மஞ்சள் இரவு தேங்கிக் கிடந்தது. மஞ்சள் உரசும் மர்மத்தில் ஊரே தூங்கிக் கிடந்தது.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் சாலையில் சில பிச்சைக்காரர்களைத் தவிர எப்போதாவது வந்து போகும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே நகரத்தின் சீழ் பூத்த கண்களை திறந்தன. மற்றபடி இப்போது நான்.
நான் மட்டுமே.
நடந்தேன். நான் நடந்து நடந்து நேராக சென்று நின்ற இடம். புண்ணியமூர்த்தி. வயது 48. என்னை உற்றுப்பார்த்தார். நானும் உற்றுப் பார்த்தேன்.
“வாங்க போலாம்…” என்றேன். அழுத்தமான கண்கள். தப்பித்தால் போதும் என்பது போல மறுபேச்சின்றி என் பின்னால் வந்தார்.
அடுத்து நான் நின்ற இடத்தில் இருந்தவர் ராமசாமி வயது 70. “நான் எதற்கு” என்பது போல இருந்தது அவரின் பார்வை.
“நீங்கதான் முன்னால நிக்கணும். வாங்க…..வாங்க….” என்று அழைத்து சென்றேன்.
இரவு தன் மின்மினி கண்களால் குறுகி நீண்டு வளைந்து சுழலும் வீதியில் ஆகாயத்தை நகல் எடுத்துக் கொண்டிருந்தது.
நான் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். என்னை நானே பார்ப்பது போல இருந்தது. நான் என்னில்தான் இருக்கிறேனோ.. இல்லை நானாக எதுவோ இருக்கிறதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இலகுவாக இருந்தேன். என் மனம் நிறைய துவங்கி இருந்தது குறைந்திருந்த எதுவோ கூடியது போல….
நீலாமணி வயது 53. அழுது வீங்கிய கண்கள். “சரி பார்த்துக்கலாம் வாங்க” என்றேன். பார்த்துக் கொண்டே இருந்தார். காது கேட்காது போல. ஜாடை செய்தேன். “அது தான் பிரச்னை”என்பது போல பேசிக் கொண்டே ஏதோ நம்பிக்கையில் கூட வந்தார்.
ஜேம்ஸ் வயது 18. சிரித்துக் கொண்டிருந்தான்.
“எங்க…..?” என்றவன்…….”எங்கன்னு கேக்காம போய் போய் தான் இத்தனை பிரச்சினை…… பாஸ் எங்கன்னு சொல்லுங்க… அப்ப தான் வருவேன்” என்றான்.
“பீர் வாங்கி தரேன் வாடான்னா………” இழுத்தேன்…. சத்தமில்லாமல் வந்து கொண்டிருந்தான். அடுத்து நின்ற இடத்தில் சிந்தனை சரிய… சீக்கிரம் புரிய,
“ஓஹ் நீங்க…… டாக்டரா என்னாச்சு…? என்றேன்…
“யாராவது கேட்க மாட்டார்களா” என்று காத்திருந்தது போல பட்டென்று பதில் வந்தது…” என்னமோ ஆச்சு…. ஓனர் பண்ணின தப்புக்கு நான் பலிகடா…. எல்லாம் என் தலை எழுத்து….” என்று சொல்லி கண்களில் கோபத்தை கொட்டினார் டாக்டர் பழனிமுத்து.
“சரி விடுங்க டாக்டர். உங்க பிரச்சினை பரவால்ல. அவரை பாருங்க..”
நான் கை காட்டிய அடுத்த சாலையில் மாரிமுத்து… கண்ணாடி போட்டுக் கொண்டு ஆழ்ந்த சிந்தினையில் இருந்தார்.
“மாரி போலாமா” என்றேன்.
“ஆமாங்க.. இப்டி போறவங்க வருவாங்க எல்லாரும் வெறிக்க வெறிக்க பாக்கறது ஒரு மாதிரி இருக்கு…..தயவு செஞ்சு இறக்கி கூட்டிட்டு போங்க” என்றார்.
“கொள்ளை அடிக்க வந்தவனுங்க செஞ்சதுங்க” மாரிமுத்து டாக்டரிடம் தன் பிரச்சனைகளை கூறிக் கொண்டே வந்தார்.
இரவும் நிலவும் உலவும் குளிரும்… மஞ்சள் இரவை சாயம் போக செய்து கொண்டிருந்தது. தானும் போன நான் தூரம் போக செய்து கொண்டிருந்தேன்.
அடுத்து ஸ்டெல்லா வயது 8. என்னாச்சு என்றேன்… ஸ்கூல் வேன் என்று சொல்லி பயங்கரமாக அழுதாள். அணைத்துக் கொண்டே நடந்தேன். எல்லாருக்கும் இனம் புரியாத விடுதலை உணர்வு சேர்ந்து கொண்டிருந்தது. ஒருவருக்கொருவர் ஆறுதலாய் பேசிக் கொண்டார்கள். தனிமை கொடிது என்பது போல பேச்சுக்கள் முன்னும் பின்னும் அலைந்தாடின. “யார் இவர்..?! எதற்கு நம்மை எல்லாம் கூட்டிட்டு போறார்” என்றும் அலை அடித்தது பேச்சு.
இன்னும்…. இன்னும்….. பிரியசகி வயது 13. காத்தவராயன் வயது 31. ஆட்டுக்காரம்மாள் வயது 84. பிரகாஷ் வயது 28. ரோஸ்மேரி வயது 45. மல்லிகா வயது 20. கண்மணி வயது 49. கண்ணப்பன் வயது 38. அனைவரையும் அழைத்துக் கொண்டு வேகமாய் நடந்தேன். விடிய இன்னும் கொஞ்சம் நேரமே இருந்தது.
சாலை முடியும் இடத்தில் அப்போது தான் “கண்ணீர் அஞ்சலி” சுவரொட்டி ஒட்டி போயிருப்பார்கள் போல. சுபாஷ் வயது 27. பிசு பிசுக்கும் வாழ்க்கையோடு சுவரொட்டியிலிருந்து கீழே இறக்கினோம்…ஒவ்வொருவராக இறக்கியது போல.. ஒவ்வொருவரும் இறங்கியது போலவே அவனும் இறங்கினான்.
“டாஸ்மாக் வேண்டான்னு பிரச்சாரம் பண்ணினதுக்கு அடிச்சே கொன்னுட்டானுங்க சார்” என்றான்.
கடவுளே என்று முனங்கிய கூட்டம் மெல்ல விசும்பத் தொடங்கியது. “கண்ணை கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு” என்றான் சுபாஷ்.
“சரி….எங்களை எங்க கூட்டிட்டு போற… யார் நீ….?!” என்றார் ஒருவர். நான் சற்று நின்று மெல்ல திரும்பி பார்த்தேன்.
சற்று மௌனித்து விட்டு கூறினேன்……..”என் வீட்டுக்கு…..”
ஒன்றும் விளங்காமல் பார்த்தார்கள். சற்று நேரத்தில் என் வீட்டில் அத்தனை சுவரொட்டிகளையும் அடுக்கிக் கொண்டிருந்தேன். என் வீடு முழுக்க கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகள். இந்த பழங்காலத்து நாணயம் சேர்த்து வைக்கற மாதிரி…. ஸ்டாம்ப் சேர்த்து வைக்கிற மாதிரி எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ் சேர்த்து வைக்கற ஹாபி இருக்கு…
அதன் பிறகு யார் குரலும் என் காதில் கேட்கவில்லை. என் குரல் கூட எனதா என்று தெரியவில்லை….
தொடுவானம் என் வீட்டில் முடிந்து விட்டதாக நம்பினேன். மஞ்சள் இரவு என் வீட்டில் சுடர் விடுவதாக இருந்தது அந்த நம்பிக்கை. ஏனோ அழ வேண்டும் போல இருந்தது வழக்கம் போல.
ப்ரோ எனக்கு உங்களுடன் பேச வேண்டும் எப்படி தொடர்ப்பு கொல்வவது ???