“இந்த வருஷக் கிறிஸ்துமஸ்க்கு கிராமத்துக்கு வந்துரு மேரி..” ஆசையாக அழைத்தார் ஆல்பர்ட்.
“வந்துடறேன்ப்பா.” என்ற மேரி, “அம்மா, பக்கத்துல இருந்தாப் போனைக் கொடுப்பா!” என்றாள்.

ஹலோ, மேரி, உனக்கு ரொம்பப் பிடிச்சக் “குடில் அமைச்சி’ டெக்கரேட் பண்றேன். டூட்டி கீட்டினு ஏதாவது சொல்லி வராம வெச்சிராதே…!” என்றாள் அம்மா எடுத்த எடுப்பில்.
“கண்டிப்பா வந்துடறேம்மா…! சீஃப் டாக்டர் கிட்டே சொல்லி வெச்சிட்டேம்மா;
எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்;
நீ போயிட்டுவானு சொல்லிட்டாரு;. கண்டிப்பா வருவேம்மா!”
“ஓ கே டா கண்ணு..!”
ஃபோனுக்கு முத்தம் கொடுத்தாள் அம்மா.
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்.
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்துப் பள்ளிகளுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை விடுவார்கள்.

வருடத்தின் இறுதி வாரத்தில் வரும் மகிழ்ச்சிப் பண்டிகை.
காலாண்டுத் தேர்வு முடிந்ததும் தசரா விடுமுறையில் உலகம் முழுதும் பரவியுள்ள இந்துக்கள் கொலு வைத்து மகிழ்வதைப்போல, அரையாண்டு விடுமுறையில் உலகம் தழுவிய கிறித்தவர்கள் வீடுகளில் ஏசு கிறிஸ்துவின் பல்வேறு வாழ்க்கைக் கட்டங்களைச் சித்தரிக்கும் கொலு வைப்பார்கள்.
அடுத்து வரும் புத்தாண்டுக்கு கட்டியம் கூறுவது போல வரும் பண்டிகை இது.
கிறிஸ்துமஸ் மரம் வைத்து அலங்கரித்தல்;
கிறிஸ்துமஸ் தாத்தாவும், புகைக்கூண்டும் கட்டி அலங்கரித்தல்/
குடில் கட்டி ஆனந்திப்பார்கள்.
இப்படி பலவிதமாய் கொண்டாடும் பண்டிகை இது.
சின்ன வயதிலிருந்தே ‘குடில் கட்டி ஏசுவின் பிறப்பை சிரத்தையாக அலங்கரித்துக் கொண்டாடுவதுதான் மேரிக்கு மிகவும் பிடிக்கும்.
ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே, குடில் கட்டுவதற்காக ஓலைகள், வைக்கோல், குச்சிகள், சணல், நார், அட்டைகள், வண்ணங்கள், வண்ணக் காகிதங்கள், பசை, செலோடேப், பாசி மணிகள்… என பலவிதமான அலங்காரப் பொருட்களைச் சேகரம் செய்வாள்.
பண்டிகைக்கு முதல் நாள் முழு ஈடுபாட்டுடன், குடில் கட்டுவதிலேயே மூழ்கிவிடுவாள் மேரி.
சிறப்பாகக் கட்டியத் தன் குடிலில், ,குழந்தை ஏசு, மரியாள்,பொம்மைகளையும், குடிலுக்கு வெளியே, யோசேப்பு, இடையர்கள் போன்றோரையும்,குடிலுக்கு அருகாமையில் மலைகளுக்கும் மரங்களுக்கும் நடுவே தேவ தூதர்கள், மூன்று அரசர்கள் என பொம்மைகளையெல்லாம் வைத்து அலங்கரிப்பாள்..

‘Journey of the Magi’ என்ற டி எஸ் இலியட் எழுதிய கவிதையின் வரிகளைச் சொல்லி, அந்த மூன்று அரசர்கள் செய்த பயணத்தின் கடுமையை, மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் கூறப்பட்ட அடிப்படையான குடில் சித்தரிப்பு நிகழ்வுகளைக் கண்ண் முன் கொண்டுவந்து குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மீகத் தேட்டையை ஊட்டியத் தாத்தாவை இப்போது நினைத்துப் பார்த்தாள் மேரி.
தாத்தா தற்போது இல்லையே என்கிற ஏக்கம் ஒரு கணம் வந்து போனது மேரிக்கு.
“புறப்பட்டாச்சா மேரி?”
“இன்னும் அரை மணீல புறப்பட்ருவேம்மா…!”
“காலா காலத்துல புறப்படு மேரி. பொழுதோட வீடு வந்து சேரு. ராத்திரி நேரத்துக் கார்ப் பயணம் அவ்வளவு பாதுகாப்பில்லம்மா..”
கவலைப் படாதம்மா ‘ஆஸ் எர்லியர் வந்துடறேன்மா.”
காரில் வரும்போது, பிரார்த்தனைக் கீதங்களை மெலிதாக ஓடவிட்டுக் கேட்டு ரசித்துக்கொண்டே வந்தாள் மேரி.
நான்கு மணி நேரப் பயணத்திற்குள் நாற்பது முறையாவது போன் செய்திருப்பாள் அம்மா.
“மேரி, எந்த இடத்துல வந்துக்கிட்டிருக்கே?;
இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவேதானே?.
கேட்பாள்.
“மேரி, அடுத்த கிறிஸ்த்துமஸ் நீ உன் புருஷன் வீட்ல கொண்டாப் போறே!”
அருள்வாக்குப் போலச் சொல்வாள்.
“மிட்நைட் மாஸ்க் போகும்போது, கிளாரா தன் வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கா. அங்கே போயிட்டுப் போகணும். சரியா?”
“சரிம்மா.” ஒத்துக்கொண்டாள் மேரி.
சீரியல் செட் வாடகைக்கு எடுத்துப் போட்டிருக்கேன் பாரு. என்று சொல்லி, உடனடியாக செல்போனில் போட்டோ எடுத்து அனுப்பினான்.
“சூப்பரா இருக்கும்மா.” என்றாள் மேரி.
“உனக்கு ரொம்ப பிடிச்ச சாக்லட் கேக் பண்ணி வெச்சிருக்கேன் பாரு..”
வீடியோ கால் போட்டுக் காண்பித்தாள்.
தாய்ப் பாசத்தில் நனைந்துக் கொண்டேப் பயணித்துக் கொண்டிருந்தாள் மேரி.
கார் ஒரு கிராமத்துச் சாலையில் சென்று கொண்டிருந்தது.
இருட்டத் தொடங்கிவிட்டது.
‘அம்மாச் சொன்னதுபோல கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பியிருக்கலாமோ?’ என்று தோன்றியது மேரிக்கு.
‘கிளம்புகிற நேரத்தில் ஒரு பேஷண்ட் வரும்போது அதை பார்த்துட்டுத்தானே வரமுடியும்.?’
தனக்குள்ளேயே சமாதானமும் செய்து கொண்டாள்.
சாலையில் தீவட்டி பிடித்தபடி நின்றனர் சிலர்.
காரை மரித்தனர்.
“கொஞ்சம் ஸ்லோ பண்ணுங்க மைக்கேல். என்னனு ஸ்ட்டி பண்ணுவோம்..”
கார் வேகம் குறைந்து, மிக மெதுவாகச் சென்றது.
கூர்ந்துக் கவனித்துப் பார்த்தபோது அந்தக் கும்பலில் பெண்கள் பலர் இருந்தது தெரிந்தது.
“பார்த்தா அடாவடிக் கூட்டமாத் தெரியலை. ஏதோ அவரத்துக்குக் கார் நிறுத்தறாப்ல தெரியுது.”
“அப்படித்தாம்மா எனக்கும் படுது..” என்றார் டிரைவர்.
“ஏதாவது மெடிக்கல் அர்ஜென்சியாத்தான் இருக்கும். அதை அட்டண்ட் செய்ய வேண்டியது டாக்டரான என் கடமை. நிறுத்துங்க மைக்கேல்.”
காரின் முன் புறம் சிகப்புக் கூட்டல் குறியிட்டு மருத்துவர் என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் தெய்வத்தையேப் பார்த்ததைப் போல் பதவிசாய் அருகில் வந்தார்கள் கிராமத்து ஜனங்கள்.
உள்ளே அமர்ந்திருப்பது பெண் என்பது தெரிந்ததும் ஆண்கள் விலகிக் கொண்டார்கள். கிராமத்துப் பண்பாடு அது.
மேரியின் அருகில் வந்து விபரம் சொன்னார் ஒரு பெண்..
“அப்படியா? வீடு எங்கே?” கேட்டாள் மேரி.
மிகவும் பின் தங்கிய கிராமம் அது.
கார் செல்லும் அளவுக்குப் பாதை இல்லை.
மிகக் குறுகலான பாதை.
முன்னும் பின்னும் ஆண்கள் தீவட்டி பிடித்துக்கொண்டே சென்று வெளிச்சம் காட்டினர்.
டாக்டர் மேரிக்குப் பாதுகாப்பாக முன்னும் பின்னும் இரண்டு பெண்கள் அரிக்கேன் விளக்குடன் வந்தார்கள்.
மேரிக்கு இது மிகவும் புதிய அனுபவமாக இருந்தது.
டிரைவர் மைக்கேல் டாக்டரின் முதலுதவிப் பெட்டியோடு வந்தார்.
மிட்நைட் மாஸ்’ களைக் கட்டத் தொடங்கிவிட்டது தேவாலயத்தில்.
‘இன்னமும் மேரியைக் காணோமே?’
மிகவும் கவலைப்பட்டாள்;
பல முறை ஃபோன் செய்தாள் மேரியின் அம்மா.
தொடர்ப்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக அறிவிப்பு வந்தது.
பனிக்குடம் உடைந்துவிட்டது அந்த ஏழைத் தாய்க்கு.
ஒரு மகப்பேறு மருத்துவராக, மேரி, தன் தொழிலில் முழு கவனம் செலுத்தினாள்.
கிட்டத்தட்ட அரை மணி நேரம் போராடினாள்.
கீற்றுக்கள் இற்றுப்போன பழைய ஓலைக் குடிசையினுள் ஆங்காங்கே அறுந்து ஒட்டுப் போட்டவைப் போக, அட்டைகளும், பழைய துணிகளும் அண்டைக் கொடுக்கப்பட்ட அந்தக் கயிற்றுக் கட்டிலில் படுத்த நிலையில் ஒரு சுகப்பிரசவம்.
“குவா…!குவா…!குவா…!”
அரிக்கேன் விளக்கு, சிமினி விளக்கு, மெழுகு வர்த்தி இவைகளின் ஒளியில். அழகிய ஆண் குழந்தையை உள்ளங்கையில் தாங்கினாள் மேரி.
காலாகாலத்தில் கிளம்பியிருந்தால் இந்நேரம் வீட்டுக்குச் சென்றிருப்போம். செல்லுலாய்டு பொம்மைகளை வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டக் குடிலையும் அதில் ஏசுப் பிறப்பின் காட்சிகளை விஸ்தரிக்கும் பொம்மைகளையுமே கண்டு களித்திருப்போம்; நிழலைத்தான் தெரிசித்திருப்போம்.
தன் உள்ளங்கையில் , மரியாள் ஈன்ற ஏசுபிரான் போல, எளிமையானக் குடிலில் பிறந்தக் குழந்தையின் குவாக் குவாவும் கையசைப்பும், பரம பிதாவின் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களுமாகவேத் தெரிந்தன மகப்பேறு மருத்துவர் மேரிக்கு.
உண்மையான கிறிஸ்த்மஸ் ‘மிட் நைட் மாஸ்’ல் கலந்துகொண்டு நிஜத்தை தரிசனம் செய்த திருப்தியில் கிராமத்துக்குத் திரும்பினாள் மேரி.
– 25-12-2022