பொறுமைக்கு எதற்கு எல்லை…?!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 8,932 
 
 

உலகத்துல பொதுவா எல்லாரும் சொல்றது.. ’என் பொறுமைக்கும் எல்லை உண்டு தெரிஞ்சுக்கோ!’ னு கோபம் வந்தா கொதிச்சுப் போய் கத்தறது இயற்கை. ஆனா, யோசிச்சுப் பார்த்தா ஒண்ணு புரியும்..

சண்டைக்குத்தான் ஜகத்தில் எல்லை உண்டே ஒழிய, பொறுமைக்குப் பூமியில் எல்லை இல்லை என்பது எத்துராஜின் கருத்து. அடுத்த நாட்டு எல்லையை ஆக்கிரமிக்கப் போனால்.. எல்லை தாண்டினால் சண்டை வரும். ஆக, சண்டைக்குத்தான் எல்லையே ஒழிய சமாதானத்துக்கும், பொறுமைக்கும் எதுக்கு எல்லை?!

பிரேமாவுக்கு பிச்சுட்டு வந்தது கோபம். ’என்ன..?! நானும் கூட வரேன்னு சொன்ன பாவத்துக்கா டிரெயின்ல இப்படி ஆர்.ஏ.சில டிக்கட் போட்டு என்னைப் பழிவாங்கீட்டீங்களா..? என் பொறுமைக்கும் எல்லை உண்டு!’ என்றாள் அவள்.

எத்துராஜ் சொன்னான்.

‘திருக்கோவிலூர் சம்பவம் உனக்கு நியாபகம் இருக்கோ பிரேமா.. ஆழ்வார்களில் ஒருவர் இருக்க, இன்னொருவர் வந்து இடமிருக்கா என்று கேட்டபோது ஒருவர் கிடக்கலாம், இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாமென்று இருந்த இடத்தை ஆழ்வார்கள் தங்களுக்குள் பகிர்ந்துக்கலையா? தனி தனி சீட்டா ஆர் ஏ சியை அனுபவிக்க நெனைச்சா உட்கார்ந்தும் படுக்க நினைச்சா ஒருவர் தலையருகே ஒருவர் கால் நீட்டி படுத்தும் அனுபவிக்க அமைஞ்ச ஏற்பாடுதான் ஆர் ஏ சி.!

பொறுமைக்கு எல்லை உண்டுன்னு பொலம்பறயே..?! வீட்டுலதான் அப்படீன்னா, ரோட்டுலயும் அப்படியா!? சண்டையிடத்தான் எல்லை உண்டு! பொறுமையா இருப்பது என்றால், போய்ச் சேரும்வரை அமைதியாய் இரு! இதுகூட இல்லாம, ‘அன் ரிசர்வுடுல’ பேப்பரை விரிச்சு படுத்துட்டு வர்றவங்க எத்தனாயோ பேர் இருக்காங்க….! சிகிப்புத் தன்மையைக் கத்துக்கவும் வளர்க்கவும், சக பணியை அனுசரிக்கத்தான் திருக்கோவிலூர் சம்பவம்’ என்று லெக்சர் அடிக்க…

‘போதும்ப்பா ஆள விடுங்க…! அனுசரிச்சுப் போக இல்லே..! விட்டுக் கொடுக்கவே நான் தயார். நீங்க மட்டுமே ஒத்தையா நிம்மதியா ஒருத்தரா சீட்டுல கிடங்க! நான் தரையில் இருக்கிறேன்’. என்று சொல்லி சீட்டிலிருந்து கீழே இறங்கிக் கொண்டாள் பிரேமா.

உள்ளார்த்தமாக ஆழ்வார்களுக்கு நன்றிக் கடன் சொல்லி, கால் நீட்டி ஆர்.ஏ. சியில் ‘ஹாயாய்க்’ கிடந்தான் எத்திராஜ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *