நேரம் இரவு ஒன்று முப்பத்தியாறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம் புனைவு
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 74,025 
 
 

தாஹிர் பாய் என் குழந்தை பருவத்தில் எரிந்த ஒரு அக்காவின் ஆன்மா, அந்த தெருவையே பல வருடங்கள் ஆட்டிப் படைத்தது.

ஹரே கிஷோர் பாய், கொஞ்சம் நேரத்தை பாருங்க மணி இரவு ஒன்று முப்பத்தாறு ஆகிறது. உங்களுக்கு ஒன்னு தெரியுமா?

சொல்லுங்க தாஹிர் பாய்.

இப்போ நான் ரூம்ல இருக்கேன், நீங்க கம்பெனில இருக்கீங்க. உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள முடியும்?

மொபைலுக்கு அழைப்பீங்க தாஹிர் பாய்.

ஹான் சரியாக சொன்னீங்க கிஷோர் பாய். சரி உயிரோட இருக்க ஆன்மாவ இப்படி அழைக்கிறோம், இறந்த ஆன்மாவ எப்படி அழைப்பீங்க?

எப்படி தாஹிர் பாய் அழைப்பது?

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க ஒரு எரிஞ்சு போன ஆன்மாவா அழைச்சீங்களே கிஷோர் பாய், அப்படி தான் அழைக்கணும்.

அட தாஹிர் பாய் நீங்க வேற சும்மா இருங்க, சுத்தி பாலைவனம் மணி வேற ஒன்று முப்பதை தாண்டுது, நீங்களும் நானும் மட்டும் தான் இருக்கோம். நான் வேற நடு நடுவில் எஞ்ஜின் சீராக ஓடுதானு பார்க்க போகனும். கொஞ்சம் சும்மா இருங்க.

அட உண்மைய தான் சொன்னேன் கிஷோர் பாய். இறந்த ஆன்மாவை நினைத்தால் நம்மை யாரோ அழைக்குறாங்கனு நினைத்து அது நிச்சயம் வரும் பாய்! என்று சொல்ல வயிறு கலங்கியது கிஷோருக்கு.

சரி கிஷோர் பாய், இந்த நேரத்துல இந்த பேச்சு சரி கிடையாது. இதை இப்படியே விட்டுட்டா நல்லது என்று கூறிவிட்டு கணினியில் மெயிலை செக் செய்ய புறப்பட்டான் தாஹிர்.

கிஷோரின் கண்கள் அந்த கட்டிடத்தின் பெரிய கண்ணாடியின் வழியே வெளிப்புறம் உள்ள அடர்ந்த பாலைவனத்தில் எதுவும் கண்களுக்கு புலப்பட்டு விடுமோ என்று பார்க்க, மனம் குழம்பியவவனாய் ஐயோ! இவனை குழப்பலாம் என்று பார்த்தால் நம்மை ஒரு கலக்கு கலக்கி விட்டுட்டு போயிட்டானே இந்த தாஹிர். சரி போய் ஒரு டீ யை போட்டு குடிக்கலாம் என்று டீ ரூமினுள் நுழைந்து ஒரு டீ யை தயார் செய்து பொறுமையாக குடித்துவிட்டு சற்று அவன் கருத்தில் இருந்து வெளியே வந்தான். அந்த கம்பெனியில் அன்று இரவு இருந்தவர்கள் தாஹிர், கிஷோர் மற்றும் அப்துல்லா என்னும் செக்யூரிட்டி.

இரவில் இரண்டு மணிக்கு எஞ்ஜினை பார்வையிட புறப்பட்டான் கிஷோர். எதற்கும் நாம் ஒலி கேட்பானில் பாட்டு கேட்டுக்கொண்டே செல்லமாம் என்று எண்ணி, கைபேசியில் ஒலி கேட்பானை இணைத்து பாடலை ஆரம்பித்து வைத்து நடையைத் தொடர்ந்தான். எஞ்ஜின் அறைக்கு அருகில் அவன் சென்றதும் “அவள் வருவாளா! அவள் வருவாளா! என் உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா” என்ற பாடல் ஒலிக்க உடனே சட்டென்று அந்த ஒலி கேட்பான் இணைப்பைத் துண்டித்து அதை சுருட்டி பையில் வைத்துக் கொண்டு மெதுவாக அறையினுள் சென்றான்.

உள்ளே சென்று எஞ்சினின் செயல்திறன் மதிப்பீடுகளை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டிருக்கும் வேளையில், புஷ்ஷ் என்று தானியங்கு முறையில் செயல்படும் கம்ப்ரஷர் இயங்கியதும் நடுங்கிப் போனான் கிஷோர். அவன் இதயத் துடிப்பு நூறைத் தாண்ட, மதிப்பீடுகள் குறித்தவரை போதும் என்று அந்த இடத்தை காலி செய்து அவன் இருக்கை அமைந்திருக்கும் கட்டிடத்தை நோக்கி விரைந்தான். சுற்றிலும் முற்றிலும் எதுவும் அசையும் பொருள் உள்ளதா என்று பார்த்துக் கொண்டே ஒருவழியாக அந்தக் கட்டிடத்தை அடைந்தான். அங்கு இருந்த அனைத்து இயந்திரங்களும் தானியங்கு இயந்திரம் என்பதால், சரி அதுவே சீராக இயங்கிக் கொள்ளும், இன்னொருமுறை நாம் சென்றால் மாரடைப்பே வந்துவிடும் போல என்று நினைத்தவாறு விடியல் வரும்வரை காத்திருந்தான். பிறகு விடியற்காலை ஐந்து மணிக்கு ஒருமுறை சென்று இயந்திரத்தை கண்காணித்துவிட்டு அன்றைய பொழுதை பெருமூச்சுடன் முடித்தான். அடுத்தநாள் வெள்ளி அவனுக்கு விடுமுறை என்பதால், ஒருவழியாக தப்பித்தோம் என்ற ஆனந்தமும் அவனைத் தொற்றிக் கொண்டது.

அடுத்தநாள் விடுமுறையை நன்றாக ஊர் சுற்றி கழித்த கிஷோர் ஆழ்ந்த உறக்கத்தை அடைந்தான். ஏனோ ஒரு ஓலமிடும் குரல் கேட்க பதறிப் போய் முழித்தான் கிஷோர். கும்மிருட்டு அறையினுள் “ஓ ஓஹ்” என்ற நடுங்கிய குரலில் நீண்ட சத்தம் கேட்க, மீண்டும் அது முடிந்த கணம் “டேய் டேய் டேய்” என்று அலறல் சத்தத்தையும் கேட்டு திகைத்தவன், அவனது பக்கத்து கட்டிலில் படுத்து இருந்த தினேஷ் தூக்கத்தில் உளருவதை உணர்ந்தான். உடனே “அண்ணா! அண்ணா! தினேஷ் அண்ணா!” என்று கிஷோர் கொடுத்த சத்தத்தில் நினைவுக்கு வந்த தினேஷ், “சாரி டா தம்பி பேய் கனவு” என்று கூறிவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தார்.

என்னடா இவரு அசால்டா சொல்லிட்டு தூங்குறாரு என்று நினைத்துக் கொண்டே, கிஷோர் கைபேசியை எடுத்து மணியைப் பார்க்க மணி சரியாக இரவு ஒன்று முப்பத்தாறு. சரி இதெல்லாம் இயற்கை தான் என்று அதைப் பெரிது படுத்தாமல் உறங்க முயற்சித்தான் கிஷோர். மீண்டும் முயற்சித்த அவன் முன்புபோல் ஆழ்ந்த உறக்கத்தை எட்ட முடியவில்லை.

பிறகு பகலிலும் சரியாக தூங்காமல் மிகுந்த களைப்புடன் இரவில் வேலைக்குப் புறப்பட்டான் கிஷோர். சனிக்கிழமை தாஹிருக்கு விடுமுறை என்பதால் அன்றைய இரவு அவனும், செக்யூரிட்டி நண்பர் அப்துல்லா மட்டுமே பணியில் இருந்தனர். சரி ஒன்றும் பிரச்சனை இல்லை நமக்கு உறக்கம் வந்தால் கூட சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளலாம், நம்மை கேட்க எவரும் இல்லை என்று நிம்மதி அடைந்தான் கிஷோர். ஒருவழியாக ஏழு முதல் பதினொன்று வரை பணியைத் தொடர்ந்தவன் அதற்கு மேல் முடியாமல் அவனை அறியாமலே அமர்ந்த வண்ணம் ஒரு மேஜையில் தலை படுமாறு சாய்ந்தான்.

முழுக்க முழுக்க கம்பெனியின் வேலை நினைவுகளுடனே அவன் மன ஓட்டமிருந்தது. திடீரென ஒரு நீண்ட நெருப்பு முன்னெச்சரிக்கை அலாரத்தின் ஓசையைக் கேட்டவன், உடனே கம்பெனியின் செக்யூரிட்டி சிஸ்டம் அறைக்கு விரைந்தான். அங்கிருந்த நெருப்பு அலாரம் தொடர்பான தரவுகளைக் காட்டும் பேனலில் என்ன சத்தம் என்று ஆராய்ந்தான். அது ஒரு மாற்றுக் கட்டிடத்தில் புகையை அறியும் கருவி இயக்கப்பட்டிருப்பதாகக் காட்டியது. எப்பொழுது அது இயங்கியுள்ளது என்று அவன் ஆராய முற்படும்போது அதுவோ மணி சரியாக ஒன்று முப்பத்தாறைக் காட்ட நடுங்கிப் போனான். இதை இப்படியே விட்டாலும் நம் வேலைக்கு ஆபத்து என்ற பயத்துடன் அங்கிருந்து அலாரம் கேட்கும் கட்டிடத்தின் சாவியை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

வழக்கமாக அவன் தங்கியிருக்கும் கட்டிடத்தின் வெளியில் படுத்திருக்கும், அவனுக்கு மிகவும் பிரியமான கிரேஸி எனும் நாய் அன்று ஏனோ வழக்கத்திற்கு மாறாக அலாரம் அடிக்கும் கட்டிடத்தின் வாயிலின் அருகில் நின்று கொண்டு பலமாக குரைத்துக் கொண்டிருந்தது. கிஷோருக்கு இன்னும் சற்று பதட்டம் அதிகரித்தது. கையில் உள்ள சாவியை பூட்டின் துளையினுள் விட முடியாதவாறு அவன் கைகள் உதறியது. ஒருவழியாகப் பூட்டைத் திறந்து உள்ளே சென்றவனை நோக்கி, மூன்றாம் அடுக்குத் தோல் தெரியும் அளவில் கருகிய உடலோன்று ஓடிவந்து சடாரென அவனைக் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. அம்மா! என்று கத்திக்கொண்டு கன்னத்தைப் பிடித்தவாறே கனவில் இருந்து விழித்தெழுந்தான் கிஷோர். உடனே கைபேசியில் நேரத்தை பார்த்தால் மணி ஒன்று முப்பத்தி நான்கு. ஐயோ சாமி என்று தலையைப் பிடித்துக் கொண்டு அவன் உட்கார, சரியாக அடுத்த இரண்டு நிமிடத்தில் “””ட்ரிங்ங்ங்””” என்ற நெருப்பு முன்னெச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்தது. இந்தமுறை மணி ஒன்று முப்பத்தியாறுக்கு கிஷோரின் கால்கள் ஓட்டமெடுத்த திசை அவனது செக்யூரிட்டி நண்பர் அப்துல்லாவின் அறையை நோக்கிய திசையாக இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *