பங்குனி உத்திரமும் ஒரு பாசஞ்சர் வண்டியும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 3,392 
 
 

‘குடும்பக் குழப்பம் தீர ஒரே வழி குல தெய்வத்தைக் குடும்ப சிகிதம் போய் பங்குனி உத்திரத்தன்னைக்கு பொங்கல் வைத்துக் கும்பிட்டு வா! எல்லாப் பிரச்சனையும் தீரும்..!’ என்று ஜோஸ்யர் சொன்னாலும் சொன்னார். ஒரு வழியாய் குடும்பம் கூடி புறப்பட்டது.

‘ராத்திரி டிரெயினுக்கு வேண்டாம்! அது எக்ஸ்பிரஸ்., பகல் பாசஞ்சர்ல போலாம் குடும்பமாப் போறோம்.., செலவு மிஞ்சும்!’ என்றாள் மதினி. மதினிதான் குடும்பத்தில் மூத்தவள் என்பதால் அவள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லாமல் பாசஞ்சரில் போக முடிவெடுத்தது முனுசாமி குடும்பம். கூடிய கூட்டம் குடும்பமல்ல. ஒரு பள்ளிக்கூடக் கூட்டம்.

அவனுக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம்.. பஞ்சம் பொழைக்க ஊர் மாறி வந்தார்கள். ஆச்சு. அதுவொரு ஐம்பது அறுபது ஆண்டுகட்டும் மேல். ஊர்ல எதாவது நல்லது கெட்டதுக்கு போறது வர்றது…! ஆனால், இதுவேற வழியில்லாம ‘கொல தெய்வமாச்சே!’ன்னு புறப்பட்டது.

பகல் வண்டி காலைல ஆறரை மணிக்குக் கிளம்பி சாய்ந்திரம் ஆறரை மணிக்குத்தான் நெல்லை போய்ச் சேரும். எக்ஸ்பிரஸ் இரவு ஏழரைக்கு பொறப்பட்டு விடியாம மூணு மணீக்கே கொண்டு விட்டுடுவான். அதுல போய் அர்த்த ஜாமத்துல எறங்கி, ஆட்டோவுக்கு அழுகறதைவிட பாசஞ்சரில் வாங்கித் தின்னு வசதியாப் போய்ச்சேரத்திட்டம்.

மூணு நேரச் சாப்பாடு டிபன் செலவு பற்றி யோசிக்க மறந்தார்கள். தண்ணி பாட்டிலுக்கு மட்டும் தண்டம் அழுதது இருக்கே அது காவிரிப் பிரச்சனையைவிட கஷ்டமானது. என்னதான் வீட்டிலிருந்து இட்லியசுட்டு, அடுக்கினாலும் புளியோதரை தயிர்சாதாம் கட்டிட்டாலும் உடன் வரும் சின்ன உருப்படிகள் நிக்கற ஸ்டேஷன்ல விக்கறதெல்லாம் கேட்டா எவனுக்குத்தான் எரிச்சல் வராது?!

வண்டி புறப்பட்டதுல இருந்து வரிசையா வந்துட்டே இருக்கானுக ‘மாங்கா சுண்டல் பர்பி, மிச்சர், தேங்கா பன்னுன்னு, கமலா ஆரஞ்சு என்ன? கை முறுக்கு என்ன? சொல்லி மாளாது!’ விற்கும் தின்பண்டங்கள். மூத்த மதினி எல்லாருக்கும் எகனாமிக்கலா பொரிப் பொட்டலம் வாங்கித்தந்ததோட கோழித் தூக்கம் போட ஆரம்பிச்சவ, கோவில்பட்டி வரும்வரை சாப்பிடக்கூட கண் திறக்கலை! கெட்டிக்காரின்னா அப்படில இருக்கணும்?!!.அவனுக்குத்தான் மனசு கேட்கலை., அவன் கடைசி மாமா கருணையின் இருப்பிடம் ‘ஏழைக்குக் கொடுக்கிறவன் இறைவனுக்குக் கொடுப்[பதாய் எண்ணி வாங்கிக் கொடுத்துக் கொண்டே வந்தான்’. குல தெய்வக் கோயிலும் ஊர் மத்தியில இல்லை. இவனைப் பழிவாங்கவே அது ஒரு காட்டுக்குள் ஆத்தோரத்தில் அமர்ந்து கொண்டு, ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.ஆட்டோவில் பயணிக்க அவசியப்படுத்தியது!

பூசாரிக்குப் பேசி, பூசைக்கு பொருள் வாங்கி, பொங்கலுக்கு ஏற்பாடு செய்து ஆத்தாளுக்கு துணி மணி வாங்கிக் கொடுப்பதற்குள். ஜோசியனைச் சந்திக்கும்முன் இருந்த சங்கடமே பரவாயில்லை என்றாகிவிட்டது.

எல்லாவற்றையும் கண்ணில் எரிச்சல்காட்டி மனைவி எச்சரித்தும் பாசஞ்சர் தடக் தடக் கென்றே தடவிக் கொண்டுதான் போனது. அது அவன் நெஞ்சைத் தடவித்தந்து ஆறுதல்படுத்துவதாய் அமைந்தது.

பிள்ளைகள் கோயில்பட்டியில் கடலைமிட்டாயும், கடம்பூரிலி போளிக்கும் கைநீட்ட கரைந்தது பர்சும், பாசஞ்சர் சுகமும்.

ஆத்தாளுக்குப் பொங்கல் வைத்து பூமாலை, புதுத்துணி சார்த்தி பூஜை முடிப்பதற்குள் வரிசையா எல்லாப் பிள்ளைகளுக்கும் வாந்தி பேதி வந்ததுதான் மிச்சம். எல்லாத்தையும் வாங்கித் தின்னா எழவெடுக்காதா என்ன? பேசாம எக்ஸ்பிரஸ்ல ராத்திரி வந்திருந்தா துக்கம் மறந்து தூங்கியிருக்கலாம்.

கொடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுட்டுத்தான் கொடுக்குமாமே?!

பாசஞ்சர் பயணத்தில் கொடுக்கற தெய்வம் கூரை பிஞ்சுட்டுது… !! கொட்டறது இனியாவது கொட்டுமான்னு பார்ப்போம்!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *