சுயம்பிரகாசர் எங்கேயோ ஒரு பொதுக்கூட்டத்திற்குப் போய்விட்டுத் திரும்பியவர், தீவிர சிந்தனையில் ஈடுபட்டவர்போல அறையில் குறுக்கும் நெடுக்குமாக உலாவ ஆரம்பித்தார். நான் முதலில் அவர் முகத்தைக் கவனிக்காததால், “சாப்பிடுவோமா?” என்றேன். நான் சொன்னது அவர் காதில் விழாததுபோல, அவர் மறுபடியும் வளையம் வந்து கொண்டிருந்ததைக் கண்டவுடன்தான் அவர் முகத்தைப் பார்த்தேன்.
மறுபடியும் அவரைச் சாப்பிடக் கூப்பிட வாய் எடுத்தேன். அறையின் மறுகோடிக்குப் போனவர் வேகத்துடன் திரும்பி, “வால் மீகிதான் எழுதவில்லை ; கம்பரும் ஏன் அதை விட்டு விட்டார்?” என்றார். நான் ஒன்றும் புரியாமல்,”எதை?” என்றேன்.
சுயம்பிரகாசர், “ராமாயணத்தில் ஒரு சிறு சம்பவம்; ஆனால் ரொம்ப ரொம்ப அர்த்தம் நிறைந்தது” என்று ஆரம்பித்தார்.
ராவணன் சீதாபிராட்டியாரைக் கவர்ந்து சென்றுவிட்டான். ஸ்ரீராமனும் லக்ஷ்மணனும் தேவியைத் தேடிக் கொண்டு கிஷ்கிந்தை வந்து சேர்ந்தார்கள். ஹநுமான் கடல் கடந்து சென்று லங்கையின் அசோக வனத்தில் பிராட்டியாரைக் கண்டு வந்து தெரிவித்தாயிற்று. வானரப் படைகளைத் திரட்டும்படி சுக்கிரீவனுக்கு ஆக்ஞையும் பிறப்பித்தாகி விட்டது.
இந்த நிலைமையில் லக்ஷ்மணன் மனத்தில் ஒரு சிறிய சந்தேகம் பிறந்தது. ‘ராவணன் பெரிய வரப்பிரசாதி. தேவதேவர்களை எல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டிருப்பவன். ராட்சஸர்களுக்கே ராட்சஸன். அப்படிப்பட்டவனை எதிர்த்துப் போர் செய்ய, அண்ணா வெறும் வானரங்களை மாத்திரம் நம்பிப் புறப்பட நினைக்கிறாரே! அக்கம் பக்கத்திலிருந்து மனிதர்களையும் திரட்டி ஒரு படை சேர்ப்பது நல்லதல்லவா? என்று எண்ணினான். இந்த அபிப்பிராயத்தை ஸ்ரீராமனிடம் நேரடியாகச் சொல்ல அவனுக்குத் தைரியமில்லை. அதனால் ஜாடைமாடையாகத் தெரிவித்தான்.
ஆனால் ஸ்ரீராமன் அதற்குப் பதில் சொல்லாமல் வெறுமனே புன்னகை செய்தார். அது லஷ்மணனுக்குச் சமாதானம் அளிக்க வில்லை. அதனால் இன்னொரு சமயம் கொஞ்சம் நேரடியாகவே அதைச் சொல்லிவிட்டான், –
அதற்கும் மேலும் அந்த அபிப்பிராயத்தை வளர விடுவது உசித மல்ல என்று ஸ்ரீராமன் முடிவு செய்தார். “அதுவும் ஒரு நல்ல யோசனை தான். அன்று அதைப் பற்றி நீ சொல்லிய போதே நானும் யோசித்தேன். நாளையே இருவரும் போய் முயற்சி செய்வோம். ஒரு சிறு படை சேர்ந்தாலும் அதுவும் பலம்தானே?” என்றார்.
மறுநாள் அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர். அவர்கள் மலையிலிருந்து இறங்கி வெகு தூரம்கூடப் போகவில்லை. அரை நாழிகை தூரத்திலேயே ஒரு சிறு கிராமம் தென்பட்டது.
கிராம எல்லையை அடைந்தபோது அங்கு ஆள் நட மாட்டமே இல்லாததைக் கண்ட லக்ஷ்மணன், “அண்ணா! ராட்ச ஸபயம் இந்தப் பக்கத்து ஜனங்களை எப்படி ஆட்டிக் கொண்டிருக் கிறது, பாருங்கள், சூரியோதயமாகி எட்டு நாழிகையாகியும் இன்னும் கிராமத்தின் எல்லையில்கூட ஆள் நடமாட்டம் இல்லை” என்றான்.
ஸ்ரீராமன் பதில் சொல்லாமல் புன்னகை செய்துவிட்டு நடந்தார். இருவரும் கிராமத்தின் கோடியிலிருந்த மைதானத்தில் நுழைந்தவுடன், கிராமத்தின் மத்தியிலிருந்து வாத்தியங்களின் முழக்கம் வருவது தெளிவாயிற்று. இன்னும் கொஞ்சம் அருகில் போனவுடன், தெருவின் மத்தியில் ஒரு பந்தல் போடப் பட்டிருந்ததும், அங்கே ஜனங்கள் கூடி இருந்ததும் தெரிந்தன.
அதைக் கண்டவுடன் லக்ஷ்மணன், “ஓஹோ! கிராமத்தில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது. ஜனங்கள் எல்லாம் வந்து கூடியிருக்கிறார்கள்” என்றான்.ஸ்ரீராமன் அதற்கும் ஒன்றும் பதில் சொல்ல வில்லை.)
இருவரும் நேரே பந்தல் போட்டிருந்த இடத்திற்கே சென்றனர். அங்கே காணப்பட்ட ஆண்களும், பெண்களும் விதவிதமாக அலங் கரித்துக் கொண்டு கோலாகலமாக இருந்தனர். இவர்கள் பந்தலை நெருங்கியபோது அங்கே கூடியிருந்தவர்களில் சிலர், யாரோ இரு புதியவர்கள் வில்லும் கையுமாக வந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தனர். அதற்கும் மேல் அந்தக் கூட்டத்தில் ஒருவன்கூட இவர்களைப் பற்றிக் கவலையோ அக்கறையோ கொண்டதாகத் தெரியவில்லை.
அதைக் கவனித்தலக்ஷ்மணனுக்கு. அண்ணாஸ்ரீராமசந்திரன், சக்கரவர்த்தித் திருமகன் நேரில் வந்தும்கூட இந்த ஜனங்கள் கண்டு கொள்ளாமலும், கவனிக்காமலும் இருக்கிறார்கள், பார்த்தாயா?” என்ற வருத்தம் எழுந்தது.ஸ்ரீராமன் அவன் சிந்தனைகளைப் பேசக் கேட்டவர் போல், “லக்ஷ்மணா! அவர்களுக்கு நாம் யார் என்பது தெரியாது. தெரியாமல் இருப்பதுதான் நல்லது. பின்னால் அவசிய மானால் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். லக்ஷ்மணன் மனம் சமாதானமடையா விட்டாலும், பேசாமலிருக்க வேண்டியது கட்டாயமாகி விட்டது.
சகோதரர்கள் இருவரும் பந்தலை நெருங்கி வெளியிலிருந்த படியே உள்ளே கவனித்தனர். உள்ளே ஒரு கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் வந்து சேர்ந்த சமயமும், மாங்கல்யதாரண முகூர்த்தமும் ஒன்று கூடின.
புரோகிதர் மாங்கல்யத்தைக் கையிலெடுத்து ஆசீர்வதித்து, மண மேடையைச் சுற்றியிருந்த பெரியோர்களிடம் நீட்டினார். அவர்களும் ஆசீர்வதித்துக் கொடுத்தவுடன் மணமகனிடம் கொடுத்தார். வாத்தியங்கள் வேகமாக முழங்கத் தொடங்கின. புரோகிதர் சொன்ன மந்திரத்தைச் சொல்லிக்கொண்டேமணமகன் மாங்கல்யத்தைப் பெண்ணின் கழுத்தில் கட்டினான்,
அதே சமயம் வாத்திய முழக்கங்களுக்கு மேல், “ஐயையோ! ராட்சஸன் வந்துவிட்டானே!” என்று ஓர் அலறல் கேட்டது! அவ்வளவுதான்! பந்தலுக்குள் ஒரே களேபரமும் குளறுபடியுமாகி விட்டன. ஆண்களும் பெண்களும் உயிருக்குக் கூவிக் கொண்டு அலங்கோலமாக மூலைக்கு மூலை ஓடினர். வாத்தியங்கள் சடக்கென்று நின்றன. அதற்குப் பதில் அலறலும் கதறலுமாகக் கூச்சல் நிறைந்தது.
ராட்சஸன் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் லக்ஷ்மணன் தோளில் இருந்த வில்லைக் கழற்றி, நாணைப் பூட்டிவிட்டான்.
ஸ்ரீ ராமன் அவன் தோளைத் தொட்டுத் தணிந்த குரலில், “லக்ஷ்மணா! அவசரப்படாதே!” என்றார். தம்பியும் கையில் வில்லுடன் அப்படியே நின்றான்.
பந்தலின் இன்னொரு வாசல் வழியாக ஒருராட்சஸன் கையில் ஒரு பெரிய மரக் கிளையுடன் உறுமிக் கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் வந்த வேகத்தில் அவன் கையிலிருந்த கிளை அடித்து, அந்தப் பக்கம் பந்தல் முழுவதும் கந்தல் கந்தலாகிவிட்டது.
ராட்சஸன் பந்தலுக்குள் நுழைந்தவுடன், ஓட முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட சிலர் கடைசி அலறலாக ஒரு தரம் அலறிவிட்டு அப்படி அப்படியே தரையில் சாய்ந்தனர். அதை ஒரு வேடிக்கையாக அநுபவித்துக் கொண்டு ராட்சஸன் திரும்பினான்.
மண மேடையிலிருந்த தம்பதிகள் இருவரும் புரோகிதரும் என்ன செய்வதென்று தோன்றாமல் அப்படியே இருந்து விட்டனர். ராட்சஸன் அவர்களைக் கண்டான். கோரமான குரலில் கடகட வென்று சிரித்து அந்த மண மேடையை நோக்கிப் பாய்ந்தான்.
அதைக்கண்ட புரோகிதர் எதிரிலிருந்த ஹோம குண்டத்தி லிருந்து கொஞ்சம் சாம்பலை எடுத்துப் பூசிக் கொண்டு உரத்த குரலில், ‘சிவசிவ’ என்று ஜபிக்கத்தொடங்கினார். மணமகன் நின்ற நிலையிலே கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு விட்டான். மணப்பெண் பயத்தால் அவள் புருஷனிடம் நெருங்கி அவனுடன் ஒண்டிக் கொள்ள முயன்றாள்.
ராட்சஸன் மண மேடையை நெருங்கி, புருஷனுடன் ஒட்டிய மணப் பெண்ணை ஒரு கையால் இழுத்து வாரி எடுத்துக்கொண்டு திரும்பினான். அவன் அருகில் வந்தவுடன் புரோகிதர் முன்னிலும் அதிக வேகமாகவும் உரத்த குரலிலும் ‘சிவசிவா’ என்று ஜபித்துத் தள்ளினார்.
ராட்சஸன் மணப்பெண்ணைத் தொட்டவுடன், லக்ஷ்மணன் அண்ணாவின் கட்டளையையும் மறந்து அம்பறாத் தூணியில் கை வைத்து ஓர் அம்பை எடுத்தான். அங்கே நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டு நின்றஸ்ரீராமன் கொஞ்சம் அதட்டிய குரலில், “லக்ஷ்மணா!” என்றார். லக்ஷ்மணன் கை அப்படியே நின்றுவிட்டது.
ராட்சஸன் பெண்ணுடன் சாவகாசமாகப் பந்தலைவிட்டு வெளியேறி நடந்தான். அவன் அந்தத் தெருக் கோடிக்குப் போய் மைதானத்தில் நுழைந்தவுடன், புரோகிதர் ஜபத்தை நிறுத்தி மணமகன் பக்கம் திரும்பினார். அவன் அப்பொழுதும் கண்ணை இறுக மூடியபடியே நின்றான்.
புரோகிதர், “ராட்சஸன் மைதானத்துப் பக்கம் போய் விட்டான். கண்ணைத் திறவுங்கள். அதென்ன, உங்கள் மனைவியை அவன் தூக்கிக் கொண்டு போகிறான்; கண்ணை மூடிக்கொண்டு விட்டீர்களே!” என்றார்.
மணமகன் கண்ணைத் திறந்து ராட்சஸன் போய்விட்டது உண்மைதானா என்பதை நிச்சயம் செய்து கொண்டு திரும்பி, “அந்தப் பாவத்தை நம்ம கண்ணாலே பார்ப்பானேன்? பகவான் இருக்கிறார், பார்த்துக் கொள்கிறார் என்றுதான் கண்ணை மூடிவிட்டேன்” என்றான்.
அவன் அதைச் சொல்லியவுடன் ஸ்ரீராமன், “லக்ஷ்மணா! அதோ போகிறான் ராட்சஸன்” என்றார். லக்ஷ்மணன் அம்பு விர்ரென்று பாய்ந்தது. மைதானத்தின் நடுவில் ராட்சஸன் கோரமாக அலறிக்கொண்டு கீழே சாய்ந்தான்.
ஸ்ரீராமன் லக்ஷ்மணன் தோளைத் தொட்டுவிட்டுப் புறப்பட்டார்.லக்ஷ்மணன் வில்லின் நாணைக் கழற்றிப் பழையபடி தோளில் மாட்டிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான். இருவரும் கிராம எல்லையைத் தாண்டும் வரை மௌனமாகவே சென்றனர். அதற்கு மேலும் தன் மனக் கொந்தளிப்பை அடக்க முடியாமல் லக்ஷ்மணன், “அண்ணா ! என்ன பரிதாபம் இது! மனிதர்கள் புழுக்களைப் போலாகிவிட்டார்களே!” என்றான்.
ஸ்ரீராமன் புன்னகையுடன் அவனைப் பார்த்து “அவர்களை மறுபடியும் மனிதர்களாக்கத்தான் இப்போது நாம் லங்கைக்குப் போகிறோம்.ஜானகிக்காக மாத்திரமல்ல” என்றார்.
இவ்வாறு கதையை முடித்து நிறுத்தினார் சுயம்பிரகாசர். இந்தக் கதையை அவர் மனத்தில் தூண்டிய சம்பவத்தைப் பற்றி அவரிடம் கேட்க வேண்டும் என்று இதுவரை நாலைந்து தடவை முயன்றேன். ஆனால் இது வரை கேட்கவில்லை.