வெற்றியும் தோல்வியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 727 
 
 

செவ்வாய் கிரகத்தின் அடிவானத்திற்கு கீழே கருஞ்சிவப்பு சூரியன் மூழ்கியபோது, ராதாகிருஷ்ணன் தன் ஹோட்டல் அறையின் ஜன்னலுக்கு வெளியே பரந்து கிடந்த ஒலிம்பஸ் பிரைம் நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். செவ்வாய் கிரகத்தில் முதல் மனித காலனி நிறுவப்பட்டு இரண்டு நூற்றாண்டுகள் கடந்து விட்டன. இந்த இரண்டு நூற்றாண்டுகளில் செவ்வாய் கிரகம் எங்கேயோ போய் விட்டது! எல்லாத் துறைகளிலும் பூமியை தோற்கடித்து வசதிகளையும் வாய்ப்புகளையும் வாரி வழங்கும் சொர்க்கலோகமாகி விட்டது.

இஸ்ரோவிலிருந்து வருகை தந்திருக்கும் விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு செவ்வாய் கிரகத்தில் அதுவே கடைசி நாள். இரு உலகங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவது அவரது உத்தியோக நோக்கமாக இருந்தாலும், செவ்வாய் கிரகத்தின் வியக்க வைக்கும் முன்னேற்றத்தின் பின்னணியில் உள்ள ரகசியத்தையும் அவர் கண்டு பிடிக்க விரும்பினார். செயற்கை மூளை உருவாக்கம், தூர கிரகங்களுக்கிடையான பயணம், நூறு வயது வரை இளமை, பறக்கும் கார்கள்… இவை அனைத்தையும் இத்தனை குறுகிய காலத்தில் எப்படி அவர்கள் சாதித்தார்கள்? வித்தியாசமாக அவர்கள் செய்தது என்ன?

அவர் பார்வையிட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியிடங்கள் ஆகியவை பூமியில் உள்ளவை போலவே செயல்பட்டன. அவர் உரையாடிய கல்வியாளர்கள், இல்லத்தரசிகள் மற்றும் அதிகாரத்துவத்தினர் பூமியில் உள்ள அவர்களது சகாக்களை விட சற்று அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றினர். அதைத் தவிர, அவர்கள் செயல்பட்ட, வாழ்ந்த விதத்தில் வேறு எதையும் வித்தியாசமாக அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்களின் அற்புதமான கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் உள்ள ரகசியத்தைப் பற்றி கேட்டபோது, செவ்வாய் கிரகத்தில் யாரும் சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, புதிது புதிதாக கண்டுபிடிப்பது அவர்களின் அன்றாட வாழ்வின் வழக்கமான ஒரு பகுதியாக இருந்தது.

பூமிக்குத் திரும்பும் நீண்ட பயணத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ராதாகிருஷ்ணன் பெருமூச்சு விட்டபடி தன் அறையை விட்டு வெளியே வந்தார். ஹோட்டலுக்கு வெளியே அவரை ஸ்பேஸ்போர்ட்டுக்கு (Spaceport) கொண்டு செல்ல வேண்டிய டாக்ஸி தயாராக இருந்தது. டாக்ஸி கிளம்பி கொஞ்ச தூரம் சென்றதும் நாற்பது வயது மதிக்கத்தக்க அதன் ஓட்டுனர் தூய ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தார்.

“எங்கள் உலகிற்கு நீங்கள் வருகை தந்தது எங்களுக்கு ஒரு பெரிய மரியாதை. இங்கு நீங்கள் தங்கியிருந்த நேரம் இனிமையாக கழிந்தது என்று நம்புகிறேன்.”

ராதாகிருஷ்ணன் புன்னகையுடன் தலையசைத்தார். “ஆமாம், மிக இனிமையாக கழிந்தது. ஒரு புதிய சமூகம் இவ்வளவு விரைவாக பல அற்புதமான புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து சாதனை புரிந்ததைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“நன்றி. சிறு வயதிலிருந்தே புதுமைகளையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் கலாச்சாரத்தை நாங்கள் இங்கு உருவாக்கி இருக்கிறோம்.” என்று பெருமையுடன் சொன்னார் ஓட்டுனர்.

“ஆம், என்னால் அதைப் பார்க்க முடிகிறது. பூமியிலும் எங்களால் அப்படி செய்ய முடியும் என நம்புகிறேன். உங்கள் வெற்றி எங்களுக்கு ஒரு பலமான உத்வேகத்தைக் கொடுக்கிறது.”

“மன்னிக்கவும், அதை மீண்டும் சொல்ல முடியுமா? எது உத்வேகத்தைக் கொடுக்கிறது?”

“வெற்றி. உங்கள் வெற்றி எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது என்று கூறினேன்”.

ஒரு சிறிய மௌனத்திற்குப் பின் ஓட்டுனர் கூறினார், “ஹ்ம்ம், வெற்றி என்ற சொல் எனக்கு புரியவில்லை… ஒரு நிமிடம் … எனது மேற்பார்வையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வருகிறது. நான் இதை எடுக்க வேண்டும்.”

ஓட்டுனர் போனில் பேசிக் கொண்டிருக்க, ராதாகிருஷ்ணனுக்கு தான் புதிதாக என்ன சொல்லி விட்டோம் என்று குழப்பமாக இருந்தது. அவர் உபயோகித்தது வெற்றியின் ஆங்கிலப் பிரயோகமான Success என்ற சொல். எல்லோருக்கும் தெரிந்த ஒரு சொல். அது ஏன் ஓட்டுனருக்குப் புரியவில்லை?

ஓட்டுனர் பேசி முடிந்தவுடன், திடீரென்று ராதாகிருஷ்ணனுக்கு ஒரு ஊகம் தோன்றியது. அதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார்.

“வழியில் ஒரு புத்தகக் கடையில் நிறுத்த முடியுமா? எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கிறது.” என்றார் ராதாகிருஷ்ணன்.

“ஓ யெஸ், இந்த கார்னரில் ஒரு கடை உள்ளது.”

அடுத்த பத்து நிமிடங்கள் மிக விரைவாகக் கடந்தன. வண்டி நின்றவுடன் ராதாகிருஷ்ணன் வெளியே பாய்ந்து புத்தகக் கடைக்குள் விரைந்தார். அது ஒரு சிறிய கடை, அதனால் ராதாகிருஷ்ணனுக்கு வேண்டிய புத்தகத்தைக் கண்டுபிடிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. மாணவர்களுக்கான ஆங்கில அகராதி என்ற தலைப்பில் இருந்த பைண்ட் செய்த ஒரு பெரிய புத்தகத்தை எடுத்தார்.

S என்ற எழுத்து இருந்த பக்கத்திற்கு சென்று விரைவாக பக்கங்களைப் புரட்டினார்.

Subvert, Subway, Successor, Succinct… ஆனால் Success என்ற சொல் இல்லை.

நடுங்கும் விரல்களுடன், பக்கங்களை வேகமாகப் புரட்டி, F என்ற எழுத்து இருக்கும் இடத்திற்கு சென்றார்.

Fad, Fade, Fag, Fain… ஆனால் Failure என்ற சொல் இல்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *