ஆதிசங்கரர் முதல், அண்மைக் காலக் கண்ணதாசன் வரை அனைவராலும் பாடப் பெற்றவர் ஸ்ரீராமர்.
சித்த புருஷர்களிலேயே தலைசிறந்தவரான சிவவாக்கியர் ‘ஒளியதான காசி மீது’ என்ற பாடலில், ‘எளியதான ராம ராம ராம இந்த நாமமே’ என்று ராம நாமத்தின் மகிமையைப் பாடுகிறார்.
சென்னைக்கு அருகில் உள்ள மணலி என்ற ஊரில், ‘ராம நாடகக் கீர்த்தனை’ என்ற பெயரில் ராமாயணத்தைக் கீர்த்தனைகளாகவே எழுதிய அருணாசலக் கவிராயருக்கு, மணலி வள்ளல் கனகாபிஷேகம் செய்து வைத்த வரலாறும் உண்டு.
ஒரு சமயம், கவியரசர் கண்ணதாசன் கைகளில் ஒரு துண்டு பேப்பர் கிடைத்தது. அதில்…
பட்டாபிஷேகத்திற்குப் பின் நடந்த ஒரு நிகழ்ச்சி அச்சிடப்பட்டிருந்தது.
ராமர், லட்சுமணனை அழைத்து சீதையைக் கொண்டு போய், காட்டில் விட்டு விட்டு வரும்படி உத்தரவிட்டார். அப்படியே செய்துவிட்டு லட்சுமணன் திரும்பிய போது…
ராமர் அழுதுகொண்டிருந்தார். லட்சுமணன் திகைத்தான். “அண்ணா! நீங்கள் சொல்லித்தானே நான் தேவியைக் காட்டில் கொண்டு போய் விட்டேன். இப்போது ஏன் அழுகிறீர்கள்?” என்றான்.
அதற்கு ராமர், “லட்சுமணா! சீதையைக் கொண்டு போய்க் காட்டில் விடச் சொன்னது அரசன், ராஜாராமன். ஆனால், இப்போது அழுவது ராஜாராமனல்ல! சீதையின் துணைவன் – கணவன் – சீதாராமனாக அழுதுகொண்டிருக்கிறேன்” என்றார்.
அதைப் படித்ததும், ராஜாராமனுக்கும் சீதாராமனுக்கும் உள்ள வேற்றுமை கண்ணதாசன் உள்ளத்தில் பதிந்தது. அவ்வளவுதான்! ராமாயணத் தகவல்களை உள்ளடக்கி, பலவிதமான ‘ராம’ திருநாமங்களைச் சொல்லி, ஒரு பாடலை உருவாக்கிவிட்டார். அப்பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது. பாடல்…
ராமன் எத்தனை ராமனடி (லட்சுமி கல்யாணம் என்ற படத்தில்) என்ற அப்பாடல் ராமருடைய செயல்களைச் சொல்லி, அதன் காரணமாக ராமருக்கு உண்டான பெயர்களைச் சொல்லி…
ராமரை நம் உள்ளத்தில் கொலுவிருக்க வைக்கிறது.
இவ்வளவு பேர் ராமரைப் பாடியிருக்கும்போது, திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் மட்டும் விட்டு விடுவாரா என்ன?
முதல் பாடலான ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற பாடலிலேயே, அதுவும் தொடக்கத்திலேயே ‘பத்துத் தலை தத்தக் கணைதொடு’ என்று ராமரைப் பாடித்தான் துவக்குகிறார்.
ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அருணகிரிநாதர் அனுபவிக்கும் அழகு, தனி அழகு.
தேவர்கள் வேண்டுகோளுக்காகப் பரம்பொருள் ராமராக வந்து அவதரித்ததைச் சொன்ன அருணகிரிநாதர்…
ராமரின் குழந்தைப் பருவத்தை வர்ணித்திருப்பதைப் பார்த்தால்…
ஆகா! நம்மைப் பரவசப் படுத்தும் அது!
வாருங்கள் பரவசப்படலாம்!
ஒருநாள்…
கோசலாதேவி தன் குழந்தை ராமரைப் பால் குடிக்க அழைக்கிறார். ராமரோ, இங்கும் அங்குமாக விளையாட்டுக் காட்டுகிறாரே தவிர, பால் குடிக்க வரவில்லை.
அப்போது கோசலாதேவி, ராமரைக் கொஞ்சி அழைக்கிறாள். அதை அப்படியே ஒரு நேர்முக வர்ணனையாகக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.
எந்தை வருக! ரகுநாயக வருக!
மைந்த வருக! மகனே இனி வருக!
என் கண் வருக! எனதாருயிர் வருக! – அபிராம!
இங்கு வருக! அரசே வருக!
முலை உண்க வருக! மலர் சூடிட வருக!
என்று பரிவினோடு கோசலை புகல வருமாயன்…
(தொந்திசரிய – திருப்புகழ்)
அபூர்வமான அமைப்பு கொண்ட பாடல் இது!
இதில் ‘வருக’ என்ற சொல் பத்து முறைகள் வந்திருக்கின்றது. அதாவது, “ராமா! என் குழந்தையாக வந்து, நீ ஓடி ஆடி விளையாடினாலும், தச அவதாரங்களில் ஒன்று நீ! அதை உணர்வேன் நான். அவதார புருஷா! அன்னையின் அருகில் வா!” என்று அழைக்கிறாள் கோசலை.
ஆனால், ராமர் வருவதாக இல்லை. “எங்க அப்பா! வாடா! வா!” என்று நாம் அழைப்போமே, அது போல ‘எந்தை வருக!’ என அழைக்கிறாள்.
“ரகுகுலதிலகா வா!” என அழைக்கிறாள்.
ஊஹூம்! அப்போதும் ராமர் வரவில்லை.
“மைந்தா! வா! மகனே! வா!” என அழைக்கிறாள்.
மைந்தன் வேறு, மகன் வேறா? – என்றால்… ஆம்!
தானும் வாழ்ந்து, தன் குடும்பத்தையும் வாழ வைப்பவன் மகன். தானும் வாழ்ந்து, பல குடும்பங்களையும் வாழ வைப்பவன் மைந்தன்.
ராமர், எல்லோருக்கும் வழிகாட்டி வாழ வைப்பவர். சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் அரச வாழ்வை அளித்த அவதார புருஷரல்லவா அவர்!
ராமரின் இந்த உயர்ந்த குண நலனைக் குறிப்பிட்டே, ‘மைந்த வருக!’ என்றாள் கோசலை.
ஆனால் ராமரோ, நகர்ந்து வருகிறாரே தவிர, அருகில் வரவில்லை. சற்று விலகியே நிற்கிறார்.
‘என் கண் வருக!’ – “என்னிடம் வா!” என்கிறார் கோசலை. “என் ஆருயிரே வா! இங்கு வா!” என அழைக்கிறாள்.
இவ்வளவு அழைப்பும் எதற்காகவாம்?
வேறு எதற்கும் இல்லை! பால் குடிப்பதற்காகத்தான் இந்தப் பாடு!
“ராமா! வா! பாலைக் குடி! மலர் சூடி அலங்காரம் செய்துகொள்ள வா!” என வேண்டுகிறாள் கோசலை.
இவ்வளவு அழைப்புகளையும் அவள் – ‘பரிவினோடு கோசலை புகல’ – பரிவோடு சொல்லி அழைக்கிறாள்.
மிகவும் பொருள் பொதிந்த, இக்காலத்திற்கு மிகவும் முக்கியமான தகவல் இது.
குழந்தைகள் என்றால் அப்படித்தான் இருக்கும். அவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். அதை விட்டு…
“வந்து தொலையேண்டா! இல்லாட்டி, பாலைக் கீழே வெச்சுட்டுப் போயிடுவேன்” என்று குழந்தைகளிடம், குரலை ஓங்கி முகத்தைக் காட்டக் கூடாது.
கோசலை இதைத்தான் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறாள்.
அவள், பரிவோடு அழைக்கிறாள் ராமரை. அதன்பின், ராமர் வராமல் இருப்பாரா? ஓடி வந்துவிட்டார். அவரை அள்ளி அரவணைத்துப் பாலூட்டி, அலங்காரம் செய்து மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறாள் கோசலை.
ராமாயணம் என்றால், இனிமையான வழி என்பது பொருள். அதை நடைமுறையிலேயே நடத்திக் காட்டிய பரப்பிரம்மத்தின் கதைதான் ராமாயணம்.
அனைவரிடமும் அன்போடு நடந்துகொண்டால், ராமர் நம்மிடமும் வருவார். அல்லல்களைத் தீர்த்து அருள் புரிவார்!
– ஏப்ரல் 2014