மாயாவிடம் நான் சொன்ன பொய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் காதல் புனைவு
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 5,756 
 
 

நான் சூடான மசாலா டீயை கப்பில் ஊற்றிக் கொண்டு, என்னுடைய மேக்புக் லேப்டாப்பைத் திறந்தேன். ஜூம் (zoom) மீட்டிங்கை தொடங்கி விட்டு மணி பார்த்தேன் – 6:15. மாயா வரும் நேரம் தான். அவளுக்காகக் காத்திருந்தேன்.

நான் மாயாவுடன் சுமார் மூன்று வாரங்களாக ஜூம் வழியாக பேசிக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாகத் தொடங்கிய எங்கள் ஜூம் சந்திப்புகள் இப்போது கொஞ்சம் சீரியசாக தடம் மாறிவிட்டது. நாங்கள் இருவரும் ரசிக்கும் சில பொதுவான விஷயங்கள் – இளையராஜாவின் பழைய பாடல்கள், சுஜாதாவின் அறிவியல் கதைகள், பாரதிராஜாவின் திரைப்படங்கள் – எங்கள் உறவை நட்பிலிருந்து அடுத்த படிக்கு கொண்டு சென்றது. கிட்டத்தட்ட தினசரி பேசிக் கொள்கிறோம்.

எவ்வளவோ ஒற்றுமை இருந்தும், எங்களுக்குள் ஒத்துப் போகாத ஒரு பெரிய விஷயமும் இருக்கிறது – நாங்கள் செய்யும் வேலை. முதல் வாரத்தின் முடிவில், தான் இன்போசிஸ் நிறுவனத்தில் டைரக்டர் பணியில் இருப்பதாக என்னிடம் சொன்னாள். நான் ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறேன் என்று சொன்னேன். நான் டாக்டருக்கு ஒரு அசிஸ்டன்டாக பணி புரிகிறேன். ஆனால் நான் ஒரு டாக்டர் என்று அவள் நினைத்து விட்டாள். அவளைத் திருத்த நான் முயற்சிக்கவில்லை. திருத்தியிருக்க வேண்டும், ஆனால் திருத்தவில்லை.

எங்கள் உறவு கொஞ்சம் சீரியசாக உருமாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையிலாவது, நான் உண்மையைச் சொல்லி விட வேண்டும். இனியும் நான் அவளை ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது…

பீப் சத்தம் கேட்டு நான் நிமிர்ந்து பார்த்தேன். மாயாவின் முகம் ஜூம் மீட்டிங்கில் மங்கலாகத் தெரிந்தது. அவள் சுழலும் நாற்காலியை சரி செய்தவுடன், அவளது முகம் தெளிவானது. ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் அழகாகத் தெரிகிறாள்!

ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, “ஏன் என்னை இப்படி முறைத்துப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

நான் அவள் கண்களை ஆழமாகப் பார்த்து, “நீ மிகவும் அழகாக இருக்கிறாய், மாயா.” என்றேன். அவள் கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டு “அது சரி, உங்கள் வேலை இன்றைக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டாள். நான் பெருமூச்சு விட்டு பின்னால் சாய்ந்தேன். “இன்று திங்கட்கிழமை என்பதால், நோயாளிகள் அதிகம். நாங்கள் மிகவும் பிஸியாக இருந்ததால் மதிய உணவைக் கூட சாப்பிடத் தவறி விட்டேன்.”

“என்ன இது? நீங்கள் ஒரு டாக்டர். நீங்களே இப்படி உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கலாமா?” அவள் கண்களில் நிஜமான கவலை தெரிந்தது.

இது தான் நல்ல தருணம்… நீ ஒரு டாக்டர் இல்லை என்று இப்போதாவது அவளிடம் சொல்லி விடு.

“கவலைப்படாதே மாயா… நாலு மணி வாக்கில் நான் நன்றாக சாப்பிட்டு விட்டேன். இட்ஸ் ஓகே.” என்றேன்.

“சரி. உங்கள் புற்றுநோய் நோயாளி எப்படி இருக்கிறார்? குணமடைந்து வருகிறாரா?”

அவர் உன்னுடைய நோயாளி அல்ல… அவருக்கு சிகிச்சை அளிப்பது நீ அல்ல என்று சொல்லி விடு.

“ஆம், குணமடைந்து வருகிறார். நாங்கள் அனைவரும் எதிர்பார்த்ததை விடவே அதிகமாக முன்னேற்றம் தெரிகிறது.”

“மிக நல்லது. அவருடைய உயிரைக் காப்பாற்றியதற்காக அவர் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் இப்படி டாக்டராக சேவை செய்வதைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.”

இல்லை, நான் செய்தது மிகக் குறைவு. உன்னுடைய பாராட்டுக்கு நான் தகுதியானவனே அல்ல!


உலகின் மற்றொரு பகுதியில், ராஜ் வீடியோவை நிறுத்தி விட்டு தன் சகா பக்கம் திரும்பினான். “மாயா எனும் நம்முடைய AI (Artificial Intelligence) சாப்ட்வேர் ஜூம் உடன் ஒருங்கிணைந்து நன்றாக வேலை செய்கிறது. மாயா ஒரு பெண்ணைப் போலவே பேசுவது மட்டுமல்லாமல், அற்புதமான முகபாவனைகளையும் காட்டுகிறது. அதையெல்லாம் பார்த்தால் அது ஒரு AI என்று யாரும் நம்ப மாட்டார்கள்!”

Print Friendly, PDF & Email
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *