில் குவித்துப் பொத்திய கையின் உருவில் சிருஷ்டியான அந்தக் குடிசையின் கரையோரம் நெடுத்துநிற்கும் தென்னைகள் தலை விரித்தாட அவற்றின் நிழல்கள் வருந்தும் மனம்போல நிலத்தில் நெளிவு காட்டிக் கொள்கின்றன. பத்து மணிக்கு மேலாகிவிட்டது. வேலனுக்கு நித்திரை வரவில்லை. குடிசைத் திண்ணையின் தெற்குப் பக்கமாக, தான் வழமையாகப் படுக்கிற இடம் வந்து, மண் குந்தில் முதுகைச் சார்த்தி, கால்களை முறுக்கி, நீட்டியவாறு இருக்கிறான்.

றக்கா வீதியில் இருக்கும், யாழ்ப்பாணத்தில் பிரபலமான சுருட்டு வியாபாரி சுவாம்பிள்ளை வீட்டில், சுருட்டுபவர்கள், புகைத்துவிட்டு எறியும் ‘ஒட்டன்’ சுருட்டுகளைத் தன் மூத்த மகனை அனுப்பி, பொறுக்கிவித்து, ஒரு பேணியில் சேர்த்து வைத்திருந்தான். அவற்றுள், நீளமான ஒன்றைத் தெரிந்தெடுத்து, எச்சில்பட்ட முனையைக் கடுதாசியால் சுற்றி வாயில் வைத்துப் புகை விட்டுக் கொள்கிறான். வளைந்து நெளிந்து வானத்தை நாடிச் செல்லும் அதன் புகைச் சுருளோடு போட்டியிட்டு, அவன் மனமும் அன்று விறகு கொத்திக்கொடுத்த ஓவசியர் பிலிப்பையா வீட்டை நோக்கித் தவழ்கிறது.

‘அவை என்ன சுகமா வாள்கினம்…!’ எனக்கு இப்ப முப்பது வயது நடக்குது, என்னிலும் ‘ பாக்க ஓவசியருக்கு ஆறேழு வயசு கூடயிருக்கும். ஆறு புள்ளையளையும் பெத்து விட்டினம். அப்பவும் அந்த ஆசை குறையல்லை… என்ன எனக்கில்லாததே…. இண்டைக்கு ஓவசியருக்குக் கொஞ்சம் சுப்பா, பாடிக்கொண்டு குசுனிப்பக்கத்தாலை வந்தவர், குசினிக்கையிருந்து வெளியிலை விறகெடுக்க வந்த பொஞ்சாதிடை கையை எட்டிப் புடிச்சு விரலைக் கொஞ்சினார். நெஞ்சோடை சேத்து அமத்தினார். பேந்து மூஞ்சியை நீட்டிக் கொண்டு கொஞ்சப் போனார். அவ சும்மா விடுங்க, ராத்திரிக் கொஞ்சின கானாதே’ எண்டு சொல்லிப் போட்டுக் கையைப் பறிச்சுக்கொண்டு போயிட்டா….! அப்ப ஓவசியர் இப்பவும்…’ நரம்புமயிர்களில் சம்போகத்தாகவுணர்வு உரசுகிறது. புது மாப்பிளை பொம்புளை மாதிரி எவ்வளவு சுதந்திரமா விளையாடினம்’ நானும் இருக்கிறனே மாடு மாதிரி; விடிஞ்சாக் கோடாலியைத் தூக்கிக் கொண்டு போறது. பொழுது பட்டா வாறது. அம்புடுறதைத் திங்கிறது; படுக்கிறது?…..

