மார்ஸ் ட்ரிப்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: February 9, 2019
பார்வையிட்டோர்: 63,991 
 
 

2061 ஆம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு மணி நேரமே இருந்தது, சென்னை நகரெங்கும் விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதியோரம் ஆடவர்களும், இளம் நங்கைகளும் மகிழ்ச்சி உலா சென்று கொண்டிருந்தனர். மெரினா கடற்கரை சாலையில் சில இளைஞர்கள் அதி நவீன 400 cc மோட்டார் பைக்குகளில் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தனர். முதன்மை சாலைக்கு மாற்றாக புதிதாக அமைக்கப் பட்ட பாலம் பொது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்திருந்தது. ஆங்காங்கே உயர் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட ஆம்புலன்சுகளும், தீயணைப்பு வண்டிகளும், காவல்துறை வாகனங்களும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப் பட்டிருந்தன. மனங்கவரும் வான வேடிக்கைகளை காண மக்கள் குடும்பம் குடும்பமாய் குவிந்திருந்தனர்.

அந்நேரம் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஆறாவது தளம், 608 வது வீடு:

“டூட்… ரூமுகுள்ளையே. இருக்க போர் அடிக்குது வெளிய எங்கயாது போயிட்டு வரலாம்”

“ஹே… அந்த க்ரவுட் பாத்தாலே செம காண்டாகுது மேன் வருசா வருஷம் போயிட்டு தானே இருக்கோம் ஃபைர் ஒர்க்ஸ் தான் போட போறானுங்க…. அமெரிக்கா, ஆஸ்திரேலியா லாம் ஹெலிகாப்டர் மேல போயி கீழ ஃபயர் ஒர்க்ஸ் பாக்குறானுங்க நாம தான் இன்னும் கீழ நின்னே மேல பாத்துட்டு இருக்கோம்”

“கய்ஸ் அப்போ கார் எடுத்துட்டு வேற எங்கயாச்சும் ஒரு ரைடு போகலாமா? புதுசா ஒப்பன் பண்ணிருகாங்களே மூன் வால்க் மால் அங்க போனா செமையா என்ஜாய் பண்ணிட்டு ஒரு 8D மூவியும் பாத்துட்டு வரலாம். வாட் சே?”

(3D,4D கள் வரிசையில் அப்போது நவீன 8D காணொளிகள் வந்திருந்தது)

“நாம வச்சுருக்கது லாம் ஒரு காரா டூட்… ஆதி கால BMW தான் வச்சு இன்னும் உருட்டிட்டு இருக்கோம் அவன் அவன் Vells Noise, Kamboghini லாம் வச்சுருக்கான் அவன் பின்னாடி வர வேகத்துக்கு நாம இன்னும் சர்வைவ் பண்ணிட்டு இருக்குறதே பெரிய விஷயம் யூ நோ?”

(Vells Noice, Kamboghini எல்லாம் அப்போது நடைமுறையில் பிரபலமாக இருந்த அதி வேக லக்ஸரி கார்கள்)

நான்கு நண்பர்களுக்கிடையே காரசாரமாக உரையாடல் சென்று கொண்டிருந்தது.

அமீர், ராகுல், ஸ்டீபன் , கௌதம் நான்கு பேரும் சென்னையில் வெவ்வேறு நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டு ஒரே குடியிருப்பில், ஒரே வீட்டில் தங்கியிருக்கும் வெளியூர் வாசிகள் . வாழ்க்கையை அதிகப்படியான அளவு அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து விட வேண்டும் என்ற விருப்பம் கொண்ட நடுத்தர வகுப்பு இளைஞர்கள்.

அமீர் IT துறையில் மென்பொருள் ப்ராஜெக்ட் என்ஜீனீராக இருக்கிறான் , ராகுல் ஒரு ஏரோ நாட்டிகல் என்ஜினீர் சென்னை விமான நிலையத்தில் பணி புரிகிறான், ஸ்டீபன் ஒரு தனியார் கம்பனியின் மார்க்கெட்டிங் எக்ஸிகுட்டிவ் , கௌதம் ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தில் பணிபுரியும் டெலிகமூனிகேசன் என்ஜினீர்.

உரையாடல் தொடர்ந்தது ….

அமீர்: “அப்போ வழக்கம் போல இன்னைக்கும் குடிச்சுட்டு படுத்துற வேண்டியதானா கய்ஸ்?”

கௌதம்: “வர வர லைஃப்ல ஒரு என்ஜாய்மென்ட்டே இல்ல மேட்ஸ்,100 இயர்ஸ் முன்னாடிலாம் ஒரு மனுசனோட ஆவரேஜ் ஏஜ் 100 னு எதோ ஒரு புக்ல படிச்சிருக்கேன்… பட் தீஸ் டேஸ் அதிகப்படியா 60 இயர்ஸ் யாரும் தாண்டுறது இல்ல…”

ஸ்டீபன்: “ஆமா டூட் அவன் சொல்றது ரைட் நானும் கேள்வி பட்டுருக்கேன், இப்போவே நமக்கு 25 வயசு ஆயிடுச்சு இனி 35 ஓ இல்ல 25 ஓ இயர்ஸ் தான் வாழப் போறோம் ஹூ நோஸ்?”

ராகுல்: “எஸ் கய்ஸ் அதுக்குள்ள லைஃப் ல பெருசா ஒரு என்ஜாய்மென்ட் பண்ணனும், ரிமைனிங் வாழ போற கொஞ்ச இயர்ஸ் மறக்க முடியாத படி ஏதும் ஒரு மெம்மரீஸ் க்ரியேட் பண்ணனும்…”

கௌதம்: “எங்கிட்ட ஒரு பிளான் இருக்கு கய்ஸ்….”

அமீர்: “நீயா … நீ சொல்லுற பிளான் இதுவரைக்கும் ஏதும் உருப்பட்டதா ஹிஸ்டரி , ஃசைன்ஸ் ஏதும் இருக்கா ?”

ராகுல்: “ஏன் டூட்?”

அமீர்: “போன வருஷம் நடந்தத மறந்துட்டியா டூட்?”

ஸ்டீபன்: “ஹாஹா ஐ ரிமெம்பர் கய்ஸ்… ஜான்ஸி மேட்டர் தான சொல்லுற ?”

அமீர்: “யூ காட் இட் மேன் அதே தான், ஜான்ஸி கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ண ஐடியா கேட்டப்போ கொடுத்தான் பாரு ஒரு ஐடியா ….”

ராகுல் : “என்ன நடந்துச்சு… எங்கிட்ட சொல்லவே இல்லையே கய்ஸ்… ஐ திங் ஐ வாஸ் இன் மை வெக்கேஷன் தட் டைம்..”

கௌதம்:”ஹே! ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாமா ?”

அமீர்: “என்னடா …. இந்த டாப்பிக் விட்டு வேற டாப்பிக் தாவ பாக்குறியா ? பெரிய ‘ஹைகோ’ டா நீ …”

( ‘ஹைகோ’ 2060 களில் வாழும் ஒரு அரசியல் கட்சி தலைவர் கட்சி விட்டு கட்சி தாவுவதில் சிறந்தவராக இருந்தார்…)

ராகுல்:”சரி விஷயத்துக்கு வா டூட்….”

அமீர்: “ஜான்ஸி கிட்ட லவ் ப்ரபோஸ் பண்ண ஐடியா கொடு டூட் னு இவன் கிட்ட போய் கேட்டு தொலைச்சுட்டேன், சொன்னான் பாரு ஒரு பிளான் லவ் சொல்ல சிறந்த டைம் மிட் நைட் தான் அப்போ தான் மைண்ட் ஒரு வித அமைதி நிலைல இருக்கும் உடனே ஏத்துப்பா ஸோ நீ டைரக்டா ‘பாராசூட்’ ல அவ வீட்டு மொட்ட மாடில போயி இறங்கிடு அப்புறம் அவ ரூமுக்கு போய் அவள எழுப்பி லவ் சொல்லுனு சொன்னான் …”

(அப்போது ‘பாராசூட்’ மனிதர்கள் எளிதாக பயன்படுத்தும் ஒரு போக்குவரத்து வாகனாமாக இருந்தது)

ராகுல்: “ஹே! ரூம் கீ எப்படி மேன் கிடைச்சுது….?”

அமீர் :”அதுவா… அவன் ஃப்ரண்ட் விஜய் வொர்க் பண்ற கம்பெனி தான் அவ வீட்டுக்கு டோர் ஆக்சஸ் ப்ரொவைட் பண்ணிருக்காங்கனு சொல்லி அவன் கிட்ட கேட்டு ஒரு டூப்ளிகேட் ஆக்சஸ் கார்ட் ரெடி பண்ணி கொடுத்தான்… ”

ராகுல்:”அப்புறம்?”

ராகுலை தவிர மற்றவர்கள் சிரிக்க ஆரம்பித்து விட்டனர்….

ராகுல்: “ஹே! சொல்லிட்டு சிரிங்க கய்ஸ் நானும் சிரிப்பேன்ல….”

அமீர்: “அந்த விஜய் மென்டல் என்ன ஆக்சஸ் கார்ட் கொடுத்தான்னு தெரில…..ஒரு ரூம் ட்ரை பண்ணேன் ஓப்பன் ஆகல…. சரி ஆப்போசிட்ல ஒரு ரூம் இருந்துச்சு ஒரு வேளை அதுவா இருக்குமோனு ட்ரை பண்ணலாம்னு அத போய் திறந்தேன் ஓப்பன் ஆயிடுச்சு …. உள்ள போயி பாத்தா…..”

ராகுல்:”உள்ள ஜான்ஸி இல்லையா…..?”

அமீர்: “ஜான்ஸி இல்லனா தான் பரவாலையே உள்ள ஜான்ஸி யோட அப்பாவும் அம்மாவும் ஒண்ணா ***** இருந்தாங்க…”

ராகுல் அதைக் கேட்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான், மற்றவர்களும் சிரித்தனர்…

ஸ்டீபன் : “அந்த கிழவனுக்கு அந்த வயசுல அது லாம் தேவை யா ……”

ராகுல்: “ஸோ யூ ஸா தி லைவ் ஷோ டூட்…. நீ பாத்தத அவங்க பாக்கல?”

அமீர்: “அவங்க என்ன பாக்குற நிலமைலயா டா இருந்தாங்க….” சிரித்தான்

ராகுல்: “அது சரி… இதெல்லாம் ஜான்ஸி க்கு தெரியுமா?”

அமீர்: “தெரியுமா வா…. இப்போ தான் ஒரு வழியா அவள ஓகே பண்ணி வச்சுருக்கேன், மேட்டர் லீக் பண்ணி என் லவ் க்கு சாக்ஸபோன் ஊதிராதேங்க டா….”

(அப்போது இறுதி ஊர்வலங்களில் சங்குக்கு பதிலாக சாக்ஸபோன் ஊதும் அளவிற்கு நவீனம் வளர்ந்திருந்தது…)

சிரிப்பொலி தொடர்ந்தது…

கௌதம்: “நியூ இயர்க்கு இன்னும் 10 மினிட்ஸ் தான் இருக்கு கய்ஸ் அட்லீஸ்ட் மொட்ட மாடி போயாச்சும் ஃபயர் ஒர்க்ஸ் பாக்கலாமே?”

அமீர்: “ஓகே கய்ஸ் லெட்ஸ் கோ டு டாப்…”

நால்வரும் அந்த இருபத்தி நான்கு மாடி கட்டிடத்தின் உயரே மேல் தளத்திற்கு சென்றனர், அங்கிருந்து பார்த்தாலே மெரினா கடற்கரையின் காட்சி கண்களை எட்டிக்கொள்ளும், சாலையெங்கும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து கொண்டிருந்தது, அவ்விரவின் நிசப்தத்தை மனிதக் கூச்சல் மறைத்திருந்தது. அருகில் இருந்த ஒரு 9 ஸ்டார் ஹோட்டலின் புத்தாண்டு கொண்டாட்டம், கேளிக்கை விடுதியில், மதுபான அருந்தகத்தில் இருந்து வந்த ஆடல் பாடல்கள் காதினை அடைத்தது. நேரம் 12 மணியை நெருங்க கவுண்டவுன் ஆரம்பம் ஆனது… பத்திலிருந்து இறங்கு வரிசையாக 9,8,7…. என்று பூஜ்ஜியத்தை தொட வான வேடிக்கை பல வண்ணங்களில் உஸ்ஸ் என்ற சப்தத்துடன் வானம் நோக்கி ஏறியது. கண்களை அபகரித்துக் கொள்ளும் நவீன தொழில்நுட்பம் அவ்வான வேடிக்கைகளில் கொட்டிக் கிடந்தது. சுற்று வாட்டாரம் எங்கும் ஹேப்பி நியூ இயர் என ஒருவருக்கொருவர் உற்சாகக் கூச்சல். அப்போது நடைமுறையில் பிரபலமாக இருந்த ஹேப்பி நியூ இயர் பாப் பாடல் நகரெங்கும் ஒலித்தது.

(உலக நாயகன் கமலின் இளமை இதோ இதோ பாடல் 2030 களிலேயே மாறி விட்டது)

நண்பர்களும் ஒருவருக்கொருவர் அணைத்துக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

“லெட்ஸ் கோ டௌன் அன்ட் ஸ்டார்ட் தி பார்ட்டி கய்ஸ்…”

நால்வரும் மது அருந்தி புத்தாண்டினை கொண்டாட முடிவெடுத்து ஆறாம் தளத்திலுள்ள தங்கள் வீட்டினை நோக்கி நடந்தனர்….

வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் எப்பொழுதும் இருப்பிலிருக்கும் வெளிநாட்டு உயர்தர மது பானங்களை எடுத்தனர், மேலுடல் அகன்று கொடியிடைக் கொண்ட பெண்களை ஒத்த பளபளக்கும் கண்ணாடிக் கோப்பைகள் மேஜையில் அடுக்கப் பட்டன…. புட்டியினை திறந்ததும் சற்றும் வேகம் குறையாமல் நுரை தள்ளி வெளி வந்த மதுவினை கோப்பையில் ஊற்றி கொடியிடையாளை பிடிப்பது போல் வண்ணம் குறைந்த பகுதியை கையில் பிடித்து உற்சாக மிகுதியில் ‘சியர்ஸ்’ என்று வாயில் பருகிக்கொண்டனர்….

போதை மெல்ல மெல்ல உடலின் கட்டுப்பாட்டை தன் வசமாக்கி கொண்டிருந்தது…

அந்நேரம் அமீரின் அலைபேசி ஒலித்தது, ஒரு மணி யொலியில் நின்று விட்டது….

ஸ்டீபன்: ” யாரு டூட் மிஸ்டு கால்….?”

அமீர்: ” வேற யாரு…. என் கேர்ள் ஃப்ரண்ட் ஜான்ஸி தான்…”

கௌதம்: “ஆனா டூட் இந்த பொண்ணுங்க இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் மிஸ்டு கால் கொடுக்குறத மட்டும் நிறுத்தவே மாட்டாளுங்க… போன் கண்டுபிடிச்ச காலத்துலேயே இது ஸ்டார்ட் ஆயுருச்சுனு ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லுது…”

அமீர் அவன் காதலிக்கு தன் அலைபேசியில் இருந்து அழைத்தான்…. முதல் ஒலியிலேயே அவள் அழைப்பை எடுத்தாள்.

அமீர்: “ஹலோ…. ஹேப்பி நியூ இயர் பேபி….”

ஜான்ஸி: “ஹேப்பி நியூ இயர் டியர்…. என்ன பண்ணுற டார்லிங்?”

அமீர்: “வீட்ல தான் சும்மா இருக்கேன் பேபி …. உனக்கு கால் பண்ணி விஷ் பண்ணலாம்னு நினைக்குறதுக்குள்ள நீயே பண்ணிட்ட…”

ஜான்ஸி: “நெஜமாவா… அந்த குரங்கு கூட்டம் பக்கத்துல தான் இருக்கா…. உன் ஃப்ரண்ட்ஸ்…”

(எந்த தலைமுறை பெண்களும் தன் காதலன் தன் நண்பர்களுடன் இருப்பதை விரும்புவதில்லை)

அமீர்: “அவங்கள குரங்குன்னு சொல்லாத…”

ஜான்ஸி: “அப்போ பன்னி கூட்டம்னு சொல்லவா…..”

அமீர்: “உனக்கு டிரோலிங் ஃசென்ஸ் வரல செல்லம் நீ ட்ரை பண்ணாத”

ஜான்ஸி:”த்தூ… என்ன வெளில கூட்டிட்டு போக சொன்னா நீ அவனுங்க கூட இருந்து கூத்தடிச்சுட்டு இருக்க…”

அமீர்: “நாங்க கூத்தடிக்கலமா…”

ராகுல்: “ஆமா நாங்க கூத்தடிக்கல குடிச்சுட்டு தான் இருக்கோம்….” சற்று போதையேறிய குரலில்

அந்த கூட்டத்தில் குடித்தால் கொஞ்சம் அதிகமாக புலம்புற வகை ராகுல்….

அமீர்: “டேய் அவன வாய மூடுங்கடா….” அலைபேசியை சற்று விலக்கி மெல்லிய குரலில்

ஜான்ஸி: “என்னடா குடிச்சிட்டு இருக்கியா….”

அமீர்: “இல்லையே…. யார் சொன்னா?”

ஜான்ஸி: “அதான் அந்த மூணு குரங்குல ஒரு குரங்கு சொன்னது இங்க வர கேக்குதே….”

அமீர்: “ஐயோ அவன் போதைல எதையோ உளறுறான் மா…”

ஜான்ஸி: “குடிகார நாயே…. உன் வாயில இருந்தே உண்மை வருது பாரு. எக்கேடாம் கெட்டு போ…”

தன் வாயாலயே மாட்டிக் கொண்டதில் கொஞ்சம் சலித்துக்கொண்டான் அமீர், ஜான்ஸி ஒரு மார்டன் மங்கையாக இருந்தாலும் குடிப்பதையும், குடிப்பவர்களையும் அறவே வெறுப்பவள்.

ஜான்ஸி தொடர்ந்தாள், “சரி நான் மேட்டருக்கு வரேன்….”

அமீர்: “நிஜமாத்தான் சொல்றியா ஜானு… எப்போ?”

ஜான்ஸி: “டேய்… இடியட் ஐ மீன் நான் விஷயத்துக்கு வரேன்… எனக்கு போன்ல நெட் பேக் முடிஞ்சு போச்சு ஒரு 9G டேட்டா போட்டு விடு… ”

(தற்போதுள்ள 4G யின் அபரீத வளர்ச்சி 5G, 6G என 9G வரை அறிமுகப் படுத்தப்பட்டு இருந்தது…)

இடையில் ராகுல், “டூட் டைம் இப்போ நைட் 12.30 அவங்க அப்பா இப்போ என்ன பண்ணிட்டு இருக்காருன்னு கேட்டு சொல்லேன்….”

ஸ்டீபனும், கௌதமும் சிரிக்க அமீர் சற்று கடுப்பானான்…

ஸ்டீபன் மெதுவாக “இவன் அவன் லவ்வுக்கு கல்லறை கட்டாம விட மாட்டான் போலயே…”

அமீர்: “நான் போட்டு விடுறேன் பேபி… யூ கோ அண்ட் ஸ்லீப் நவ்…”

ஜான்ஸி: “ம்ம்… உன்ன நாளைக்கு வச்சுக்குறேன்…. குட் நைட்”

அமீர்: “நீ என்ன எப்போ வேணும்னாலும் வச்சுக்கோ பேபி… நோ இசூஸ்… குட் நைட்”

ஒரு பெருமூச்சுடன் அலைபேசியை துண்டித்தான் அமீர்…

நண்பர்களுக்குள் உரையாடல் தொடர்ந்தது….

கௌதம்: “என்ன டூட் சொல்லுறா உன் ஆளு….?”

அமீர்: “அவளுக்கு நெட் பேக் முடிஞ்சு போச்சாம் 9G டேட்டா போட்டு விடணுமாம்…”

கௌதம்: “எங்கப்பா அடிக்கடி சொல்லுவார் டூட் நீங்கலாம் இப்போ 8G, 9G யூஸ் பண்றேங்க, எங்க காலத்துலலாம் நாங்க 2G, 3G தான் யூஸ் பண்ணோம், 2G கார்ட் போட்டு நைட்டு ஒரு ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணினா அடுத்த நாள் காலைல தான் போஸ்ட் ஆகுமாம்…”

ஸ்டீபன்:”எஸ் டூட், நம்ம பொலிடிசியன்ஸ் ஒவ்வொரு அலைவரிசை வர வர அதுக்கு ஏத்த மாதிரி ஸ்கேம் பண்றானுங்க அது 50 இயர்ஸ் முன்னாடி 2G ல இருந்தே ஸ்டார்ட் ஆயிருச்சுன்னு ஒரு ஆர்டிக்கில் படிச்சேன்…”

அமீர்: “எததன G வந்தாலும் நெட்வொர்க் கம்பனி காரனுங்க காசு புடுங்குறத மட்டும் நிறுத்தவே மாட்டானுங்க ஓல்ட் நெட்வொர்க் ஏர்டெல் ல இருந்து இப்போ உள்ள ஸ்கைடெல், வைடெல் வரைக்கும் எல்லாவனும் சேம் டைப்”

ஒரு புறம் இரவு உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருக்க மறுபுறம் புட்டிகளில் மதுவும் குறைந்து கொண்டே இருந்தது…

அந்நேரம் கௌதம் அலைபேசியில் வீடியோ செய்தி ஒன்று வந்தது. தற்போதுள்ள டெக்ஸ்ட் குறுஞ்செய்தி போன்று அப்போது வீடியோ செய்தி விளம்பர வடிவில் அலைபேசிக்கே வந்துவிடும் தொழில் நுட்பம்.

எடுத்து ப்ளே பண்ணினான்…


Amazing ‘MARS TRIP’ Package is waiting for you.
Just 20 Lakhs for One Person
Book 3 tickets and get one FREE

Book your Tickets today. Offer Valid till 7 days.

-MARS TRAVELS

ஒரு அழகிய பெண்ணின் நடிப்பில் அந்த 60 நொடிகள் காணொளி விளம்பரம் உருவாக்கப் பட்டிருந்தது. இந்த ஒரு சந்தர்பத்திற்காக அவர்கள் முன்பே பல முறை காத்துக் கொண்டு தான் இருந்தனர், இது அவர்கள் கனவும் கூட . ‘மார்ஸ் ட்ரிப்’ என்பது ஒரு செவ்வாய் கிரக பயணம். அறிவியலின் அதி நவீன வளர்ச்சியாலும் விஞ்ஞானிகளின் அதி தீவிர முயற்சியினாலும் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு அற்புத பயணம். 2050 இல் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான தண்ணீரும், ஆச்சிஜனும் இருப்பதாகவும் அதிகப்படியாக ஒரு மாதம் வரை அங்கே எந்த ஒரு இடையூறும் இன்றி வாழ்ந்து விடலாம் என்றும் கண்டுபிடித்தனர். அதற்காக அமெரிக்காவின் நாசாவை சேர்ந்த விஞ்ஞானி ‘ஆல்பர்ட் வில்லியம்ஸ்’ 20 நாட்கள் அங்கே தனியாக தங்கி இருந்து விட்டு திடனாக திரும்ப வந்தார். அது முதல் பல உலக பணக்காரர்களும், பல நாடுகளின் அதிர்பர்களும் ஆரம்பத்தில் அங்கே பயணம் சென்று வந்தனர் அதில் முக்கியமான ஒருவர் இந்தியாவின் அப்போதைய பிரதமர் ‘மகேந்திர பேடி’ இவர் ஏறைக்குறைய உலகத்தில் அனைத்து நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தவர் கடைசியாக செவ்வாய் கிரகமும் சென்று அங்கே செல்ஃபி எடுத்துக்கொண்டு தன்னை பொன் வரலாற்றில் பதித்துக்கொண்டவர். அதன் பிறகு மார்ஸ் ட்ரிப் என்பது ஒரு சுற்றுலாத் தலமாக மாறியது, செல்வந்தர்கள் பலரும், திரைப்பட பிரபலங்களும், விளையாட்டு பிரபலங்களும் போய் வந்தனர், காலப்போக்கில் கொஞ்சம் பணம் செலவழித்தால் யார் வேண்டுமானாலும் சென்று வரலாம் என்னும் அளவு மலிந்தது. அங்கே சென்று வர மற்றொரு விஷயம் உடல் திடகாத்திரமாக இருக்க வேண்டும், முதியோர்கள், குழந்தைகள், நோய்நொடி உள்ளவர்கள் செல்ல அனுமதி இல்லை. சமீபத்தில் அமீரின் அலுவலக நண்பன் அரவிந்த் கூட சென்று விட்டு வந்தான்.

அமீர்: “கய்ஸ் இட்ஸ் அமேசிங்…. நம்ம ஏன் ஒரு மார்ஸ் ட்ரிப் போகக் கூடாது? இது சூப்பர் ஆஃபர். அந்த அரவிந்த் கூட 25 லேக் கொடுத்து போயிட்டு வந்தான். இது வெரி சீப். அதுவும் மூணு பேர் போனா ஒன்னு ஃப்ரீ, ஸோ ஒரு ஆளுக்கு 15 லேக்ஸ் தான் வரும்”

ராகுல்: “எஸ் டூட் கண்டிப்பா போறோம்… இந்த மெம்மரீஸ் கண்டிப்பா மறக்க முடியாததா இருக்கும்…”

அமீர்: “கௌதம், ஸ்டீபன்…. வாட் ஸே கய்ஸ்”

கௌதம்: ” ஐ லைக் டு கம் டூட்… பட் மணி ரெடி பண்ணனுமே…?”

ஸ்டீபன்: “ஆஃபீஸ்ல லீவு வேற கேட்கணும்… இந்த ஆஃபர் வேற 1 வீக் தான் போட்டுருக்கான் அதுக்குள்ள புக் பண்ணி ஆகணுமே?”

அமீர்: “நோ ஒரீஸ் கைஸ்…. நம்ம லோன் கார்ட் வச்சு பணம் பே பண்ணலாம் அதுக்கு பிறகு மன்த்லி ட்யூ பே பண்ணிக்கலாம்..”

(லோன் கார்ட், கிரடிட் கார்டின் மேம்படுத்தப்பட்ட வகை, அதிகப்படியாக 1 கோடி வரை கார்ட் மூலமாகவே எடுக்கும் வசதி கொண்டது. அதிக தனி நபர் வருமானம் உள்ளவர்களுக்கு வங்கியில் கிடைக்கும்)

கௌதம்: “போயிட்டு வர எத்தன நாள் ஆகும் டூட்? ராக்கெட்ல எக்கணாமிக் கிளாஸ் தான?”

அமீர்:”நம்ம குடுக்குற காசுக்கு பிஸினஸ் கிளாஸா கிடைக்கும்? ட்ராவல் டுரேஷன் போக 8 டேஸ் வர 8 டேஸ் அங்க ஒரு 4 டேஸ் ஸ்டேய்… டோட்டலா 20 நாள் ஆகும்… மார்ஸ்ல ஸ்டே பண்ண டென்ட், சாப்பிட ஃபுட், அங்க போடுற க்ளோத்ஸ் எல்லாம் அவங்களே அரேஞ்ச் பண்ணிடுவாங்க… என்டர்டெயின் க்கு பெல்லி டேன்ஸ் கூட இருக்காம் ”

ஸ்டீபன்: ” ஓ டூட்…. என் மேனேஜர் என்ன கொண்ணே போடுவான் லாஸ்ட் டைம் 5 டேஸ் லீவுக்கே போன் போட்டு உயிரை எடுத்துட்டான்…”

அமீர்: “அதெல்லாம் தெரியாது கய்ஸ் நம்ம போறோம்… என்ன பிராப்ளம் வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம். ஏதாவது பிளான் பண்ணி லீவ் வாங்குறோம்…”

ராகுல்: “போயி ஒரு Satfie எடுத்து அப்லோட் பண்ணனும் மேட்ஸ்…”

(செல்ஃபி எடுத்து சாட்டிலைட் வழியாக பதிவேற்றம் செய்யும் புதிய தொழில்நுட்பமே சேட்ஃபி)

அமீர்: “அந்த அரவிந்த் போயிட்டு வந்து செஞ்ச பில்டப் தாங்க முடியல… சோசியல் மீடியாஸ் லாம் போட்டோ போட்டு ஓவர் சீன். அவன் மூக்க அறுக்கணும் கய்ஸ்”

ஸ்டீபன்: “ஆமா ஃபேஸ்புக் லயும் போடணும்…”

அமீர்: “மேன் யூ ஸ்டில் யூசிங் ஃபேஸ்புக்? இப்போலாம் ‘ஐபுக்’ தான் டிரன்ட் மார்க் சுக்கர்பர்க்கே இன்னும் கொஞ்ச நாளுல ஃபேஸ்புக் சட்டவுன் பண்ண போறதா நியூஸ் வந்துச்சே நீ பாக்கல? ”

ராகுல்: “ஆமா அவனுக்கும் வயசாயிடுச்சுல… ட்விட்டர் கூட ஜாக் விக்கப் போறதா சொல்றாங்க….”

கௌதம்: “அப்போ நாளைக்கே எல்லோரும் ஆஃபீஸ்ல லீவ் அப்ளை பண்றோம் உடனே டிக்கெட் புக் பண்றோம்….”

அமீர்: “இந்த ஜான்ஸிய தான் எப்படி ஃபேஸ் பண்ண போறேன்னு தெரில என்னையும் கூட கூட்டிட்டு போனு சொல்லி குதிப்பா…”

ராகுல்: “கூடவே அவங்க அப்பா அம்மாவையும் கூட்டிட்டு போயிறலாம் டூட்…”

எல்லாரும் சிரித்தனர்….

அமீர்: “டைம் 2 AM இவ்ளோ நேரம் எப்படி போச்சுனே தெரியல… ஓகே கய்ஸ் ஃபீலிங் ஸ்லீப்பி… போய் தூங்கலாம்…”

ராகுல்: “எஸ் மேட்ஸ் டூப்ளிகேட் சரக்குனு நெனைக்குறேன் தலை வேற கின்னுன்னு வலிக்குது… லெட்ஸ் ஸ்லீப் குட் நைட்…”

அன்றைய இரவு நீண்ட உரையாடல் மார்ஸ் ட்ரிப் கனவுகளுடன் முடிந்தது. அனைவரும் தங்கள் அறைக்கு சென்று உறங்க தயாராகினர். அவர்களின் சிந்தனைகள் யாவும் செவ்வாய் கிரகத்தை நோக்கியே இருந்தது. ஒரு வித உற்சாக மிகுதியில் அன்றைய தினம் உறங்கமுடியாமல் பிரண்டு பிரண்டு உறங்கினர்…

ஜனவரி 2, 2061. அமீரின் அலுவலக மேலாளர் அறை:

“மே ஐ கம் இன் ‘டாம்’….

டாம் அமீரின் புராஜக்ட் மேனேஜர், பெயர் தாமோதரன் தான் ஸ்டைலாக இருக்க வேண்டுமென்று டாம் என்று மாற்றிக்கொண்டார். அவ்வாறே எல்லாரும் அழைக்க வேண்டுமென்றும் வற்புறுத்தல். அவரை ஐஸ் வைப்பதற்காகவே எல்லோருக்கும் டாம் என்று கூப்பிட்டு கடைசியில் அதுவே பழகிவிட்டது. இவன் எதுவென்றாலும் இவரிடம் தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும். கொஞ்சம் ஜாலியான டைப் தான் ஆனால் வேலையென்று வந்துவிட்டால் குணம் மாறிவிடும் வகை.

டாம் தொடர்ந்தார்…. “எஸ் அமீர் கம் இன்… ஹேவ் அ சீட்…”

மார்ஸ் ட்ரிப் காக லீவ் கேட்பதற்கு சற்று தயங்கியவாறே வாய் திறக்க முயன்றான் அதற்குள் அவரே பேசினார்.

” நானே உன்ன கூப்பிடனும்னு தான் இருந்தேன். ஒரு முக்கியமான விஷயம். நாளைக்கு ஒரு புது காண்ட்ராக்ட் சைன் பண்ண போறோம். கிளைன்ட் யுஎஸ் ல இருந்து நம்ம ஆஃபீஸ் வாரங்க. நீ தான் நம்ம ஓல்ட் புராஜக்ட்ஸ் டெமோ லாம் காட்டனும். பீ ப்ரிபேர்… இது ஒரு 10 மில்லியன் காண்ட்ராக்ட் ஸோ வீ நீட் டூ இம்ப்ரெஸ் தெம். அவங்க சரியா 9 மணிக்கு இங்க வந்திடுவாங்க நீ ஒரு 8.30 க்கே ஆஃபீஸ் வந்திடு நானும் 9 மணிக்குள்ள வந்திடுவேன். டோன்ட் ஃபர்கெட் இட் மேன்… ஓகே ?”

“சுவர் டாம்… ஐ வில் ப்ரிபேர்…. அப்புறம் ஒரு லீவ் ரிக்குவஸ்ட்….”

“லீவா…. என்ன விஷயம்… நாளைக்கு லீவு கீவு போட்டு தொலச்சுடாதே ஆல் வில் ஸ்பாயில்…”

“நோ நோ… நாளைக்கு இல்ல டாம்… ஃப்ரண்ட்ஸ் லாம் சேர்ந்து மார்ஸ் ட்ரிப் புக் பண்ணலாம்னு இருக்கோம்….. மோஸ்ட்லி இந்த மந்த் எண்டு டிராவல் பண்ற மாறி இருக்கும்….”

“மார்ஸ் ட்ரிப்பா…. அவ்ளோ பணம் கைல விளையாடுதா.. நானே இன்னும் போகல உனக்கென்ன அவசரம். சரி எத்தன நாள் ?”

“20”

“வாட்? 20 நாளா…. என்ன விளையாடுறியா? இட்ஸ் டூ மச்…”

“டாம், மார்ஸ் போயிட்டு வரவே 16 நாள் ஆகும். ஆல்ஸோ என்கிட்டே CL, AL, எல்லாம் பேலன்ஸ் இருக்கு… பிளீஸ் கன்ஸிடர் இட்.”

“முதல்ல நாளைக்கு அந்த ப்ராஜக்ட் நல்ல படியா சைன் ஆகட்டும் அப்புறம் போயிட்டு வா….”

“தேங்க்ஸ் டாம் சுவர்…. நோ வொரீஸ் வீ வில் கெட் தட் டுமாரோ….”

“ம்ம் டோன்ட் ஃபர்கெட் டு கம் ஏர்லி டுமாரோ”

“ஓகே டாம்”

அங்கிருந்து நகர்ந்தான் அமீர் ஏறக்குறைய விடுமுறை கிடைத்துவிட்ட ஒரு மகிழ்ச்சியில். உடனே தன் நண்பர்களையும் அலைபேசியில் க்ரூப் காலில் தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூறினான்…

“ஹலோ கய்ஸ்… மை சைடு ஆல் கிளியர் லீவு ஆல்மோஸ்ட் ஓகே நாளைக்கே அந்த ட்ராவல்ஸ் போரோம் புக் பண்றோம்… நீங்களும் எப்படியாவது லீவு ஓகே பண்ணிடுங்க லெட்ஸ் கிக் ஏஸ் இன் மார்ஸ்…”

அன்றிறவு வீட்டில்…

அவன் நண்பர்களும் ஆளுக்கொரு காரணங்களைக் காட்டி விடுமுறைப் பெற்று மார்ஸ் ட்ரிப் செல்ல ஆயத்தமாயினர்.

ஸ்டீபன்: “மேட்ஸ் நான் எவ்ளவோ ட்ரை பண்ணேன் பட் லீவ் கிடைக்குற மாதிரி தெரியல தட் டைம் என் மேனேஜர் வெக்கேஷன் போறானு காரணம் காட்டி லீவு ரிஜக்ட் பண்ணிட்டான் பட் நோ ஒரீஸ் எமர்ஜென்ஸி லீவ் இஸ் தெயர். அதை யூஸ் பண்ணிக்கலாம்…”

ராகுல்: “எனக்கும் ப்ராப்ளம் இல்ல ஐ அப்ளைடு ஆல்ரெடி, லீவு கிடைச்சுடும்…”

கௌதம்: “என் ஹெச்சார் சுவாதிய கரக்ட் பண்ண ஒரு வழி ஆயிடுச்சு சரியான கடவுள் பைத்தியம் மார்ஸ்ல இருந்து வரும் போது மார்ஸ் சிவன் கோயில் பிரசாதம் வாங்கிட்டு வரேன் ரொம்ப சக்தி வாய்ந்ததுனு சொன்னேன் உடனே அப்ரூவ் பண்ணிட்டா ஃபூல்”

ராகுல்:”இந்தா விஞ்ஞான உலகத்துல இப்படி ஒரு லூசா…”

சிரித்தனர்…

அமீர்: “ஓகே கய்ஸ்… எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான க்ளைன்ட் மீட்டிங் இருக்கு ஸோ ஐ யம் கோயிங் டூ ஸ்லீப்… குட் நைட்”

அனைவரும் உறங்கச் சென்றனர், அமீர் தன் படுக்கையை நோக்கிச் சென்றான் “எப்படியாவது நாளைக்கு அந்த க்ளைன்ட் ப்ராஜக்ட் ஓகே பண்ணி லீவு அப்ரூவ் பண்ணிடணும்…” என்று மனதில் நினைத்துக் கொண்டே கண்ணயர்ந்தான்…

காலை விடிந்தது… அமீரின் அலைபேசி மணி ஒலிக்கத் தொடங்கியது. மிகுந்த அசதியில் தூங்கிக் கொண்டிருந்த அமீர் அழைப்பை எடுக்க வில்லை, மீண்டும் பத்து நிமிடம் கழித்து மணி ஒலித்த போது தான் மெதுவாக அவன் காதுக்குள் ஒலி எட்டியது. கண் அறுவைச் சிகிச்சை முடிந்து முதலில் மெல்ல மெல்ல கண் திறக்கும் நோயாளி போல் கண்ணை திறக்க முடியாமல் மூடி மூடி திறந்தான், கண் இல்லாதவன் பொருளைத் தடவி தேடுவது போல் அலைபேசி எங்கே உள்ளதென அருகில் தடவினான் ஒரு வழியாய் அவன் கையில் மாட்டிய அலைபேசியை எடுத்து தன் இடக்காதினில் வைத்து “ஹலோ” என்றான்…

எதிர்புறம் “தாமோதரன் ஹியர்… வேர் ஆர் யூ… நான் நேத்து அவ்ளோ சொல்லியும் இன்னும் ஆஃபீஸ் வராம எங்கடா புடுங்கிட்டு இருக்க புல்சிட்… 9 மணில இருந்து உனக்காக வெயிட் பண்ணி வெயிட் பண்ணி உன்னால இப்போ க்ளைன்ட் ப்ராஜக்ட் ரிஜக்ட் ஆயிடுச்சு தெரியுமா… ஆர் யூ டம்ப்? பதில் பேசுடா…”

மறுபுறம் அமீர் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் கோமாவில் இருந்து எழுந்த உணர்வோடு பதில் பேசாமல் இருந்தான்….

“டேய் அமீர்… நான் பேசுறதுலாம் கேக்குதா இல்லையா இல்ல வேற எதுவும் கனவு கண்டுட்டு இருக்கியா.. நேரா ஆஃபீஸ் வந்து டெர்மினேசன் லெட்டர் வாங்கிட்டுப்போ.. சிட்” என்று அலைபேசியை துண்டித்தார்.

அமீர் உறக்கத்திலிருந்து இன்னும் முழுமையாய் வெளிவரவில்லை சுற்றும் முற்றும் நோக்கிறான் விளங்கவில்லை, இரண்டு நிமிட மனப்போறாட்டத்திற்கு பிறகு மனம் மெல்ல இயல்பு நிலை திரும்பியது, பிறகு அலைப்பேசியை கையில் எடுத்து மணியைப் பார்த்தான் மணி 10.12 AM ஆயிருந்தது அப்படியே கண்ணை சற்று கீழே நகர்த்தி தேதியைப் பார்த்தான் 2061 என மங்கலாய் தெரிந்தது, பின் கண்ணை நன்றாக கசக்கி விட்டு உற்று நோக்கி அதிர்ந்தான் ‘பிப்ரவரி 17, 2016’ என்றிருந்தது….

அதே சமயம் அவன் அலைபேசியில் ஒரு குருஞ்செய்தி ஒலி ஒலித்தது, தொடுதிரையில் விரல்களை நகர்த்தி திறந்து படித்தான், அவன் காதலி ஜான்ஸி அனுப்பியிருந்தாள்… “டேய் எருமை… நேத்து உங்கிட்ட அவசரமா 3G டேட்டா போட்டுவிட சொன்னனே இன்னும் போட்டு விடாம அங்க என்ன கனவா கண்டுட்டு இருக்க…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *