நாணயங்களைச் சேகரிப்பதில் மணிவண்ணனுக்கு மிகுந்த ஆர்வம். வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர்களைப் போய் சந்திப்பான். புன்னகை மாறா முகத்துடன் அவர்களுடன் பேசுவான். அவர்களில் சிலரை நண்பராக்கிக் கொள்வான். அவரும் நாணயம் சேகரிப்பவராய் இருந்தால் தன்னிடம் உள்ள பழங்கால நாணயங்களை அவரிடம் காட்டுவான். தன்னிடம் உள்ள மிகுதியான நாணயங்களை அவருக்குக் கொடுப்பான்.
மணி வண்ணன் முதியவர்களைக் கண்டால் மரியாதையுடன் பேசுவான். அவர்களுக்கு உதவி தேவையானால் தன்னால் முடிந்ததைச் செய்வான். பழங்கால நாணயங்களைப் பற்றி அவர்களிடம் பேசுவான். தற்போது புழக்கத்தில் இல்லாத, ஆனால் எளிதில் கிடைக்கிற நாணயத்தை அவர்கள் வழங்கினாலும் நன்றியுடன் பெற்றுக் கொள்வான்.
நாணயம் சேகரிக்கும் வெளியூர்வாசிகளுடன். அவன் அஞ்சல் தொடர்பு கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனிடமிருந்த நல்ல பண்புகளாலும் அயராத முயற்சியாலும் பழங்கால நாணயங்கள் பல அவனிடம் சேர்ந்தன. மிகமிக அரிதான ஓரிரு நாணயங்களும் அவன்வசம் இருந்தன! ஒரு சில நாணயங்களில் எழுத்து, குறி, எண் எதுவும் இருக்காது. அவற்றையும் அவன் பாதுகாப்பு வைத்தான். புளி, சாம்பல், திருநீறு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி பல நாட்கள் விளக்கியும், துலக்கியும் துப்புரவாக்கினான்.
ஓரிரு குறிகள் தெரியும் வரை முயற்சி செய்து இறுதியில் வெற்றியும் பெற்றான். உறுதியான, சிறிய, பிளாஸ்டிக் பைகளைத் தயார் செய்தான். ஒவ்வொரு பையிலும் ஒரு நாணயத்தைப் போட்டு, வாய்ப்புறத்தைத் தீயினால் சுட்டு மூடினான். பின்னர் அவற்றை தடிமனான அட்டையில் ஒட்டி வைத்தான். ஒவ்வொரு நாணயத்தின் அருகிலும் அது பற்றி அவன் அறிந்த செய்திகளை அழகாய் எழுதி வைத்தான்.
அரிதான, பழங்கால நாணயமானால், அது எங்கே, எப்போது, எப்படிக் கிடைத்தது என்ற குறிப்புகளையும் வண்ண மையினால் எழுதி வைத்தான். ஒரு சமயம் தொல்பொருள் துறையினால், மாவட்டத் தலைநகரில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிக்கும் சேர்த்து ஓர் அரங்கம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த மாவட்டம் முழுவதிலும் இருந்து ஐந்து பள்ளிகள் மட்டுமே அதில் கலந்து கொண்டன.
மணிவண்ணனைப் பள்ளியின் சார்பாக கண்காட்சியில் கலந்து கொள்ளவேண்டும் என்று தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டார். பள்ளியிலிருந்த சில பொருட்களையும் கொடுத்து உதவினார். நான்கு பள்ளிகள் ஒரு சில படங்களை மட்டும் தொங்கவிட்டன. அவ்வரங்கத்தில் இருந்த மீதி இடத்தைத் தடுத்து அவன் நான்கு அறைகளை அமைத்தான். ஒவ்வொரு அறையிலும் ஒரு காட்சியை ஏற்பாடு செய்திருந்தான்.
முதல் அறையில், நாணயம் ஒட்டிவைக்கப்பட்டிருந்த பெரிய பெரிய அட்டைகளை, சுவர்களில் வரிசைப் படுத்தி அழகாய் அமைத்தான். மக்கள் இவற்றை விரும்பிப் பார்த்தனர். அதில் எழுதப் பெற்ற குறிப்புகளை ஆர்வமுடன் வாசித்தறிந்தனர். இரண்டாம் அறை ஒரு ஒப்பாய்வுபோல் அமைந்தது. நாணயங்களின் வகைகளைப் பிரித்துக் காட்டி இருந்தான். உலோக வகை நாணயங்கள், தோல் மற்றும் காகிதவகை பற்றி விரிவான செய்திகளை விளக்கி இருந்தான். ‘முகம்மது பின் துக்ளக்’ என்ற மன்னரின் நாணய மாற்றுத் திட்டத்தைப் படங்களுடன் கதை போல் விவரித்திருந்தான்.
நாசிக் நாணயத் தொழிற்சாலை மற்றும் காகித நாணயம் தயாராகும் இடங்கள் பற்றி விரிவாய் எழுதிய அட்டைகளைத் தொங்கவிட்டிருந்தான். மக்கள் இந்த செய்திகளைப் பொறுமையாய் வாசித்தனர். மூன்றாம் அறையில் கிரேக்கர், ரோமானியர், குப்தர், சோழர், மற்றும் பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களின் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. பள்ளித் தலைமை ஆசிரியர் வழங்கிய பொருட்களம் சீராய் அடுக்கப்பட்டிருந்தன. மூன்று அறைகளையும் மூன்று மாணவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தான்.
நான்காவது அறையை மணிவண்ணன் தனது பொறுப்பில் வைத்துக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அவனது அறையில் ஒரு கூட்டம் நின்றது. சிலவேளைகளில் வரிசையாக மக்கள் காத்து நின்றனர். அந்த சந்தர்ப்பங்களில் பத்துபேரை மட்டும் உள்ளே அனுமதித்தான். அவனது பிரிவுக்கு ‘செப்படி வித்தை’ என பெயர் எழுதப் பெற்றிருந்தது. ஒரு சிறிய மேசையின் மேல் சில தாள்கள் விரிக்கப்பட்டிருந்தன. அதன்மீது சில நாணயங்கள் பரவலாய் வைக்கப்பட்டிருந்தன. அவை ஒரு துணியால் மூடப்பெற்றிருந்தன.
மணிவண்ணன் கேட்டுக்கொண்டபடி ஒரு பார்வையாளர் மூடப்பட்ட துணியினுள் கையை நுழைத்து ஒரு நாணயத்தை கையினுள் அழுத்தி மூடியபடி எடுத்தார்.கையைக் கண் அருகில் கொண்டு சென்று விரித்தார். அந்நாணயத்திலுள்ள ஆண்டைப் பார்த்துவிட்டு அதை மீண்டும் அழுத்தி மூடியபடி துணியினுள் வைத்தார். இப்போது மணிவண்ணன் தனது கையை துணியினுள் நுழைத்து ஒரு நாணயத்தை வெளியே எடுத்தான். அதை அவரிடம் காட்டி, “ஐயா, நீங்கள் எடு¢த்த நாணயம் இதுதானா?” என்று கேட்டான்.
அவர் மிகவும் வியப்படைந்தார்! ஏனென்றால் அந்த நாணயத்தில் 1937 என்ற ஆண்டு தெளிவாய்த் தெரிந்தது. ஒவ்வொரு நாள் மாலையிலும் இதைப் பார்ப்பதற்குப் பெரும்கூட்டம் கூடியது. கண்காட்சி நிறைவு நாளின்போது மணிவண்ணன் பயிலும் பள்ளிக்கு முதல் பரிசும் பாராட்டும் கிடைத்தது. அவன் அந்தப் பரிசை வாங்கி பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கியபோது மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மணிவண்ணனுக்கு நற்சான்றிதழும், ‘மாநில நாணயம் சேகரிப்போர் குழு’வில் உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டன. அவனுக்கு உதவியாகச் செயல்பட்ட மூன்று மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் விரும்பிக் கேட்டபோது ‘செப்படி வித்தை’ ரகசியத்தை அவன் விளக்கிக் கூறினான். நாட்டின் விடுதலைக்கு முன்னர் வெவ்வேறு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆறு செம்பு நாணயங்களைத் தேடி எடுத்தேன்.
அவை ஒரே வடிவம் உடைய நாணயங்கள். செம்பு(தாமிரம்) வெப்பத்தை எளிதில் ஈர்த்துக் கொள்ளும் பண்புடையது. எனவே, பார்வையாளரின் கையிலுள்ள வெப்பத்தை ஈர்த்துக் கொண்ட நாணயம் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்கும்; வெப்ப நிலையில் அது வேறுபட்டுத் தெரியும். எனவே அதைத் தேடி எடுத்துக் காட்டி விடுவேன் என்றான். மாணவர்கள் மகிழ்ந்தனர். ‘செல்லாத காசு’ என்று நாம் தூக்கி எறியும் நாணயங்களைச் சேகரித்த மணிவண்ணன், செயற்கரிய செயலைச் செய்தான் என மாணவர் உலகம் அவனைப் பாராட்டியது.
(லூர்து எஸ்.ராஜின் சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள் இதழில் இருந்து)