‘நானுஞ் சடங்கு முடிச்சநாளிலை தெய்வானையோடை இப்படித்தானே இருந்தன். இப்ப நாலைப்பெத்து விட்டன். வந்தது வில்லங்கம். ஓவசியர் பெத்தா பாக்க மேய்க்க பணமிருக்கு… என்னட்டை என்ன கிடக்கு? ஒரு புள்ளைப்பெறு வெண்டால் நான் படுற கயிட்டம் கதிரமலையானுக்குத்தான் தெரியும்… கடைசிப் பொடியன் வைத்திலை. தெய்வானை வயிறு நோகுதெண்டு அனுங்கினாள். கையளை முழங்காலிலை ஊண்டிக் கொண்டு குனிஞ்சு நிண்டு நெளிஞ்சாள். அப்ப என்ரை கையிலை மடியிலை ஒண்டுமில்லை. அவளிடை காதிலை மின்னினாலும்… அதுமில்லை. ஒரு காரைப்புடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவமெண்டு ஒரு ஐஞ்சு ரூபாய்க்கி நாலுபக்கமும் ஓடினன். மனுவல் உப காரைப் புடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவமெண்டு ஒரு ஐஞ்சு ரூபாய்க்கி நாலு பக்கமும் ஓடினன். மனுவல் உபதேசியாரிட்டைக் கேட்டன். எங்கடை மருதடி ஒழுங்கேக்கை வைரவ கோயில் கட்டியிருக்ற இரத்தினத்தாரிட்டைக் கேட்டன். அவனிட்டைக் கேட்டன். இவனிட்டைக் கேட்டன். ஒரு பொறுக்கியுந் தர மாட்டெண்டுட்டாங்கள். கடைசியா வேலப்பாடை வண்டில் தான் உதவிச்சுது. பன் ரெண்டு மணி வெய்யில், தெய்வாயை வண்டியிலை ஏத்தித் தள்ளிக் கொண்டு போனன். ஆஸ்பத்திரிக்குக் கிட்டப்போகல்லை, தெய்வானைக்கு பன்னீர்க்குடம் உடைஞ்சு போச்சு. அவள் வெய்யிலிலை வாடிக் களைச்சிருந்தாள். சோடா வாங்கிக் கடுக்கவுங் காசில்லை.’

மனம் கனத்துக் கொதிக்கிறது.

‘இதுதான் போகட்டும். என்ரை நடுவிலான் அப்பு நானுஞ்சட்டை போடப்போறணனை’ எண்டு, ஆரா போட்டிருந்ததைக் கண்டுட்டு ஆசையிலை வந்து கேட்டான். வாங்கிக் குடுத்தனா? ஆறு மாசமாச்சு, அவனும் மறந்து போனான். ஓவசியற்ரை புள்ளையள் காலைமை எழும்பி சட்டை போட்டு, வெளுக்கிட்டு புத்தகங்களையுங் கையிலை தூக்கிக் கொண்டு முன்னாலை போய் ‘அப்பு போட்டு வாறம்” எண்டு சொல்லேக்கை எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்… அதுக்குத்தான் குடுத்து வைக்கல்லை’.

சம்போக உணர்வு மீண்டும் நரம்புகளுள் அசைகிறது.

என்ரை பொஞ்சாதியோடை கொஞ்சநேரம்… அதுக்கு என்ரை உழைப்புக் காணாதாம். நானுந்தான் நாள் முழுதும் உடம்பை வருத்தி உழைக்கிறன். தாற கூலியை மூண்டு ரூபாய்க்கு மேலை ஒரு பொறுக்கியுந் தாறானில்லை… இந்த உலகத்திலை எல்லாங் காசுக்காறனுக்குதான்…….

வாயில் இருந்து எடுத்துக் கை விரல் இடைக்குள் வைத்திருந்த சுருட்டு எரிந்து கையையும் சுட்டுவிடுகிறது. அதைத் தூர எறிந்து விட்டு காறித் துப்புகிறான். அவன் மனது கேட்கவில்லை . மனதுள் உறவுச் சபலத்தின் ஆட்டங்கள். வலக்கையை மடக்கித் தலையணையாக்கி, கால்களை முன்னிழுத்து மடக்கிச் சரிந்து படுக்கிறான். உடற்பரப்பில் உணர்ச்சியின் குருகுருப்பு உடலை நெளித்து அசைத்து மறுபக்கம் திரும்பிச் சரிகிறான். பக்கத்துவேலிப் பூவரச மரக்குடியுள் புகுந்து சிலிர்சிலித்து வந்த மென்காற்று, அவனின் உடல் முறிவுகளில் கீச்சிமாச்சி” விளையாடி கிலுகிலுப்பை காட்டுகின்றன. நிலவின் வெள்ளிக் கதிர்கள் சுடரை அலம்பல் கீற்றின் வழி வந்து மார்புக்கு ஒளி தடவுகின்றன. உடலும் உணர்வும் போருக்கு வீறு கொள்கின்றன.

ஆசை அலைகள் வேலனின் மனக்கரையில் வந்து வந்து மோதிக் கொள்கின்றன. ‘ரண்டு வருஷமா தெய்வானைக்குக் கிட்டவும் போகல்லை…. இண்டைக்குப் போனா… என்ன ?’ அலைகளின் புருவத்தில் பிறந்திடும் நுரை போர்த்துக் கொண்டு வந்து கரை அணைத்துவிட்ட உருவமற்ற உருவங்கள்.

வீரியத்துடிப்பு, அவனின் நரம்புமயிர்த்துளைகளினூடே குதி குதிக்கிறது.

‘என்ன வந்தாலும் இண்டைக்குத் தெய்வானையிட்டைப் போறதுதான்’, அவனின் முடிவான முடிவில் நிலைமையின் கூர்கள் முட்டுகின்றன.

“ஐயோ! பட்ட கஸ்டத்தை மறந்துட்டனே! என்ரை பேய்த் தனத்துக்கு இடங்குடுத்தா, நாளைக்கு ஐஞ்சாப் போயிடும். உழைச்சுப் போட முடியாதே …ச்சே, படைக்கிறவன் எப்படியும் படியளப்பான்….’

தன் நிலை சார்ந்து மனம் சமாதானம் கொள்கிறது.

‘இப்படிச் சொல்லி என்னை நானே ஏமாத்தினா…. நாளைக்கு விறகு கொத்தப் போகாட்டி எல்லாரும் பட்டினி!

மேவி எழுந்த அனுபவ அறிவு சமாதானத்தை முறிக்கிறது.

‘அதுக்காக என்ரை உணர்ச்சி அடக்கிறதா, வாறதுவரட்டும்…. என்னத்தைக் கண்டது? இதொண்டு தானே ? இதையும் ஒறுத்தா ஏன் சீவிப்பான்….? அப்புடியெண்டா மூச்சு விடுகிற பிணந்தானே நான்?’

நிலைமை அறிவை அடித்தொதுக்கி, ஆசையுணர்வு தான் கையுயர்த்தி நிற்கிறது.

“மியோ…வ்” ஒரு மழலைப் பிள்ளையின் அழுகைக்குரல் போல அவன் காதில் ஒலிக்கிறது. செவிப்பறையை விரித்து வைக்கிறான்.

“மி….யோ ….”

குடிலின் கோடிப்பக்கம், பெட்டையின் இசைவைப் பெறும் முயற்சியில், அதன் அருகில் குந்தி இருந்து, கடுவன் பூனை இசைத்திடும் உடற்தாப இரங்கல்.

‘இந்தப் பூனைக்கு இருக்கிற சுதந்திரம் எனக்கில்லையா?’ – அணுவாகி, கருவாகி, உருவாகி, உடலாகி நின்ற ஆசையும் உணர்வும் உயிராகி எழுந்து துடிக்கிறது. அவன் உணர்வின் சரிவில் தன்னையும் விழுத்திக் கொண்டான். படுத்துக் கிடந்தவன் மெல்ல எழுந்து இருக்கிறான்.

இனிமேல் தெய்வானைக்குக் கிட்டவும் போகமாட்டேன் என்று கொண்ட உறுதிகள்; ‘இந்த முறையுடன் வரமாட்டேன்’ எனத் தெய்வானைக்குக் கொடுத்த சத்தியங்கள்; நான்காவது பிள்ளைக்கு மருதடி ஒழுங்கையில் உள்ள வைரவகோயிலின் முன் நின்று, கற்பூரம் கொழுத்தி, அப்பனே வைரவா! நீ தான் காப்பாத்தவேனும், புள்ளை சனிக்காமல் செய்துவிடு அப்பனே!’ என்று மன்றாடிய நிகழ்ச்சி ஒன்றும் அவன் நினைவில் இல்லை.

விளக்கு அணைந்திருந்தது. குடிசை எங்கும் இருள். தட்டித் தடவித் தவழ்ந்து தெய்வானை அருகில் சென்று விட்டான்.

‘சதைக் கன்னங்கள் மழை ஒழுக்கு விழுந்த பள்ளமாகி, முனைகுத்திய மொக்குகள், வாய் சுருக்கிப்போட்ட சாக்குப்போல தொய்ந்து, மென்மையின் கூடு, அடுக்காக ஈன்றதில் ஒடிந்து மென்மை இழந்து கிடப்பது அவனுக்குத் தெரியவில்லை .

பக்கத்தில் கிடந்து “தெய்வானை!” பூனையைப்போல அழைத்தான்.

“தெய்வானை!” தோளில் தடவி உலுப்பினான்.

“இம்” அவளுக்குக் குறைத் தூக்கம்.

“இந்தப் பக்கம் திரும்பன்”

“ஏனாம்?” தெரியாதவள் போல,

“என்ன செய்யத் தெய்வானை?”

“என்ன செய்வதெண்டு பாத்துத்தான் நாலும் வந்துட்டுது ? இரண்டாம் புள்ளைக்குப் பிறகு எத்தினை சத்தியஞ் செய்தீங்கள். கட்டுப்பட்டீங்களா?…”

“நான் என்ன செய்ய?” – தாகத்தின் பெரு மூச்சு.

“இப்படித்தான் எல்லாத்துக்கும் ஏமாத்திட்டங்கள். இனி முடியா; யோசிச்சுப்பாருங்க; மூண்டு ரூபா உழைப்பிலை ஆறா சீவன் புட்டும் பட்டினியுமாக் கிடக்கிறம்… இப்ப எங்க ஆசை தீந்து போம்… நாளைக்குக் கஷ்டப்படக்கைதான்…”

“மெல்லமாச்சொல்லு தெய்வானை புள்ளையள் எழும்பிடும்”

“வேனுமானா” அவள் கூறிமுடிக்கவில்லை .

“அம்மா ! அம்மா ! அமோவ்…’ “என்னடா?”

கொஞ்சந் தண்ணி தாம்மா ! புட்டுக்கானா பசிக்குது” வேலனின் மூத்த மகன் எழுந்திருந்து கண்களைக் கசக்கினான்.

‘இம் கேளுங்கோ” என்று கூறிக்கொண்டே எழுந்து விளக்கைக் கொழுத்துகிறான். கண்களைக் கசக்கிக் கொண்டு இருந்தவன் விளக்கொளியில் தகப்பனை காணுகின்றான். “ஏனப்பு வந்தனி?”

“நான்… நான்… தண்ணி குடிக்கத்தான்” அவன் திக்குமுக்காடி விடுகிறான். விளக்கின் பரந்த ஒளியில் சுருண்டு கிடக்கும் நான்கு குழந்தைகளும் அவன் கண்களுக்கு நன்றாகத் தெரிகின்றன. ஒன்று வீங்கி முட்டி வெம்பல், மற்றவை எலும்புந்தோலும் கூட்டு சேர்ந்ததில் அடைந்த நயங்கள். மூத்ததின் அரையில் ஒரு கால் சட்டை மீதி பிறந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றின் உடலிலும் எலும்பும், தோலும் ஏற்படுத்தும் மேடு பள்ளங்களில் அவன் கண்களில் ஏறி இறங்குகின்றன.

புதிய விழிப்பு உணர்வும்.

‘இதுகள் என்ரை படைப்புகள்! நான் பெறுற சொற்ப நேரச் சுகத்துக்காக, சீவிய காலம் முழுக்க கஷ்டப்படப்போகிற உசிர்கள். இதுகளுடன் என்னொண்டைச் சேக்கிறபாவத்தைச் செய்யவா?…. ஐயோ ! கொடுமையே!

தெய்வானை தண்ணீரைப் பேணியில் வார்த்து, மகனிடம் கொடுத்துவிட்டு, அவன் குடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். வேலன் அவனைப் புதுமையாகப் பார்க்கிறான்.

“இவள் எனக்காக ஓமெண்டிடுவாள். ஆனா இவள் புள்ளைப் பெத்துக்கிடக்கேக்கை ஆன சாப்பாடு குடுத்தனா? புண் வயத்தோடு எத்தினை நாள் பட்டினி கிடந்திருப்பாள்? இந்த உடலோடையா என்னட்டை வந்தாள்?’

“இந்தாப்பு தண்ணி!”

தான் குடித்து, மீதியைத் தகப்பனிடம் நீட்டினான். வேலன் எண்ணம் கலைந்து, படக்கென இரு கைகளாலும் வாங்கி மட மட’ வெனக் குடிக்கிறான். உடலில் வீரித்துப்பரந்த உணர்ச்சி, குளிர்ந்து விறைக்கின்றது. வேலன் ஞானியின் நிலைக்கு இறங்குகிறான். இதயத்தின் கவசம் குறாவி மூடுகிறது.

“இனிமேல் நான் இந்தப் பக்கம் வரமாட்டன்”. உதடுகள் அசைந்து, கண்களில் பனித்திரை படர்கிறது. உயிராகி நின்ற ஆசை நோய்ப்பட்டு அமுங்குகிறது.

‘கடவுளே எத்தினி இட்டுமுட்டுக்கள்?’ இதயம் முனகி அடங்கி விடுகிறது.

அவனின் உணர்வாகி அவனையே பார்த்துக்கொண்டு, ஏங்கி இருந்த தெய்வானை, நெஞ்சம் அலைமோதி கண்களில் இருந்து வழிந்த நீரைச் சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டு, விழுந்து குறண்டிக்கொள்கிறாள். அவள் கண்களும் மனமும் வேலனையே அனுதாபத்துடன் நோக்குகின்றன. வேலன் திண்ணையின் தெற்கு மூலைக்கு வந்து, முன் வளைந்து, முழங்கால்களை மடக்கி இழுத்துக் கொண்டு கிடக்கிறாள்.

அவனைப் பார்க்கப் பார்க்கத் தெய்வானைக்குத் தான் செய்தது குற்றமாகப் பட்டுப் பட்டு அழிகிறது. அவன் மேல் இரக்கமும், அனுதாபமும் அரும்பி வளர்கிறது. அவனையே பார்த்துக் கொண்டு, அவனின் கோலத்தில் கிடக்கிறாள். மூண்டாஞ் சாமக்கோழி கூவி ஓய்கின்றது. இருளின் கனம் குறையவில்லை. அப்போது தான் வேலனுக்கு கண்கள் அயர்ந்து போகின்றன.

கீழ் வானம் கன்னியின் கன்னச்சிவப்பைத் தன் வதனத்தில் பூசிக் கொள்கின்றது. தெய்வானை தன் இடத்தில் இல்லை. ‘றிக்ஷோ’ பெட்டிபோல வளைந்து சோர்ந்து கிடக்கும் வேலனின் முதுகுக்கு, முதுகுகாட்டி வளைந்து கிடக்கிறாள். கூந்தல் கலைந்து பரவிக் கிடக்கிறது.

இருவருக்கும் விடிந்து விட்டது தெளிவாகத் தெரிகிறது. எழுந்திருக்க முடியாமல் இருவரும் குற்ற உணர்வில் தம்மை முழுதும் உட்படுத்திக் கிடக்கிறார்கள்.

– 1966, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *