அறந்தாங்கியார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 10, 2013
பார்வையிட்டோர்: 11,039 
 

நண்பகல் வெயில் நேரத்தில் கையில் சற்று கனமான பைகளுடன் வீட்டினுள் நுழைந்தார் கணேசன்.கைப்பைகளை சுவற்றின் ஓரம் வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர் ”குழலி கொஞ்சம் தண்ணி கொண்டா…” என்றார்.அடுப்படியிலிருந்து கையில் ஒரு செம்புடன் வந்தவர் கணேசனின் மனைவி லட்சுமி.”குழலி எங்க?”, ”அவளும் பானுவும் சீலை கட்டி பாத்துக்கிட்டு இருக்குதுக கொல்லப்பக்கம்” என்றார் லட்சுமி அம்மா.கணேசனின் ஒரே மகள் பூங்குழலி.பள்ளியை முடித்து சமையல் பழகி,கோலம் பழகி,கணினியும் பழகி கல்யாணக் கனவுகளுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாகக் காத்திருப்பவள்.”எப்ப போன ஆளு நீங்க,என்ன பண்ணிய இவ்வள நேரம்?…நான் மசாலாவெல்லாம் அறச்சி வச்சிக்கிட்டு பாதைய பாத்துக்கிட்டே உக்காந்திருக்கிரன்” என்றார் லட்சுமி அம்மா.வெயிலின் கடுமையை அவரது முகத்தில் காணமுடிந்தது லட்சுமி அம்மாவுக்கு.தாடையில் வழிந்தோடிய நீரை தோலில் கிடந்த துண்டால் துடைத்தவாறு செம்பை நீட்டியவர், ”என்ன பண்ண சொல்ற?…கிஷ்ண மூர்த்திய பாக்குறதுக்கே அர நாளாய்டுச்சி.மூவாயிரம் கேட்டேன் ரெண்டாயிரம் தான் குடுத்தாரு.ரெண்டாயிரம் ரூவா வாங்குறதுக்காக அவரு சொல்ற கதைய எல்லாம் கேட்டுகிட்டு உக்கார வேண்டி இருக்கு.அதுல நா எங்கேருந்து சேரு வாங்குறது”என்றார்.”சரி சரி நீங்க போயி சுரேஷ் வீட்டுல ரெண்டு மூணு சேரும் கீழ விரிக்க ஒரு சமுக்காலமும் வாங்கிட்டு வாங்க…”ஒரு லேசான முறைப்புடன் ஏறிட்டார் லட்சுமியை”. ”சரி நீங்க இருங்க நா யாராச்சும் பயலுவள போவச் செல்றேன்” என்ற அவஸ்த்தையான அவசர வார்த்தைகளுடன் கணேசன் வாங்கிவந்த பைகளை அடுப்படிக்கு எடுத்துச் சென்றார் லட்சுமி அம்மா.

நாற்காலியில் சாய்ந்தவாறு விட்டத்தைப் பார்த்து எதையோ யோசிக்கத் தொடங்கினார் கணேசன்.அவரது முகத்தில் தெரிந்த லேசான கவலைக் கோடுகளைக் கண்ட சுவற்றோரமிருந்த பல்லி கீச் கீச்சென அவருக்கு ஆறுதல் குரல் கொடுத்தது.”சீனி வாங்க மறந்துட்டியலா?” என்ற உள்ளிருந்து வந்த லட்சுமி அம்மாவின் குரல் கேட்டு சுதாரிப்புக்கு வந்தவர் பதிலேதும் கூறாமல் அமர்ந்திருந்தார்.அறந்தாங்கிக்கு பக்கத்து கிராமத்தை சொந்த ஊராக கொண்ட அவரது குடும்பம் தற்போது வசிப்பது கோவையில்.தொழில் ரீதியாக 20 ஆண்டுகளுக்கு முன்னே குடும்பத்துடன் குடிபெயர்ந்த கணேசன் ஒரு பொற்கொல்லர்.தங்க ஆபரணங்களைத் தன் வீட்டிலிருந்தே செய்வது அவரது குடும்பத் தொழில்.தொழிலில் அவரது நேர்மைக்கும் நேர்த்திக்கும் பெயர் போனவர்.அவரங்கு குடிபெயர்ந்த காலம் முதல் கிட்டத்தட்ட 15
வருடங்களுக்கு அவர் கைபடாத நகைகளே அப்பகுதியில் செய்யப்படவில்லை எனலாம்.காதணிகள்,பிறந்த குழந்தைக்கான அணிகலன்கள்,மாங்கலியம் என அனைத்தையும் நியாயமான கூலியில் சிறப்பாக செய்துகொடுப்பவர்.பணத்தைவிட மரியாதையும் கைராசியையும் அப்பகுதி மக்களிடையே நிறைய சம்பாதித்தவர்.திருமணத் தேதி குறித்தவுடன் மணமகன் வீட்டார் தட்டில் தேங்காய் பழத்துடன் முதலில் வருமிடம் கணேசனின் வீடாகத்தான் இருக்கும்.அவரும் அதை வெறும் பொருள் ஈட்டும் தொழிலாகக் கொள்ளாமல் இறைபணிக்கு இணையாகச் செய்தவர்.அன்புடன் அறந்தாங்கியார் என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுபவர்.

கொடுக்கும் செய்கூலியில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர் காலப்போக்கில் அதிக எண்ணிக்கையிலான ஆயத்த விற்பனைக் கடைகளாலும்,அவை காட்டும் கவர்ச்சியாலும் தனது தொழிலை கடந்த 5 ஆண்டுகளில் மெல்ல மெல்ல இழந்தவர்.அக்கடைகளில் விற்கப்படும் ஆபரணங்கள் எந்திரத்தால் வடிவமைக்கப்படுவதால் எண்ணற்ற வடிவங்களில் நினைத்தவுடன் கிடைப்பது கணேசனைப் போன்றோருக்கு பெரிய பலவீனமாகிப் போனது.இந்தியாவில் தங்க ஆபரணங்கள் செய்வதில் மும்பைக்கு அடுத்தபடியான நகரம் கோவை. ஏறத்தாள முப்பதாயிரம் குடும்பங்களுக்கு இங்கே இதுவே பிரதான தொழில்.கிட்டத்தட்ட 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொழில் நசிவால் வட்டிக் கடனுக்கு உள்ளாகி கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டன.தொழில் முற்றிலும் நசிந்த நேரத்தில் இனியும் இதை மட்டும் நம்ப முடியாது என்ற முடிவில் கிஷ்ண மூர்த்தியின் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.சம்பளம் குறைவுதான் என்றாலும் மாதச் சம்பளம் அவருக்கு ஒரு திடத்தையும் நிம்மதியையும் அளித்தது.எந்த நேரத்திலும் தன்மானத்தை இழக்காத வாழ்வு என்பது கணேசனின் அடி மனத்தில் ஊறிப்போன ஒன்று.அதனால் தானோ என்னவோ வசூலுக்கு ஊரெங்கும் போக அவர் கம்பெனி டூவீலரைப் பயன்படுத்தினாலும் மதிய உணவுக்கு 2 km தூரமுள்ள வீட்டுக்குப் போக தனது சொந்த வாகனமான சைக்கிளைப் பயன்படுத்துபவர்.

எத்தனையோபேரின் திருமணத்திற்கு நகை செய்து கொடுத்தவரின் மகள் குழலிக்கு இந்த நகை பேரத்தில் தான் முந்தய இரண்டு சம்பந்தங்கள் விலகிப் போயின.இத்தனை ஆண்டுகளாய் இவர் சிறுகச் சிறுக சேர்த்தது 13 பவுன் நகை.அவர்கள் கேட்டதோ 25 ,30 என.அவர்களிடம் இறங்கிப் போகவும்,பிறரிடம் இரந்து போகவும் மனமின்றி மாப்பிள்ளை வீட்டார் கேட்டபோது அமைதி காத்தவர்.இது 3 வது சம்பந்தம்,இதை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்பது லட்சுமி அம்மாவின் எண்ணம்.”என் பொண்ணுக்கு இன்னும் வயசாகல…” என்று சொல்லி அவர் லட்சுமி அம்மாவிடம் சமாளித்தாலும் அவருள்ளும் ஒரு பயம் இருந்தது உண்மை.அன்று குறித்த நேரத்தில் பையனின் தாயார்,ஒரு பெரியவர்,சொந்தக்காரர்கள் மூன்று பேர் என மாப்பிள்ளை வீட்டினர் ஐந்துபேர் அறந்தாங்கியிலிருந்து வந்து சேர்ந்தனர்.அனைவரையும் வரவேற்று அமரச் செய்துவிட்டு லட்சுமி அம்மாள் அடுப்படிக்கும் கூடத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தார்.ஏற்கனவே அந்த பெரியவருக்கு கணேசன் நல்ல அறிமுகமானவர் என்பது சகஜமான பேச்சுக்கு ஏதுவாய்ப் போயிற்று.சிலநேரக் கலந்துரையாடலும் கலகலப்பும் முற்றுபெற்ற நொடிகளில் பெரியவர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.”பொண்ணோட போட்டோவ பாத்த குமரன் நீங்களே பேசிட்டு வாங்கன்னு சொல்லிப்புட்டாபுள்ள,கணேசா நீ என்கிட்ட சொன்ன வெவரத்த அவுகள்ட்ட அப்படியே சொல்லிட்டேன். எல்லாருக்கும் இத பண்ணிப்புடனும்னு ரொம்ப பெரயாச.இப்ப தேதிய மட்டும் முடிவு பண்ணிக்க வேண்டியதான்” என்றார்.கணேசனின் அழைப்பில் மிக முக்கியமாக வந்திருந்தவர்கள் கிஷ்ணமூர்த்தியும்,இன்னும் சிலரும்.கணேசன் தரப்பில் இருந்து வள்ளியம்மை பாட்டி பேச ஆரம்பிக்க ஆளாளுக்கு ஒரு தேதியைச் சொல்லி இறுதியாக இன்னும் ஒருவருடத்தில் திருமணம் செய்து கொள்வதாக தேதி நிச்சயிக்கப்பட்டது.

உணவருதியதன் பின் எல்லாரும் வெளியே பேசிக்கொண்டிருக்க, குமரனின் தாயார் குழலியை அழைத்து கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.”மீனு கொழம்பு மட்டும் நல்ல வக்கிரத்துக்கு கத்துக்க குழலி,எம்மகனுக்கு அதான் புடிக்கும்” என பகடி பேச,வெட்கத்தில் வாய் மூடியபடி குனிந்த தலை நிமிராமல் இருந்த குழலியைக் கண்டு அவளது கால் கொலுசும்,கை வளையும் சிணுங்கிச் சிரித்தன.பதிலுக்கு லட்சுமி அம்மா ”அவளுக்கும் மீனுக் கொழம்பு தான் புடிக்கும்” என சொல்லிச் சிரித்தார்.உரையாடல் முடிந்து எல்லோரும் மருதமலைக்கு போவாதாகக் கூறி அன்புடன் விடைபெற்றுச் செல்ல கணேசனும் லட்சுமி அம்மாவும் திருமண ஏற்பாடு மற்றும் பணத்தேவை குறித்து அன்று இரவு நெடுநேரம் கூடத்தில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.”ஒரு 2 லட்சமாவது தேவைப்படும்” என பெருமூச்சு விட்டார் கணேசன்.”கிருஷ்ண மூர்த்தி தம்பிட்டயே கேட்டுப்பாருங்க, சம்பளத்துல கழிச்சுக்கலாம்னு சொல்லி…”என்று எடுத்துக் கொடுத்தார் லட்சுமி அம்மா.”ம்” என்ற சுருக்கமான பதிலோடு அமைதி காத்தார் கணேசன்.உள்ளே படுத்திருந்த குழலி கண்களை மூடியபடி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். மறுநாள் வேலைக்குச் சென்ற கணேசன், கிருஷ்ண மூர்த்தியின் காதில் போட்டு வைக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தார்.

காலை முதலே கடுகடுவென வட்டிப்பணம் கேட்டு வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு தன் மனதில் ஓடிக்கொண்டிருந்ததை ஒத்திபோட்டார்.நாட்கள் நகர்ந்து மாதங்கள் உருண்டன.கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அப்படியே நகர்ந்தன.இடையில் ஒருமுறை கிருஷ்ண மூர்த்தியிடம் இது பற்றி கேட்க முகத்தைச் சுருக்கிக் கொண்டு ”சரி வாங்கிக்கோங் ணா…” என்று சொன்னதுதான் கணேசனின் ஒரே நம்பிக்கை. ஆரம்பம் முதலே கிருஷ்ணமூர்த்தி கணேசனை பெரிதும் மதிக்காதவர்.காரணம் அவரை விட இளம் வயதிலேயே அதிக பொருள் ஈட்டியதன் கர்வமும்,தான் ஒரு சிறந்த நிர்வாகி என்ற தற்பெருமையும்.அன்றாட வரவுசெலவில் டீச்செலவு முதல் எல்லாவற்றிலும் கணேசனை ஆயிரம் கேள்வி கேட்பதும், வயதைக் கூட பொருட்படுத்தாத வார்த்தைகளும் அவரது நெஞ்சில் வேல் கம்பென பாய்ந்தன.மகளின் திருமணத்தை எண்ணி தன் உணர்வுகளை உதிர்த்துவிட்டு இருந்தார். தாம்பூலத்தட்டில் பணம் வைத்துக் கணேசன் வீட்டுப் படியேறிய ஒரு காலமும் இருந்தது.

அன்று வசூல் முடிந்து கடைக்கு வந்த கணேசன் அன்றைய வரவு செலவை வழக்கம் போல கிஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தார். கணேசனிடம் கடையை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வெளியே சென்றார் கிருஷ்ண மூர்த்தி.அது பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குப் போகும் ஒருமாலை வேலை. கடைவீதியின் மிகுந்த நெரிசல்களுக்கிடையே குறுகிய சாலையில் கின்கிணி மணி ஒலிக்க டியூசனுக்காக சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர் பள்ளி மாணவர்கள்.கடைக்கு வெளியே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து அன்றைய நாளேட்டை சோர்வுடன் திருப்பிக் கொண்டிருந்தார் கணேசன். எதோ ஒரு சாலை விபத்தை படித்துக் கொண்டிருந்தவர் காதில் டம் என்ற சத்தமும் தரையில் வாகனத்தின் டயர் உராயும் சத்தமும் கேட்டு முடிப்பதற்குள் அங்கே சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் வட்டம் கட்டியிருந்தனர்.கடையின் கதவை லேசாக மூடிவிட்டு கணேசனும் அந்த இடத்திற்கு விரைந்தார். கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி அங்கே ஒரு பள்ளி மாணவன் காலில் உராயுண்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், ”கைய கீழ ஊனிருப்பன் போல்ருக்கு…பெசகிருக்கு கட்டு கட்டோணும்…” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அந்த பையன் வேறு யாருமில்லை கணேசனின் பக்கத்து வீட்டுப் பாட்டி வள்ளியம்மையின் பெயரன் சரவணன்.கணேசனைப் பார்த்ததும் அழுகையை விழுங்க முயன்றான் சரவணன்.அருகில் சென்றவர் காலில் வழியும் ரத்தத்தை ஒரு துணியைக் கொண்டு துடைத்தார்.”அழுவாதப்பா ஒன்னும் இல்ல…” என்று ஒரு பக்கமாக அணைத்தவர் என்ன செய்வதென்று யோசித்தார். வள்ளியம்மை மகள் வழி பேரன் சரவணன்.பாட்டியிடம் இருந்து படிக்கிறான்.வள்ளியம்மை சிங்கா நல்லூர் பேருந்து நிலையம் அருகில் ரோட்டோரம் தள்ளுவண்டியில் பழக்கடை வைத்திருப்பவள்.’ ‘சீக்கிரமா கூட்டிட் போங்ணா..பையன் அழுதுட்ருக்கிராநில்ல”என்றார் அந்தப் பெண்.ரத்னவேல் டாக்டர்கிட்ட போயி கட்டுப் போட்டா சரியாகிவிடும் என அறிவுறுத்தினார் மற்றொரு பெண்மணி.வள்ளியம்மை எப்படியும் பொழுது சாய்ந்து தான் வீட்டுக்கு வரும் என்பதால் வேறு வழியின்றி பக்கத்து கடைகார சேகரின் வண்டியை எடுத்துக் கொண்டு டாக்டரிடம் அழைத்து சென்றார் கணேசன்.45 நிமிட வைத்தியத்தின் பின் தொட்டிலில் தொங்க போட்ட கையுடன் கணேசனைப் பார்த்துச் சிரித்தான் பையன்.வழியில் டீயும் பண்ணும் வாங்கிக் கொடுத்து வீட்டில் கொண்டு விட்டு கடைக்குத் திரும்பினார் கணேசன்.கடையில் உர்ரென்ற மூஞ்சை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த கிருஷ்ண மூர்த்தி ஏதும் பேசவில்லை.கணேசன் லேசாக பேச ஆரம்பித்தார்,”நம்ம பய ஒருத்தான் அடிவட்டுப் போயிட்டான் இங்குனே …அதான் கட்டுப் போடா கூட்டிட்டு போனேன்” என்றார்.”பணம் ஒரு 150 ரூவா கல்லாவுலேர்ந்து எடுத்துட்டு போனேன்” என்றார்.அவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர் ”யாரக் கேட்டுயா எடுத்த…?, இதெல்லாம் சரியா வராது நீ கணக் முடிச்சுக்கிட்டுக் கெளம்பு…” என்றதை சற்றும் எதிர் பார்க்கவில்லை கணேசன்.உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை அவமானத் தீ பொசுக்க அதன் வெப்பம் தாளாமல் நெஞ்சடைக்க,துண்டை உதறித் தோளில் போட்டு விறுவிறுவென திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினார். அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குழலி குறுக்கிட்டு வழி மறைத்தாள்.அதை சிறிதும் பொருட்படுத்தாமல் விலகி விலகி நடந்து கொண்டே இருந்தார் அறந்தாங்கியார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *