என் மனைவி ஸ்ரேயா தனது பேஸ்புக் ப்ரொபைல் புகைப்படத்தை அனுப்பி, தன் மூக்கில் துருத்திக் கொண்டிருந்த மச்சத்தை அகற்றச் சொன்னாள்.
நான் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து போட்டோஷாப் சாப்ட்வேரை லோட் செய்தேன். சில நாட்களுக்கு முன்பு தெருவோர கம்ப்யூட்டர் ரிப்பேர் கடையில் நூறு ரூபாய்க்கு நான் வாங்கிய பழைய பதிப்பு அது. தொடக்கத் திரையில், “இது ஒரு சோதனைப் பதிப்பு. பொது மக்கள் பயன்பாட்டிற்கு அல்ல,” என்று ஒரு எச்சரிக்கை. நான் ஒரு நிமிடம் தயங்கினேன். என்ன ஆகி விடப்போகிறது? ஒரு சின்ன எடிட்டிங் வேலை தானே என்று என்னை தைரியப் படுத்திக் கொண்டேன். முழு கவனத்துடன் பத்து நிமிடம் செலவழித்து புகைப்படத்தில் இருந்த மச்சத்தை திறமையாக அகற்றினேன்.
மறுநாள் காலை, குளியலறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. ஸ்ரேயா வெளியே ஓடி வந்தாள். அவளுடைய மூக்கில் இருந்த உண்மையான மச்சம் மறைந்ததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்!
ஸ்ரேயா பரவசமடைந்தாள். அவள் இன்னும் சில புகைப்படங்களை அனுப்பி மற்ற குறைபாடுகளை சரிசெய்ய எனக்கு உத்தரவிட்டாள். அவள் கன்னத்தில் ஒரு சுருக்கம். அவள் மேல் கையில் ஒரு தழும்பு. சற்று வளைந்த காது. நான் பொறுமையாக எல்லாவற்றையும் சரி செய்து கொடுத்தேன்.
நேற்றிரவு, பதினோரு மணிக்கு மேல், அவளுடைய நரை முடியின் சில இழைகளை நான் சரி செய்து கொண்டிருந்தேன். தூக்கக் கலக்கமும் சோர்வும் என்னை முழு கவனத்துடன் வேலை செய்ய விடவில்லை. போட்டோஷாப்பில் உள்ள அடுக்குகளை நான் சொதப்பியிருக்க வேண்டும். திடீரென்று ஒரு கூச்சல்.
நான் படுக்கையறைக்கு ஓடி விளக்கை போட்டேன்.
ஸ்ரேயா கட்டிலின் நடுவில் அமர்ந்திருந்தாள். தலை இல்லாமல்.